Sunday, 4 May 2025

முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?: - வாசிப்பனுபவம்

 முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி? 

கட்டுரை தொகுப்பு 


ஆசிரியர் : பா. ராகவன்  
கிண்டில் பதிப்பு 
விலை ரூபாய் 125
பக்கங்கள் 

இந்த கட்டுரைகள் ஒருவர் தன்னை ஒரு நிலைக்கண்ணாடியில் பார்த்து அந்த பிம்பத்தை வாசிப்போருக்கு எழுத்துக்களாய் கோர்த்து அழகிய ஆரமாகத் தொடுத்துக் கொடுத்துள்ளார். வாருங்கள் நாமும் அந்த ஆரத்தின் வழியே வரும் மனத்தினை கொஞ்சம் சுவாசித்துச் செல்லலாம்.    

இது -  தன்னை பற்றிய ஒரு சிறிய முன்னோட்டமாக இந்த கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஒவ்வொருமனிதனும் தன்னை தானே கவனித்துக்கொள்வது   
குறுகத் தரித்தல் - தனக்கு எதுவும் எளிதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதும் அதுவும் எளிமையானதும் எப்போதும் உன்னதமானதே. எளிமையும் சுருக்கமும் ஆகப்பெரிய அற்புதம் என்கிறார்.   
போக முடியாத தேசம் -  தன் வாழ்நாளில் பார்த்து ரசிக்க வேண்டிய தேசமாகச் சோவியத் ரஷ்யா என்றும் ஆனால் இன்று இருப்பதோ ரஷ்யா தான். சோவியத் என்ற அந்த பெயருக்குள் ஒளிந்திருக்கும் உன்னதமாக எண்ணற்ற படைப்பாளிகளின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அந்த தேசத்தினை ரசித்ததைவிட வேண்டும் என்ற கனவு இனி என்றென்றும் நிறைவேறாத நிராசை காரணம் சோவியத் உடைந்து போனது போலத் தனது கனவும் உடைந்து போய்விட்டது என்கிறார்.  
உதிரிகளின் பண்ணை -  இன்றைய காலகட்டத்தில் உறவுகளுடன் நெருங்கிப் பழகும் மக்களை அரிதாகத் தான் பார்க்கமுடிகிறது அதுவும் சென்னை போன்ற நகரங்களில் இது முற்றிலும் அழிந்தே போனது என்றே சொல்லலாம் அப்படித்தான் தான் கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் எப்படி உறவுகளிலிருந்து வெவேறு திசைகளில் பயணிக்க வைத்தது என்பதை மிகவும் நகைச்சுவையுடன் சொல்கிறார். 

இருவர்  - வ. உ. சி யும் - பாரதியும், வ. உ.சி அவர்கள் "பாரதிக்கும் எனக்கும் பழக்கம்" என்ற நூலின் வழியே அவர்கள் இருவருக்கும் இருந்த நெருக்கமும் அவற்றில் அவர் அந்த காலத்தில் பயன்படுத்திய தமிழ்ச் சொற்கள் இன்றளவும் மாறாமல் இருக்கிறது என்றே வியப்பினை சொல்கிறார்.     

கடக்க முடியாத கட்டம் -  பாஸ்வார்டு - இன்றைய நவீனக் காலத்தில் எல்லாமும் நமக்கு வீட்டின் அறையிலே கிடைக்கிறது ஆனால் அதற்கு ரகசிய குறியீடுகள் வைத்திருக்கவேண்டும் அதுவும் நமது நன்மைக்கே.  இங்கே பாஸ்வர்ட்ஸ் பாதுகாத்து வைப்பதும் அவற்றை ஞாபகம் வைத்துப்பதும் எனத் தனது மனதில் உள்ள குமுறல்களை இவற்றால் ஏற்பட்ட சில சங்கடங்களையும்  கொட்டி தீர்த்திருக்கிறார். 
பாதங்களைத் தேடுதல் -  எப்போதும் அப்பா என்ற ஒரு ஜீவன் இருக்கும் வரை இந்த உலகின் நமக்கு எல்லாமே வசப்படும். அதுவும் நாம் செய்ய நினைப்பது நமக்காக ஒரு வழிகாட்டியாக இருந்தால் அது நமக்கு ஆயிரம் ஆணை பலமாகவே இருக்கும் அப்படிப் பட்ட அப்பாவின் பாதங்களைத் தொட்டு வணங்கத் தோன்றும். அவர் இல்லாத போதும் அந்த வெற்றிடத்தினை நிரப்பிய ஒரு மற்றொரு உறவும் போனதற்குப் பிறகு சக எழுத்தாளர் கொடுத்த ஒரு உற்சாகம் மீண்டும் ஒரு படைப்பினை உருவாக்க முடிந்தது என்ற  பலத்தினை சொல்கிறார்.   
 
கனவு இல்லம் -   கனவு என்பது ஒரு படைப்பிற்குப் பெரிய உந்துதல் மட்டுமல்லாமல் அந்த கனவை நனவாக்கும் சக்தியினையும் நம் மனமே  நமக்குக் கொடுக்கும் . அப்படியாக இவர் கனவில் வரும் இல்லம் எண்ணற்றதாக இருக்கிறது. நாமும் பிரார்த்தனை செய்வோம் விரைவில் இந்த கனவு நனவாகட்டும் என்று.
   
இயர் புத்தகம் -   நாம் எல்லோருமே இயர் புத்தகம் வாங்கி வாசிப்பது உண்டுதான் ஆனால் அவற்றில் இருக்கும் அனைத்தும் நம் மனதில் பதிந்திருக்கும் என்பது எந்த அளவிற்கு உண்மை. இருக்கவே இருக்காது அதுதான் பலரின் நிலையும் . இவருக்கு ஏற்பட்ட  சக செய்தியாளர்களின் தகவல்களைக் கண்டு வியந்துபோனதும் பிறகு எடிட்டராக பணிபுரிந்த போது கிடைத்த எண்ணற்ற தகவல்கள் எல்லாமே இந்த இயர் புத்தகத்தின் பிரதியாகவே இருந்தது என்பது மிகவும் சுவாரஸ்யமான தகவல்.

உதிர்ந்த ஒன்று -  ஒரு தாயிக்கு எப்படி தனது தன்னை விட்டுப் பிரிந்த பிறகு மனநிலை இருக்குமோ அப்படிதான் ஒரு எழுத்தாளனுக்குத் தனது எழுத்து தொலைந்து போனால் இருக்கும் என்பதைக் குறிப்பிடுகிறார்.   

முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி? 

சமூக ஊடகங்கள் பயன்படுத்தும் நாம் எவ்வாறு தினசரி நமது நெருங்கிய நண்பர்களுடன் உரையாடுகிறோம் என்பதும் எவ்வாறு நமக்குத் தொடர்பில்லாத பதிவுகளுக்கு அமைதியாக இருப்பது என்பது பற்றிய தகவல் தான் முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி? 
 
மால் உலகம், இன்றிய மால்களில் ஏற்படும் புதிய விதமான அனுபவங்கள் எனவும், கீரை வாங்கும் கலையே ஒரு வித்தியாசமானது என்றும் அவற்றில் எவ்வாறு சொதப்புவது என்பதையும் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் என மற்ற கட்டுரைகளின் வழியே தெரிந்து கொள்ளலாம்.  

அன்புடன்,


தேவேந்திரன் ராமையன் 
04 ஆகஸ்ட் 2021