Tuesday 26 July 2022

ரசவாதி (Alchemist) - வாசிப்பனுபவம்

 ரசவாதி (Alchemist)

பாலோ கொயலோ 

தமிழில் - நாகலட்சுமி சண்முகம் 

உலகப் புகழ் பெற்ற நூலாசிரியர் "பாலோ கொயலோவின்" முதல் புத்தகம் ரசவாதி. இந்த புத்தகம் எழுதிய ஆரம்பக் காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகாமலிருந்தது ஆனால் ஆசிரியர் பாலோ கொயலோ இதனை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்ளாமல் அதனை உலகின் புகழ்பெற்ற மற்றும் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்த நூலாக மாற்றிய பெருமைக்குரியவர். இதனுடன் தன்னுடைய பயணத்தினை விட்டுவிடாமல் பல்வேறு புத்தகத்தினை நமக்காகக் கொடுத்திருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற இந்த புத்தகத்தினை வாசிக்கத் தொடங்கிய தொடக்கத்தில் ஒரு ஆடுமேய்க்கும் சிறுவனும்  அவனது  ஆடுகளும் என ஆரம்பிக்கிறது இந்த சிறுவன் எவ்வாறு பயணிக்கப்போகிறான் என்ற ஆவல் தூண்டுகிறது. அந்த ஆவலும் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பும் வாசிக்கும் நம்மைக்  கதையின் உச்சம் வரை நிறுத்தாமல் வாசிக்க வைக்கிறது. இதற்கு முதல் காரணமாக இருக்கிறது தமிழில்  மொழிபெயர்த்துள்ள "நாகலட்சுமி சண்முகம்" அவர்களின் அசாத்தியமான மற்றும் மிக இலகுவான எழுத்தின் போக்கும் மேலும் அதற்கு ஈடாகச் செல்லும் அருமையான மொழிநடையும் நம்மை சில மணிநேரம் கட்டி போட்டுவிடுகிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. 

இந்த கதையின் நாயகன் "இளைஞன் சாண்டியாகோதான் பிறவியிலேயே  இடையனாகப் பிறக்காத இவன் தான் தேர்ந்தெடுக்கும் தொழில் ஆடு மேய்க்கும் தொழில். இவற்றைத் தொழிலாக  எடுத்துக்கொண்ட  சாண்டியாகோ, தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டு போகும் வழியில் சிதிலமடைந்த போன ஒரு  தேவாலயத்தின் உள்ளே இரவில் உறங்குகிறான்.  தனது உறக்கத்தின் போது காண்கின்றான். அவனுக்கு அந்த கனவு மீண்டும் மீண்டும் வருகிறது, அவன் எப்போதும் அந்த கனவினை குறித்தும், கூடவே தன்னுடனே இருக்கும் தனது செம்மறியாடுகளைப் பற்றியும்  யோசித்துக் கொண்டு தனது பயணத்தினை தொடர்கிறான்.

அந்த கனவில் வரும் "ஓர் அதிர்ஷ்டத்தினை" நம்பிக்கொண்டு  அதுவும் அந்த அதிர்ஷ்டம்  அவனுக்காகவேக் காத்துக்கொண்டிருப்பதாக எண்ணி அங்கிருந்து துவங்குகிறான் அவன் தனது பயணத்தினை.

அவன், தனது பயணத்தின் வழியில் தான் சந்திக்கும் ஒவ்வொருவரும்  எதோ ஒரு விதத்தில் அவனுக்கான அதிர்ஷ்டம் இருக்கும் இடத்தினை ஒரு குறிப்பாகச் சொல்கின்றனர்.  அவனும் ஆர்வமாகத் தான் கண்ட கனவின் திசையினை நோக்கிச் செல்கின்றான்.  வழியில் அவன் சந்திக்கும் பல்வேறு சோதனைகள் அவற்றையெல்லாம் அவன் எவ்வாறு எதிர்கொண்டு தனது இலக்கினை நோக்கி முன்னேறுகிறான் என்பதை மிகவும் சுவாரசியமாகவும் கூடவே உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களுடனும் இடையே கொஞ்சம் காதலும் அதனுடன் கூடிய வீரமும் என அவனின் பயணம் நம்மையும் அவன்கூடவே அழைத்துச் செல்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு வயதில் ஏற்படும் காதல், அதுவும் இங்கே சாண்டியாகோவின் கண்ணெதிர்க்கொள்ளும் அழகியின் மீது அவனுக்கு ஏற்படும் காதல் மிகவும் அருமையாகவும் அதேசமயத்தில் அவர்களின்மறைமுகமான  சந்திப்புகளும் அவனை அந்த புள்ளியிலிருந்து தனது இலக்கினை நோக்கி நகரவிடாமல் தடுக்கிறது. இது இயல்பாக எல்லா இளைஞர்களிடமும் இருக்கும் ஒரு ஈர்ப்புதானே அதிலென்ன ஆச்சரியம் என்று கூட தோன்றுகிறது ஆனால் அவன் இதுவரை கடந்து வந்தது இவளைக் கானவா அல்லது அவனின் லட்சியத்தினை கானவா என்ற கேள்விக்கு மிக எதார்த்தமாகப் பதில் கிடைக்கிறது. ஆமாம் அவனோ தான் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் "லட்சியமா அல்லது காதலா" என்ற நிலையில் தனது முடிவின் முதலாவதாகத்  தனது  லட்சியம் தான் என்று அவன் செல்லும் விதமாகச் செல்கிறது கதை.

நாயகன் சாண்டியாகோ, இயற்கையாகவே சகுனங்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு தனித்திறமையினை கொண்டவனாகவும் மேலும் அதன் துணையுடன் அவன் பயணிக்கும் போது, தான் பயணிக்க வேண்டிய திசையினையும் அங்கே எதிர்ப்படும் இன்னல்களையும் இயல்புகளையும் முன்கூட்டியே  அவன் தெரிந்து கொள்வதால், அவன் எவ்வாறு தனது பயணத்தில் முன்னேற வேண்டும் என்ற முடிவினை எடுத்து அதற்கான வழியில் முன்னேற முடிகிறது ஆனால் அதே சமயத்தில் தனது பலமாக இருக்கும், அவன் தெரிந்து கொண்டுள்ள  சகுனத்தால் அவனுக்கு பல்வேறு இடையூறுகளும் ஏற்படுகிறது. இயற்கையினை எவ்வாறு ஒரு சாதாரண மனிதனால் யூகிக்க முடியும் அது இயலாத காரியம் என்ற தோரணையில் அவன் ஒரு சில இன்னல்களைச் சந்திக்கிறான். 

அவனது பயணத்தில் சந்தித்த மனிதர்களால் தெரியப்படுத்திய தரவுகளை வைத்துக்கொண்டு முன்னேறுகிறான். அவ்வாறு முன்னேறும் வழியில் தனக்குத் தேவையான பொருள்களைச் சம்பாதித்து அவற்றைத் தனது பயணத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறான். ஆனால் பல்வேறு நேரங்களில் புது இடமும் மனிதர்களும் அந்நியமாகவே படுவார்கள் அல்லவே அதைப்போலவே தான் அவனும் ஒரு சிலரை நம்பி  தனது கையில் இருக்கும் பொருளை இழந்துவிடுகிறான். ஆனால் பொருள் போய்விட்டதே என்று கவலைகொண்டு தான் சோர்வடைந்து திரும்பாமல், தனக்கே உறிய மனோபலத்துடன்  மீண்டும்  மீண்டும் தனியாகவே எழுந்து அவன் தனது இலக்கினை நோக்கிப் பயணிக்கிறான். இந்த அருமையான குணம் வாசிக்கும் நமக்கும் தோல்வி என்பது நிரந்தரமல்ல என்றும் எப்போதும் நமது இலக்கினை நோக்கிப் பயணிக்க வேறொரு வழி கட்டாயம் இருக்கும் என்பதைச் சொல்கிறது.

தனக்கென ஒரு சிறப்பான வழியினை கொண்டு பயணிக்கும்  சாண்டியாகோ, தனது பயணத்தின் முடிவாக அவன் தனது அதிர்ஷ்டம் இருக்கும் இடமாகத் தெரிந்துகொண்ட எகிப்தின் பிரமிடுகளைச் சென்றடைகிறான். இடையூறுகளைச் சந்தித்தால் தான் ஒருவன் எப்போதும் சாதனைகளை நிகழ்த்தக் கூடும் என்பதுபோல இங்கேயும் அவனுக்கு ஒரு சிலரால், பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.  மேலும் அவர்களின் தலைவன் சாண்டியாகோவை நோக்கி நீ ஒரு முட்டாள் என்றும் தனது கனவில் தோன்றிய ஒரு புதையலைத் தேடி எவனாவது இவ்வளவு பெரிய பாலைவனத்தினை கடந்து வருவானா என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு அவனை நிர்கதியாக விட்டுவிடுகிறான். 

ஆனாலும் இத்தனையும் நடந்தேறிய பிறகும் அவன் சோர்வடையாமல் தன்னை தாக்கிவிட்டு பொருள்களை அபகரித்துச் சென்றவன் சொல்லிச்சென்ற ஒரு வார்த்தை தான் இவனுக்குக் கடைசியாகக் கிடைத்த குறிப்பு. மீண்டும் அவன் தனது இலக்கினை நோக்கிச் செல்கிறான். 

அவனுக்கான அதிர்ஷ்டம் இருக்கும் இடம் அவன் முதல் முதலில் தனது பயணத்தினை ஆரம்பித்த அதே சிதிலமடைந்த அந்த பழைய தேவாலயம் என்பது தான் சிறப்பானது. 

அங்கே வரும் அவன் தனது புதையலைக் கண்டெடுக்கிறான். 

இது நமக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கும் ஒரு அருமையான பாடம். அதாவது நமக்கு அருகிலே இருப்பதை விட்டுவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒன்றுக்காக ஏங்கவும் அதனைத் தேடிச் செல்லவும் நாம் நினைப்போம் தவிர அருகில் இருக்கும் ஒரு பொருளை நாம் பார்க்கமாட்டோம். என்ற எதார்த்தமான ஒரு கருத்தினை மிகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

26 ஜூலை 2022.      

           

Saturday 23 July 2022

தண்ணீர்

தண்ணீர் 

அசோகமித்திரன் 

ஒலி புத்தகம் 

லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலியின் குரலில்

ஸ்டோரி டெல் தளத்தில்.

ஒரு புத்தகத்தினை வாசித்து உணரும் அனுபவம் தனிதான் என்று இருந்த நேரத்தில் வாகனத்தில் பயணிக்கும் வேளைகளில் ஒலி புத்தகமாக மற்றொருவர் வாசிக்க அதை நேசித்து கேட்கும் அனுபவம் கூட ஒரு வகையில் கதையின்களத்திற்குள் நம்மை பயணிக்க வைக்கின்றது. அதுவும் வாசிப்பவரின் வசீகரமான குரல் நம்மை அந்த கதைக்குள்ளே கட்டிபோட்டுவிடுகிறது.

அப்படிதான் நான் இந்த தண்ணீருக்குள் முழ்கி கிடந்தேன். அந்த அனுபவத்தினை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.    

தண்ணீர்.....  மூன்று மணி நேரத்தில் பெரும்பாலும் வந்து போகும் வார்த்தை தண்ணீர் ..  தண்ணீர்.. தண்ணீர்.. 

மேலும் ஜமுனா, சாயா கூடவே டீச்சர் அம்மா அவர்களுடன் தண்ணீர் இல்லாததால் வரும் கடினம், அந்த பகுதியில் ஏற்படும் சிரமங்கள், முனிசிபாலிட்டி ஆட்களால் தோண்டப்பட்ட குழியும் அதனால் தெருவிளக்கு இல்லாமல் போவதும், பல்வேறு இடங்களில் கழிவு நீர் குழாய் உடைந்து தண்ணீரில் கலந்து வரும் வழக்கம் போல இருக்கும் பல்வேறு விதமான அதே சமயத்தில் சமுதாயத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகளை மிக நேர்த்தியாகப் பேசும் நாவல் தான் இது.       

அசோகமித்திரனின் எழுத்து நடை வாசிக்கும் நம்மைப் பிரமிக்க வைக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த கதையில் வரும் பெரும்பாலான இடங்களில், மிகவும்  நுட்பமாக வரும் உரையாடல்கள், மேலும் அந்த இடத்தையும் அங்கு இருக்கும் ஆட்களையும் பற்றி விவரிக்கும் பொழுது கொடுக்கப்படும் மிகவும் நுட்பமான விவரங்கள் என வாசிக்கும் நம்மையும் அந்த கதையின் களத்திற்குக் கையை பிடித்து அழைத்துச் செல்கிறார்.    

தண்ணீர் இல்லாததால் படும் அவதியும் அதனால் ஏற்படும் பல்வேறு சிரமங்களையும், சிக்கல்களையும் சிலந்தி வலைபோல பின்னி அந்த வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஜமுனா என்று ஒரு பெண்ணையும் ஒரே நேர்கோட்டில் தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்துச் செல்கிறது இந்த தண்ணீர்.      

இந்த கதையில் வரும் பம்ப அடிக்கும் ஓசை ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது எனது சிறுவயதில் எங்கள் கிராமத்தில் அதிகாலையில் ஆரம்பிக்கும் பம்ப அடிக்கும் ஓசையினை சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு உணர (கேட்க) முடிந்தது. 

தண்ணீருடன் சேர்ந்து பயணிக்கு ஜமுனா, அவளின் தங்கை சாயா, கூடவே பலம் கொடுக்கும் டீச்சர் அம்மா என இவர்களின் வாழக்கையில் வரும் வெறுமையும் அந்த வெறுமையினை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் தங்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மனத் தையிரியம் என மிக இயல்பான சொல்லாடல்களுடன் நம்மையும் அந்த தண்ணீர் இல்லாத தெருவிற்கே அழைத்துச் செல்கிறது.

ஜமுனாவிற்கும் சயாவிற்கும் இடையே ஏற்படும் பந்தமும் இடையில் ஏற்படும் மனவிரிசல்களும் இதற்குக் காரணமாக இருக்கும் பாஸ்கர் ராவும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வரும் உரையாடல்களில் அக்காவிற்கும் தங்கைக்கும் இடையே இருக்கும் உறவின் பொறுப்பிற்கும் அதனால் எடுத்துக் கொள்ளும் அக்கறையும் கதையின் பலமாக இருக்கிறது.

ஒரு வீட்டில் பல்வேறு குடித்தனங்கள் வாடகைக்கு இருக்கும் இடத்தில் ஏற்படும் கருத்து பரிமாற்றங்கள் அதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களைக் காத்துக்கொள்ளும் பக்குவம் என வந்து போகும் ஒவ்வொரு பாத்திரமும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

டீச்சர் அம்மா, ஜமுனாவிற்குக் கொடுக்கும் அறிவுரையும் அதன் கூடவே அவளும் வெந்தும் நொந்தும் வாழும் வாழ்க்கையினை சொல்லும் விதமும் அந்த வாழ்க்கையில் அவள் எதிர்கொண்ட கரடுமுரடான பாதையும் அதே பாதையில் கவனமாகப் பயணிக்க கற்றுக் கொண்டு பயணிக்கும் விதத்தையும் சொல்லி வாழ்க்கையினை முடித்துக் கொள்ள முடிவெடுக்கும் ஜமுனாவிற்கு ஒரு புதிய வாழ்க்கையினை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது.

இந்த நாவலுக்கு உயிரோட்டமாகக் குரல் கொடுத்து இருக்கும்     லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலியின் அவர்கள் பல்வேறு கதாபாத்திரங்களின்  குரல்களை அந்த அந்த பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் மிகவும் அழகாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உயிர்  கொடுத்து இருக்கிறார்

 அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 ஜூலை 2022. 



Monday 18 July 2022

ரெயினீஸ் ஐயர் தெரு - வாசிப்பனுபவம்

ரெயினீஸ் ஐயர் தெரு

ஆசிரியர் : வண்ணநிலவன்  

நற்றிணை பதிப்பகம் 

பக்கங்கள் 80

விலை ரூபாய் 70


ரெயினீஸ் ஐயர் தெருவில் இருப்பதோ ஆறு வீடுதான் ஆனால் இந்த ஆறு வீட்டிலும் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒரு அற்புதமான உணர்வினை கட்டாயம் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச் செல்கிறது வண்ணநிலவனின் ஆழமான எழுத்துக்கள்.

எத்தனை மனிதர்கள், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு அக வாழ்க்கை ஒளிந்துகொண்டிருக்கிறது. அந்த வாழ்வியலையும் அவர்களின் அன்றாட நிகழ்வுகளையும் அவர்களின் மனதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பல்வேறுவிதமான விருப்புவெறுப்புகளையும்  மிக நேர்த்தியாகவும் துல்லியமாக விவரித்துச் செல்கிறார். 

இருதயம் டீச்சர்  - சேசய்யா, இவர்களின் வாழ்க்கை ஆரம்பம் முதல் இன்று சேசய்யாவின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் நோய் வரையும். இருதயத்தின் மாமியார் இடிந்தகரையாள், மாமியாருக்கும் இருதயத்திற்கு இடையே இருக்கும் சின்ன சின்ன உரசல்கள் என இருதயத்தின் வாழ்வியலின் அத்தனை நிகழ்வுகளையும் மிக ஆழமாகச் சொல்லிச் செல்கிறார். இருதயம் டீச்சர் தனது கணவன் சேசய்யாவிற்கு தேவையான முட்டைக்காகத் தனது வீட்டில் வளர்க்கும் கோழிகளாகட்டும் அந்த கோழிகள் எங்கெல்லாம் சென்று இறை தேடுகிறது என்பதாகட்டும், மழைக்காலங்களில் கோழிகள் செய்யும் அசுத்தம் அதனால் ஏற்படும் வாடை, கோழிகளின் இறகுகள் அதைக் காது குடையப் பயன்படுத்தும் விதமும் அதிலே ஏற்படும் சுகமும் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.   

ஆசீர்வாதம் பிள்ளை - ரெபேக்கா,  ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்து முடிந்த ஒருசில தம்பதிகள் இருப்பார்கள் அதுபோலவே இந்த தெருவிலும் ஆசீர்வாதம் பிள்ளை - ரெபேக்கா தம்பதியர் வாழ்கிறார்கள். இவர்களின் வீடு எந்த அளவிற்குப் பழுதடைந்து இருக்கிறது. மழை பெய்யும் நேரம் அவர்களின் வீடு எவ்வாறு இருக்கும் என்பதும் ஒரு நேரத்தில் அடுப்படியின் சுவர் இடிந்து விழுந்ததும், அந்த வீட்டின் தாமரை பதித்த கல்படி அந்த படியில் பழகி வாழ்ந்து இளம் வயதிலே இறந்து போன  இவர்களின் மகள் என இவர்களின் வீட்டில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் இவர்களுக்கு உதவிய தியோடர் எனச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

அன்னமேரி டீச்சர் வீடும் மற்றும் இவரின் மகன் தியோடர் என இவர்களின் வாழ்க்கையும். தியோடர் எவ்வாறு அவனின் மனைவியினை இழந்து தனது வாழ்வின் தற்காலத்தில் படும் அவலங்கள் மற்றும் குடிபோதைக்கு அடிமையாகி அல்லல் படுவது என எல்லா நிகழ்வுகளும் சொல்லாமல் இல்லை. 

ஹென்றி மதுர நாயகம்,  இவரின் மகன் சாம்சன் மற்றும் இவர்களுடன் வாழும் அற்புதமேரி, அவ்வப்போது வந்துபோகும் எஸ்தர் சித்தி என இவர்களுக்குள் நடக்கும் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சொல்லியிருக்கிறார். இந்த வீட்டில் நடக்கும் உறவுகளின் அத்துமீறல்கள் அவற்றைத் தனது சிறுவயதிலே அற்புதமேரி பார்க்கிறாள். பிறகு அற்புதமேரிக்கு தனது அண்ணன் சாம்சன் மீதும் சித்தி எஸ்தர் மீது ஏற்படும் உறவின் வலிமையையும் இந்த நிகழ்வால் சிறுவயதிலே அவளுக்கு ஏற்படும் சகிப்புத்தன்மை என உறவின் மீது ஏற்படும் வலிமையான நெருக்கத்தினை சொல்கிறார்.    தனது அம்மாவின் வயதினை உடைய அன்னமேரிடீச்சரின் உடல்பால் ஏற்படும் ஈர்ப்பினை மறைக்க முடியாமல், தனது மனதின் தாகத்திற்கு ஏற்றாற்போல  அவன்  தனது வீட்டின் ஜன்னலோரம் அமர்ந்து அன்னமேரி டீச்சரினை  பார்ப்பதும் அதற்காக அன்னமேரி டீச்சரிடம் ஏற்படும் வெறுப்பு என இயல்பான வாழ்க்கையின் தடங்களைத் தவறாமல் பதியவைத்திருக்கிறார்.     

ஒவ்வொரு மழைக்காலங்களிலும் தெருவில் இருக்கும் பழைய மணல் அடித்து போகப்படுகிறித்து அங்கே புதிய மணல்களை மழை கொண்டுவருகிறது. இது இயல்பாக எல்லா இடங்களிலும் நடக்கும் ஒரு நிகழ்வுதான் ஆனால் இங்கே சிறிய பெண் டாரதிக்கு ஏற்படும் சந்தேகம் அதாவது எப்படி இந்த மணல் வருகிறது இவற்றை யார் கொண்டுவருகிறார்கள் என்ற கேள்விக்கு அவளின் அம்மா சொல்லும் பதில் இறைவனைத் தவிர வேறு யாராயிருக்கும்.

இந்த ரெயினீஸ் ஐயர் தெருவில் வசிக்கும் சொற்பமான  மக்களின் உணவுப் பழக்கம், உடைகள் மற்றும் அவற்றின் வண்ணங்களும் அவற்றை அவர்கள் தேர்வுசெய்யும் விதங்களும், நுகர்ந்து பார்க்கும் வாசனை, மற்றவர்கள் மீது ஏற்படும்   ஆசைகள், விருப்பங்கள்,வெறுப்புகள்,  ஏற்படும் காழ்ப்புணர்ச்சி, அடக்கமுடியாத காமம், பரிதாபம், பிரியமும் காதலும், பாசமும் எனச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இவற்றையெல்லாம் ஒரு குறுநாவலுக்குள் அடக்கி வாசிப்பவர்களின் மனதிற்குக் கடத்திச்செல்வது அவ்வளவான சுலபமான காரியமில்லைதான் ஆனால் இவற்றை மிக எளிதாகவும் சாதாரணமாகவும் வண்ணநிலவன் தனது எளிய எழுத்துக்களின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.  

குறிப்பாக ஒவ்வொரு மனிதன் மேலும் ஏற்படும் வாசனை அது எவ்வாறெல்லாம் வேறுபடுகிறது என்றும் ஆசீர்வாதம் பிள்ளை ஆசிரியராக பணிபுரியும் பொழுது அவர்மீது இருந்து வரும் சாக்பீஸ் மற்றும் பேப்பர் கலந்த வாசனை அதை நுகர்ந்து பார்க்கும் அவரின் மனைவி ரெபேக்கா அதுபோலவே ரெபேக்கா மீது வரும் காய்ச்சிய பாலின் வாடையும் அடுப்படியில் சமைத்துக்கொண்டிருப்பதால் அதனால் ஏற்படும் வாசனையும், கல்யாணி அண்ணன், சாம்சன் அண்ணன் என இவர்களைப் பற்றிப் பேசும் போதும் இவர்களின் மீதிருந்து வரும் வாசனை பற்றிப் பேசிச்செல்லும் ஜீனோ மற்றும் டாரதி கூடவே பள்ளித் தோழியின் பட்டுப்பாவாடையின் வாசம் என இவர்களின் நுகர்வின் நுணுக்கங்களை ரசனையுடன் சொல்லியிருக்கிறார்.

அக்காவிற்குத் திருமண ஆன பிறகு அவள் மீது கோபம் கொள்ளும் தங்கைகள், சிறுபெண்கள் தங்கள் வயதில், தான் பருவம் அடைந்த நேரத்தில் ஏற்படும் மனமற்றதாக எல்லோரையும் எதிரியாகப் பார்க்கும்  பெண்குழந்தைகள் என இந்த தெருவில் வசிக்கும் பெண்பிள்ளைகளின் மனதையும் எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்.                     

ரோஸம்மாள், தனது கணவன் தன்னை விட்டு வேறொருவாளிடம் வாழ்கிறான். தனது பிறந்த வீட்டிற்கே அழைத்து வருகிறார்கள். அதுதான் ஜாஸ்லின் பிள்ளை வீடு அதுவும் இந்த தெருவின் முதல் வீடு. இந்த வீட்டின் மனிதர்கள் நன்றா வாழ்ந்தவர்கள் ஆனால் இப்போது யாருமற்று கிடக்கிறது. தனது வாழ்வினை தொலைத்து விட்டு வந்த ரோஸம்மாள், தன்னை விட்டுச்சென்ற கணவன் இறந்துவிட்டான் என்றதும் அவனைப் பார்க்கச் சென்றவள் அங்கே அவன்மீது வேறொரு பெண்ணும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் விழுந்து அழும்போது மணம் தாங்காமல் அவர்களைத் தனது பிள்ளைபோலவே பாவித்தது மட்டுமல்லாமல்  எல்லோர் மீது பாசம் வைத்து ஒரு தாயைப் போலவே இருந்தாள் என்பதே அவளின் குணநலன்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

மொத்தத்தில் இந்த ரெயினீஸ் ஐயர் தெருவில் வாழ்ந்த மனிதர்கள் பற்றி மட்டும் இங்குப் பேசவில்லை, அவர்களின் வீடு அந்த வீடுகளின் வரலாறு மேலும் அந்த வீடுகளுக்கு மட்டுமிருக்கும் சில உணர்வுகள், இந்த தெருவில் வாழ்ந்து இறந்து போன தியோடரின் மனைவி,  சிறுப்பென் அலீஸ் மற்றும் இந்த தெருவிற்கு விருந்தாளிகளாக வந்துபோகும் மனிதர்கள் மற்றும் தெருவின் பண்டிகை காலத்தில் ஏற்படும் கொண்டாட்டங்கள் அந்த கொண்டதின் போது வந்து போகும் குளிர்ச்சியான மழை முக்கியமாக அதே தெருவில்  இரைதேடி அலையும் கோழிகள், அந்த கோழிகள் உதிரும் இறகுகள் மற்றும் முட்டைகள் என எல்லாவற்றின் பயன்பாடுகள் என மிக அடர்த்தியாகவும்  ஆழமாகவும் ரெயினீஸ் ஐயர் தெருவின் வாழ்வியல் பதியப்பட்டுள்ளது.  


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

18 ஜூலை 2022    

Saturday 16 July 2022

ஒரு புளியமரத்தின் கதை -வாசிப்பனுபவம்

ஒரு புளியமரத்தின் கதை 

ஆசிரியர் - சுந்தர ராமசாமி 

காலச்சுவடு பதிப்பகம் 

தமிழ் கிளாசிக் நாவல் 

பக்கங்கள் 220  


தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் வரும்  இந்த "ஒரு புளியமரத்தின் கதை"  என்ற நூல் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மிக ஆழமான சிந்தனைகளை எளிதான வார்த்தைகளால் கொடுத்திருக்கிறார்.

ஒரு புளியமரத்தின் முழு வாழ்க்கையும் சொல்லிச்செல்லி இந்த கதையில் மரமும் ஒரு மனிதனைப் போலத் தான் உயிரோடே தான் இருக்கிறது. இறுதியில் நம்மைப் போலவே தான் அதுவும் இறந்து(பட்டு)போகிறது என்ற ஒரு இயல்பான விவரத்தினை பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி எடுத்துச்செல்கிறார்.

தான் பார்த்தும், தாமோதர ஆசானிடம் கேட்டுத் தெரிந்தும் கொண்ட ஒரு பெரிய பின்னணிகொண்ட இந்த புளியமரத்தின் கதையினை தனது அனுபவமாகச் சொல்லும் விதம் மற்றும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கதையினை சொல்லப்படும் விதம் அருமை.       

ஒரு மரத்தினை சுற்றி விவசாயம் நிறைந்து இருந்த காலத்திலிருந்து அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகரமயமாகிப் போனதும் அந்த மரம் மட்டும் இத்தனை மாற்றங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே தான் இருந்தது.

முனிசிபாலிடி அவ்வப்போது எடுக்கும் ஒரு முடிவுகளிலிருந்து அந்த மரம் பாடும் பாடு, கூடவே ஒவ்வொரு வருடமும் ஏலத்தில் வரும் வருமானம் என ஒரு காலத்தில் இந்த புளியமரத்தின் வருமானம் முனிசிபாலிட்டிக்கு முக்கிய வருமானமாக இருக்கிறது.

அரசியல் மற்றும் வியாபாரத்தில் வரும் காழ்ப்புணர்ச்சி அதனால் ஏற்படும் விரோதங்கள், அதற்காக இவர்கள் செல்லும் எல்லை என பல்வேறு நிலைகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இந்த புளியமரத்தின் உயிரோடு சேர்ந்தே நடக்கிறது.

மரத்தின் வளர்ச்சியினை தாமோதர ஆசான் சொல்லும் விதமும் அதைக் கேட்பதற்காக அவருக்குப் பிரியமான யாழ்ப்பாணம் சுருட்டு வெற்றிலை வாங்கிக்கொண்டு மற்றும் செலவுகளைச் செய்து கொடுத்தும் அவரிடம் இருந்து கதையினை கேட்டுத் தெரிந்துகொள்ளும் விதத்தில் தான் எத்தனை ஆர்வம். இவரைப் போல ஒரு கதைசொல்லி எங்கள் கிராமத்திலும் இருந்தார் அவர் எப்போதும் பீடி குடித்துக்கொண்டே எங்கள் கிராமத்தில் அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையார் கோவிலருகில் அமர்ந்துகொண்டு சொன்ன கதைகள் ஏராளம் அவற்றை நினைவு படுத்திச் சென்றது தாமோதர ஆசானின் கதாபாத்திரம். 

ஆரம்பக்காலத்தில் புளிக்குளம் என்ற ஊரில் நடு குளத்தில் சிறு தீவுபோல காட்சிதந்த இந்த  புளியமரம், பிறகு காலத்தின் சூழலால் நிலத்திற்கு இடம்பெயர்ந்து இப்போது இருக்கும் இடத்திற்கு வந்த கதையும், அந்த மரத்தில் செல்லம்மாள் தூக்கிலிட்டு இறந்துபோனதும் அப்போது அவர் அங்கே வந்து அந்த மரத்தினை அனைவரிடம் இருந்து காப்பாற்றியதும் பிறகு ஒருநாள் மகாராஜாவிற்கு ஏற்பட்ட ஒரு சோக கதையும் என இந்த மரத்தின் பல்வேறு பரிணாமத்தின் வளர்ச்சியும் அதன் கூடவே வளர்ந்த அந்த நகரமும் என அவரின் கதை வாசிக்கும் நம்மையே நேரில் கதை கேட்ட ஒரு நிலைக்கு அழைத்துச் செல்கிறது இவரின் எழுத்து.

காதர், ஒன்றுமில்லாமல் இருந்த தனது கசப்பான ஆரம்பக்கால வாழ்க்கையினை மறந்து பிற்காலத்தில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு முன்னேறியதும், கூடவே தனது முதலாளியின் மகளையே காசுக்காகத் திருமணம் செய்துகொண்டு பிறகு அவளை வேண்டாமென்று சொல்வதும், ஒரு காலத்தில் முழு கடையும் தனியாக நடத்த ஆரம்பித்து புகையிலை வியாபாரத்தில் வரும் வாய்ப்பினை விடாமல் பிடித்துக் கொண்டு செல்வது எனச் சொல்கிற கதையில் அந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் நிலவரங்களை மிக நேர்த்தியாக இந்த கதாபாத்திரத்தின் ஊடக நமக்குச் சொல்கிறார்.

தாமுவும் எப்படியாவது தனது வியாபார எதிரிகளை அழித்துவிட்டுத் தான் மட்டும் தான் கோலோங்கி இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னால் முடிந்த அளவிற்குச் செல்கிறான்.

எம். சி. ஜோசப், முனிசிபாலிடி தலைவர் தன்னால் முடிந்த வரையில் தனது அதிகாரங்களை எடுத்துக்கொண்டு முனிசிபாலிடி ஊழியர்களை எப்படி நடத்துவது மற்றும் அந்த முனிசிபாலிடிக்கு உள்ளடங்கிய இடங்களை எல்லாம் எப்படிக் கையாள்வது கூடவே தலைதூக்கும் ஒவ்வொருவரையும் எவ்வாறு அடக்கி வைப்பது என்று தனக்கு இருக்கும் அரசியல் பலத்தாலும் அதிகார பலத்தாலும் முடிந்த வரை முயன்றுபார்க்கிறார்.

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த புளியமரத்தினை கதையினை முழு பலத்துடன் தாங்கி செல்கிறது.     

தன்னை சுற்றிலும் நடக்கும் பல்வேறு சாதி மத வேறுபாடும், அவற்றைச் சரிப்படுத்தவும் தான் செய்தது சரியென நிலை நிறுத்தவும் ஒவ்வொருவரும் செய்யும் அல்லது செய்யத் தூண்டும் பல்வேறு  துரோகங்களும் இதற்குள் புகுந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அரசியலும் அதற்காக ஏற்படும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் என எல்லாவற்றையும் ஒரு தனிமரமாக நின்று மௌனமாக வளர்ந்து நிற்கும் புளியமரத்தை ஒரு சிலர் மதத்தின் அடிப்படியில் கடவுளாக்கவும் ஒரு சிலர் இடையூறு என்று சொல்லித் தகர்க்கவும் என போட்டிப்போட்டுக் கொண்டு நடத்தும் பல்வேறு சூழ்ச்சிகளை மையமாகக்கொண்டு இந்த மரத்திற்கும் மனிதருக்கும் இருக்கும் உறவினால் எவ்வாறு சக மனிதர்கள் தங்களைப் பிளவுபடுத்திக்கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த நாவல் அற்புதமான தமிழ்  இலக்கியத்தில் ஒரு பெரும் படைப்பாகவே தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

தமிழ் இல்லை இந்திய இலக்கியத்தின் ஒரு மைல்கல் என பல்வேறு வகையில் கூறப்படும் இந்த நாவல், கண்டிப்பாக எப்போதும்  வாசிப்பவர்களின்  மனத்தில் ஒரு  சிறிய தாக்கத்தினையும் ஒரு காலத்தில் நடந்தேறிய அரசியல் சூழல்களையும் நினைவுபடுத்திச் செல்லும் என்பது தான் இந்த நாவலின் மைல்கல் ஆக இருக்கிறது.

மேலும் தமிழிலிருந்து ஆங்கிலம்,மலையாளம், இந்தி மற்றும் ஹீப்ரு என்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

16 ஜூலை 2022 


   

    

     

மூன்றாம் உலகப்போர் - வாசிப்பனுபவம்

மூன்றாம் உலகப்போர்  - வாசிப்பனுபவம் 

ஆசிரியர் - கவிஞர் வைரமுத்து

கிண்டில் பதிப்பு 

பக்கங்கள் 540


இந்த புத்தகம் விவசாயிகளின் துயரத்தினையும், தரிசாக மாறிப்போன நமது விவசாய நிலங்கள் எல்லாம் இப்போது எப்படி பல்வேறு தொழிற்சாலைகளாகவும், பல்வேறு வகையான அடுக்கு மாடி வீடுகளாகவும் பரிணாமம் பெற்றிருப்பதையும், உலகெலெல்லாம் உணவளிக்கும் விவசாயம் எவ்வாறு அழிந்து போகிறது என்பதை பற்றியும், மேலும் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தால் வளரும் நாடுகள் எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதை இந்த மூன்றாம் உலகப்போர் என்று நூலின் வழியே தெரிந்துகொள்ளமுடிகிறது.

தொன்று தொட்டு நடக்கும் விவசாயிகளின் தற்கொலைக்கு, கடன் ஒரு முக்கிய மூலகாரணம் என்பதையும் அதனுடன் கூடி  ஒவ்வொரு விவசாயியும் எப்படியாவது தனது நிலம் தரிசாக கூடாது என்று நினைத்து அதற்காக பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு எவ்வாறு விவசாயம் செய்கிறான் என்பதற்கு இன்றளவும் மாற்றுக்கருத்தே இல்லை அதுதான் நிதர்சனமான உண்மையும் கூட.

இந்த நூல் ஒரு கிராமத்தில் வாழ்கின்ற விவசாயிகளை முன்னிறுத்தி அவர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும், அவர்களின் அன்றாட  வாழ்க்கை நிலையினையும், சமுதாயத்தில் அவர்களின் நிலைமையும்,  அதே சமுதாயத்திற்கு அவர்கள் கொடுக்கும் தங்களுடை விலைமதிப்பில்லா பங்களிப்பையும் மிக தெளிவாக விவரித்து மிக தெளிவாக நகர்கிறது கதையின் ஓட்டம்.

கண்டிப்பாக  சொல்லியே ஆகவேண்டும், இந்த புத்தகம் வாசிக்க ஆரம்பித்தமுதல் இறுதிவரை "கருத்தமாயி" என்ற கதாபாத்திரதின் ஆளுமையாக  எனது மனக்கண்ணில் வாழ்ந்தவர் மறைந்த அய்யா "பூ.ராமு" அவர்கள் தான்.

சின்னப்பாண்டி, எமிலி மற்றும் இஷிமோரா என மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் வழியே தான் சொல்ல நினைத்ததை தெளிவாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

இந்தியாவில் கடைக்கோடியில் இருக்குக்ம் ஒரு கிராமம் எப்படி இருக்கும் அங்கே வாழும் மனிதர்களின் வாழ்க்கை நிலை எப்படியிருக்கும் என்பதையும் அட்டணம்பட்டி என்ற கிராமத்தில் வாழும் மனிதர்களோடு நம்மையும் சில காலம் வாழ வைத்திருக்கிறார்.

கருத்தமாயி, சிட்டம்மா, முத்துமணி மற்றும் சின்னப்பாண்டி குடும்பத்தினை மையமாக வைத்து அவர்களை சுற்றி அந்த கிராமத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளை மிக இயல்பான நடையில் எடுத்துச்செல்கிறார்.     

வளர்ந்த நாடுகளின் லாபத்திற்காக ரசாயன உரங்களை வளரும் நாடுகளின் மீது சுமத்தியது. இந்த ரசாயன உரம்  இன்று நமது மண் வளத்தினை முற்றிலும் நஞ்சாக்கிவிட்டது. இயற்கை விவசாயம் என்ற   நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ரசாயன உரமில்லாமல் விவசாயம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு படு பாதாளத்தில் நிற்கிறோம். இதிலிருந்து கரை சேர வழி என்ன என்பதை தேட கூட முடியாத நிலையில் வாழ்கிறார்கள் இன்றைய விவசாயிகள்.

வேளாண்மை கல்லூரிக்கு விருந்தினராக அமெரிக்காவில் இருக்கிற எமிலிக்கு அழைப்பு கொடுத்து அவள் இந்தியா வருகிறாள். அதே சமயம் ஜப்பானிலிருந்து வரும் இஷிமோராவும், கல்லூரியில் இருக்கும் சின்னப்பாண்டியும் ஒரு நேர்கோட்டில் சேருகிறார்கள். இவர்களின் கூட்டு முயற்சியினால் அட்டணம்பட்டி ஒரு மாதிரி கிராமமாகி போகிறது. இந்த முயற்ச்சிக்கு சின்னப்பாண்டி எதிர்கொள்ளும் ஏராளமான சிக்கல்கள் என எல்லாவிதத்திலும் குறைவில்லாமல் செல்கிறது கதை.

புவிவெப்பமாதல், தாராளமயமாக்கல் மற்றும் தானியார்மயமாக்கல் என இந்த மூன்று முக்கிய காரணங்களை சிறப்பாக விவரித்து இருக்கிறார். 

ஒரு கிராமத்தில் இருக்கும் விளை நிலங்களை தனியாரிடம் விலைபேசி விற்று கொடுக்க குறுக்கு வழியில் செல்லும் பெரிய மகன் அதற்க்கு எதிராக ஊரை ஒன்று சேர்த்து போராடுகிறான்.

இந்த நூல் மொத்தத்தில் இயற்கை விவசாயம் எவ்வாறு அழிந்து போனது மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளால் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் பல்வேறு இடையூறுகளையும் தெளிவாக சொல்கிறது. 

எல்லோரும் படிக்கவேண்டி ஒரு நூல்,எண்ணற்ற விவரங்களை கொண்டுள்ளது.

தொலைந்து போன நமது இயற்கை விவசாயத்தினையும் அவற்றுடன் கூடிய இயற்கை வாழ்வினையும் திரும்பப் பெறமுடியுமா முடியாதா என்ற கேள்விக்கு விடை தெரியாத ஒரு நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

16 ஜூலை  2022