Friday, 29 May 2020

ஊர் திரும்புதல் - 9




கிடை  மாடுகள் 


அவனுக்கு அன்றைய  நாட்களில் அவனது   ஊருக்கு வந்து போகும்   கீதாரிகளைப்பற்றி  நினைவு  வந்தது. கீதாரிகள் தொழில்முறை  கால்நடை  மேய்ப்பாளர்கள்.  கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பில்  கீதாரிகளைப்பற்றி  படித்து  அறிந்துகொள்ளலாம். 


பொதுவாக பச்சையும் காப்பியுமான வண்ணங்கள் கலவையாக இருக்கும் பெரிய துண்டினால் கீதாரிகள் தலையில்  முண்டாசு கட்டிக்கொண்டிருப்பார்கள். கையில் ஒரு ஆறடி நீளத்தில் குச்சியும், அந்த குச்சியில் ஒரு தூக்கு வாளியும்  தொங்கவிட்டு கொண்டிருப்பார்கள்.  அந்த கீதாரிகள் இரண்டு, மூன்று  ஆட்களாக வெளியூரிலிருந்து மாடுகளை மேய்க்கவும், கிடை கட்டவும் வருவார்கள்.


அவர்கள்  கொண்டுவரும்  மாட்டு  மந்தைகளில்  மாடுகளுக்கு  கழுத்தில்  பெரிய  மணிகள்  கட்டப்பட்டிருக்கும். மாட்டுமந்தைகள்  கடந்து  போகும்போது  நூற்றுக்கணக்கான  மாடுகளின்  கழுத்து  மணியோசைகள்  கலந்து  அந்த  பிரதேசமே  போர்க்களம்  போல  இருக்கும்.


வயல்வெளியில்  மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை அந்த ஊரின் நடுவில் இருக்கும் குளத்திலும் மற்றும் வயல்வெளிகளில் இருக்கும் சாவடி குளத்திலும் மொத்தமாக இறக்கிக் குளிப்பாட்டுவார்கள். அந்தக் காட்சி மிகவும் அருமையாகவும் ஒரு விதமான சத்தமும், கூச்சலுமாக  ஒரு பிரளயம் போல இருக்கும்.





அவர்கள், கிடை கட்டிய வயல் உரிமையாளரிடம் இருந்து  நெல் அல்லது பணம் பெற்றுக்கொள்வார்கள். கீதாரியின் மாடுகளும் ஆடுகளும் அவருக்கு சொந்தமானது. ஒவ்வொரு  ஊரிலும்  மேய்ப்பதற்கு மற்றவர்களின்  கால்நடைகளையும்  சேர்த்துக்கொள்வார்கள்.




கோடை காலத்தில் அந்த  ஊருக்கு  வரும்  கீதாரிகள்  ஊரில் உள்ள மாடுகளையும் சேர்த்து  நாள் முழுவதும் மேய்ப்பார்கள்.  இரவினில் ஓரு வயலில் இரண்டிரண்டு மாடுகளாய் கால்களை பின்னி கிடை கட்டுவார்கள். 


கிராமங்களில் கோடையில் தங்களது வயல்கள் எல்லாம் இயற்கை உரமாக இருக்கும் நரி பயறு செடி போன்ற பலவிதமான பயிர்கள் இருக்கும். கால்நடைகள்  மேயும்போது  மிதிப்படுவதால்   இவைகளெல்லாம் நிலத்திற்க்கு உரமாக்கப்படும்.


பொதுவாக, நிலங்களில் விளைவித்த உளுந்து பயறுகளை  அறுவடை செய்து, களத்தில் மாடுகளை கட்டி போரடித்து அந்த செடியில் இருந்து பிரிப்பார்கள். பின்னர் அந்தச் செடிகளை  செங்காயம் என்று  சொல்வார்கள். செங்காயத்தினை கால்நடைகளுக்கு தீனியாக  கொடுக்கலாம். வயலில் உரமாகவும் இடலாம். அப்படி  வயலில் விடப்படும்  செங்காயம்  கிடை மாடுகளுக்கு உணவாகும்.







ஆடு, மாடுகள் நடந்து வந்தால் 'மலடான மண் கூட பயிர் செய்ய பயனாகும்', என்பதை நன்றே தெரிந்தவர்கள் அந்த கிராமத்தினர்.  இரண்டுமாத காலத்தில் எல்லோருடைய வயல்களிலும் கிடை கட்டிவிட்டு பின்னர் கீதாரிகள் மாடுகளை அவரவர் வீடுகளில்  திருப்பி விட்டுவிடுவார்கள்.


அதை போல அந்த சமயத்தில் வெள்ளாட்டு கூட்டம் ஒருபுறமும் செம்மறி ஆட்டு கூட்டம் மறுபுறமும் வயல் வெளிகளில் மேய்க்கப்பட்டுக்கொண்டிருக்கும். இது பற்றிய  விரிவான  பதிவு  பின்னர் தொடரும்.



சின்னஞ்சிறுவயதில்  மாட்டுக்கிடைகளையும் ஆட்டுக்கிடைகளையும் கண்ட  அவன் மனதில், தானும் இதைப்போல  செய்யவேண்டும் என்று  எண்ணுவான். பள்ளி விடுமுறை காலங்களில்  அவன் விளையாடுவதற்கு  கண்டுபிடித்த  விளையாட்டுதான், 'காலில்லா மாடுகள்'. 

அவன் வீட்டிற்கு, எதிரே ஒரு கொல்லையில் ஒரு புளியமரம் இருந்தது. அதனுடைய  வேர்களுக்கு  இடையில்  உள்ள  இடைவெளிகள்  அவனுக்கு  சிறு  சிறு  அறைகள்  போல தோன்றும்.  அதுதான்  அவனுடைய  காலில்லா  மாடுகளுக்கான  வீடுகள். 

அதே கொல்லையில் இருந்த  தென்னை மரத்தின்  உதிர்ந்த  குரும்பைகளை சேகரித்து  அவன்  மாடுகளின்  வீடுகளுக்கு  எடுத்து வருவான். அவன்  பார்த்த  கீதாரிகளை  போலவே தலையில்    அப்பாவின்  துண்டை  எடுத்து  முண்டாசு  கட்டிக்கொண்டான். அவனுடைய  உயரத்துக்கு  மேலே  இருந்த  ஒரு  நீண்ட  குச்சியை  எடுத்துக்கொண்டான்.

அதைப்பார்த்து  அவனுடைய  நண்பன்  அவனிடம்  கேட்டான், " டேய்  என்னடா  இது  குரும்பய பொறுக்கிக்கிட்டு  இருக்க?".

அதற்கு அவன் பதிலுரைத்தான்," டேய், இது  குரும்பை இல்லடா  என்னோட  மாடுங்க, நான்  இத மேய்க்கப்போறேன்.......ஏய்  .... ஏய்  ..... போ .... போ ... ஏய் ....இக்காஹ் .....இஃஹா...", என்று  அவன்  பார்த்த  கீதாரிகளைப்போலவே  ஒலியெழுப்பி குரும்பைகளை  கையில்  வைத்திருந்த  குச்சிகளைக்கொண்டு  மாடுகளை  மேய்ப்பது  போலவே  பாவனை  செய்தான்.

அவன்   வைந்திருந்த அந்த குரும்பைகள்தான்  அவனுடைய  காலில்லா  மாடுகள். அவன்தான்  அந்த  கீதாரி. கால்கள்  இருந்தால்தான் மாடுகளா என்ன? காலில்லா அந்த குரும்பை மாடுகள்  அவனுடைய  கற்பனை  மாடுகள். அவனுடைய  நண்பன்  புன்முறுவலுடன்  அவனுடைய  கற்பனை  மாடுகளை  கொஞ்சநேரம்  மேய்ந்துவிட்டு  கால்கள்  உள்ள  அவனது  நிஜ  மாடுகளுடன்  விடைபெற்றான்.


காலமாற்றத்தில்  ரசாயன  உரங்கள்  ஆக்கிரமிப்பிற்கு  பிறகு  இயற்க்கை  உரத்துக்கான  தேவை  ஒழிந்து விட்டது. இப்போதெல்லாம்  கீதாரிகள்  வருவதுபோல  தெரியவில்லை. மாட்டு  மந்தைகளும்  வருவதில்லை.  இயற்க்கைக்கு  எதிரான  ஒரு  பொருத்தமில்லாத  போரை  நாமும்  முன்னெடுத்துக்கொண்டிருக்கிறோம்  என்று  எண்ணி  பெருமூச்சு  விட்டவாறே  வழியில்  கிடந்த  தென்னங்குரும்பையை  மிதிக்காமல்  கடந்தான்.

No comments:

Post a Comment