Sunday 21 August 2022

ஒற்றை வைக்கோல் புரட்சி - வாசிப்பனுபவம்

ஒற்றை வைக்கோல் புரட்சி - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : மசானபு ஃபுகோகோ 

தமிழில் பூவுலகின் நண்பர்கள்


இந்த புத்தகம் ஒரு இயற்கை விவசாயியான நூலாசிரியர் ஃபுகோகாவின் வாழ்வியல் தத்துவம் குறித்தும் மேலும் தனது நீண்ட கால சொந்த  அனுபவங்களிலிருந்து வெளிவந்து அற்புதமான கருத்துக்களையும் அதில் இருக்கும் உண்மையினையும் உள்ளடக்கி இருக்கிறது.  இந்த நூலின் ஆசிரியர் 95 வயது வரை வாழ்ந்து தன்னால் முடிந்தவரை இயற்கை விவசாயத்தின் பெருமைகளையும் மேலும் மக்களிடம் அவற்றை ஊக்குவித்துக்கொண்டே தான் இருந்தார். ஜப்பான் நாட்டைச் சார்ந்த இவர் தனது தத்துவ ஆராய்ச்சியின் விளைவுகள் , காரணிகள் , செயல் முறைகள் என ஒவ்வொன்றையும் உரையாடுதலே இப்புத்தகம் . இந்த புத்தகத்தினை 
தமிழில் பூவுலகின் நண்பர்கள்  மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் மொழிபெயர்த்துள்ளனர்.

"ஒற்றை வைக்கோல் புரட்சி" நீண்ட நாட்களாக வாசிக்கவேண்டும் என்று வைத்திருந்த புத்தகம். இந்த வருடம் வாசிப்பு போட்டிக்கு வாசித்த ஆக வேண்டும் என்று வாசிக்க ஆரம்பித்தேன், இதென்ன  ஒரு வைக்கோலை வைத்துக்கொண்டு ஒரு புரட்சி என்று எதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆரம்பத்தில் தோன்றியது  ஆனால் வாசிக்க வாசிக்க  இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் நாம் தொலைத்து விட்ட இயற்கையினையும், இயற்கை சார்ந்த உணவுகள் மற்றும் வழக்கை முறையினை நாம் திரும்பிப் பார்க்கும் விதமாக இருக்கிறது.  ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் என்று தான் சொல்லவேண்டும்.

தலைப்பு தான் ஒரே வைக்கோல் ஆனால் புத்தகத்தின் உள்ளே வைக்கோல் போர் எப்படி இருக்கிறதோ அதைப்போலவே தான் பல்வேறு விதமான கருத்துக்களையும் மற்றும் இயற்கை பற்றிய எண்ணற்ற உண்மைகளையும் ஒவ்வொரு வைக்கோலுக்குள்ளும் வைத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

ஆரம்பத்தில் அரசாங்க பணியிலிருந்த ஆசிரியர், தனது அரசாங்க பணியினை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தின் மீதுள்ள ஒரு ஈர்ப்பினால் தனது சொந்தமான நிலத்தினுள் இயற்கை விவசாயம் மேற்கொள்கிறார். அவ்வாறாக அவர் ஆரம்பித்த இயற்கை விவசாயம் இன்று அவரின் பெயரினை உலகுக்குக் கொண்டுசென்றுள்ளது. 

இவர் இயற்கை விவசாயம் பற்றி நான்கு முக்கியமான விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறார். 

1. நிலத்தினை உழவே  தேவையில்லை 

2. வேதியியல் செயற்கை உரங்கள் தேவையில்லை 

3. தழையுரம் போடத் தேவையில்லை 

4. பூச்சிக்கொல்லி தெளிக்கத் தேவையில்லை 

என்ற இந்த நான்கும் இயற்கை விவசாயத்திற்கு எதிரானது என்கிறார். கொஞ்சம் நாமும் யோசித்துப் பார்த்தால் இதில் மறைந்திருக்கும் உண்மையும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் வணிகமும் புரிந்த கொள்ள முடியும் மேலும் இன்று நம் கையில் இருக்கும் நிலங்கள் எல்லாமே செயற்கையான மண்ணாகத் தான் இருக்கிறது.

பொதுவாக எங்கள் கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரையில் தப்பி விழுந்த ஒரு நெல் முளைத்து மிகவும் செழிப்பாகக் கதிர் விட்டு அதிகமான நெல்மணிகளைக் கொண்டிருக்கும். மிகவும் வீரியமானதாகவே இருக்கும். ஆனால் அது வளர்ந்த இடத்தில் இருக்கும்  மண் உழவில்லை, அதில் ரசாயனம் உரமில்லை, பூச்சிக்கொல்லி இல்லை ஏன் யாரும் அதை வளர்க்கக்கூட இல்லை ஆனால் அது தானாகவே இயற்கையின் கொடையினால் குதுகுலமாக வளர்ந்து நிற்கிறது. இதுதான் ஆசிரியர் சொல்லவரும் இயற்கை நிலம் பற்றிய பேருண்மை.  

அதனடிப்படையில் தான் ஆசிரியர் சொல்கிறார் நிலத்தினை உழுவதால் நிலத்திற்கும் அடியில் இருக்கும் வெகுநாட்களாக இருக்கும் களையின் விதை மேலே வருகிறது பிறகு அது  முளைத்து நாம் பயிரிடும் பயிருக்கும் இடையூறாக வந்துவிடுகிறது. அதனால் வளர்க்கும் விவசாயம் பாதிக்கிறது. 

உலகப் போர்க் காலத்தில் போர்களுக்காகத் தயாரித்த ரசாயனத்தினை போருக்குப் பின் எப்படி சந்தை படுத்துவது என்ற தேடிக்கொண்டிருந்த வளர்ந்த நாடுகள் அந்த ரசாயனத்தினை வளரும் நாடுகளில் விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்தலாம் என்ற ஒரு குறுக்கு வழியினை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் உலகத்தினையே இன்று ரசாயன கலந்த மண்ணாக மாற்றிய ஒரு கொடூரமான இயற்கையின் மீதானதொரு வன்முறையினை நிகழ்த்தியிருக்கிறது இன்றும் நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கிறது. இன்றைய விவசாயம் ரசாயனம் இல்லாமல் விவசாயம் இல்லை என்ற ஒரு பரிதாபகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இயற்கை நமக்குக் கொடுத்த நிலத்தினை நம் சுயநலத்திற்காக நாம் அனைவருமே அந்நிலத்தினை  மாசுபடுத்தவிடுகிறோம். உணவு உற்பத்தி தேவைதான் ஆனால் அதற்காக விஷத்தினை உணவாக நாம் பயிரிடுகிறோம்.  

நானும் ஒரு விவசாயிதான், ஒவ்வொரு நாளும் விதைத்த நெல் மீண்டும் பன்மடங்காகத் திரும்பி வருவதற்குள் எத்தனை எத்தனை இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. எங்கள் பாட்டி காலத்திலிருந்த அதே நிலம் தான் இன்றைக்கும் இருக்கிறது. ஆனால் அதே மண் இப்போது இல்லை. ரசாயனம் கலந்துபோய் இப்போது சக்தியில்லாத ஒரு மண்ணாகத் தான் இருக்கிறது.

நாம் ஒவ்வொரு முறையும் இடும் ரசாயனம் உரம் முழுவதும் செரிப்பதற்குள் கடலுக்குள் போய்ச் சேர்ந்துவிடுகிறது. கடலில் சேர்ந்த இந்த ரசாயனம், கடலில் இருக்கும் கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்ற நுண்ணுயிர்களுக்கு  உணவாக மாறுகிறது. இப்படியாக ஜப்பானின் நீர் மாசுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறார். இது ஜப்பான் மட்டுமில்லை உலகெங்கிலும் நீராதாரங்கள் இப்படித்தான் மாசுபட்டுக் கிடக்கிறது.  

ஜப்பான் நாட்டில் எவ்வாறு இயற்கை விவசாயம் செயற்கை விவசாயமாகக் காலப்போக்கில் மாறிப்போனது என்பதைப் பற்றியும், மீண்டும் எப்படி மக்களிடம் இயற்கை விவசாயத்திற்குப் பற்றிய நன்மைகளைச் சொல்லி  மாற்ற முற்பட்டார் என்பதையும் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப் படும் காய்கறிகள் மற்றும் பழங்களை   மக்கள் வாங்கும்போது  அது கண்ணிற்கு அழகாகவும் மேலும் பெரியதாகவும்  இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள் ஆனால் இயற்கை விவசாயத்தில் விளைவிப்பது பளபளப்பாக இருக்காது. அதனால் பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை என்பதைப் பற்றி அவர்    ஆதங்கப்படுகிறார்.

மேலும் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்கள் என்று சொல்லி அதிக விலைக்கு மக்களிடம் விற்பது குறித்து வேதனைப்படுவதுமட்டுமின்றி அவர் வாடிக்கையாகக் கொடுத்துவந்த ஒரு வியாபாரிக்குத் தனது விளைபொருள்களைக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

நாம் எப்போதுமே இருப்பதைத் தொலைத்து விட்டு இல்லாத ஒன்றுக்கு விலை கொடுத்து வாங்க முற்படும் முற்போக்கு கூட்டம் என்று சொல்லிக்கொண்டு திரிவதில் தான் பெரும்பாலும் நமது கௌரவமும் மேன்மையும் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இந்த புத்தகத்தினை ஒரு முறை வாசித்துப்பார்த்தால் புரிந்துவிடும் நாம் எங்கே இன்று நிற்கிறோம் மேலும் எங்கோ போய் நிற்கப்போகிறோம் என்பதைப் பற்றித் தெளிவா உணர்ந்துகொள்ள முடியும்.  

பொதுவாக விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல, அது மக்களோடு ஒன்றிய அவர்களின் வாழ்வியலில் ஒன்று என்ற இயற்கைத் தத்துவத்தை தனது சொந்த வாழ்க்கை முறையின் ஊடாக அவருக்கு நிகழ்ந்தேறிய பல்வேறு  நிகழ்வுகளையும், அன்றாடப் பணிகள் வழியே நமக்கு சொல்லிச்செல்கிறார் ஃபுகோகா. 

நமது நாட்டில் எவ்வாறு காந்தியம் பின்பற்றப்படுகிறதோ அதைப்போல தான் ஃபுகோகாவின் வாழ்வியல் தத்துவமும்.  ஃபுகோகாவைப் பின்பற்றும் பல்வேறு மாணவர்கள் அவருடனே அவரின் தோட்டப் பகுதியில் தங்கி அவர் வாழும் அதே இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவது மட்டுமின்றி அவர்களும் அவரை போலதொரு வாழ்வியல் முறையினை பின்பற்றுகின்றனர். 

மேலும்  பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இவரது பண்ணைகளைப் பார்வையிடவும், ஆய்வு செய்யவும்  வரும் ஆராய்ச்சி மாணவர்கள் , ஆசிரியர்கள் , கல்லூரிப் பேராசிரியர்கள் என பல அனுபவங்களை ஃபுகோகா நம்முடன் தனது இந்த புத்தகத்தின் வழியே பகிர்ந்துகொள்கிறார்.

மொத்தத்தில்  உழவு உழுவது தான்  விவசாயத்தின் முதல் மற்றும் அடிப்படை என எண்ணி அதற்க்காக டிராக்டர் வாங்கி வைத்திருக்கும்  நமக்கெல்லாம் உழவு என்பதே வீணற்ற வேலை அல்லாமல் ஏன் இயற்கை மண்ணை புண்ணாக்க வேண்டும் என்று கேள்வியினையும் நிலத்தினை புண்படுத்ததே என்றும் சொல்லிச்செல்கிறார் ஃபுகோகா.

இந்த நூலை வாசித்து முடிக்கும்  நாம் முடிவாக ஒன்றை தெரிந்து கொள்ளலாம். நமக்கு கண்முன்னே தோன்றுவது "மாடு கட்டி ஏறு பூட்டி உழவு செய்வதும் இப்போது டிராக்டர் வைத்து ஆழ உழவு செய்வதும்" எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

ஒற்றை வைக்கோல் வைத்து  இந்த உலகுக்கு ஃபுகோகா விட்ட சவாலை நாம் எல்லோரும் நம் கையில் எடுத்துக்கொண்டால் அவரின் இலக்கான "இயற்கை வேளாண்மை" செய்தால் மீண்டும் ஒரு  "வைக்கோல் புரட்சியையினை" செய்யலாம்.

முடிவாக நாம்  தெரிந்து கொள்ளவேண்டியது, நாம் இன்று செய்யும் விவசாயம் வெறும் ரசாயனம் கலந்த உணவு உற்பத்தியே தவிர வேறென்ன என்று சொல்ல தோன்றுகிறது.  இதுதான் நிதர்சனமான உண்மையும் கூட.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

 20 ஆகஸ்ட் 2020

Saturday 13 August 2022

குருதி ஆட்டம் - வாசிப்பனுபவம்

குருதி ஆட்டம் - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : வேல ராமமூர்த்தி 

டிஸ்கவரி புக் பேலஸ் 

பக்கங்கள் 88

விலை ரூபாய் 100


அய்யா வேலராமமூர்த்தி அவர்களின் எழுத்து எப்போதும் குருதியினை மையாகக் கொண்டு எழுதியதாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்த குருதி ஆட்டமும் அருமையாகவே அமைந்திருக்கிறது.

ஒரு கதையினை சொல்லும் போது, வாசிப்பவர்களுக்கு தாங்கள் வாசிக்கும் பொழுது எந்த ஒரு தொய்வும் வராமல் வாசிக்க வைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு இருக்கிறது. அந்த வகையில் அய்யாவின் எழுத்து நடை கொஞ்சம் கூட குறைவே இல்லாமல் இருக்கிறது விறுவிறுப்புடன் இருக்கிறது.

ஆப்பநாடும், பெருநாழியும் கொண்டுள்ள மண்ணின் வாசனையும்  கூடவே அரியநாச்சியும்  இல்லாமல் இருக்காது இவரின் கதைகள்.

ஒரு பக்கம் பதினேழு வருடமாக நின்றுபோன இருளப்பசாமி கோவிலின் திருவிழா ஏற்பாடுகள் நடக்கிறது.

மற்றொரு பக்கம், வெள்ளையர்களின் வெறியால் நாடுகடத்தப்பட்டு மலேயா காட்டுக்குள்  வந்து சேர்ந்த  அரியநாச்சி. தனது  வனவாசத்தில் ஒவ்வொரு நாழியினையும் தனது குடும்பத்திற்கு நேர்ந்த அநீதிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது சகோதரரின் மகனை வளர்த்துக்கொண்டு கூடவே அவனுக்குப் பழிவாங்கும் வன்மத்தினையும் ஊட்டி வளர்கிறாள்.

மற்றொரு பக்கம், தனது நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் தக்க சமயத்திற்கு எதிர்பார்த்துக்கொண்டு காட்டுக்குள் தனது மகளுடன் வனவாசம் செய்யும் இருளப்பசாமி கோவிலின் பூசாரி தவசிப்பாண்டி.

வெள்ளையம்மா கிழவி தனது மகளைப் பறிகொடுத்துவிட்ட பிறகு மகளின் கொலைக்குக் காரணமாக இருந்த இந்த மண்ணிலே அவளின் குழந்தை இருக்கக்கூடாதென்ற வைராக்கியத்துடன் சென்னைக்கு வந்தவள் தான் ஊர்ப்பக்கம் திரும்பவேயில்லை.

அந்நிய காற்று உள்ளே புகாமல் அரண்போல இருக்கும் அரண்மனையின் உள்ளே இத்தனைக்கும் காரணமான  உடையப்பன் உல்லாசமாக வளம் வருகிறான்.

அத்தனை பேரையும் காவுவாங்கிய உடையப்பனின் தலையை  காவுவாங்க பதுங்கியிருக்கும் புலிகள் எல்லாம் ஒன்றுகூடி ஒரே இடத்திற்கு வந்துசேரும் ஒரு நிகழ்வாக அமைந்துவிடுகிறது இருளப்பசாமி கோவிலின் திருவிழா.

ஆப்ப நாட்டின் மண் வாசனையும் அதனிலே உறங்கிக்கொண்டும் இறுக்கிக்கொண்டு இருக்கும் குருதியின் வாசனையும் கொஞ்சம் குறையாமல் அய்யாவின் எழுத்து விரிந்து செல்கிறது.

மலேயாவில் இருந்து கப்பல் வழியாக ஆப்ப நாட்டுக்கு வரும் அரியநாச்சி வரும் வழியிலே தந்து சகோதரனைக் கொலைசெய்த வெள்ளைக்கார ஸ்காட்டை கொலை செய்து தனது பழியினை தீர்த்துக்கொள்ளும் விதம் அரியநாச்சியின் வீரத்தினை அருமையாகச் சொல்லிச்செல்கிறது.

திருவிழா என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து விடலை பசங்களுக்கும் இளவட்ட குமாரிகளுக்கும் புதிதாக நடைபெறுகிற திருவிழா கொடுக்கும் கொண்டாட்டம், கூடவே குழந்தைகள் பெரும் குதுகுலம் என ஆப்ப நாட்டின் தெருக்களில் அரங்கேறும் திருவிழா தோரணைகள் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இருளப்பசாமிக்கு நேர்ந்துகொண்ட நேர்த்திக்கடனை இதைவிட வேறெப்படி சொல்லுவது. "சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு 'ஒத்த பொங்கல்'. கனத்த நோவுக்கு 'ரெட்டை பொங்கல்'. வெட்டுக்குத்து கேஸு விடுதலைக்கு ஒன்று கொலை வழக்கு ரெட்டை கிடாய் என நீண்டுகொண்டே செல்லும் நேர்த்திக்கடன்களைக் கொடுக்கவே இந்த திருவிழா நடைபெறுகிறது.

வீதியெங்கும் வண்ணக் கோலங்களால் அலங்கரித்த குமரிப்பெண்கள் ஒருபக்கம் நீண்டநாட்களுக்குப் பிறகு நடக்கும் திருவிழாவின் வைக்கோல் பிரி விளையாட்டு தயாராகிக்கொண்டிருக்கும் இளவட்ட பசங்கள் ஒருபக்கம் என ஆப்ப நாடே திருவிழா கோலமிட்டு குதுகுலமாய் இருக்கிறது ஒருபக்கம்.

இருளப்பசாமிக்கு பலியாக போவும் 21 கிடாய்கள் மாலையும் கழுத்துமாகத் தேவரின் அருவாளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது கூடவே உடையப்பனும் அவனின் கூட்டாளி பெருநாழியின் முதலாளியும் தங்கள் தலையும் ஆடுதலைகளுடன் உருளப்போவது தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

அனைவரையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொண்டுவந்துவிடுகிறார் ஆசிரியர்.  அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேர ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் இறுதியில் நடக்கும் திருவிழாவில் இவர்களையெல்லாம் கொண்டுவந்துவிடுகிறார் அய்யா. 

          

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

13 ஆகஸ்ட் 2022