Wednesday 28 September 2022

இன்ப நினைவு - அகிலன்

இன்ப நினைவு  

ஆசிரியர் : அகிலன் 

தாகம் பதிப்பகம் - கிண்டில் 

பக்கங்கள் 67

விலை ரூபாய் 99


தமிழின்  தவிர்க்கமுடியாத ஒரு எழுத்தாளரான அகிலன், 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ல், புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர்  என்ற ஊரில் பிறந்து 1988ல் தனது 65வது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்தார்.  எதார்த்தமான மற்றும்  ஆக்கபூர்வமான எழுத்துக்களுக்கு பெயர் பெற்ற இவரின் பெரும்பாலான  எழுத்துக்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகியாகவும் இருந்திருக்கிறார். பல்வேறு புதினங்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுவர் நூல்கள், வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள்  மற்றும் பல்வேறு கட்டுரைகள் என இவரின் எழுத்து பல்வேறு தடம் பதித்திருக்கிறது.

1963ல் இவர் எழுதிய "வேங்கையின் மைந்தன்" என்ற வரலாற்று நாவலுக்குச் சாகித்ய அகாடமி  விருது கிடைத்தது. மற்றொரு நூலான   "சித்திரப் பாவை" என்ற வரலாற்று நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான "ஞானபீட விருதை வென்றது இது மட்டுமல்லாமல் இந்த நாவல்  பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் மற்றொரு நூலான "எங்கே போகிறோம்" என்ற சமூக அரசியல் நூல் 1975ல் "ராசா சர் அண்ணாமலை" என்ற விருதினை பெற்றுத் தந்தது.            

இவர் பிறந்து 100 ஆண்டுகள் என்பதால் "2022" ஆம் ஆண்டை  "அகிலன் நூற்றாண்டு" என்று கொண்டாடப்படுகிறது. நாமும் அதைக்  கொண்டாடும் விதமாக நமது குழுமத்தில் இவரின் எழுத்துக்களை வாசித்து அவரை போற்றவேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த ஆண்டு விழா போட்டியில் ஒரு வாரத்தினை இவரின் படைப்புக்களுக்காக ஒதுக்கி அவரின் பெருமையினை  அனைவருக்கும் அறியப் படுத்துகிறோம்.

இந்த கொண்டாட்டத்தில் பங்குபெற நான் தேர்வு செய்த நூல், "இன்ப நினைவு". இந்த நூல் - ஒரு புறம் அருமையான மற்றும் இளமையான காதல் கதை ஆனால் அதே சமயம் மற்றொரு  பக்கம் ஆசிரியர் சமூகத்தின் மீது கொண்ட அக்கரையினையும் கூடவே காந்தியின் மீதுள்ள ஈர்ப்பினையும் அதன் காரணமாகக் காந்திய கொள்கையினை ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கையினையே மாற்றிக் கொள்ளும் வகையில் இந்த கதையின் நாயகனை அமைத்துள்ளார்.  

கதையின் நாயகன் ராமநாதன், கமலம் மற்றும் சுப்பையா என இந்த மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கியமாக வாழும் இந்த நாவலில்  ஒவ்வொருவரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சந்திக்கின்றனர். ஆனால் இவர்கள் மூவரும் மற்றொரு தருணத்தில் சந்திக்கும் பொழுதில் கதை முடிகிறது. 

ராமநாதன் தனது கல்லூரி படிப்பின் போது கிடைக்கும் விடுமுறைக்குத் தனது மாமாவின் கிராமத்திற்குச் செல்கிறார்.  அந்த கிராமத்தில் தனது மாமாவின் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீட்டு  இளம் பெண்ணாக இருக்கிறாள் நாயகி கமலம். கமலம் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அழகான  சுட்டி பெண்.  எதிர்பாராத நேரத்தில் இவர்களிடையே ஏற்படும் ஒரு சில சந்திப்புகள் இவர்களைக் காதல் பந்தத்தில் கொண்டு சேர்க்கிறது.

இந்த கதையின் கால கட்டம்  சுதந்திரத்திற்கு முன்பான காலம் என்பதால், கதை முழுவதும் சுதந்திர தாகம் கதையின் கூடவே வலுவாகப் பயணம் செய்கிறது.  

விடுமுறைக்குச் சென்று வந்த ராமநாதன் தனக்கு ஏற்பட்ட  காதல் மயக்கத்திலிருந்து சற்றே மீண்டெழுந்து  மீண்டும் கல்லூரி செல்கிறார். அங்கே  காந்தியைச் சந்திக்கிறார். ஆசிரியர் காந்தியத்தின் மீது கொண்டிருந்த தனது ஈடுபாட்டினை இந்த கதையின் நாயகனின் வழியே மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  காந்தியின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார் ராமநாதன். ஆனால் சுதந்திரத்திற்காகவும், பொதுமக்கள்  மீது அக்கறை காட்டவும், பொதுவாழ்க்கை தேவைதான் ஆனால் அதற்காக தனக்கென ஒரு சுயமான வாழ்க்கையினை வாழ வேண்டாம் என்பது ஏன் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

காந்தியைச் சந்தித்த பிறகு ராமநாதன் தனது காதலுக்கு முழுவதும் முழுக்கு போட்டுவிட்டு சமுதாயத்தின் மீது காதல் கொள்கிறார்.  பிறகு ஒரு  நாடோடி போல வாழ  ஆரம்பிக்கிறார்.  அதே சமயம் அவரின் வருகைக்காக ஒவ்வொரு மணித்துளியும் காத்துக் கிடக்கும் கமலத்தின் மீது இவர் கொண்டிருந்த காதல் எங்கே போனதென்றே தெரியவில்லை. 

தான் மீண்டும் கமலத்தினை சந்திக்கவே கூடாது என்று தனது வாழ்க்கை முழுவதும் பொதுநலம் என்று கருதி வந்த ராமநாதனுக்கு விதி மீண்டும் ஒரு புதிய ரூபத்தில் கமலத்திடம் கொண்டு சேர்க்கிறது.  போலீசாரால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதன், போலீசாரால் நாடு காட்டில் கண்ணைக் கட்டி விட்டுவிடுகின்றனர். தனக்கு இனிமேல் உயிர் பிழைக்க வழியில்லை என்று கருதுகிறார்.  ஆனால் கமலத்தின் தந்தையர் வழியிலே அவரை கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.   உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில்  கமலத்தின் வீட்டிற்கு வருகிறார். எதிர்பாராத இந்த வருகையினை கமலம் தனது பக்குவமான மனநிலையினால் சமாளித்து ராமநாதனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்கிறாள்.

மீண்டும் நடந்த இந்த சந்திப்பின் காரணமாக இருவீட்டாரும் இவர்களின் திருமணத்தினை நடத்த ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் தனது காதலியிடம், தான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று எடுத்த தீர்மானத்தினை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் போராடுகிறார்.   ஆனால் இறுதியில் ஒரு வழியாகத் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று தனது முடிவினை தனது உறவினர்களிடம் சொல்லிவிட்டு, தனது சமுதாய சேவை செய்ய ஆரம்பித்துவிடுகிறார்.

அப்படி அவர் எடுத்துக்கொள்ளும் புதிய அவதாரம் அவரை சிறையில் கொண்டு சேர்க்கிறது. தனது சிறைவாசத்தில் அவ்வப்போது கமலத்தின்  நினைவு வராமலிருக்குமா என்ன. சில வருடங்களுக்குப் பிறகு கமலம் கல்யாணம் செய்துகொண்டாள் எனக் கேள்விப்பட்டு நிம்மதியடைகிறார். தனது மனதில் இருக்கும் நினைவுகளையும் பெண்கள் மீது அவர் கொண்ட மரியாதையினையும் கலந்து "பெண் தெய்வம்" என்று புத்தகத்தினை எழுதுகிறார். அந்த புத்தகத்தினை சிறையில் வந்து சேரும் சுப்பையாவிடம் கொடுத்து கருத்து பரிமாறிக்கொள்கிறார். இவர்கள் இருவரும் இரு வேறு விதமான அனுபவங்களைக் கொண்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதே சமயம் இவர்கள் சந்தித்த பெண்கள் இருவேறுவிதமானவள் என்ற கருத்தினையும் வாசகர்கள் புரிந்துகொள்ளும் விதமாகச் செல்கிறது இவர்களின் உரையாடல்கள்.  ஆனால் இவர்கள் இருவரும் தங்களது வாழ்வில் சந்தித்தது ஒரே பெண் தான் என்ற முடிச்சியினை கதையின் இறுதியில் வைத்திருக்கிறார் ஆசிரியர்.

அருமையான கதை, இளைஞர்களிடையே சுதந்திரத்தின் தாகத்தினையும் அதே நேரத்தில் காந்தியின் கொள்கைகளையும் கொண்டு செல்வதற்கு  இந்த காதல் கதையினை கதையின்  தளமாக எடுத்துச் சிறப்பாக முடித்திருக்கிறார். 


அன்புடன்,

தேவேந்திரன்  ராமையன் 

28 செப்டெம்பர் 2022

Sunday 25 September 2022

மறக்கமுடியாத கடிதங்கள்

 மறக்கமுடியாத கடிதங்கள் 

ஆசிரியர் : எம். ஞானசேகரன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 72


இந்த நவீனக்காலத்தில் சில தலைமுறைகள் கண்டிராத ஒரு பொக்கிஷம் தான் கடிதங்கள். இது இவர்களின் வரமா? அல்லது சாபமா? என்ற கேள்விக்கு விடையேதும் தெரியாது ஆனால் இன்னும் சில தலைமுறைகள் சென்ற பிறகு  கடிதம் என்ற ஒன்று இருந்ததா என்றே தெரியாமல் போகும் என்ற அபாய குரலுடன் நான் இந்த பதிவினை பகிர்ந்துகொள்கிறேன்.

"ஒரு கடிதம்", தன்னை எழுதுபவரின் எண்ணத்தினை மட்டும் சுமந்து வருவதில்லை, கூடவே விலைமதிப்பில்லா பல்வேறு விஷயங்களைக் கூட்டிவருகிறது. எழுதுபவரின் கைகள் பதிந்த தடத்தின் வாசனையும் அவரின் கைப்பட்ட மையின் மனமும் கூடவே அவர் எழுதிய இடத்தில்  இருந்த நறுமணத்தினையும் நயம்பட தன்னுள்ளே தத்ரூபமாகத் தாங்கி வருவதே கடிதம் என்றால் அது மிகையாகாதே.  

கடிதம் என்பது உலகில் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷம். கடிதம் ஒருவரின் மனதில் ஏற்படும் உள்ளார்ந்த எண்ணங்களை அழிக்க முடியாத ஓவியமாகத் தீட்டிவைத்துக்கொள்ளக் கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதம் தான் கடிதம் என்றே சொல்ல வேண்டும்.

கடிதம் வெறும் நலம் விசாரிக்கும் ஒரு சாதனமாக மட்டும் இல்லை. எண்ணங்களின் பரிமாற்றம், சுயமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு கருத்துக்களை எழுத்து வடிவில் ஆவணப்படுத்தும் அழகிய சாதனம் தான் கடிதம்.

எனக்கு இன்றளவும் நினைவில் இருக்கிறது, நான் முதல் முதலாக வீட்டை விட்டு வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற போது தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் தங்கவேண்டிய சூழல் வந்த போது நான் முதலாவது என் அம்மாவிற்குக் கடிதம் எழுதியது இன்றளவும் என்னுள் இருக்கிறது.

பிறகு 1999 ல் வெளிநாட்டிற்கு வந்த பிறகு ஒவ்வொரு வாரமும் விடாமல் நான் கடிதம் எழுதியவன். சமீபத்தில் நான் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்ற போது எனது எண்ணங்களை எழுத்தாகத் தாங்கி நிற்கும் கடிதங்கள் இன்றளவும் என் அம்மாவின் அலமாரியில் அலங்கரித்துக் கொண்டே இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அந்த வழியில் நண்பரும் இந்த நூலின் ஆசிரியருமான   எம். ஞானசேகரன் அவர்கள் தனது உறவுகளும் நபர்களும் தனக்கு எழுதிய கடிதங்களை ஒரு அற்புதமான பொக்கிஷமாக வெளியிட்டிருக்கிறார்.

பொதுவாகக் கடிதங்களை வெளியிடுவார்கள் புகழ்பெற்றவர்கள் மட்டும் என்று ஒரு திரையினை விளக்கி  சாமானியரும் தங்களின் கடிதங்களை ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ள வசதியாக ஒரு முன்னோட்டமாக இந்த நூல் இருக்கிறது .

கடிதங்கள் தான் எத்தனை எத்தனை உள்ளுணர்வுகளையும், மனதில் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷங்களைப் புதுப்பொலிவுடன் எந்நாளும் கண்குளிர வாசிக்க கிடைக்கும் வசதியான ஒரு சிறப்பானது தான் கடிதம்.

இந்த நூலின் இடம்பெற்றுள்ள பல்வேறு கடிதங்கள் ஒவ்வொன்றும்  நட்புகளுக்கும், உறவுகளுக்கும் இடையே நடந்த ஒவ்வொரு எண்ணங்களின் பரிமாற்றம் மிக அழகா பதிய வைத்திருக்கிறார்.

சகோதரி செல்வியின் கடிதம் - இந்த கடிதங்கள் வாசிக்கும் போது அக்கா தம்பிகளுக்கு இடையே ஏற்படும் உரையாடல்கள் மட்டுமல்லாமல் இந்த உடன்பிறவா உறவுகளுக்கு இடையே இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலிருந்த உறவுகளின் மீதான பரிவு, பாசம், பங்களிப்பு மற்றும் கொண்டுள்ள ஈடுபாடுகள் என எல்லாவற்றையும் வார்த்தைகளால் வரையப்பட்ட ஒளிவீசும் ஓவியமாகத் திகழ்கிறது.

மற்றொன்று கடிதம் - நண்பர்கள் இடையே ஏற்பட்ட பல்வேறு உரையாடல்கள். இந்த கடிதங்களில் வெறும் நலம் மட்டும் விசாரிக்கவில்லை. இவர்களின் கருத்து பரிமாற்றங்கள் நலம் விசாரிப்பு முதல் நாட்டு நடப்பு, அரசியல் அக்கரை, பொருளாதார வளம் மற்றும் புதைந்து போகும் மக்கள் நலன் என விசாலமாக விரிந்து கிடக்கும் விவரங்களை விளக்கமாகப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த கடிதங்கள் உண்மையாகவே ஒரு சமுதாய நோக்கில் வரையப்பட்ட அழகான மடல்கள். 

பேனா நட்பு: இது நானறிந்திராத ஒரு வகையான நட்பு.   இந்த நட்பின் வழியாக உண்மையான உணர்வுகளுக்கு இடங்கொடுக்கும் நண்பர்கள் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் தான். அப்படியாக ஆசிரியருக்குக் கிடைத்த பல நண்பர்களின் கடிதங்கள் பகிர்ந்திருக்கிறார். அப்படியாக ஈழத்திலிருந்து வந்த யாழினி மற்றும் நந்தினி கடிதங்கள்.

சிங்கப்பூர் தோழியின் உறவு மற்றும் மற்றொரு சகோதரியின் கடிதங்கள் மற்றும் அந்த சகோதரியின் கைவண்ணத்தில் வரைந்த ஒதுக்கிப் போட்ட ஓவியத்தினை புத்துயிர் கொடுத்து அவருக்கே புத்தாண்டு வாழ்த்து மாதிரியாக அனுப்பியது என இன்றளவும் உயிர்ப்புடன் கடிதங்கள் இருக்கும் வகையில் இந்த கடிதங்களை ஒரு நூலாக  வெளியிட்ட நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

முடிந்த வரையில் நமக்கு கிடைத்த கடிதங்களை பொக்கிஷங்களாக பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அவ்வப்போது ஒரு கடிதம் எழுதி தான் பாருங்களேன். கடிதம் எழுதும் பொது கிடைக்கும் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து தன்னை தானே செதுக்கி கொள்ளும் ஒவ்வொரு கடிதமும் - இவைகள் காலத்தால் அழிக்க முடியாத அற்புத படைப்பாக மாற்றிவைக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

25 செப்டம்பர் 2022

                                         


Saturday 24 September 2022

பர்மா வழிநடைப் பயணம்

எனது பர்மா நடைவழிப் பயணம் 

ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 120

பக்கங்கள் 248


எனது பர்மா நடைவழிப் பயணம்  - இது ஒரு பயண கட்டுரை நூல். இது சாதாரணமான சுற்றுலா பயணமோ  அல்லது துணிந்து செய்யும் சாகச பயணமோ இல்லை. தாய் நாட்டை விட்டு வேறொரு நாட்டில் வாழுபவர்களுக்கு அந்த நாட்டில் திடீரென ஏற்படும் ஒரு போர் அந்த போரின் காரணமாக வெளியேற வேண்டும் என்று ஒரு நிலைமையில் அனுபவிக்கும் அணைத்து விதமான இன்னல்கள் மற்றும் இடையூறுகள் என தனக்குத் தனது 47வது வயதில் ஏற்பட்ட   அனுபவத்தினை ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா மிக எளிய நடையில் மிக அருமையாகக் கொடுத்திருக்கிறார்.

இந்த புத்தகம் நடைவழிப் பயணம் பற்றியது என்று இருந்தாலும் முதலில் கார் பயணம் அடுத்து  ரயில் பயணம் அதற்கடுத்து படகு பயணம் பிறகு லாரி பிறகு டோலி கூடவே நடைப் பயணம் பிறகு லாரி மற்றும் இறுதியில் ரயில் பயணம் என இவர்களின் (பர்மாவிலிருந்து அகதிகளாகத் தனது தாய் நாட்டிற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள்) பயணம் சிரமங்களும் சங்கடங்களும் இடையூறுகளும் எதிர்பார்ப்புகளும் எதிர்பாராத திருப்பங்களும் கூடவே சந்தித்த பல்வேறு விதமான மனிதர்களும் என இந்த பயணத்தின் ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லும்போது தனது எழுத்தாளரான வே. சாமிநாத சர்மா நயத்துடன் கூடிய உவமைகளுடன் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

அமைதியும் ரம்மியமும் ஒருசேர இருந்த ரங்கூனில் இரண்டாம் உலகப்போரின் போது திடீரென ஜப்பான் ராணுவத்தால் ஆரம்பித்த குண்டு மழையினால் நிலை குலைந்து போனது முதல் அங்கே ஏற்பட்ட அசாதாரண நிலையினையும் அதுவரை அமைதியாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர்கள் திடீரென ஏற்பட்ட நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அந்த நிலையில் ஒவ்வொருவரின் மனநிலையும் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள்  என்பதையும் கூடவே ஆசிரியரும் எவ்வாறு இந்த அசாதாரண  சூழ்நிலையினை கையாண்டார் என்பதே இந்த நூலின் முழுவதும் இருக்கிறது.

ஆரம்பத்தில் ரங்கூன் இருந்து கார் வழியே மாந்தளை பிறகு அங்கிருந்து  ரயில் மூலம் மொனீவாவிற்கு  பிறகு அங்கிருந்து படகு வழியே கலேவாவிற்கு வந்த பயணத்தில் இங்கிருந்து இண்டாஞ்சிக்கு லாரி வழிப் பயணம் மீண்டும் இங்கிருந்து லாரி வழியில் டாமு வந்து சேருகின்றனர். டாமுவில் இருந்து நடைப்பயணம் ஆனால் பலருக்கு டோலி வசதியும் கொடுக்கப்பள்ளது.

டாமுவிலிருந்து வான்சிங் முகாம் வரை செல்லும் பயணம் ஆரம்பத்தில் மாட்டு வண்டிகள் மூலம் தொடங்கி அடுத்த இருந்த வக்க்ஷு முகாம் வரை மாட்டுவண்டியில் வந்தனர்.    பிறகு வக்க்ஷு முகாமிலிருந்து லும்மிங் முகாம் பிறகு சிட்டா முகாம் வான்சிங் முகாம் வரை டோலி மற்றும் நடைப் பயணம்.

வான்சிங் முகாமிலிருந்து இம்பால் நகரில் இருக்கும் முகாமிற்கு வந்து பிறகு அங்கிருந்து டிமாபூர் ரயில்வே நிலையம் வரை மீண்டும் லாரி  பயணம். இறுதியில் ரயில் பயணம் சென்னை வரை இடையில் கல்கத்தாவில் ஏற்பட்ட சில நாட்கள் தங்கிய அனுபவத்தையும் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.  

வழியில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட இன்னல்கள், இடை இடையே பலர் தங்களது இறுதி மூச்சை விட்டதும், நடக்க முடியாமலும், உணவில்லாமலும், பிற பல்வேறு சூழ்நிலைகளாலும் இவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மரணம் அவ்வப்போது அவர்களுடன் வருவோர்கள் அவர்களை அடக்கம் கூடச் செய்யமுடியாமல் ஓரங்களில் வீசி எரிந்து விட்டு தங்களது உயிர் பிழைத்தால் போதும் என்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு வந்ததும் என பல்வேறு விதமான மனதை உருக்கும் நிகழ்வுகளையும்  சொல்லியிருக்கிறார்.

வழியில் ஒரு அரசாங்க அதிகாரி கொடுத்த 100 ரூபாய் அப்படியே வைத்திருந்து சென்னைக்கு வந்த பிறகு திரும்ப அவரின் மனைவிக்கு மணி ஆர்டர் செய்ததும் அதுபோலவே கல்கத்தா வந்தவுடன் தன்னிடம் ஒரு அதிகாரி  கொடுத்த கடிதத்தினை அஞ்சல் செய்ததும் எனச் சொல்லும்போது தனக்கு ஏற்பட்ட இதனைக் கடினமான பயணத்திலும் இடை இடையே பல்வேறு மனிதர்கள் கடவுள் போல வந்து உதவிசெய்தார்கள் என்று மிகப் பெருமிதத்துடன் சொல்கிறார்.

இவ்வளவும் ரங்கூனில் ஜோதி என்ற ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வெ. சாமிநாத சர்மாவின் அனுபவங்கள் என்றால் அவர் வந்த பாதையில் அவருக்கு பல்வேறு விதமான உபகாரங்கள் மற்றும்  உதவிகளும் கிடைத்தது ஆனால் ஒரு சாமானியனின் பயணம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

இது போர்க்காலத்தில், போர் நடக்கும் நாட்டிலிருந்து தனது தாய் நாட்டிற்கு அகதிகளாக வரும்போது ஏற்படும் அணைத்து விதமான அனுபவங்களையும் ஒவ்வொன்றாய் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார். கூடவே அவர் வழியில் சந்தித்த பல்வேறு விதமான மனிதர்கள், பல்வேறு விதமான சூழல்கள், இயற்கை சார்ந்த நிலப்பரப்புகள் அங்கே விளைந்த காய்கறிகள் அவர்களின் உணவுப் பழக்கங்கள் கூடவே அப்பகுதியில் சந்தித்தவர்களின் விருந்தோம்பல் என பல்வேறு விதமான சுவாரஸ்யமான தகவல்களை அற்புதமாக அடுக்கடுக்காய் ஒவ்வொருகட்டுரைக்குள்ளும் பக்குவமாகக் கொடுத்திருக்கிறார்.     

உடல்நிலையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் கூடவே காலநிலையினால் ஏற்பட்ட இன்னல்கள் கூடவே   பயணத்தின் பொது ஏற்பட்ட பல்வேறு இன்னல்கள் என ஒவ்வொன்றாய் சொல்லும்போது அந்த கடினத்தினை குறிப்பிடும்போது அவ்வப்போது நடந்து பல்வேறு இனிமையான சம்பவங்களைச் சொல்லி அந்த கடினத்தினை மறக்க வகையில் ஒவ்வொரு கட்டுரையும் இருக்கிறது.          

டோலி பயணத்தினை இறுதி பயணத்துடன் ஒப்பிட்டது. வரும் வழிகளில் இயற்கையின் கொடையாக இருந்த அருவிகளிலிருந்து வரும் நுரை நிறைந்த நீரை தங்களை (பாவப்பட்ட அகதிகளை) பார்த்து கண்ணீர் விடுகிறது என்பதெல்லாம் வாசிக்கும் நமக்குத் தொய்வில்லாமல் அழைத்துச் செல்கிறது.


அன்புடன்.

தேவேந்திரன் ராமையன் 

24 செப்டெம்பர் 2022 

 

                         

விண்வெளி (வியப்பு - விநோதம் - விசித்திரம்)

 விண்வெளி 

(வியப்பு - விநோதம் - விசித்திரம்)

ஆசிரியர் : என். ராமதுரை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 105

பக்கங்கள் 216 


விண்வெளி - என்ற தலைப்புடன் இருக்கும் இந்த புத்தகம் அநேகமான விண்வெளி விவரங்களை அள்ளி கொடுத்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பத்திரிகைகளில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்தவர். ஆதலால் இவர் அறிவியல் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் காரணமாகத் தான் தெரிந்துகொண்ட விவரங்களை  அருமையாகத் தொகுத்து ஒரு நூலாக நமக்குக் கொடுத்திருக்கிறார். 

இந்த நூல் விண்வெளி பற்றிய அபூர்வமான தகவல்கள், ராக்கெட்  மற்றும்  செயற்கைக்கோள்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மிக எளிமையான மொழி நடையில் கொண்டுள்ளது.

செயற்கைக்கோள்களின் தேவை என்ன என்பதிலிருந்து அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது முதல் அவைகள் எந்த வழிகளில் நமக்குப் பயன் கொடுக்கிறது என்றும் மேலும் நமது அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் பல்வேறு விதமான வசதிகளுக்கு  பின்னால் இருந்து இயங்குவது இந்த செயற்கைக்கோள்கள் தான் என்ற அருமையான தகவலும் வாசிக்கும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணுக்கு அனுப்புகிறது. அவற்றில் எந்த நாடுகள் தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் மேலும் எந்த நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்துள்ளது என்றும்  அவ்வாறு செலுத்தும் செயற்கைக் கோள்களில் எந்த விதமான பயன்பாடுகளுக்காகத் தயாரிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் மிக நேர்த்தியான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் மேலும் ராக்கெட் பற்றிய பல்வேறு தகவல்களைச் சொல்கிறது. மேலும் ராக்கெட் எப்படித் தயாரிக்கின்றனர், அவைகள் எவ்வாறு செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது என்பதிலிருந்து ஒவ்வொரு படியாக மிக அருமையாக விளக்குகிறார்.

முதலில் ராக்கெட் கண்டுபிடித்தவர்கள் மற்றும் மென் மேலும் ரொக்கெட்டினை செம்மைப் படுத்தியவர்கள் என பல்வேறு மேதைகளைப் பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் சொல்லப்படுகிறது.

செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்த ஏன் ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்பதினையும் அதற்க்கான ஆதாரமான பல்வேறு கூற்றுகளையும் சொல்கிறார். ராக்கெட் தொலைதூரம் வரை மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் செல்லும் வல்லமை கொண்டுள்ளதால் செயற்கைக் கோள்களை மற்ற கோள்களுக்குச் செலுத்துவதற்கு உகந்தது ராக்கெட் என்பதால் தான் ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

ராக்கெட்டின் துணையுடன் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் எவ்வாறு பறக்கிறது என்பது பற்றியும் மேலும் விண்ணுக்குச் சென்ற பிறகு ராக்கெட் எவ்வாறு செயற்கைக்கோள்களைத் தனியாக விடுவிப்பது என்பதும், அவ்வாறு விடுவித்த செயற்கைக்கோள்கள் எவ்வாறு தனியாகப் பயணிக்கும் என்றும் மேலும் அவைகள் தனக்குக் கொடுத்தும் வேலையினை எவ்வாறு செய்கிறது என்பது வரை மிகத் தெளிவாகவும் எளியமுறையில் கொடுத்துள்ளார்.

நாம் பயன்படுத்தும் தொலைப்பேசி முதல் தொலைக்காட்சி, வானிலை சார்ந்த முன்னறிவிப்புகள் என பல்வேறு வகையில் செயற்கைக் கோள்கள் நமக்குத் தகவல்களை மிகத் துல்லியமாகத் தருகிறது. இவை இன்றைய வாழ்வியலில் மிக அத்தியாவசியமாகிப்போன பல்வேறு தேவைகளை நமக்குக் கொடுக்கிறது என்பதில் வியப்பேதுமில்லை.

பொதுவாக இந்த நூல் விண்வெளியில் ஏற்படும் வியப்பான காரியங்கள், விசித்திரமான பல்வேறு விஷயங்கள் மற்றும் வினோதமான நிகழ்வுகள் என வாசிக்கும் நமக்குத் தொய்வில்லாமல் இருக்கம் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு ஒவ்வொரு நாடும் தனது அண்டை நாடுகளையும் எதிரி நாடுகளையும் கண்காணிக்கிறது அதற்கு எவ்வாறு இந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்கள் உறுதுணையாக உள்ளது என்பது பற்றிய     விரிவான விவரங்களைச் சொல்கிறது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 செப்டெம்பர் 2022

Friday 23 September 2022

மான்ஹாட்டன் ரகசிய திட்டம்

மான்ஹாட்டன் ரகசிய திட்டம்  

ஆசிரியர் : ஜெயராஜ் முத்துவேல் 

கிண்டில் பதிப்பு

விலை ரூபாய் 49 

பக்கங்கள் 58


அறிவியல் வளர்ச்சி நமக்கு பெரும்பாலான வகையில் நன்மைகளைச் செய்திருந்தாலும் அதன் மற்றொரு பக்கம் ஈடு செய்ய முடியாத பல்வேறு தீமைகளைத் தரக்கூடிய வகையில் தான் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மைதான். 

அந்த வகையில் இந்த சிறிய நூலின் வழியே ஆசிரியர் மிகவும் தெளிவாகவும் எளிய முறையிலும் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வழியில் "மான்ஹாட்டன் திட்டத்தின்" ரகசியத்தினை விவரிக்கிறார்.

முதலில் எல்லோரும் அறிவியல் பற்றித் தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினமானது தான் என்பதைத் தெரிந்துகொண்ட ஆசிரியர் (ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பது கூடுதல் தகவல்) எப்படி தனது  மாணவர்களுக்கு ஒரு கருத்தினை சொல்லிக்கொடுக்க முடியுமோ அதுபோலவே இந்த புத்தகத்தின் வழியே,  வாசிக்கும் நமக்கெல்லாம் அறிவியலின் பல்வேறு வார்த்தைகளை மிகச் சாதாரணமான உதாரணங்களுடன் சொல்கிறார்.

அணு என்றால் என்ன என்பதில் இருந்து, அணுக்கரு, துகள்கள், கதிரியக்கம், கதிர்வீச்சு, அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு ஆற்றல் என ஒவ்வொன்றாய் தெளிவாக விவரிப்பதுடன்       அணு - வினை கண்டு பிடித்தவர் யார், ஏன் கண்டுபிடித்தனர், அதனால் என்ன விதமான பயன்கள் என பல்வேறு வகையானமிகவும் சுவாரஸ்யமான விவரங்களை நமக்குத் தெரியப்படுத்துகிறார்.

உலகின்முதலில் அணுகுண்டு கண்டுபிடித்தது முதல் அதனைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் யாரென்றும், ஏன் அவர்கள் அதனை ரகசியமாக கண்டுபிடித்தனர் என்பதும் மற்றும் அந்த ரகசியமாகக் கண்டுபிடித்த  முதல் அணுகுண்டுவினை எங்கே சோதனை செய்தார்கள், சோதனை செய்த  இடத்தின் தகவல்கள் என பல்வேறு விவரங்களைத் தெரியப்படுத்துகிறார். 

வெளி உலகிற்கே தெரியாமல் முதல் முதலில் கண்டுபிடித்த அணுகுண்டு அதனை வெற்றிகரமாகச் சோதனை செய்தது மட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் மீது இந்த அணுகுண்டுகளை வீசியது வரை என அணைத்து விவரங்களும் இந்த சிறிய புத்தகத்தின் வழியே ஆசிரியர் தெரியப்படுகிறார்.   

மொத்தத்தில் இந்த சிறிய புத்தகம் மிக அருமையான தகவல்களை கொண்டிக்கிறது. இது போன்ற தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கிய ஆசிரியருக்கு நன்றி.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

22 செப்டம்பர் 2022