Saturday 23 May 2020

ஊர் திரும்புதல் - 3


மறுநாள், அவன் பக்கத்து ஊரிலுல்ல கடைவீதிக்கு செல்ல மிதிவண்டியை எடுத்து மிதிக்க தொடங்கினான்.

அந்த சாலையின் பக்கத்தில்  ஓடும்  ஆற்றின்  மறுகரையில் நெடுகிலும் உயர்ந்திருந்த  பனைமரங்களும், ஈச்சை மரங்களும் புதிதாக நடப்பட்டு இருந்த  தேக்கு மரங்களும் விழாக்காலங்களில்  பச்சைத்தோரணங்கள்  கட்டியது போல இருந்தது. அந்த  மரங்களின்  வேர்கள்  ஆற்றங்கரையின்  மண்ணை  இறுக்கப்பிடித்திருந்தது.










அவன் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான் அந்த கடைவீதி. அந்த வளைந்து நெளிந்து செல்லும் சாலையின் பாதி தூரத்தில் ஓர் ஒற்றை ஆலமரம்,   நடை  பயணமாய்  செல்பவர்களுக்கு  நிழல் கொடுக்க வென்றே  வீற்றிருப்பது  கம்பீரமாக அகண்டு  விரிந்திருந்தது. அதற்கு அடுத்து  அவன் முன்பு  கண்டிருந்த  ஒரு  இரட்டை  ஆலமரத்தை  காணாமல்  அவன்  துணுக்குற்றான். அந்த மரங்கள் இல்லாமல்  அந்த இடமே களையிழந்து  காணப்பட்டதுபோல்  அவன் வருந்தினான்.







ஒற்றை ஆலமரத்திற்கு அருகில் அந்த ஆறு வளைந்து போவதால் ஆற்றின் நீரின் வேகத்தில் அந்த கரை மழைக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் இருந்தது. ஆனால் புதிதாக நடப்பட்ட  தேக்குமரங்கள் அந்த கரையை ஆபத்தில் இருந்து மீட்டு எடுத்துள்ளதை  கண்டு  அவன் மகிழ்ச்சியுற்றான்.




அந்த அழகை ரசித்த வண்ணமே பயணித்த அவன், வழியே நடந்து போய்க்கொண்டிருந்த அந்த தாத்தாவை கண்டான்.

அவர் வேறுயாருமில்லை, அவனின் பக்கத்துக்கு வீட்டு தாத்தா. சுற்றுப்பட்டு கிராமத்தில்  ஆடு மாடுகளுக்கு ஏதாவது என்றால் உடனே ஆட்கள் வண்டியுடன் வீடு தேடி வந்துவிடுவார்கள். பின்னர் வைத்தியம் முடிந்தவுடன் திருப்பிக்கொண்டுவந்து  வீட்டில் விடவேண்டும். அது  எப்போதும்  அவர்  விதிக்கும்  நிபந்தனை. ஏனெனில் அவருக்கு வண்டி ஏதும் ஓட்டத்  தெரியாது. 

என்றும்  இளமைபோல எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் அந்த தாத்தாவின் பழக்க வழக்கங்கள். அவர் தனக்கென்றே சில விசயங்களை கடைபிடிப்பார். அவைகளின் ஒன்றுதான்  வாரந்தோறும் சனிக்கிழமை நல்லெண்ணை குளியல். அவருடைய  வாழ்வியல்  எப்போதும்  எளிமையாகவே இருக்கக்கண்டிருக்கிறான். 

அந்தத்  தாத்தா அவனுக்கும்  அவன் உடன்  பிறந்தோருக்கும்  அவர்களுடைய  இளம் வயதில்  நித்தமும் கதை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார் .

 அவரிடம், "எங்கே போகிறீர்கள் தாத்தா?", என்று  கேட்டான்.

“பக்கத்து ஊரில் ஏதோ மாடு ஒன்று காலையிலேயிருந்து சுகமாக இல்லை என்று செய்திவந்தது, யாருமில்லையாம். வந்து அழைத்துத்  செல் என்று சொன்னார்கள், அதான் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்று போய்கொண்டிருக்கிறேன்” , என்றார்.

கேட்டதும்,"சரி வாங்க நான் உங்களை திருமங்கலத்தில் இறக்கிவிடுகிறேன்", என்று அழைத்துக்கொண்டான். 


அவன் அப்படியே, மனதுக்குள் அந்த  தாத்தாவுடனான தன் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே மிதிவண்டியை மிதிக்க தொடங்கினான் திருமங்கலத்தை நோக்கி.




தாத்தா அவனிடம் "உனக்கு  இங்கு இருந்த கௌசல்தார் பற்றி தெரியுமா?", என்று கேட்டார்.

அவன்,"ஆம் நன்றாகவே தெரியும்", என்றான்.

அந்த கௌசல்தார்  தாத்தாவையும் அவரின் பெட்டி கடையையும்,  அவர் வீட்டிற்கு அருகில் இருந்த பெரிய புளியமரத்தையும்  அதில் பழுத்து ரோட்டில் விழும் இனிய புளியம்பழங்களையும், அதற்கு கொஞ்சம் தூரத்தில் எதிரே இருந்த தூங்குமூஞ்சி மரத்தையும் அவனுக்கு நன்றாகவே  நினைவில்  இருந்தது. அதை  பின்னால் அமர்ந்திருந்த  தாத்தாவிடம்  விவரித்தான்.  கூடவே அந்த வீட்டின் அண்ணனும் அவரால் தயாரிக்கப்படும் வண்ண வாசல் தோரணங்கள், வண்ண வண்ண மாலைகள் பற்றியும் சொல்லிக்கொண்டே  வந்தான். கண்கள்  விரிய  பேசிக்கொண்டே வந்தவன்   அந்த  இரண்டு மரங்களும்  இல்லாமல்  வெறிச்சோடி  இருந்த  இரண்டு   வெற்றிடங்களை  கடந்து  சென்றான். அந்த கௌசல்தார் தாத்தாவின்  வீடு  மட்டுமே  அங்கே இருந்தது.

தொடரும்



ஊர் திரும்புதல் - 1

ஊர் திரும்புதல் - 2

2 comments:

  1. நீங்கள் அனுபவித்ததை எழுத்தில் பதிய வைத்திருக்கிறீர்கள். அருமை

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்கள் எப்போதும் நமக்கு எதையோ சொல்லிக்கொண்டுதான் போகும் - நன்றி

      Delete