Saturday, 13 August 2022

குருதி ஆட்டம் - வாசிப்பனுபவம்

குருதி ஆட்டம் - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : வேல ராமமூர்த்தி 

டிஸ்கவரி புக் பேலஸ் 

பக்கங்கள் 88

விலை ரூபாய் 100


அய்யா வேலராமமூர்த்தி அவர்களின் எழுத்து எப்போதும் குருதியினை மையாகக் கொண்டு எழுதியதாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்த குருதி ஆட்டமும் அருமையாகவே அமைந்திருக்கிறது.

ஒரு கதையினை சொல்லும் போது, வாசிப்பவர்களுக்கு தாங்கள் வாசிக்கும் பொழுது எந்த ஒரு தொய்வும் வராமல் வாசிக்க வைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு இருக்கிறது. அந்த வகையில் அய்யாவின் எழுத்து நடை கொஞ்சம் கூட குறைவே இல்லாமல் இருக்கிறது விறுவிறுப்புடன் இருக்கிறது.

ஆப்பநாடும், பெருநாழியும் கொண்டுள்ள மண்ணின் வாசனையும்  கூடவே அரியநாச்சியும்  இல்லாமல் இருக்காது இவரின் கதைகள்.

ஒரு பக்கம் பதினேழு வருடமாக நின்றுபோன இருளப்பசாமி கோவிலின் திருவிழா ஏற்பாடுகள் நடக்கிறது.

மற்றொரு பக்கம், வெள்ளையர்களின் வெறியால் நாடுகடத்தப்பட்டு மலேயா காட்டுக்குள்  வந்து சேர்ந்த  அரியநாச்சி. தனது  வனவாசத்தில் ஒவ்வொரு நாழியினையும் தனது குடும்பத்திற்கு நேர்ந்த அநீதிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது சகோதரரின் மகனை வளர்த்துக்கொண்டு கூடவே அவனுக்குப் பழிவாங்கும் வன்மத்தினையும் ஊட்டி வளர்கிறாள்.

மற்றொரு பக்கம், தனது நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் தக்க சமயத்திற்கு எதிர்பார்த்துக்கொண்டு காட்டுக்குள் தனது மகளுடன் வனவாசம் செய்யும் இருளப்பசாமி கோவிலின் பூசாரி தவசிப்பாண்டி.

வெள்ளையம்மா கிழவி தனது மகளைப் பறிகொடுத்துவிட்ட பிறகு மகளின் கொலைக்குக் காரணமாக இருந்த இந்த மண்ணிலே அவளின் குழந்தை இருக்கக்கூடாதென்ற வைராக்கியத்துடன் சென்னைக்கு வந்தவள் தான் ஊர்ப்பக்கம் திரும்பவேயில்லை.

அந்நிய காற்று உள்ளே புகாமல் அரண்போல இருக்கும் அரண்மனையின் உள்ளே இத்தனைக்கும் காரணமான  உடையப்பன் உல்லாசமாக வளம் வருகிறான்.

அத்தனை பேரையும் காவுவாங்கிய உடையப்பனின் தலையை  காவுவாங்க பதுங்கியிருக்கும் புலிகள் எல்லாம் ஒன்றுகூடி ஒரே இடத்திற்கு வந்துசேரும் ஒரு நிகழ்வாக அமைந்துவிடுகிறது இருளப்பசாமி கோவிலின் திருவிழா.

ஆப்ப நாட்டின் மண் வாசனையும் அதனிலே உறங்கிக்கொண்டும் இறுக்கிக்கொண்டு இருக்கும் குருதியின் வாசனையும் கொஞ்சம் குறையாமல் அய்யாவின் எழுத்து விரிந்து செல்கிறது.

மலேயாவில் இருந்து கப்பல் வழியாக ஆப்ப நாட்டுக்கு வரும் அரியநாச்சி வரும் வழியிலே தந்து சகோதரனைக் கொலைசெய்த வெள்ளைக்கார ஸ்காட்டை கொலை செய்து தனது பழியினை தீர்த்துக்கொள்ளும் விதம் அரியநாச்சியின் வீரத்தினை அருமையாகச் சொல்லிச்செல்கிறது.

திருவிழா என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து விடலை பசங்களுக்கும் இளவட்ட குமாரிகளுக்கும் புதிதாக நடைபெறுகிற திருவிழா கொடுக்கும் கொண்டாட்டம், கூடவே குழந்தைகள் பெரும் குதுகுலம் என ஆப்ப நாட்டின் தெருக்களில் அரங்கேறும் திருவிழா தோரணைகள் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இருளப்பசாமிக்கு நேர்ந்துகொண்ட நேர்த்திக்கடனை இதைவிட வேறெப்படி சொல்லுவது. "சாதாரண தலைவலி, காய்ச்சலுக்கு 'ஒத்த பொங்கல்'. கனத்த நோவுக்கு 'ரெட்டை பொங்கல்'. வெட்டுக்குத்து கேஸு விடுதலைக்கு ஒன்று கொலை வழக்கு ரெட்டை கிடாய் என நீண்டுகொண்டே செல்லும் நேர்த்திக்கடன்களைக் கொடுக்கவே இந்த திருவிழா நடைபெறுகிறது.

வீதியெங்கும் வண்ணக் கோலங்களால் அலங்கரித்த குமரிப்பெண்கள் ஒருபக்கம் நீண்டநாட்களுக்குப் பிறகு நடக்கும் திருவிழாவின் வைக்கோல் பிரி விளையாட்டு தயாராகிக்கொண்டிருக்கும் இளவட்ட பசங்கள் ஒருபக்கம் என ஆப்ப நாடே திருவிழா கோலமிட்டு குதுகுலமாய் இருக்கிறது ஒருபக்கம்.

இருளப்பசாமிக்கு பலியாக போவும் 21 கிடாய்கள் மாலையும் கழுத்துமாகத் தேவரின் அருவாளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது கூடவே உடையப்பனும் அவனின் கூட்டாளி பெருநாழியின் முதலாளியும் தங்கள் தலையும் ஆடுதலைகளுடன் உருளப்போவது தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

அனைவரையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொண்டுவந்துவிடுகிறார் ஆசிரியர்.  அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேர ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் இறுதியில் நடக்கும் திருவிழாவில் இவர்களையெல்லாம் கொண்டுவந்துவிடுகிறார் அய்யா. 

          

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

13 ஆகஸ்ட் 2022

No comments:

Post a Comment