Tuesday 3 January 2023

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஆசிரியர் : ஜெயகாந்தன்

சில நேரங்களில் சில மனிதர்கள் 

ஆசிரியர் : ஜெயகாந்தன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 404

பக்கங்கள்  503


ஜெயகாந்தனின் எழுத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த புத்தகம்.  எத்தனை விதமான மனித முகத்தில் உலாவரும் கதாபாத்திரங்கள், ஒவ்வொரு பாத்திரமும் வாழும் வாழ்வு தான் இந்த கதையின் பலம் கங்கா.

இந்த நாவல் பேசும் கதை ஒரு பெண்ணின் துயர கதை. தனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தால் தன் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி விட்ட சமுதாயத்தில், தன்னாலும் வாழ முடியும், அதுவும் என் எண்ணம் போலவே தான் என்னால் வாழ முடியும் என்று தனது மனத்திற்கு உகந்ததாக அந்த வாழ்க்கையினை வாழ்ந்து செல்லும் கங்கா என்ற ஒரு இளம்பெண்ணின் உளவியல் ரீதியான பல்வேறு மன போராட்டங்களைக் காட்சிப் படுத்திச் செல்கிறது இந்த நாவல். முழுவதும் கங்கா அவள் நினைத்த அவளின் வாழ்க்கையை நம்மிடம் அவளாகவே சொல்லிச் செல்கிறாள்.       

அக்னி பிரவேசம் சிறுகதை வாசித்த பிறகு அந்த சிறுகதையினையே கருப்பொருளாக வைத்து ஒரு மாபெரும் நாவலாக மாற்றி எழுதியிருக்கிறார் என்று அதை உடனே வாசிக்கத் தூண்டியது.  

ஒரு சிறுகதையின் முடிவினை மாற்றி அமைத்து அதனையே கதைக் களமாகக் கொண்டு ஒரு பெரிய நாவலினை, ஆரம்பத்தில் "காலங்கள் மாறும்" என்ற தலைப்பில்  ஒரு தொடர்கதையாகத் தினமணி கதிரில் வெளிவந்தது.  பிறகு  இந்த தொடர்கதை ஒரு நூலாக உருப்பெற்ற சமயத்தில் இந்த நாவலுக்குச் சரியான தலைப்பு என அவர் நினைத்ததைத் தலைப்பாக வைத்தார் அப்படி வந்தது தான் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற தலைப்பு.

ஒவ்வொரு பாத்திரத்தின் வார்ப்பும் அந்த பாத்திரத்தின் குணாதிசயங்கள் மற்றும்  தன்மையினையும் ஆரம்பத்திலேயே புரிந்து கொள்ளும்விதமாக அமைந்திருக்கிறது. 

கங்கா, ஒரு கல்லூரி மாணவி, ஒரு நாள் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்துக்காக காத்திருக்குக்கும் அந்த மாலை வேளையில் மழையும் பெய்கிறது. அந்த நேரத்தில் பேருந்து வராமல் இருக்க அந்த இளம் பெண்ணை ஒரு வாலிபன் தனது வாகனத்தில் ஏற்றிச் செல்கிறான் அவனிடம் சந்தர்ப்ப சூழ்நிலையில் தன்னையே இழந்து விட்டு வீடு திரும்புகிறாள்.வந்தவுடன் தனது தாய் கனகத்திடம் சொல்லி அழுகிறாள் உடனே அந்த தாய் இதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று \சொல்லி அவளை நீராடி அவளை   அவளுக்கு ஏற்பட்ட கரையிலிருந்து கழுவிட்டு, நீ இனிமேல் புனிதமாகிவிட்டாய் என்று தனது மகளை தேர்த்திக்கொள்கிறாள். இப்படி ஒரு முடிவிடுடன் "அக்னி பிரவேசம்" என்ற சிறுகதையினை முடிந்ததால் மக்களிடம் ஏற்பட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்குப் பதிலாகவே இந்த நாவல் தொடர்ந்தது.

அதே சிறுகதையின் முடிவினை மாற்றி, அந்த கங்காவின் தாய் அவளின் மகனிடம் சொல்லி அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் கங்காகவும் அவளின் அம்மாவும் தனியே விடப்படுகிறாள். அவள் அண்ணன் அவளைக் கொச்சைப்படுத்திப் பேசுகிறான். அப்போது கங்காவின் மாமா அவளுக்கு அடைக்கலம் கொடுத்து அவளை மேலும் படிக்க வைக்கிறார். அவளும் பெரிய அளவில் படித்து நல்ல வேலைக்குச் செல்கிறாள். அவள் ஒரு தன்னிறைவான வாழக்கையை தனது அம்மாவுடன் நடத்துகிறாள்.

கங்காவிற்கு உதவிய மாமாவின் குணாதிசயங்களை மாமாவின் மனைவியிடம் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளும் கங்கா மாமாவின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டி கணித்து அதற்குத் தகுந்தாற்போல மிக நேர்த்தியாகத் தன்னை பாதுகாத்துக்கொள்கிறாள். ஆனாலும் மாமாவிற்கு அவள் மேல் ஏற்பட்ட சபலம், அதனால் அவர் ஒவ்வொருமுறையும் அவளிடம் நடந்துகொள்ளும் விதம் எனச் சமுதாயத்தில் அந்த மாதிரி உறவுகளின் போர்வையில் உலாவரும் ஒரு பாத்திரமாக மாமாவின் பாத்திரத்தினை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

கங்காவின் அம்மா கனகம், தனது பெண் வாழ்க்கையே தொடங்காமல் தனித்து தன்னுடன் வாழும் தனது பெண்ணின் நிலைமையினை எண்ணி எண்ணி ஒவ்வொரு மணித்துளியும் அவள் படும் துயரம், அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும்  நமக்குச் சொல்லிச் செல்கிறது. கனகத்தின் இயல்பான பாத்திரம் ஒரு ஆதங்கமான அம்மாவாக அவள் வாழ்ந்து செல்கிறாள்.

கதையின் முக்கியமான பாத்திரமாக வாழும் பிரபு, இளமையிலே தனது அப்பாவின் செல்வாக்கில் வாழும் அவன் பணத்தால் எல்லாவற்றையும் பெறமுடியும் என்ற போக்கில் தனது இளமை வாழ்க்கையினை வாழ்ந்து செல்கிறான். அப்படி அவன் தனது இளம் வயதில் செய்த ஒரு விளையாட்டால் பாதித்தது கங்கா. கங்கா தான் வாழ்வில் பாதித்து இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியாது. ஏனெனில் அவள் வாழ்வில் நித்தம் ஒருவர் வந்து செல்கிறார்கள் அதைப்போலவே அந்த பட்டியலில் கங்காகவும் ஒருத்தி. ஆனால் அது கங்காவிற்கு மற்றவர்களைப் போல இல்லாமல் அவள் தனக்கு நேர்ந்த இந்த விஷயத்தினை அம்மாவிடம் சொல்லி அது பெரிய பிரச்சினையில் போய்ச் சேர்கிறாள். அவள் ஒரு தனி விதமான பெண், தன்னறியாமலே நடந்தேறிய அந்த தவற்றை நினைத்து தனது வாழ்வின் அணைத்து சுகங்களையும் துறந்து வாழ்கிறாள்.

கிட்டத்தட்டப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு கங்காவிற்கு தனக்கு ஏற்படும் அவமானங்களும், அதனால் ஏற்பட்ட பல்வேறு இழப்புகளும் அவளைப் பின்தொடரும் சில பார்வைகளும் அவளை ஒரு வழியில் தன்னை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்த அவனை எப்படியாவது கண்டுபிடித்தாகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். அப்படியாக அவள் அவனைத் தேடும்போது அவளின் வாழ்வில் நடந்த அந்த சம்பவத்தை மையமாகக் கொண்ட ஒரு கதையினை கதாசியார் எழுதுகிறார்,எப்படியாவது அவரை கண்டுபிடித்து அங்கிருந்து அந்த அவனைக் கண்டு பிடிக்க வாய்ப்பிருக்கும் என்ற எண்ணத்தில் அவளும் முயல்கிறாள் அதில் அவள் வெற்றியும் காண்கிறாள்.

மீண்டும் அந்த அவனை அவள் சந்தித்தபோது ஏற்படும் உரையாடல்கள் அவர்கள் இருவரையும் ஒரு புதிய நிலைக்குக் கொண்டுசெல்கிறது.   அப்படியாக அவள் ஆரம்பிக்கும் அந்த உறவு அவளைத் தற்காத்துக்கொள்ள வேண்டி அவள் ஆசைப்படுகிறாள். பிரபுவின் ஆசை நாயகி தான் என்ற ஒரு உறவில் வாழ்ந்தால் அவளுக்கு நேரும் பல்வேறு இடையூறுகளிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் அவள் நினைப்பது ஒருவழியில் சரியானதே. ஆனால் அவளுக்கு அவள் வீட்டிலிருந்து வரும் நெருக்கடிகள் அவளை மேலும் மனதில் துயருக்குள்ளாகிறது.

அம்மாவின் அழைப்பில் பேரில் வீட்டிற்கு வரும் மாமா அவளிடம் தனது இச்சையினை மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்க்கிறார், ஒரு நேரத்தில் அவள் முன்புபோல இல்லாமல் தற்போது துணித்தவளாய் அவருக்குக்  கொடுக்கும்  பதிலடியில் அவர் உறவையே முடித்துக்கொண்டு போய்விடுகிறார். 

கங்காவிற்கு, பிரபுவின் மனைவி மற்றும் மகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மஞ்சுவினை அவளுக்கு அதிகம் பிடித்துப்போக அவளுக்கு ஒரு ஆசானாகவே மாறுகிறாள். இருவருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் நல்ல உறவாக மலர்கிறது.

பிரபு மற்றும் கங்கா இருவரும் நித்தமும் சந்திக்கின்றனர். இவர்களிடையே ஒரு விதமான உறவு நீடிக்கிறது. அவள் அவளாகவும் அவன் தற்போது பொறுப்புடையவனாகவும் கொஞ்சம் காலம் வளம் வருகிறார்கள். இதுவும் அவளுக்கு நிரந்தரம் அல்ல என்ற நிலையாகிப் போகிறது அவளது வாழ்க்கை. கதையாசிரியரின் உறவினர் கங்காவை திருமணம் செய்துகொள்வதாக ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அதன்பொருட்டு கங்காவின் அம்மா அவளிடம் வந்து சேர்கிறாள், அவள் அண்ணனும் பிரபுவைச் சந்தித்து அவன் நினைத்ததைச் சொல்கிறான். அதன்படி பிரபுவும் இனி நான் அவளைச் சந்திக்க மாட்டேன் என்றும் சொல்கிறான், சொல்வதுமட்டுமல்ல அவன் அவனின் வாக்கின் படியே முற்றிலும் மாறுகிறான். அவனின் இந்த மாற்றம் மீண்டும் கங்காவின் வாழ்வில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் தான் இந்த கதையின் மிகவும் முக்கியமான திருப்பமாக  இருக்கிறது.

ஒரு பெண், தனக்கு நேர்ந்த ஒரே ஒரு துயரத்தால் அவள் தள்ளப்படும் நிலை சமுதாயத்தால் அவளுக்கு நேர்ந்த அந்த அவமானங்கள் என அவள் மனதில் தீராத ரணமாகிப் போய்விட்டது. அதிலிருந்து அவள் மீண்டு வர இயலாமல் அவள் மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகி அவள் வாழ்வே மாறிப்போகிறது.  

அவள் எடுக்கும் முடிவினை வாசிக்கும் நமக்கும் ஏற்க முடியாமல் மனம் ஒருவிதத்தில் தத்தளித்துச் செல்கிறது.

ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு அவமானங்களை எதிர்கொண்டு அவள் தனக்கென ஒரு தனி வழியில் வாழ்ந்து காட்டுகிறாள். 

அப்படியாக தனது வாழ்வின் வாசலை மாற்றி அமைத்துக்கொண்ட அந்த அவள் ஜெயகாந்தனின் கதையில் வரும் நாயகி கங்காவாகதான்.

இந்த கதையின் முடிவுதான் இந்த கதையின் மிக பெரிய பலமாக பேசப்படுகிறது. 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

3 ஜனவரி 2023 

Monday 2 January 2023

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆசிரியர் - ஜெயகாந்தன்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்  

ஆசிரியர் - ஜெயகாந்தன் 

காலச்சுவடு பதிப்பகம் 

தமிழ் கிளாசிக் நாவல் 

பக்கங்கள் 319

விலை ரூபாய் 375

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -  இந்த நாவல் தான் அவர் எழுதியவற்றிலே மிகவும் அவருக்குப் பிடித்தது என்று ஜெயகாந்தன் சொல்லியிருக்கிறார்.

இந்த கதையின் பயணிக்கும் கதைமாந்தர்கள் கூடவே நானும் அதன் அழகிய கிருஷ்ணாபுரம் மற்றும் குமார புரம் ஆகிய ஊர்களில் கொஞ்சம் நாள் வாழ்ந்துவந்த ஒரு உணர்வினை தந்து செல்கிறது இந்த நாவல். அவர்கள் கூடவே நானும் அந்த லாரியில் பயணிக்க ஆரம்பித்தேன். இறுதியில் அவன் புதுப்பித்த அந்த புது வீட்டின் விழாவில் உணவை ருசித்து விட்டு வந்துதான் இந்த பதிவினை பதிவிடுகிறேன்.

மொழி, இனம், தனது பிறப்பின் ரகசியம் என எதுவுமே தெரியாத ஹென்றி அவன் வாழும் விதம் முற்றிலும் அருமையாக கையாளப்பட்டிருக்கிறது. படித்து பள்ளியில் ஆசிரியராக இருக்கும் தேவராஜன் அவனது அக்கா அக்கம்மாள்,  லாரி ஓட்டும் துரைக்கண்ணு, லாரி உதவியாளர் பாண்டு, மணியக்காரர், தருமகர்த்தாபோஸ்ட் ஐயர், ஹோட்டல் காரர் மற்றும் என கிருஷ்னராஜபுரத்தில் வாழும் ஒவ்வொருவரின் பாத்திரமும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. இது ஒரு கிராமத்தில் எப்படி இருக்குமோ அதுபோலவே அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இவர்களுடன்  கதையின் முக்கிய பாத்திரமாக வாழ்ந்து செல்லும் பப்பா சபாபதி மட்டும் மம்மாவும் எனக் கதை அருமையாக இருக்கிறது.

அந்த ஊரின் புலவர் வீடு என்று பெருமையாகச் சொல்லப்படும் வீட்டின் ஒரு மகன் சபாபதி, அவரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்ற அதே நாளில் யாருக்கும் தெரியாமல் அவர், தனது வீட்டைப் பூட்டிவிட்டு ஊரைவிட்டு வெளியேறுகிறார்.  ஊரைவிட்டு வந்தவர் ராணுவத்தில் வேலைபார்க்கிறார். அந்த நேரத்தில் பர்மாவில் யுத்தத்தில் இருக்கும் பொழுது தனது நண்பர் மைக்கேல் இறந்துபோகிறார். நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நண்பரின் மனைவி அழைத்துவருகிறார் அதேநேரத்தில் வரும் வழியில் கேட்பாரின்றி கிடந்த ஒரு குழந்தையும் எடுத்துவருகிறார். அப்படியாக அவர்களிடம் வந்து சேரும் அக்குழந்தை தான் ஹென்றி. அவர்கள் பெங்களூரில் வந்து வாழ்கின்றார்கள். அன்றிலிருந்து சபாபதி ஹென்றிக்கு பாப்பாவும் ஆங்கிலோஇந்தியன் பெண் மம்மவாகவும் வாழ்கிறார்கள். பிறகு பப்பா ரயில்வேவில் வேலைக்குச் சேர்கிறார். 

காலப்போக்கில் முதலில் மம்மா இறந்துவிடுகிறார் பிறகு பாப்பாவும் இறந்துவிடுகிறார்.   இவர்கள் மற்றும் தான் தனது உலகம் என்று இருந்த ஹென்றிக்கு பப்பா சொல்லிய அவரின் கிராமத்தின் நினைவுவருகிறது. அங்கிருக்கும் அவரின் பூட்டிய வீடும் மற்றும் சொத்துக்களும் உனக்கே சேரும் என்ற உயிலும் அவர் கொடுக்கிறார். அங்கிருந்த அவரின் கிராமமான கிருஷ்ணராஜபுரத்திற்கு  வந்து சேருகிறான்.

இங்கு வரும் ஹென்றிக்கு தேவராஜன் நண்பராகிறான். அவன் வீட்டிலே தங்கவைத்துக்கொள்கிறான். அவன் வீட்டிற்கு எதிரே இருக்கும் வீடுதான் 30 வருடத்திற்கு மேலாகப் பூட்டியே இருக்கும் பப்பாவின் வீடு எனத் தெரிந்துகொள்கிறான்.

மணியக்காரர் முன்னிலையில் ஊர்பஞ்சாயத்து கூடி புதிதாக வந்த ஹென்றி இந்த சொத்துக்கள் அனைத்துக்கும் சொந்தம் என அதிகாரப் பூர்வமாகப் பாத்திரங்கள் சொல்கிறது ஆனால் என்ன செய்யலாம் என்ற கூடிப் பேசிக்கொள்கின்றனர். சாதாரணமாக ஊர் மக்கள் எப்படியெல்லாம் பேசுவார்களோ அப்படியே உரையாடல்கள் நடக்கிறது. இறுதியில் துரைக்கண்ணு எல்லாவற்றையும்  ஹென்றிக்கே கொடுத்துவிடவேண்டும் அதுதான் ஞாயம் என்கிறான் அதே சமயம் ஹென்றி நான் இந்த சொத்துக்களுக்காக வரவில்லை இது என் பப்பா வாழ்ந்த ஊர் அவர் என்னை விட்டுப் போனபிறகு அவர் வாழ்ந்த வீட்டில் வாழலாம் என்றுதான் இங்கு வந்தேன் அதனால் வீடு மற்றும் எனக்கு போதும் என்கிறான். அப்படியே அனைவரும் ஒப்புக்கொண்டு தீர்ப்பு நடக்கிறது.

துரைக்கண்ணு, நன்றியைப் பாசமாகத் தனது அண்ணனின் மகன் எனப் பார்த்துக்கொள்கிறான். அந்த வீட்டையும் பப்பா வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதுபோலவே கட்டிவிடுகிறார்கள்.  துரைக்கண்ணு மற்றும் அவனுடைய முழு குடும்பமும் தங்கள் வீட்டுப் பிள்ளை போலவே பார்த்துக்கொள்கிறார்கள். 

இடையில் நிர்வாணமாக ஒரு பெண் வருகிறாள் அவளைப் பற்றி துரைக்கண்ணு ஏற்கனவே சொல்லியிருக்கிறான். ஆனால் அன்று அவள் ஹென்றி வீட்டிற்கும் இடத்திற்கே வருகிறாள். அவள் அவன் பேசுவதை மட்டும் கேட்டுக்கொள்கிறாள் அவன் கொடுக்கும் உடையினை அணிந்து கொள்கிறாள்.பிறகு அக்கம்மாவிடம் இருக்கிறாள். ஹென்றி அவளுக்கு பேபி என்று பெயரிடுகிறான்.

மணியக்காரர் இறந்து போகிறார், அவரின் மகளுக்கு குழந்தை பிறக்கிறது, அவளின் கணவன் அவளை விட்டுப் பிரிந்து இருக்கிறான். 

பிரிந்து இருந்த தேவராஜனின் மனைவி அவனுடன் வந்து சேர்கிறாள். அக்கம்மாள், தேவராஜனின் அக்காவாகவும் அம்மாவாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.  மொத்த கதையிலும் அக்கம்மாவின் பெயர் ஒரே ஒரு முறை மட்டுமே வருகிறது ஏனெனில் அவள் அக்கம்மாவாகவே வாழ்கிறாள்.

சின்னான், மண்ணாங்கட்டி, பாண்டு மற்றும் பள்ளி படிக்கும் சிறுவர்கள் என அவரவர்கள் சிறப்பாக வந்துசெல்கின்றனர்.

மொத்தத்தில், சபாபதி அவர்களின் உலகமாகத் திகழ்ந்த அந்த  வீட்டில் ஹென்றி,  தேவராஜன், துரைக்கண்ணு மற்றும் அந்த கிராமத்தினருடன் சிறிது காலம் வாழ்ந்த ஒரு அனுபவம் தான் இந்த "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்".


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 டிசம்பர் 2022

Friday 23 December 2022

வாழ்க்கை விநோதம் (நகைச்சுவை கட்டுரைகள்) - அழ. வள்ளியப்பா

 வாழ்க்கை விநோதம் 

(நகைச்சுவை கட்டுரைகள்) 

ஆசிரியர் - அழ. வள்ளியப்பா

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய்   49

பக்கங்கள்  88


1945 ல், வெளிவந்த இந்த புத்தகம் ஆசிரியரின் சொந்த அனுபவங்களை நகைச்சுவை உணர்வுடன் மிக எளிமையாக எழுதியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையிலும் வரும் அனுபவங்களை நாம் நமது வாழ்வில் கண்டிப்பாகச் சந்தித்த ஒரு அனுபவகமாகே இருக்கும் என்பது தான் உண்மை. படித்துத்தான் பாருங்களேன் எந்த அளவுக்கு உங்கள் அனுபவம் ஒத்துப்போகிறது என்று பாருங்களேன்.

மொத்தம் 13 கட்டுரைகள். 

சில்லறைக் கடன், இந்த கதை எனக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவன் என்னிடம் கடன் வாங்கி 10 வருடத்திற்கு மேல் ஆகிறது ஆனால் அவன் இதுவரை கொடுத்தபாடில்லை ஆனால் அவனது வாழ்க்கை முறை நல்லாத்தான் இருக்கிறது. இவர்களைப் போல இருக்கும் ஆசாமிகளுக்கு அடுத்தவரிடம் எப்படி கடன் வாங்கிவிட்டு கையை நீட்டிவிட்டு போவது  என்பதை இவர்கள் கைதேர்ந்தவர்கள். அப்படிதான் ஆசிரியரும் கடன் கொடுத்து ஏமாந்து போகிறார்.

முடிதிருத்தகம் கடையில், முடிதிருத்திக் கொண்டிருக்கும் போது முடிவெட்டுபவர் அருகில் கேட்ட தாளத்திற்கு ஏற்ப இவரின் தலையில் விளையாடிவிட்டார், மழையில் பாதித்த போன சாலை போல அவர் தலை ஆனதும், மழைக்காலத்தில் சம்மர் கிராப் வெட்டிக்கொண்டு மீண்டும் வளர்த்துவிட்டாராம். 

அடுத்து சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க வேண்டி நண்பர்களுடன் உல்லாச பிரயாணம் செய்ய ஆரம்பித்து, ரயில் டிக்கெட் இல்லாமல் மாயவரம் வரை டிக்கெட் எடுத்து பிறகு லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் ஏறிய பிறகு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்.

மறதியின் லீலை என்ற கட்டுரையில் ஒரு வாசகர் பத்திரிக்கை அலுவலகத்திற்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட குமாஸ்தா பணத்தை எடுத்துக்கொண்டு அவரின் முகவரியினை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இது போல பல்வேறு நிகழ்வுகள் இந்த கட்டுரைகள் வழியே குறிப்பிட்டுள்ளார். ஒரு அரசு ஊழியர், தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் 'தங்கள் தாழ்மையுள்ள ஊழியன்' என்று மறந்து எழுதியிருக்கிறார். மாணவர்கள் இருவரில் ஒருவருக்கு எல்லாப் பாடங்களிலும் நன்றாக மதிப்பெண் வருகிறது ஆனால் கணக்கு மட்டும் வரவில்லை அதேபோல அவரின் நண்பருக்குக் கணக்கு மட்டும் தான் வருமாம் அதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கணக்கு பேப்பரில் பெயரை மாற்றி எழுதிவிடுவோம் என்று. ஆனால் மறந்து போய் தனது பெயரையே எழுதியதால் கணக்கில் இரண்டு பேப்பர் ஒரே பெயரில் இருந்ததாம்

அதைப்போலவே சலவை காரரின் ஒரு சில அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.  கோவிலுக்குப் போய் செருப்பை வெளியில் விட்டுவிட்டு பிறகு தரிசனம் முடிந்து வந்து பார்த்தல் செருப்பு காணோம் அப்போது அவர் சொன்ன அதே வார்த்தைகளைச் சொன்னாராம் மற்றவர் அதாவது ஏதாவது பரதன் உன்மேல் இருக்கும் அன்பில் பெருக்கால் எடுத்துப்போயிருப்பான் என்றாராம்.

பல மேதாவிகள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு விநோதமாக வாழ்வார்கள் என்றும் அதே போல அவருக்கு ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களைக் குறிப்பிடுகிறார்.

தனக்குப் பலநாளாக மேடையில் பேச வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அதற்காக ஒரு நேரம் வந்த போது அதைப்பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முயல்கிறார் ஆனால் அவருக்கு அதுவரையில் பேசிய அனுபவம் இல்லையென்பதால் அவரை பேசவேண்டாம் என்றார்கள். ஆனால் இறுதியில் அவரை பேசச்சொல்லி அவரால் பேசாமல் போய்விட்டதைக் குறிப்பிடுகிறார்.

கரிக்கார்,  கரியில் இயங்கும் இந்த வாகனத்தில் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு நாள் அவரின் நண்பரின் வீட்டுக்கு விருந்திற்காகச் சென்றாராம் அன்று பார்த்து அவர் பயணித்த வண்டி அவரை படு மோசம் செய்துவிட்டதாம். ஒருவழியாக அவர் நண்பர் வீட்டிற்குச் சென்ற பிறகு அவர்களெல்லாம் சாப்பாட்டை முடித்துவிட்டுத் தூங்கியே விட்டார்களாம். பாவம் என்ன செய்வது அன்றிரவு பட்டினியாகவே அவர்கள் வீட்டில் உறங்கினாராம்.

லஞ்சம் வாங்குவதை அருமையாக விவரிக்கிறார் அதாவது வரியில்லாத வருமானம் என்று பல்வேறு விதமான லஞ்சங்களைக் குறிப்பிடுகிறார். 

அலுவலகத்திற்கு வரும் தொலைப்பேசியை எடுக்கும் மேலாளரின் வீட்டு வேலைக்காரனுக்குக் கிடைக்கும் அனுபவத்தால் ஏற்படும் இடர்பாடுகளை விளக்குகிறார். 

பணப்பித்து என்ற கட்டுரையில் கஞ்சனாக இருந்து என்ன சாதிக்கப்போகிறோம் என்று மிக அருமையாக விவரிக்கிறார். பணத்தைச் சேமிக்க பல்வேறு வழியிருக்க, தனது வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி அதைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்கிறார். பணம் செலவழிக்க பல்வேறு நல்ல வழிகள் இருக்கிறது அதுபோலவே பணம் செலவாகிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.

வெள்ளைக்காரரும் வெள்ளிக்கிழமையும் என்ற தலைப்பில், நாம் பார்க்கும் நல்ல நேரம், ராகு காலம் போன்ற பல்வேறு விதமான வழக்கத்தினை பார்த்து பலரும் பேசுவது பற்றி  அவர் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில் வெள்ளைக்காரர்கள் பார்க்கும் பல்வேறு சகுனத்தினை பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்கள் வெள்ளிக்கிழமையில் எதுவும் புதிதாகச் செய்ய மாட்டார்கள் அது போலவே 13 நம்பர் அவர்களுக்கு உதவாது. அவர்கள் 13 நம்பர் என்றாலே அலர்ஜி தான். 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 டிசம்பர் 2022

      

Thursday 22 December 2022

மெஸ்ஸி - கால்பந்தின் தேவதூதன் - ஆசிரியர் : முகில்

மெஸ்ஸி - கால்பந்தின் தேவதூதன் 

ஆசிரியர் : முகில் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 26 


நாம் பெரும்பாலும் கிரிக்கெட் பின்னாலே செல்வதால், கால்பந்தின் மீது அவ்வளவாக நாட்டம் இல்லை. ஆனால் நான் வசிக்கும் துபாயில் கால்பந்து தான் பிரதான விளையாட்டு. பெரும்பாலும் சிறுவர்கள் மெஸ்ஸியின் டீசர்ட் அணிவது வழக்கம்.  ஒரு சில விளையாட்டினை இங்கே இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருக்கிறேன் ஆனாலும் மொழி தெரியாமல் இருந்தாலும் கால்பந்தாட்டத்தின் ஒரு பெருமை என்றே தான் சொல்லவேண்டியது அந்த விளையாட்டினை பார்த்து ரசிக்கும் அதனை ராசிகளையும் பந்து செல்லும் திசையில் ஓடவைப்பது தான். 

லியோனெல் மெஸ்ஸிஅர்ஜெண்டினாவின் நீண்ட நாள் கனவை நினைவாக்கிய வீரன். கடந்த ஒரு வாரக் காலமாக மெஸ்ஸியின் படமும் செய்தியும் இல்லாத நாளேடுகள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களின் நாடே அவனைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஊர்வலம் செல்கிறது, ஒரே நீலக்கடலின் (அர்ஜெண்டினாவின் கால்பந்து சீருடை அணிந்த அந்நாட்டு மக்கள் கூட்டத்தின்)  நடுவே சட்டை அணியாத மெஸ்ஸி தந்து கையில் தங்கப் பதக்கத்துடன் நீந்திச் செல்வது,  அவனும் தங்கமாய் மிளிர்ந்து செல்வது போல தோற்றமளிக்கிறது. 

அப்படிப்பட்ட மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் தான் இது. வெறும் 26 பக்கங்களே கொண்ட இந்த புத்தகம் மெஸ்ஸியின் பிறப்பு முதல் கத்தாரில் நடக்கும் 2022 பிபா இறுதிப் போட்டிக்கு முந்தைய தினம் வரையிலான நிகழ்வுகளை மிக அருமையாகவும் தெளிவாகவும் கொண்டுள்ளது.

சிறுவயதிலே கால்பந்தின் மீது நாட்டம் கொண்ட மெஸ்ஸி தனது நான்காவது வயதிலே ஆட ஆரம்பித்தான்.  வளர வளர அவனின் ஆட்டத்தின் திறமையும் மெருகேறிக்கொண்டே இருந்தது. அவன் சேர்ந்த அணைத்து அணியிலும் அவன் ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்தான்  என்று தான் சொல்லவேண்டும்.

இயற்கை அவனின் உயரத்தின் மீது ஒரு தடை போட்டு அவனைக் கால்பந்தின் ஆசையினை தடுக்க முயன்றது ஆனால் அவற்றையும் தாண்டி தனது லட்சியம் ஒன்றே அது கால்பந்து தான் என்ற வேட்கையுடன் இருந்தான். அதற்கான தருணம் வந்து சேர்ந்தது. அவனின் திறமையினை அறிந்துகொண்ட பார்ச்சிலோனாமெஸ்ஸியை தங்கள் நாட்டில்  தங்கி இங்கிருக்கும் கிளப் அணிகளில் விளையாட முன்வந்தால் நாங்கள் அவனின் மருத்துவசெல்வுக்கு உதவிபுரிவதாகச் சொல்லி அவ்வாறே நடந்தது.

பிறகு ஸ்பெயினின் குடியுரிமை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளைத் தாண்டி இடை இடையே ஏற்பட்ட விபத்துகள் அதனால் ஏற்பட்ட சோர்வுகள் என எல்லாவற்றையும் கடந்து  பார்சிலோனாவின் பல்வேறு போட்டிகளில் விளையாடி தனது தடத்தைப் பதித்தான் மெஸ்ஸி. அதே வேகத்தில் பார்சிலோனாவின் அணியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையினை 2004 ஆம் ஆண்டில் பதிவுசெய்தான். பார்சிலோனாவின் அணியில் 2014 வரை விளையாடும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் குடியுரிமையும் கிடைத்தது. ஆனால் அப்போது மெஸ்ஸி மக்கள் மத்தியில் கால்பந்தின் தேவதூதன் என்று வர்ணிக்கப்பட்டான். அதே நேரத்தில் மக்களிடம் ஒரு கேள்வியும் அதற்கான விடை மெஸ்ஸியிடமே இருந்தது. தேசிய அணி என்று வந்தால் அவன் எந்த அணிக்காக விளையாடுவான் என்று. மக்களின் கேள்விக்கு, நான் அர்ஜெண்டினாவின் மகன், எனது தேசம் அதுதான் என்றும் அதே நேரத்தில் பார்சிலோனாவின் அணிகளில் விளையாடுவதை நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னான்.

மெஸ்ஸி புரிந்த சாதனைகள்  ஒன்றல்ல இரண்டல்ல அது ஒரு நீண்ட பட்டியல். அந்த சாதனை பட்டியலில் பல்வேறு கோப்பைகள், தங்க காலணிஇளம் வீரர் சாதனை,அதிக கோள்கள் சாதனை என்று நீளும் இந்த பட்டியலில் 2022 ஆண்டு கத்தாரில் நடந்த  உலகக்கோப்பை போட்டியில், உலகக்கோப்பை வென்று  தனது தேசத்தின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியதும்  ஒன்று ஆகும்.               


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 டிசம்பர் 2022

Tuesday 20 December 2022

விருந்தாளி  

ஆசிரியர் : ஆல்பெர் காம்யு

தமிழில்  - கா.நா. சு.

கிண்டில் பதிப்பு     

விலை ரூபாய் 49

பக்கங்கள் 32


'விருந்தாளி' என்னும் தலைப்பில் ஆல்பெர் காம்யு அவர்களால் 1957ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்த கதை  அல்ஜீரியா நாட்டில் நடப்பதாக அமைந்துள்ளது. மேலும் இந்த கதை 'ஒரு கைதியின் பயணம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. 

1913 ல் அல்ஜீரியாவில் பிறந்த கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்து பல்வேறு தொழில்கள் செய்து, பின்னர் பிரான்ஸில் குடியேறினார். தனது எழுத்துக்கள் மூலமாக பல்வேறு விதமான அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் பல்வேறு படைப்புகள் வெளிவந்துள்ளது. அவற்றுள் 1957ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

இந்த விருந்தாளி என்ற கதையும் அவரின் மனப்பான்மையினை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. 

பள்ளத்தாக்கின் உச்சியில் ஒரு அப்பள்ளிக்கூடம் அதை நிர்வகிக்கும் ஆசிரியர் டாரு அவர்கள். கடும் குளிரிலும் அவரும்  மற்றும்  அந்த பகுதியில் வாழும் மக்களும் வாழ்கின்றனர்.  அவர்களுக்கு உதவிபுரிய வேண்டி தனது முழு வாழ்வையும் அர்ப்பணிக்கிறார். அதற்காக அங்கே ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார் மேலும் அந்த பகுதி மக்களுக்கென அரசாங்கம் கொடுக்கும் கோதுமை மற்றும் உணவுப் பொருள்களை அவரின் பள்ளிக்கூடத்தில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் பகிர்ந்து பிரித்துக் கொடுப்பதும்  அவரின் ஒரு முக்கிய வேலையாகக் கொண்டிருக்கிறார்.

அன்று பள்ளத்தாக்கின் கீழிருந்து அவரை நோக்கி இருவர் வருகிறார்கள் அதில் ஒருவன் குதிரை மீதமர்ந்தும் மற்றவன் நடந்தும் வருகிறான். அவர்கள் நெருங்கி வந்தவுடன் அவருக்குப் புரிந்துவிடுகிறது,  அவரை நோக்கி வருபவரின் ஒருவன் போலீஸ் என்றும்  அவன்கூடவே வருவது ஒரு கைதியாக இருக்கும் என்று யூகித்துக்கொள்கிறார். கடுமையான  பனி பெய்துகொண்டிருந்த நேரம் கூடவே  கடுங்குளிர் அந்த பகுதியினை வெகுவாக மூடிக்கொண்டிருந்தது.

அவர்கள் வந்துசேர்கின்றனர், பிறகு போலீஸ் அவனுடன் வந்த கைதியினை டாருவிடம் ஒப்படைத்துவிட்டு அவனை அடுத்த பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனலில் கொண்டு சேர்க்குமாறு சொல்லிவிட்டு அவர் சென்றுவிடுகிறார்.

டாரு,  அந்த கைதியை ஒரு விருந்தாளி போலவே பாவித்து அவனுக்கு உன்ன உணவும் குளிருக்கு உடுத்திக்கொள்ளக் கம்பளியும் கொடுத்து அவனை உபசரிக்கிறார். கூடவே அவரின் மனம் அவனைக் கொண்டு ஒப்படைக்க மனமில்லாமல் தீவிர யோசனையில் இருக்கிறார்.

மறுநாள் காலை அவரும் அந்த கைதியும் செல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் டாரு, கைதியிடம் சொல்கிறார். இவருக்கும் தான் நான் வருவேன். இந்த இந்த பணத்தை வைத்துக்கொள், போலீசிடம் போனால் அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள் அதனால் இந்த பக்கமாகச் செல் அங்கே உனது மக்கள் இருப்பார்கள் அவர்கள் உன்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு அவர் திரும்பிவிடுகிறார்.      ஆனால்  அந்த கைதி போலிஷ்காரர்கள் மற்றும் நீதிபதிகள் இருக்கும் பக்கம் நோக்கியே நடக்கிறான்.

திரும்பி வந்த டாரு, தனது அறையில் இருக்கும் பிரான்ஸ் தேசத்து நதிகளின் வரைபடத்தில் எழுதியிருந்த வார்த்தைகள் அவரை நோக்கிச் சொல்கின்றன" நீ எங்கள் சகோதரனை போலீஸில் ஒப்படைத்துவிட்டாய் அதற்கான தண்டனை உனக்குண்டு"...

டாரு, தன்னிடம் வந்து சேர்ந்த கைதியை அவர் ஒரு விருந்தாளியாகவே கருதி அப்படியே பாவித்து அவனிடம் பணமும் கொடுத்து அவனைப் போலீசிடம் ஒப்படைக்காமல் உன்விருப்பப்படி நீ செல் என்று தான் சொல்கிறார் ஆனால் அவர் மனம் அவரை ஒரு குற்றவாளியாகவே கருதுகிறது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

20 டிசம்பர் 2022 

Monday 19 December 2022

 டார்த்தீனியம் 

ஆசிரியர் : ஜெயமோகன்

ஸ்டோரி டெல் - கதை ஓசை 

ஜெயமோகன் இணையதளம்  

பக்கம் 54





டார்த்தீனியம் - கணையாழி 1992 இதழில் வெளிவந்த குறுநாவல்தி.ஜானகி ராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது.  இந்த குறுநாவலை முதலில் ஸ்டோரி டெல் ஆப்பில் கேட்டு ரசித்தேன். அதன் ஆர்வம் என்னை எழுத்து வடிவில் வாசிக்கத் தூண்டியது. கிண்டிலில் கிடைக்கவில்லை - பிறகு ஆசிரியர் ஜெயமோகன் இணையதளத்தில் வாசித்தேன்.  வாசித்து முடித்த பின்னர் எதோ ஒரு வலையில் மாட்டிக்கொண்ட பிரமை.

அழகான குடும்பம், அலுவலகத்தில் வேலை பார்க்கும் அப்பா, வீட்டோடு இருக்கும்  அம்மா இவர்களுக்கு ஒரு மகன் இவர்களுடன் உறவாய் வாழும் கருப்பன் என்ற நாய், கனகு என்ற பசுவும் அதன் குட்டி மக்குரூணீ என இவர்கள் வீடே ஒரு அருமையான வீடாக அந்த ஊரில் இருக்கிறது. 

அப்படியான வீட்டில் எழும் ஒரு பிரச்சினை அது ஆலமரமாக வளர்ந்து அந்த குடும்பத்தினை சின்னா பின்னமாக ஆக்கிய கதைதான் இது. 

அப்பா அலுவலகத்திலிருந்து வந்த போது தனது கையில் ஒரு செடியை எடுத்து வந்து அதை உடனே இரவோடு இரவாக நட்டுவைக்கின்றனர். அன்றிரவே மகனுக்கும் மனைவிக்கும் ஒரு சில நிகழ்வுகள் நடக்கிறது அதைக் காரணம் காட்டி மறுநாள் காலையில் இதை பிடுங்கிவிட வேண்டும் என்று  கேட்கின்றனர். ஆனால் அப்பா மறுத்துவிடுகிறார். இதை என்றாய் டாக்டரிடம் இருந்து வாங்கிவந்தேன் இது வெளிநாட்டிலிருந்து வந்தது என்று சொல்லி இதை நான் தூக்கியெறியமாட்டேன் என்று முடிவாகச் சொல்லுகிறார்.

அந்த செடி நாளுக்கு நாள் வளர்ந்து அவர்களின் வீட்டையே ஆக்கிரமித்து ஒவ்வொரு உயிரையும் பலி வாங்குகிறது. முதலில் கனகு பிறகு மக்குரூணீ, பிறகு அம்மா அப்படியே கருப்பன் தனது நிலையினை மாற்றி அவனும் அப்பாவும் அந்த செடியுடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அது கருநாகம் போல வளருகிறது. 

அவன் அங்கிருந்து தப்பித்து வெளியில் சென்றுவிடுகிறான். வேளையிலும் சேர்ந்துவிடுகிறான். அம்மா இறந்த தகவல் தெரிந்து தனது பயிற்சியிலிருந்து ஊருக்கு வருகிறான் அப்படி அவன் வருவதற்குள் அவனின் அம்மா எரியூட்டப்படுகிறாள். 

அவனையும் அந்த கருநாகம்  ஆட்கொண்டுவிடுகிறது. அவன் திரும்பிப் போகும்போது அவனுக்கு உடல்நிலை சரியில்லால்மற் இருக்கிறது அவன் உடல் முழுவதும் விசம் ஏறியிருந்தது  என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். 

பிறகு ஒரு நேரத்தில் அப்பாவும் இறந்துவிட்டதாகவும் அப்போதுதான் கருப்பன் வெளியில் வந்ததாகவும் அது ஊரில் ஒரு சிலரைக் கடித்து அவர்களும் இறந்து விட்டதாகவும் சொல்கின்றனர். திரும்ப  அந்த ஊருக்குப் போக அவனுக்கு மனதில் ஒரு ஓரத்தில் கூட இடமில்லாமல் இருந்தான். அவன் அதன் காரணமாக பல்வேறு இடங்களுக்குச் சுற்றித்திரிந்தான். அவன் மனமும் உடலும் வலுப்பெற்றது.

இறுதியில் ஒரு கணத்தில் அவன் மனதில் அவனுக்கே தோன்றியது அதுவரை அவன் வாழ்ந்த வாழ்விற்குள் ஒரு மாயை இருந்தது என்றும் கட்டாயம் அடுத்த விடுமுறை ஊருக்கு போக வேண்டும் என்றும் அப்படியே ஊருக்கு வருகிறான். அவன் கண்களில் படும் காட்சிகள் எல்லாம் அவனை மேலும் அதிர்ச்சியடைய வைக்கிறது. 

ஒற்றை செடி வீட்டிற்குள் வந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிதறடித்து விட்டது ஒரு பிரமையாகவே இருக்கிறது. டார்த்தினியும் என்ற அந்த ஒற்றை செடி எப்படி ஆட்கொண்டது என்பதை அருமையாகச் சொல்கிறது. 

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

19 டிசம்பர் 2022  


                      

      


இரண்டாம் உலகப்போர் ஆசிரியர் : பா. ராகவன்

இரண்டாம் உலகப்போர் 

ஆசிரியர் : பா. ராகவன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 75

பக்கங்கள்   69



இந்த புத்தகம், இரண்டாம் உலகப்போர் பற்றிய ஒரு சுருக்கமான புத்தகம், பல்வேறு  விவரங்களைத் தாங்கிய இந்த புத்தகம் மிகவும் எளிமையாக இரண்டாம் உலகப்போரை பற்றி பேசுகிறது. கிட்டதட்ட 4-5 ஆண்டுகள் நடந்த முதலாம் உலகப்போர் ஒருவழியாக முடிந்து உலகம் அமைதியான   சூழலுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் 1939 ல்  இரண்டாம் உலகப்போருக்கான ஆரம்பத்தை  ஆரம்பித்தார் ஹிட்லர்.

ஹிட்லர் என்ற ஒரு மனிதன் இல்லாமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகப்போர் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. என்ன செய்ய, அது  நடந்து முடிந்துவிட்டது. இப்போது அது வரலாறு இனி நாம் அதை பற்றி படிக்கத்தான் முடியுமே தவிர வேறென்ன செய்ய முடியும்.

ஜெர்மனி  நாடு முதலாம் உலகப்போரின் போது தோல்வியடைந்து உலகநாடுகளுக்கு அடங்கி போனதால், அந்நாடு பல்வேறு இழப்பீடுகள் கொடுக்கவேண்டிய கட்டாயதிற்குள்ளானது. மட்டுமல்லாது பல்வேறு நிலங்களையும் இழந்து ஒரு நிபந்தனைக்குரிய அரசராகவே இருந்துவந்தது.  ஹிட்லர் இதையே தனது தரப்பில் சாதகமாக எடுத்துக்கொண்டு, ஜெர்மனி மக்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்தி, அதையே முக்கிய பலமாக வைத்து கொண்டு ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார். அவ்வாறு ஆட்சி பீடத்தில் வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது மக்களிடமும் உலகின் பல்வேறு நாடுகள் மீது விரோதத்தினை விதைத்தார். அது மக்களிடையே தீவிரமடைந்தது அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு இரண்டாம் உலகப்போரை ஆரம்பித்தார்.
 
முதலாவதாக, ஏன் நமது தேசத்தின் மண்ணையும் பொன்னையும் பிற நாடுகளுக்கு கொடுக்கவேண்டும் என்று எடுத்த தீர்மானத்தின் விளைவாக பக்கத்து நாட்டின் மீது போர் தொடுத்து அப்படியே கிடைத்த வெற்றியின் சுவையால் அவரின் அட்டூழியம் தொடர்ந்து மேலோங்கியது. அவருக்கு துணையாக இத்தாலியும் கைகோர்த்து கொண்டது.  இவர்களின் பசிக்கு இறையாகிப்போனது ஒட்டுமொத்த ஐரோப்பாவும்.

கிடைத்த வெற்றியின் ருசியில் மூழ்கிய ஹிட்லர், மேலும் மேலும் ஆடிய ஆட்டம் கூடிக்கொண்டே போனது தான் மிச்சம். இதற்கிடையில் சோவியத்திடம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஆனால் அதையும் மீறி ஹிட்லர் ஒரு கட்டத்தில் சோவியத்தின் மீது தனது ஆட்டத்தினை ஆரம்பித்தார். பொதுவாகவே எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அவர் மதித்தாக வரலாறே இல்லை. 

மற்றொருபுறம் ஜப்பான்,ஜெர்மனியுடன் கைகோர்த்து தனது தரப்பிலிருந்து முடிந்த வரை அட்டூழியம் செய்தது அதன் விளைவாக அமெரிக்காவின் மீது தனது தாக்குதலை காட்டியது. இதை கேட்ட ஹிட்லரும் அமெரிக்கா மீது போர் தொடுத்தார் அப்படியாக போன தருணத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் முழு பலத்தையும் காட்ட ஆரம்பித்தது. அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் சோவியத் நாடுகள் ஆடிய கடுமையான ஆட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாயமால் திணறிய ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.

ஹிட்லர் தற்கொலைக்கு பிறகு சரணடைய வேண்டியநிலைக்கு வந்தனர் ஜெர்மன் மற்றும் ஜப்பான்.  மொத்தம் ஆறு ஆண்டுகள் நீடித்த இந்த போர் கிட்டத்தட்ட 40,000,000 லிருந்து  50,000,000  உயிர்கள் பலிவாங்கியது மிகவும் கொடூரமான ஒரு நிகழ்வே. இவை அனைத்திற்கும் காரணம் ஒரு மனிதனின் வெறிச்செயல் என்று தான் சொல்லவேண்டும்.

அன்புடன்.     

தேவேந்திரன் ராமையன் 
19 டிசம்பர் 2022