Tuesday, 11 August 2020

கரை தொடா அலைகள் - சிறுகதை தொகுப்பு

கரை தொடா அலைகள்  - சிறுகதை தொகுப்பு 

 ஆசிரியர் : மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி 


சமீபத்தில் கிண்டிலில்,  ஆசிரியர் மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி அவர்களின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான கரை தொடா அலைகள் வாசிக்க வாய்ப்புக்கிடைத்தது. 

எழுத்தாளர் எமது  மயிலாடுதுறை  மண்ணின்  மைந்தர். அவர்  எழுதிய மற்றைய  நூல்கள்: உயிரோவியம், சுட்ட தோண்டிகள், அழமட்டுமா விழிகள். இந்த தொகுப்பில், 'முன்னாள் காதலி' தொடங்கி, 'பிரியா வரம்', என பதிமூன்று சிறுகதைகளை பெரிதும்  பாச உணர்ச்சியின் போக்கிலே எழுதியிருக்கிறார்.

பொதுவாக ஒரு ஆசிரியர் எப்போதும் அவர்களின் மண்ணின் வாசனையுடனே ஒரு கதையினை எழுத முற்படுவார்கள் என்பது உண்மையே. நமது தொகுப்பின் ஆசிரியரும் விதிவிலக்கு இல்லை. ஒவ்வொரு கதையிலும் மயிலாடுதுறையையும், அதனைச் சுற்றி உள்ள ஊர்களையும் கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

முன்னாள் காதலி:

ஓரே தெருவில் வசித்தும், ஓரே பள்ளியில் பயின்றும்,  இரண்டு மனங்களும் நேசித்து ஓன்று சேர்ந்து வாழ்வதென்பது சில அல்ல பல நேரங்களில் ஒரு பெரிய போராட்டம்தான். அப்படித்தான், அவர் தனது முன்னாள் காதலி சாந்தியினை, நிகழ்காலத்தில் கணவனை இழந்த ஒரு விதவையாக இரண்டு குழந்தைகளுடன் வெகு நாட்களுக்கு பின்னர் அதே தெருவில் சந்திக்கிறார். மன வேதனையினால் அவரே மறுமணம் செய்துகொள்கிறேன் என்றும் சொல்கிறார். அதற்கு அப்பாவின் முட்டுக்கட்டை அவரை சாதாரண மனிதராகவே திருப்பி விட்டது. சாந்தியும் இட்லிக்கடை போட்டு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்கிறார்.  போராடி பிள்ளைகளை வளர்க்கிறார். வளர்ந்த மகனும் இறந்துவிட,  மீண்டும் அதே இட்லிக்கடை, கடைசியில் இட்லிக்கடை பணம் கொடுத்ததோ இல்லையோ அந்த  பெண்மணிக்கு காச நோய் வந்துவிடுகிறது. அருகில் கூட வந்து பேசாத அவருடைய மகளிடம் இருந்து விலக்கி, கதாநாயகன் தன்னுடைய  முன்னாள் காதலியை ஒரு அன்பு இல்லத்தில் சென்று சேர்த்துவிடுகிறார். சேர்கிறார். அந்தப்பெண்மணி கடைசி  மூச்சினை அன்பு இல்லத்தில் விடுகிறார். அந்த  முன்னால்காதலியின் இறுதிச்சடங்குகளை கதாநாயகனே செய்கிறார்.   

ஆணைக் கால் குவளை:  

இந்த கதை ஒரு நடுத்தர குடும்பத்தின் எதார்த்த வாழ்வியலை மிக அழகாக விவரிக்கிறது. நம்மில் பலரும் இன்றளவும் சில பொருள்களின் மீது உயிரினும் மேலான சில பற்றுகளை  வைத்திருப்போம். அதையே இந்த கதை சொல்கிறது. கிராமத்தில் வறுமையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும்   ஆணைக் கால் குவளையில் சுண்ணாம்பினால் சேட்டு அடகுக்கடையில் எழுதிய எழுத்து மறையாமலே இருக்கும் என்பது தெரிந்த உண்மையே.

இனிய தோழா :

இந்த கதை ஒரு தெருவில் வசிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் எவ்வளவு நட்புடன் வளர்க்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பின் மீதான நம்பிக்கையும் அழகாக எழுதியிருக்கிறார்.

ஈதலிசை:    

காதல் திருமணம் செய்து கொண்ட மகனிடம் சேராமல் இருந்த பெற்றோர், தனது மகளின் வாழ்வுக்காக மகனிடம் வருகிறார்கள். தனது சகோதரிக்கு உதவி கேட்டு மகன் கொடுக்க மறுக்கும் போது, அவர்கள் ஒதுக்கிவைத்த  மருமகள், தனது நகைகளை கொடுத்து உதவ சொல்வதில் தெரிகிறது அவளின் ஈதல் குணம்.

ஆபீஸ் பாய்: 

ஒன்றாக படித்து வளர்கிறார்கள் சங்கரும், பிரியாவும். சங்கர் மேல்படிப்பு படிக்காமல் ஒரு அலுவகத்தில் ஆபிஸ் பாய் வேலை செய்வதும், அதே ஆபிசில் பிரியா வேலைக்கு சேர்வதும், இவர்களுக்கு  இடையே இருக்கும் நடிப்பினை அழகாக  சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

ஓய்வு ஊழியம் :

இந்த கதையில் ஒரு மருமகன் தனது மாமனாரை ஒரு மகனாக இருந்து,  ஓய்வு காலத்தில் பாசத்துடன் பார்த்துக்கொள்வதை  சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

 கரை தொடா அலைகள்:    

சுனாமியில் இழந்த தனது ஒரே மகனை கண்டுபிடிக்க முடியாதலால் ஒவ்வொரு வருடமும்,  சுனாமி தினத்தன்று,  வேளாங்கண்ணி சென்று நினைவுகூர்தலை வழக்கமாக வைத்திருந்த அந்த பெற்றோர்,  நடப்பு   வருடம் தங்களது வளர்ப்பு நாயினை கூடவே அழைத்து செல்கின்றனர். இந்த முறை அங்கே வந்திருந்த ஒரு இளைஞனை கண்டு அவர்களின் நாய் போய் தழுவிக்கொள்கிறது. இதை அறிந்த அவர்கள் அவனை விசாரித்தனர். அதில் அவன் தான் அவர்களின் தொலைந்துபோன மகன் என்பது தெரிந்தும் அவர்களால் அவனை சொந்தம் கொண்டாடமுடியாமல் தவிக்கின்றனர்.  அவன்  தொலைத்த தினத்திலிருந்து  வேறு ஒரு  பெண்  அவனை  வளர்த்து  வந்திருக்கிறாள். அவளுடன்தான்  அவர்களுடைய  மகன்  அங்கே  வந்திருந்தான். கடைசியில் வளர்த்த தாயிடம் அதை சொல்லி அவன்தான் தங்கள் மகன் என்று தெரிந்தும், ஒரு பிள்ளையினை இழந்து துடிப்பது எவ்வளவு துயரம் என்பதை உணர்ந்த அவர்கள், அவனை வளர்த்த தாயிடமே விட்டு விட்டு மனிதாபிமானத்துடன் திரும்புகின்றனர்.

காதல் ஓய்வதில்லை:      

நாச்சியார் கோவிலில் நடந்த ஒரு அழகிய காதல் கதை இது.  கடைசி வரைக்கும் நிறைவேறாத காதலானது அது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் பூர்விக ஊருக்கு திரும்ப வந்த காதலன் கலையிழந்த தனது காதலியை சந்திக்க நேரிடுகிறது. அவன்  நினைவாகவே இருந்து திருமணமே செய்யாமல் இருந்த அவனுடைய காதலி  காயத்ரிக்கு ஆறுதலாக பேசியவனிடம், அவனுடைய குடும்பம்  எப்படி  இருக்கிறது  என்று  கேட்டுவிட்டு  அவள் தனக்கே  உரித்தான  தனிமையில்  மீண்டும் ஆழ்ந்துவிடுகிறாள்.    

காவல்காரன்:

இந்த கதையில்  காவல் காக்க வேண்டிய காவல்காரனை விட ஒரு நாய் ரொம்ப நன்றியுள்ளது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

சுமைத்  தாங்கி:  

பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் ஒரே பகுதியில் வசிப்பதும் அவர்கள் பணி புரிவதையும் அழகாக மண் வாசனையுடன் சொல்லியிருப்பதும் இறுதியில் ஓட்டுனர் தன் உயிரை கொடுத்து பயணிகளின் உயிர்களை காப்பாற்றுவதும் பின்னர் ஓட்டுனரின் மகளையே தனது மருமகளாக்கி கொள்வதும் என மணி ஒரு சுமை தாங்கியாகவே வாழ்கிறார்.

நட்பதிகாரம்:  

இந்த கதையில் கூடவே படிக்கும் நண்பனின் கடினமான சூழ்நிலையினை தெரிந்து அவனுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவினால் நன்றாக வாழ்ந்த அவர்களுக்கு அது ஒரு இழிவாக இருக்கும் என்பதினை குறிப்பறிந்து, தனது தந்தை வழியாக அவர்களின் கட்டுமான நிறுவனத்திற்கு தேவையான  எல்லா மூலபொருள்களையும் அந்த நண்பனின் தந்தை நடத்தும்  நிறுவனத்திடம் வாங்க சொல்லி கேட்டுக்கொள்கிறான். இப்படியாக தனது நண்பனுக்கு ஒரு பெரிய உதவியினை அவனுக்கு தெரியாமலே செய்து தனது நட்புக்கு பெருமை சேர்த்தான்.

பச்சை துண்டு:    

கதிராமங்கலத்தில் பிறந்து வளர்ந்து இளைஞன் புவனேஷ் பெங்களூரில் பணி புரிய சென்றதால், அங்கு அவனது நண்பனின் பெற்றோர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி சோதிடம் பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்களை கிராமத்தின் வாசனையுடன் வரவேற்று உபசரித்து வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் பல கோவில்களுக்கு சென்று வந்தனர். குளிப்பதற்கு மோட்டார் போட்டவுடன் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வந்ததால் அதிர்ச்சியடைந்த நண்பனின் அப்பா ஏன் இப்படி வருகிறது என்று கேட்கிறார். அதற்கு காரணம் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம். ஆசிரியர்  கதையில் மேற்படி  திட்டங்களை  பற்றி  விளக்குகிறார். அது  ஆசிரியரின் ஊர் மீதான அக்கரையினை காட்டுகிறது.

பிரியாத வரம் :    

திருமணமாகி 32 வருடங்கள் ஆன ஒரு தம்பதியின் பிள்ளைகள், அவர்களுடைய திருமணம்  முடிந்தவுடன், தனியே குடித்தனம் போய்விடுகிறார்கள். வாழ்வில் பல ஏற்ற இறங்களினால் கிடைக்கும் எல்லா அனுபவங்களும் இறுதிக்காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும்போதும் காலம் விட்டுவைப்பதில்லை என்பதே உண்மை. இருவரும் கரங்கள் கோர்த்தபடி ஓய்ந்து போவது அன்பின் எல்லை.


நல்லதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.


ராம.தேவேந்திரன்  

  

     


  

   



   

No comments:

Post a Comment