Sunday 2 October 2022

பொன்மலர் - அகிலன்

பொன்மலர்  

ஆசிரியர் : அகிலன் 

தாகம் பதிப்பகம் - கிண்டில் 

பக்கங்கள் 220

விலை ரூபாய் 125


தமிழின்  தவிர்க்கமுடியாத ஒரு எழுத்தாளரான அகிலன், 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ல், புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர்  என்ற ஊரில் பிறந்து 1988ல் தனது 65வது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்தார்.  எதார்த்தமான மற்றும்  ஆக்கபூர்வமான எழுத்துக்களுக்கு பெயர் பெற்ற இவரின் பெரும்பாலான  எழுத்துக்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகியாகவும் இருந்திருக்கிறார். பல்வேறு புதினங்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுவர் நூல்கள், வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள்  மற்றும் பல்வேறு கட்டுரைகள் என இவரின் எழுத்து பல்வேறு தடம் பதித்திருக்கிறது.

1963ல் இவர் எழுதிய "வேங்கையின் மைந்தன்" என்ற வரலாற்று நாவலுக்குச் சாகித்ய அகாடமி  விருது கிடைத்தது. மற்றொரு நூலான   "சித்திரப் பாவை" என்ற வரலாற்று நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான "ஞானபீட விருதை வென்றது இது மட்டுமல்லாமல் இந்த நாவல்  பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் மற்றொரு நூலான "எங்கே போகிறோம்" என்ற சமூக அரசியல் நூல் 1975ல் "ராசா சர் அண்ணாமலை" என்ற விருதினை பெற்றுத் தந்தது.            

இவர் பிறந்து 100 ஆண்டுகள் என்பதால் "2022" ஆம் ஆண்டை  "அகிலன் நூற்றாண்டு" என்று கொண்டாடப்படுகிறது. நாமும் அதைக்  கொண்டாடும் விதமாக நமது குழுமத்தில் இவரின் எழுத்துக்களை வாசித்து அவரை போற்றவேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த ஆண்டு விழா போட்டியில் ஒரு வாரத்தினை இவரின் படைப்புக்களுக்காக ஒதுக்கி அவரின் பெருமையினை  அனைவருக்கும் அறியப் படுத்துகிறோம்.

பொன் மலர், அகிலன் அவர்களின் இன்னுமொரு சமுதாய அக்கரை கொண்ட நாவல். சங்கரி, திருஞானம், குருமூர்த்தி, திருமூர்த்தி, ராஜேஸ்வரி என முக்கியமான கதாபாத்திரங்களைக் கொண்டு பயணிக்கும் அருமையான கதை.

சிறுவயதிலே அம்மாவை இழந்து அப்பாவிடம் வளர்ந்த சங்கரி, தனது முதல் காதலில் விழுகிறாள். அந்த காதல் அந்த இளம்பெண்ணை எங்கே கொண்டு விடுகிறது  அதனால் அவளுக்கு ஏற்பட்ட இழப்புகள் கொடுத்த வலியுடன் அவள் இந்த நாவல் முழுவதும் பயணிக்கிறாள்.

திருஞானம், இளமையில் வறுமையில் வளர்ந்தவர். இந்த கதாபாத்திரத்தின்  வழியே ஆசிரியர் தனது காந்தியின் மீதுள்ள பற்றையும் ஈடுபாட்டினையும் ஒவ்வொரு தருணத்திலும் வெளிக்காட்டுகிறார்.

குருமூர்த்தி மற்றும் திருமூர்த்தி இரட்டை பிறவிகள் இவர்கள் பிறவியிலே செல்வந்தர்கள் இவர்களின் தங்கை ராஜேசுவரி

குருமூர்த்தியின் ஆசைவார்த்தைகளால் மயங்கி தனது வாழ்க்கையில் வழுக்கி விழுகிறாள் சங்கரி. இவற்றைத் தெரிந்துகொண்ட அவளது தந்தையும் மரணிக்கிறார். இதன் விளைவாக உறவினரான திருஞானம் உதவிபுரிய முன்வருகிறான்  ஆனால் அவள் அவனது ஆதரவினை ஏற்க மறுக்கிறாள். இந்த புள்ளியில் இருந்து அவள் அவன் கொடுத்த திடமான வார்த்தைகளால் தனது மீதமுள்ள வாழ்க்கையினை செதுக்கிக்கொள்கிறாள்.

அதன்படி சங்கரி ஒரு மருத்துவராக மாறுகிறாள், மட்டுமல்லாமல் நல்ல புகழ்பெற்ற ஒரு மருத்துவராகத் தனது பணியினை செய்கிறாள். அப்போது அவள் மருத்துவம் பார்க்க நேர்கிற காமாட்சி என்ற பெண்ணிற்குத் தனது அனைத்துவிதமான திறமைகளையும்   கொடுத்து பிரசவம் பார்க்கிறாள். இதன் விளைவாக திருமூர்த்தியின் அறிமுகம் கிடக்கிறது.

திருமூர்த்தி தன்னிடம் இருக்கும் பணபலத்தால் எதையும் சாதித்துவிடலாம் என மனநிலையினை கொண்டவன். அப்படியாக இவன் கள்ள பணம் பதுக்கல், மற்றும் கடத்தல் மற்றும் பல்வேறு விதமான சட்டத்திற்குப் புறம்பான வகையில் பணம் சம்பாதிக்கிறான். இந்த மாதிரியான பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று சங்கரியினை தனக்குச் சாதமாக்கிக்கொள்ள முயல்கிறான். இப்படி ஏற்பட்ட இந்த கொடுக்கல் வாங்கலில் திருமூர்த்தியின் பல்வேறு அந்தரங்க விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினை சங்கரி தெரிந்துகொள்கிறாள்.

அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் திருஞானம், அவனுக்குத் தெரியாமலே சங்கரி அவனுக்கு உதவி புரிகிறாள். அவனும் திருமூர்த்தியின் அணைத்து ரகசியங்களும் அறிந்து கொள்கிறான். 

இப்படியாகச் செல்லும் கதையில் இறுதியில் சங்கரி தனக்காகவே காத்துக்கொண்டிருந்த திருஞானத்திடம் ராஜேஸ்வரியினை ஏறுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறாள். தனக்குக் குருமூர்த்தியினால் ஏற்பட்ட குழந்தை சாராதா என்ற விவரத்தினை தெரியப்படுத்துவது மட்டுமின்றி திருமூர்த்தியினால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணான குமுதா உயிருடன் இருப்பது மட்டும் அவளுக்கும் ஒரு குழைந்து இருக்கிறது என்ற உண்மைகளைத் தெரியப்படுத்துகிறாள். இது திருஞானம் அவள் மீது கொண்டிருந்த பல்வேறு விதமான சந்தேகங்களைத் தவறெனப் புரிந்துகொள்கிறான்.

சமுதாயத்தின் மீது ஆசிரியர் கொண்டுள்ள தனது ஈடுபாட்டினை கதையின் பல்வேறு இடங்களில் அழுத்தமாகவே சொல்லிச் செல்கிறார். பணம் உள்ளவன் தனது வாழ்க்கையினை உல்லாசமாக வாழ்கிறான் அதே சமயம் ஒரு வேளைக்குக் கூட உணவில்லாமல் வாழும் மனிதர்களும் இங்கே தான் வாழ்கிறார்கள் என்பதும் காந்தி சொன்ன உலகம் இன்று எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்றும் தனது ஏக்கத்தினையும் பதியவைத்துள்ளார். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் எவ்வாறெல்லாம் வாழ்கிறார்கள் என்ற தனது சாடல்களையும் அதே நேரத்தில் காலம் தனது கடமையினை செய்யும் என இறுதியில் தண்டனையும் கொடுத்து முடிக்கிறார்.

சமுதாயத்தின் ஒவ்வொரு மனிதனும் தான் வாழ வேண்டிய வாழ்க்கையினை வாழ வேண்டும் அதற்காக ஒரு மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய வாழ்க்கையினை பலம் பொருந்தியவர்கள் ஏமாற்றி வாழவேண்டாம் என்று சூசகமாகக் கருத்தினை சொல்லிச்செல்லும் கதைதான் இந்த பொன் மலர்.

அன்புடன்,

 தேவேந்திரன்  ராமையன் 

2 அக்டோபர் 2022