ஆறு மணியளவில் அவன் காதில் அழகிய முருகனின் 'அறுபடை வீடு கொண்ட திருமுருகா' , என ராமமூர்த்தியின் சவுண்ட் சர்வீஸ் ஊர் முழுவதுமாய் ஓலிக்க அதை கேட்டுக்கொண்டே அவன் அவனுடைய தந்தையுடனும் தாயுடனும் வீடுவந்து சேர்ந்தான்.
வீட்டில் நுழைந்ததும் அவன் வீட்டின் நாய் ஓடி வந்து வாலை ஆட்டிக்கொண்டே அவனை கட்டித்தழுவிக்கொண்டது.
நாய்தான் எவ்வளவு நன்றி உள்ளது. நீண்ட நாள் கழித்து வீடு திரும்பினால் நாய் முதலில் வந்தவரின் கால் விரல்களை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டு உடனே கட்டிக்கொள்ளும்.
அவன் எப்பொழுதும் ஊருக்கு வந்த உடன், அந்த தெருவில் இருக்கும் அனைவரின் நலம் விசாரிக்க சென்றுவிடுவான். சற்றே ஓய்வெடுத்த பின்பு அவன் புறப்பட்டான் அனைவரின் நலம் விசாரிக்க!.
காலை ஆகாரம் முடிந்த பின் வீட்டின் எதிரே வீற்றிருக்கும் விநாயகரை வழிபட்டான். அங்கே அமைதியாக உட்கார்ந்திருந்த அவன் எதையோ யோசிக்க தொடங்கினான்.
அந்த ஊர் ஒருபுறம் ஆற்று நீராலும் மற்ற மூன்று பக்கங்களிலும் பசுமை நிறைந்த வயல்களினாலும் சூழப்பட்டது. சுமாராக 40 வீடுகளும், காவல் தெய்வமாக ஒரு அம்மன் கோயிலும், ஊர் நடுவில் ஒரு குளமும் என்று மொத்ததில் அழகே நிறைந்திருந்தது அந்த ஊர்.
ஆம், இத்தனை நாட்கள் அவன் தொலைத்த அந்த கிராமத்தின் அழகும் அந்த கிராமத்தில் மறைந்துபோன சிலபல வைபவங்களும்.
அதில் முதன்மையான ஒன்றுதான் அந்த மேடை நாடகம்.
ஆம், அந்த ஊரின் நாடகமென்றால் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் அங்கே கூடிவிடும். ஏனென்றால் எந்த ஊரிலும் இல்லாத நாடக மேடையின் சிறப்புதான். அதில் அப்படி என்ன சிறப்பு?
அந்த ஊர் நாடகத்தின் மேடை, அம்மன் கோவிலுக்கு நேர் எதிராக விக்கிரமனாற்றின் நடுவே கோவிலை பார்த்து அமைக்கப்படும். செங்கல் அறுத்து அதை சூளையில் இடாமல் செவ்வக வடிவில் சுவரெழுப்பி அதற்குள் ஆற்றுமணல்கொண்டு நிரப்பி அந்த மேடையினை அமைப்பார்கள். அந்த மேடைக்கு பந்தலிட்டு அழகான வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பார்கள். தோரணங்களும் திரைசீலைகளுமாய் மேடை ஆர்ப்பரிக்கும் தோற்றத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு அழகாய் இருக்கும்.
கோடையாதலால் பார்வையாளர்கள் அமர ஆற்று மணலே பாய்போல் விரிந்திருக்கும். அதுவே அழகு. மறுநாள் காலையில் மணல் மேல் அழகாய் வெவ்வேறு விதமான கால்தடங்கள் பரவியிருக்கும், அது அதைவிட அழகு.
மேடையே சிறப்பென்றால் அங்கு அரங்கேறும் அரிச்சந்திரா, வள்ளித் திருமணம், லவ குசா, சத்தியவான் சாவித்திரி என்று ஒவ்வொரு வருடமும் அரங்கேறும் ஒவ்வொரு நாடகம் அழகு .
அத்தனை அழகான நாடகங்களை வழங்க வருகை தரும் மதுரையின் புகழ்பெற்ற நாடக கலைஞர்கள் என்பதே எல்லாவற்றிலும் மிகச்சிறப்பு.
இந்த வைபவங்கள் எல்லாம் அவனது வீட்டின் எதிரே நடக்கும். அதெல்லாம் இல்லை என்பதாலோ என்னவோ அவனுடைய முகம் கவலையில் ஆழ்ந்து தெரிந்தது.
அந்த கொண்டாட்டங்களை எல்லாம் நடத்திவைத்தவர் ஒருவர். அந்த மாமனிதர் துரைசாமி வாண்டையார் . அவரும் இல்லையென்பதால் இனிமேல் இந்த நிகழ்வுகளை காண இயலாது என்று எண்ணியவாறே இயலாமையும் கவலையும் தொனிக்க சோர்ந்த முகத்துடன் வீடு திரும்பினான்.
தொடரும்
Thnaks for your review and will continue the story
ReplyDeleteஅண்ணா ஒவ்வொரு சொற்களும் நமது கிராமத்தின் அழகு.....
ReplyDeleteநன்றி தம்பி, கிராமம் எப்போதும் அழகு தான் !
ReplyDelete