Thursday, 21 May 2020

ஊர் திரும்புதல் - 1



அன்று மார்கழி திங்கள் வெள்ளிகிழமை அதிகாலை 5 மணி. அவன் ஊரை  நோக்கி சென்றுகொண்டிருந்த  அந்த  பேருந்தில் ஒரு இருக்கையில்  உறங்கியும் விழித்தும் நிலைகொள்ளாமல்  இருந்தான் அவன். அவன்  இறங்கவேண்டிய இடத்தின் பெயரை வண்டியின்  நடத்துனர்  சொல்லிக்கொண்டிருந்தது  அவன் காதில்  மெல்லியதாய்  கேட்டது. 

சட்டென எழுவதற்குள்  அந்த நிறுத்தத்தில் அந்த  பேருந்து நின்றது.

இறங்கிய  இடத்தில்  அவன்  வாடிக்கையாய்  தேனீர்  அருந்தும்  தில்லைபவன் இருப்பதை கண்டான். அதை  நோக்கி  மெல்ல  நடக்கத்தொடங்கினான். 

நெற்றி முழுவதும்  விபூதியும் அதன் மத்தியில் சிறிய சந்தனப்பொட்டும்  வைத்த  தில்லை பவன் முதலாளி  இவனை நலம் விசாரித்தார்.  அவருக்கு இவன் நன்கு  பரிச்சயமானவன்தான்.  இவன்  தந்தையின் நெருங்கிய சினேகிதர்தான் தில்லை பவன் உரிமையாளர்.

அவனுக்காக  அவனுடைய  தந்தை  அங்கே காத்திருந்தார். அவருடன்  அவன்  அவர்களுடைய  ஊரை  நோக்கி  புறப்பட்டான். 

அந்த வழி  நெடுகிலும் சல சலவென்று விக்கரமனாறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் தண்ணீர்  சத்தமும்   அதிகாலை பறவைகளின் குரல்களுமாய் அவன்  பயணித்துக்கொண்டிருந்தான். 

அவன் சென்றுகொண்டிருந்த  அந்த  வழிதான்  அவன்  கிராமத்தை நோக்கி போவது. இடையிடையே  தென்பட்ட  தேநீர்  கடைகளில்  விறகடுப்புகளின்  தீ  வெளிச்சம் அவனுக்கு ஏதோ  ஒரு  நெருக்கத்தை  உணர்த்தியது.



பாதையில்  எதிரே  உதிக்க  தொடங்கியிருந்த  சூரிய  வெளிச்சமும் இளம்சிவப்பாய்  பாதையின்  பக்கங்களில்  வளர்ந்திருந்த  பச்சை  புற்களில்  சொட்டிக்கொண்டிருந்த  பனிநீர்  துளிகளில்  ஊடுருவி  ஜாலம்  காட்டிக்கொண்டிருந்தது. பக்கங்களில்  பச்சையும்  மஞ்சளும்  கலந்து  அறுவடைக்கு  தயாரான  பயிர்களுடன்  வயல்கள்   அந்த  காலைவேளையை இன்னும்  ரம்யமாக்கின.



அது மார்கழி மாதமென்பதால் வழி நெடுக தெருக்களில் மங்கையர்களின் ஓவிய போட்டியாய் கோலங்கள். கோலங்களின்  மத்தியில் பரங்கி பூக்களும் அருகம்புல் கற்றைகளும் அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்தன. கோலம் வரைந்த  தேவதைகளின்  கூந்தல்களினூடே விரல் கோதி செல்லும்  மார்கழி பனிகாற்று.





அவன் கண்களில் இருந்து இரண்டு வருடமாய் விலகி  இருந்த  அத்தனையும் கண்டு  ரசித்துக்கொண்டே சென்றான். விக்ரமன்  ஆற்றங்கரையில்  நூறாண்டு  முதிர்ந்த அந்த  அரச மரத்தடியில்  வீற்றிருக்கும்  விநாயகருடன் உரையாடிக்கொண்டே வழி மேல் விழி வைத்து தன்மகனின் வருகைக்காக காத்திருத்தாள் அந்த தாய். 



ஆம் அவன் தன்தாயை காண தூர தேசத்திலிருந்து  வந்துகொண்டிருந்தான். 

3 comments:

  1. எழுத்து நடை நன்று. நமது ஊர் பழைய சோழரத்தார் பம்ப் செட், அதன் அருகே புளியமரம், விக்ரமன் ஆற்று பழைய பாலம், கவுசல்தார் கடை, அந்த தாத்தாவின் முருகா முருகா என்று சொல்லும் அழகு, அதன் அருகே இருந்த இனிப்பு சுவைகொண்ட புளியமரம்.... அதனை அடுத்து இருந்த மாபெரும் தூங்குமூஞ்சி மரம், சென்பகசேரி செல்லும் ஆற்றங்கரை அழகு, பனந்தோப்பு, அரசமர பிள்ளையார் அருகே ஆற்றில் நடக்கும் நாடகம்... அதுவும் மஜீத் அவர்களின் வள்ளித்திருமணம்.... இவையெல்லாம் சேர்த்தால் இன்னும் சுவையாய் இருக்கும்.

    ReplyDelete
  2. நல்ல தொடக்கம் .......

    ReplyDelete