நூல் : தாலிபன்
ஆசிரியர் : பா. ராகவன்
நான் சமீபத்தில் தாலிபன் புத்தகம் வாசித்தேன். எனக்கு திரும்பவும் ஒரு முறை ஆப்கானிஸ்தான் பயணித்த போல ஒரு உணர்வு வந்தது என்றால் அது மிகையாகாது.
என்னுடைய நண்பர் ஆசிரியர் பா. ராகவன் அவர்களின் வலைப்பக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதில் முதலில் நான், 'ஆதியிலே நகரமும் நானும்', என்ற தொடரின் சில பாகங்களை வாசித்தேன். அதன் பிறகு ஆசிரியரின் எழுத்துக்கள் மீது ஒரு ஆர்வம் தானாகவே வந்தது.
அந்த ஆர்வத்தின் காரணமாக நான், கிண்டிலில் வாங்கிய சில புத்தகங்கள்: தாலிபன், நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் மற்றும் யதி. இதில் எனக்கு முதலாவதாக தாலிபன் புத்தகத்தை படித்தற்கு ஒரு ஆசை எழுந்தது. அதற்கு முழு முக்கிய காரணம், நான் பல முறை ஆப்கானிஸ்தான் பயணித்திருக்கிறேன் என்பதுதான். அதுவும் குறிப்பாக 2004 முதல் 2007 ம் ஆண்டு வரை பலமுறை அங்கு சென்றுவந்திருக்கிறேன். அங்கு எனக்கு கிடைத்த அந்த அனுபவங்களில், நான் ஒவ்வொரு நாளும் சந்தித்த மக்களிடமும் கேட்டு தெரிந்து கொண்ட பல விஷயங்களில், எனக்கு விடை தெரியாத பல வினாக்கள் இருந்தன.
அந்த விடைகளை தேடியே நான் ஆசிரியரின் 'தாலிபன்', நூலை வாசிக்கத் தொடங்கினேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை!. நான் தேடிக்கொண்டிருந்த பதில்கள் ஒவ்வொன்றுக்கும், ஆசிரியர் மிக மிக அழகாக, ஒவ்வொரு அத்தியாயமாக, இந்த புத்தகத்தில் பூச்சரம் போல தொடுத்து கொடுத்துள்ளார்.
தலைநகரான காபூல், அழகிய நகரான கந்தகார், ஈரானின் பக்கமுள்ள ஹெராத், பாக்கிஸ்தான் பக்கமுள்ள ஜலாலாபாத் மற்றும் பழைய சோவியத் ரஷியாவின் பக்கமுள்ள நீலநிற பள்ளிவாசலை கொண்ட நகரான மஸார் போன்ற பெருநகரங்களையெல்லாம் சுற்றிவந்ததுபோல ஒரு உணர்வை ஆசிரியரின் இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது. ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த தலிபான்கள் முதலில், ஒரு சிறிய கிராமத்தில் தோன்றியத்தில் தொடங்குகிறது. அதன் தலைவர் முல்லா ஒமர் பொறுப்பேற்று கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சியடைந்ததும், பின்னாளில் பாக்கிஸ்தான் தங்களது சுயநலத்திற்காக தாலிபான்களை வளர்த்து விட்டதுவரை, மிக தெளிவாக விவரித்துள்ளார்.
நான் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது, மீண்டும் அந்த ஆப்கான் பயண நாட்கள் என் கண் முன்னே திரையில் ஓடிகொண்டிருப்பது போல உணர்ந்தேன். நாம் பயணித்த ஒரு நாட்டின் வரலாற்றை நமது தாய் மொழியில் ஒரு நூலின் வாயிலாக வாசித்து கிடைக்கும் விபரங்களும், அனுபவங்களும் ஒருவகையான சுகம்.
ஆசிரியர் இந்த புத்தகத்தில் தாலிபன்களின் முழு வரலாற்றையும் மிக ஆழமாக ஆராய்ந்து எழுதியிக்கிறார். இந்த நூல் தாலிபன்களின் ஆரம்பகால பின்னடைவுகள், ஆட்சி அதிகாரத்தை நோக்கிய முன்னேற்றங்கள், அவர்களுடைய வாழ்வியல், அவர்கள் தங்களுக்கு ஆதரவு திரட்டிய முறைகள், அவர்களின் ஆட்சிமுறை, அவர்களுடைய ஆட்சியில் மக்கள் பட்ட அல்லல்கள் என்பன போன்ற விஷயங்கள் நுட்பமான விவரணைகளுடன் தரப்பட்டிருக்கிறது.
போராடிப் பெற்ற ஆட்சி அதிகாரத்தை, தேச நன்மைக்கு எதுவும் செய்யாமல், அடிப்படைவாதம் பேசி, மக்களையும் நாட்டையும் வெகு தூரத்திற்கு பின்னோக்கி இட்டுச்சென்றதையும், அவர்களே அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததையும் ஆசிரியர் மிகத் தெளிவாக விவரித்துள்ளார்.
ஆசிரியரின் மற்ற புத்தகங்களை போலவே, நிறைய செய்திகளை உள்ளடக்கிய ஒரு நூல் இது. தாலிபன்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் இந்த நூலினை வாசிக்கலாம்.
இனிய வாசிப்பு அனுபவங்களுடன்
நன்றி
ராம. தேவேந்திரன்
No comments:
Post a Comment