Friday 25 November 2022

இறவான் - வாசிப்பனுபவம்

இறவான் - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : பா. ராகவன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 300

பக்கங்கள் 409


ஒரு புத்தகத்தினை வாசிக்கும் போது  பெரும்பாலும் நாம் அந்த கதையின்  கதாபாத்திரத்துடன் பயணிப்போம் ஆனால் இந்த இறவானை வாசிக்கும் போது  நமக்குக் கதையின் ஓட்டத்துடன் கூடிய இசையும் அதன் சுரங்களையும் உணர முடிகிறது. இந்த இசையெனும் அலை கடலில் நீந்த வைத்த ஆசிரியருக்கு ஒரு பெரிய நன்றியினை சொல்லியே ஆகவேண்டும்.

ஆப்ரஹாம் ஹராரி, எட்வின் ஜோசப், சந்தானப்பிரியன் எனத் தான் வாழும் காலத்தில் தனது அடையாளத்தினையும் மேலும் உலகுக்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரம் தான் நம் கதையின் நாயகன்.

இதற்காக எவ்வளவு மெனக்கெடல் தேவைப்பட்டிருக்கும். இசையின் முழுவடிவத்தைனயும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒரு பெரிய இசை மேதை பற்றிய கதையில், கதையின் நாயகன் எந்த ஒரு இசையின் இலக்கணமும் படிக்காமல் தனது அதீத ஞானத்தால் அவன் இசையின்  மேதையாக வருவது இந்த கதையின்  உயிரோட்டமாக இருக்கிறது.

நாயகன் ஒரு அதீத இசை மேதையாக வலம்வருவதற்குத் தேவையான எல்லா பின்புலங்களும் மிகக் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் நாயகன், தன்னை பற்றி அறிமுகம் செய்யும் விதம் முற்றிலும் ஒரு மாறுபாடான வித்தியாசமான பார்வையிலிருந்து வந்திருக்கிறது. தன்னை பற்றிச் சொல்லவே தான் தற்கொலை செய்துகொண்டு வந்துள்ளேன் என்று சொல்லும் நாயகன் தன்னை ஒரு யூதன் என்றும் ஆனால் அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் என்னிடம் இல்லை என்றும் ஆனால் நான் அவற்றை  நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கில்லை என்று  சொல்லும் விதமே கதையின் நாயகனின் முழு குணாதிசயங்களையும் வெகுவாக புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஒரு வாசகனின் மனதில் நாயகன் எவ்வாறு உருவமைக்கப்படுகிறான் என்பதற்கு அவனின் ஆரம்ப அறிமுகம் போதுமானதாக இருக்கிறது. 

ஏழு சுரங்களுக்குள் அடங்காத இவனின் இசை "காற்றாற்று வெள்ளம்" போலக் கரை புரண்டு ஓடுகிறது. இந்த கதையின் நாயகன், தன்னை  "ஆபிரகாம் ஹராரி" என்றும்  தனது முன் பிறவியைச் சொல்லுவதும் ஆனால் அவற்றை நான் இந்த உலகிற்கு வெளிப்படுத்த எந்த ஒரு நிரூபணமும் என்னிடமில்லை என்று சொல்லி தனது நிஜ வாழ்க்கையின் அடையாளமான பெயரை "எட்வின் ஜோசப்" என்று சொல்லிக்கொள்ள பெரும்பாலும் விரும்பாதவனாகவே வலம்வருகிறான். ஆம் இவனின் வாழ்க்கையினை கொஞ்சம் திரும்பி பார்த்தால், நமக்கு நன்றாகப்  புரிந்து விடும் இவன் ஒரு சாதாரண மனிதன் இல்லையென்று. இவனின் ஒவ்வொரு செயலும் முற்றிலும்  மாறுபட்டே இருக்கிறது.

மும்பையில் பிறந்த எட்வின் ஜோசப், ஒரு காலகட்டத்தில்  தனது  பிறப்பின் நோக்கமே இஸ்ரேல் போய்ச் சேர்வது தான் ஏனெனில் தான் ஓர் யூதன் என்றும் அதனால் யூதனுக்கான மண்ணில் தான் நான் இருக்கவேண்டும் என்றும் தனக்கான ஒரு இலக்கினை வைத்துக் கொண்டு தனது பயணத்தினை ஆரம்பிக்கிறான். 

இந்த பயணத்தின் முக்கிய உந்து சக்தியாக அவனுக்கு அவனின் இசையறிவு இருக்கிறது.  இந்த நாவல் முழுவதும் அவன் அவனது இலக்கினை அடைந்தானா இல்லையா என்பது நோக்கிச் செல்லும் ஒரு அழகிய  இசைப்பயணமாகவே வீரநடை போட்டுக்கொண்டு கூடவே நம்மையும்  அவனுடன் அலுப்பில்லாமல் பயணிக்க வைக்கிறது. 

சிறுவயதில் தனது வீட்டிலிருந்து  புறப்படுகிற எட்வின், தான் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவனுக்கு ஒரு புதிய அனுபவத்தினை கொடுக்கிறது. முதலில் ஒரு நாள் இரவு அவன் உறங்க ஒதுங்கும் பள்ளிக்கூடம், பிறகு அவனுக்காகக் காத்திருக்கும் விருத்தசேதனம் செய்யும் முதியவர் அந்த வழியே அவன் செல்லும் போது முதல் முதலாக அவன் காணும் அந்த பெண் பிறகு அவன் காணும் தேவாலயம் என அவனுக்கு ஒவ்வொன்றும் புதிதாகவே இருக்கிறது. இவ்வாறாக அவன் காணும் ஒவ்வொன்றும் அவன் ஒரு யூதன் என்ற உணர்வினை அவனுக்குள் விதைத்துக் கொண்டே செல்கிறது. 

நடுத்தரமான குடும்பத்தில் இருக்கும் பெற்றோருக்கு தங்களது குழந்தை மற்ற குழந்தையிலிருந்து வேறுபட்டு இருக்கிறான் என்பதைப் பார்த்துக்கொண்டு எப்படி ஒரு சாதாரணமான பெற்றோர்களால் இருக்க முடியும்.  எந்த பெற்றோர்கள் தான் ஒத்துக்கொள்வார்கள்.

இவனின் பெற்றோருடைய நிலையும் அதுபோலவேதான். தனது மகன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாகப் போக முடிவெடுக்கும் போது பெற்றோர்கள் படும் வேதனை மிகவும் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தனது மகனைத் தேடி அலைவதும் அவனுக்காக தங்கள் வாழ்விடத்தினையே மாற்றிக் கொள்வதும் என அவர்கள் செய்யும் தியாகம் அளவிடமுடியாதது. ஆனால் அவன் அவனின் இலக்கினை நோக்கிய தனது பயணத்தில் தான் குறியாக இருக்கிறான்.

ஒரு நேரத்தில் தனது மகனுக்காக தங்களது வாழ்விடத்தினையே மும்பையிலிருந்து சென்னைக்கு மாற்ற முடிவெடுத்து அதன்படி குடியும் பெயர்ந்துவிடுகிறார்கள். ஆனால் அவன் அவனாகவே தான் வாழ்ந்து செல்கிறான். அவன் யாருக்காகவும் மாறவில்லை, அவன் எடுக்கும் அத்தனை முடிவுகளும் அவனுக்காகவே அவனால் எடுத்துக்கொண்ட முடிவுகளாகவே இருக்கிறது.             

எப்போதுமே ஜீனியஸ்கள் உருவாக்கப்படுவதில்லை அவர்கள் தானாகவே வளர்கிறார்கள். அதுபோலவே தான் இந்த கதையின் நாயகனும்,  தான் ஒரு இசையின் மேதை என உணர்ந்து கொண்டு அவன் அந்த துறையின் மேல்தட்டுக்குப் பயணிக்கிறான் அவ்வாறாகவே அவன் தன்னை உருவாக்கிக்கொள்கிறான். அவன் தன்னை தானே செதுக்கிக்கொள்கிறான். அவன் நடந்து செல்லும் பாதைகள் எல்லாமே கரடு முரடான பாதைகள் தான் இருந்தாலும் அவன் அதை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சு மெத்தை என நினைத்து நிதானமாகப் பயணிக்கிறான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனது குறிக்கோள்களைப் பற்றி மட்டுமே நோக்கி எடுத்துச்செல்கிறது. தனது இலக்கினை மற்றும் நினைத்துச் சிந்திக்கத் தெரிந்த ஒரு வித்தியாசமான மனிதன் இவன் உண்மையில் ஒரு இசையின் ஜீனியஸ்தான்.

சென்னைக்கு வந்த நமது நாயகன் மேலும் தனது இலக்கினை நோக்கி நகர்ந்தானா இல்லையா என்பது தான் அவனின் பெரிய சவாலாகவே இருந்தது. பிறகு இவன் ஆரம்பிக்கும் டெவில் இசை குழுமம் அதற்காக அவனுடன் சேரும் ஜானவிபெஸ்கிகருணாகர மூர்த்தி மற்றும்  ரகு என ஒரு அழகான இசை குழுமம் சேர்ந்துவிட்டது.

பிறகு சினிமாவிற்கு இசையமைக்கும் வாய்ப்பு கூடவே தயாரிப்பாளரின் மகளைத் திருமணம் செய்துகொள்ளும் நிர்ப்பந்தம் இதற்காகத் தனது பெயரினை சந்தானப்பிரியன் என்று மாற்றிக்கொள்ளுவது கொஞ்சம் மேலும் அவன் சிறுவயதில் கேட்ட குரலுக்குச் சொந்தமானவள் என அவன் தனது கனவுலகத்திலும் நினைவுலகத்திலும் தனது சிந்தனையினை அடிக்கடி மாற்றி மாற்றிச் சிந்தித்து அவனின் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த இசையின் குரலுக்காக அதுவும் ஒரு பெண்ணின் குரலுக்காகத் தனது தேடலை மேற்கொண்டு இறுதியில் கண்டுகொண்ட மரியாவினை வைத்து தனது இசையில் அக்குரலில் கேட்கத் துடிக்கிறான்.  அதற்காகவே இந்த படத்தின் அவளைப் பாடவும் வைத்து அதையும் சாதித்துவிட்டதாக அவன் தனது மனதில் நிலைநிறுத்திவிட்டு அவன்  அங்கே இருந்து அவன் தனது இலக்கினை நோக்கிப் பயணப்படுகிறான்.

இங்குக் கதையின் நாயகன் ஒரு காமகனாகவோ அல்லது கஞ்சா புகைக்கும் போதை அடிமையாகவோ பெரும்பாலும் வந்தாலும் அவன் தன்னை அவ்வாறாக நிலை நிறுத்திக் கொள்ளாமல் தனக்கென ஒரு இலக்கினை வைத்துக்கொண்டு அதற்காகவே செல்கிறான். அந்த பெரும் கனவு அவனுக்கான பெரும் கனவு அவன் தனது இசையில் ஒரு சிம்பொனி அமைக்கவேண்டும் என்பதுவே.

இறுதியில் அவன் தனது சிம்பொனியினை அமைத்தானா இல்லையா என்பது தான் மீதி பயணம். மொத்தத்தில் இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு இசைமேதையின்  கதை. 


என்றும் அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

25 நவம்பர் 2022