Sunday 23 August 2020

ஊர் திரும்புதல் - 23

அறுவடை 


தை பொங்கலின் கடைசி நாள் அன்று இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட அவனுடைய கிராமத்து மக்கள் தங்களின் வயல்களில் அறுவடை செய்வதைப்பற்றி  பேசிக்கொண்டே சென்றனர்.


மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே அவன் வீட்டிலிருந்து அறுவடைக்கு அரப்பு  அரிவாளுடன் கிளம்பினான். தை மாதம் அதிகாலை குளிரும்  இருளும்   விலகாத   நேரம், விக்ரமனாற்றில்  சலசலவென்ற  சத்தத்துடன் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பொங்கல் முடிந்தவுடன் தாளடி அறுவடை தொடங்கும் என்பதால்,  அறுவடைக்கு அவனது ஊர் ஆட்கள் போதாதென்று சுற்றியுள்ள பத்து பதினைந்து கிராமங்களில் இருந்து அறுவடைக்கு வருவார்கள். மாணிக்கம் டீ கடையின் வாசலில், வாட்ட சாட்டமான வாலிபர்கள் தலையில் முண்டாசுடன் நீண்டு  வளைந்த   அரப்பு   அரிவாட்களுடன் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களில்  சிலர்  குளிருக்கு  இதமாக  மாணிக்கம்  கடை  டீயுடன்  பீடியும் குடித்து  புகைவிட்டுக் கொண்டிருந்தனர். அவனது ஊரின் ஆட்களும் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.  அதில் அவனும் ஒரு ஆளாக அன்று அவர்களுடன்  சேர்ந்துகொண்டான். 


அப்போதெல்லாம்  தாளடி அறுவடை காலத்தில்  முதல் நாள் அறுவடை செய்து வயலிலே விட்டுவிடுவார்கள். அதிகாலையிலேயே அறுப்பு  வேலை  நடக்க  வேண்டும். ஏனென்றால் நெற்கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும். அதனால்  அறுப்பின்போது  நெல் உதிராமல் வரும்.  மறுநாள் வேறொரு வயலினில் அறுவடை செய்துவிட்டு, பின்னர்  காலை உணவிற்கு பிறகு முதல் நாள் அறுத்த வயலின் நெற்பயிர்களை கண்டுமுதல் செய்வார்கள்.  நெற்கதிர்கள் வெயில்  ஏறிய பிறகுதான்  காயத்தொடங்கும்.  அது  காய்த்த  பிறகு கதிரடித்தால்தான்  வேலை  சுலபமாக  இருக்கும். மதியம் இரண்டு மணிக்கு  மேல்தான்  நெல்லைத்தூற்றுவதற்கு  ஏதுவாக  காற்று  வீசும்.  இந்தக்காரணங்களை  மனதில்  நிறுத்திதான்  வேலை  அட்டவணைகள்  இருக்கும். இயற்கையுடன்  இணைந்து வாழ்த்த  வாழ்க்கையில்,  நம்மவர்கள்  பட்டறிவுடன்  செய்யும்  வேலை  ஒவ்வொன்றுக்கும்  நேரம்  வகுத்து  வந்திருக்கிறார்கள். 




அன்றும் வெள்ளி  முளைக்கும் பொழுதிற்கு  முன்னதாகவே  அவர்கள்   ஒரு வயலில்  இறங்கி  அறுப்பு வேலையைத் தொடங்கினார்கள்.  அருகில் இருப்பவர்களே தெரியாத பனிக்காலைப்பொழுது. ஆட்கள் ஒரு முனையிலிருந்து, மறு முனைக்கு குனிந்த தலை நிமிராமல் சரக்  சரக்கென்று  கதிர்களை அறுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.  பல  அரப்பரிவாள்கள் பயிர்களை  கூடி  எழுப்பும்  ஒலி  கேட்பதற்கே இனிமை.  அவனுக்கு அந்த நாட்களில் முதல் ஓரிரெண்டு நாட்கள் மிகவும்  கடினமாகவும் இருக்கும்.  குனிந்தே  அறுப்பு செய்வதால்,  முதுகுவலி தாங்க முடியாத அளவுக்கு  இருக்கும். ஆனாலும்  எப்போதும் வேலை செய்பவர்களுக்கு இது  சாதாரணம்.  



அந்த நாட்களில்  ஊரே புது  நெல்  வாசனையால்  நிரம்பி  இருக்கும்.  அவன் அவனது ஊர்ப் பண்ணை வயல்களுக்கு மட்டும்தான் அறுப்புக்கு  போவது  வழக்கம். அவனது படிப்பு காலத்தில் அந்த ஓரிரெண்டு வாரங்கள் மட்டும் எப்போதும் அவன் விடுமுறை எடுப்பான்.  அவன் மட்டுமல்ல அவன் வயதில்  இருக்கும் ஐந்தாறு நண்பர்களும் எப்போதும் இதைச்  செய்வார்கள்.  ஏனென்றால், அவன் அறுவடைக்கு ஒருநாள் போனால் குறைந்தது ஒரு  கலம் நெல் கூலியாகக் கிடைக்கும். அப்படியே அந்த பதினைந்து நாட்களில் சுமாராக ஒரு பத்து மூட்டை நெல் சேர்ந்துவிடும்.   அதனால் மூன்று  நான்கு மாதங்களுக்கு  சாப்பாடுக்கு தேவையான நெல் கிடைத்துவிடும்.  அவன் ஊரில் இருக்கும் மற்ற வேலைக்கு செல்லும்  வாலிபர்களும்,  அந்த அறுவடை நாட்களில் வேறெந்த வேலைக்கும் போகாமல்,  அறுவடைக்கு மட்டும் போவது வழக்கம்.

தாளடி வயலில் அறுவடைக்கு  முன்னரே  உளுந்து பயறு தூவப்பட்டு  விதைக்கப்பட்டிருக்கும். அறுவடை  நேரத்தில் இருக்கும். உளுந்துப்  பயிறு அறுவடை  நேரத்தில்  ஒரு சான் உயரம் வளர்ந்து இருக்கும்.  தவறுதலாக  அதை அறுத்துவிடாமல், லாவகமாக நெற்பயிரினை மட்டும் அறுக்க வேண்டும். நெற்கதிர்களை அறுவடை செய்வது என்பது சாதாரண வேலை இல்லை.  அதுவும்  கதிர்களை அறுத்து தாள்களின் மீது போடவேண்டும். அதற்கும் ஒரு அளவு உண்டு.  ஏனெனில் மறுநாள் அதனை கட்டி களத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக அந்தக்  கதிர்கள் காய்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் மனதில்  வைத்து  கதிர்  அறுக்க  வேண்டும்.  இல்லையெனில் வேலை தெரிந்தவர்கள் கோபப்படுவார்கள்.  

அறுவடைக்கு பயன்படுத்தும் கதிர் அரிவாள்  பெரிதாக வளைந்து கூர்மையாக இருக்கும். அதனைக்  கொண்டு அறுவடை செய்வது சிலருக்கு நிரம்பவே  கடினமான வேலைதான். அப்படித்தான் அவனுக்கும் முதல்நாள் கொஞ்சம் கடினமாக இருந்தது.  ஆனால் அவன் மற்ற ஆட்களுக்கு சமமாகவும் அவனது பங்கினை சரியாக அறுவடை செய்துவிடுவான்.     நெல் அறுவடை எப்போதும் ஒரு குழுவாக செய்யும்  வேலை.  சிலர் வேகமாக அறுத்து விட்டு பின்னால் இருப்பவர்களின் கதிர்களையும் அறுத்துக்  கொடுப்பார்கள்.  

காலையிலேயே பயிர்களை  அறுத்து  முடிந்த பின்னர் வீட்டுக்கு சென்று காலை உணவு  உண்ட  பிறகு  எல்லோரும் வயலில் கூடுவார்கள்.  முதல்நாள் காலையில் அறுவடை செய்த வயலிலிருந்து, அறுத்த கதிர்களை கட்டுகளாக கட்டி களத்திற்கு தூக்கி செல்லவேண்டும். இதுவும் ஒரு குழுவாக எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யும் வேலை. இதில் கட்டுகளை கட்டுவதற்கு ஆக்கைகள் பயன்படுத்தப்படும். இந்த ஆக்கையினை வைக்கோலினால் திரிப்பதும்கூட ஒரு விதமான திறமைதான்.  இதனை எல்லோரும் செய்துவிட  முடியாது.  இந்த ஆக்கை மிகவும் வலிமையானது. ஒருமுறை கைதேர்த்தவர்களால் திரிக்கப்பட்ட ஆக்கையானது பத்து பதினைந்து நாட்கள் அறுபடாமல்  இருக்கும். அதனால் ஆக்கைகளை  வேலை  முடிந்தபின்  எடுத்து பத்திரமாக வைத்துக்  கொள்ளவேண்டும். 

கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள் வயலில் இருந்து கட்டு கட்டிவிடுவார்கள். அப்படியாக கட்டிய கட்டுகளை தலைச்சுமையாக  ஒருவர் மாற்றி தூக்கி நெல்லடிக்கும்  களத்திற்கு கொண்டு  சேர்க்கவேண்டும். அதில் கட்டுகளைத் தூக்கி வருவதற்கு முக்கியமாக இள வட்டங்களிடம்தான் சொல்வார்கள். கரடு முரடான வரப்புகள், வாய்க்கால்கள், வரப்புகளில் இருக்கும் நீர்முள்  என்று பல இடையூறுகளை கடந்து வரவேண்டும். 
 
கட்டு கட்டுவதில் ஒரு சிலர் கைதேர்ந்தவர்களாக  இருப்பார்கள். அவர்கள் இறுக்கி இறுக்கி இருமடங்கு கதிர்களை கட்டிவைத்துவிடுவார்கள்.  அப்படி கட்டியிருக்கும் கட்டுகளை தூக்கிக்கொண்டு போகும்போது,  ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றி கொடுக்கும் பொது, கொடுப்பவர் லாவகமாக தள்ளிவிடவேண்டும். அதுபோலவே வாங்குபவரும் லாவகமாக இழுத்து தலையில் வைத்துக்கொள்ளவேண்டும். இதில் யாரேனும் ஒருவர் தவறு  செய்தாலும் இருவருக்கும் பாதிப்பு. அப்படி சரியாக மாற்றிக்கொள்ளாவிட்டால் கழுத்து வலி உண்டாகும். சிலநேரங்களில் கழுத்து சுளுக்கு விழுவதுமுண்டு.

கட்டுக்  கட்டி முடிந்த வயல்களில், பெண்கள் சிதறிய கதிர்கள் ஒவ்வொன்றாய் அங்கும் இங்குமாய் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதனைப்  பார்த்த தலையாரி திட்டுவதும், அதை காதிலேயே வாங்காமல், சிலர் தொடர்ந்து செய்வதும், சிலர் வெட்கி வேண்டாமென்று வெளியேறுவதும் உண்டு.  இவர்கள் கதிர் பொறுக்குகிறோம் என்று வளரும் உளுந்து செடிகளை மிதித்து விடுவார்கள்.  அதனால்தான் தலையாரி கொஞ்சம்  கடினமாக  நடந்து கொள்வார்.   

அவன் சிறுவனாக இருந்த காலத்தில் ஆட்களே அறுத்த கதிர்களை  களத்தில் ஒரு கல்லில் அடிப்பார்கள். ஆனால் இப்போது அந்த காலம் மாறி டிராக்டர் வைத்தோ அல்லது மாடுகளை வைத்தோ கதிரடிப்பது வழக்கமாகிவிட்டது. அப்படி களம் வந்து சேரும் நெற்கதிர்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பரப்பி விடுவதும், பரப்பிய நெற்கதிர்களை நேர்த்தியாக கிண்டி விடுவதும் இதெற்கென சிலர் களத்தில் இருந்து பார்த்துக்கொள்வார்கள். 

அந்த  நாட்களில் இதுபோல அவன் ஊரில் இருக்கும் அத்தனை களங்களும், களை  கட்டியிருக்கும். எங்கு பார்த்தாலும் ஆட்கள் தலையில் ஒரு முண்டாசுடனும், அழுக்கு வேட்டி, கிழிந்த பனியன்களுடனும் சற்றும் ஓய்வின்றி அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்யத்தவண்ணம் இருப்பார்கள்.            

எப்படியும் அறுவடை செய்த கதிர்கள் களம் வந்து சேருவதற்கு மதியம் ஒரு மணி ஆகிவிடும்.  அதற்குள் டிராக்டர் ஒருமுறை முழுவதுமாக சுற்றியிருக்கும். சற்றும் நிதானிக்க கூட நேரமில்லாமல் எல்லோரும் வண்டுகள் மொய்ப்பதுபோல அந்த நெற்கதிர்களை திரும்ப கிளறிவிட வேண்டும். மீண்டும் ஒரு முறை டிராக்டர் சுற்றி வருவதற்கு இலகுவாக செய்யவேண்டும்.

பிறகு டிராக்டர் அடித்து விட்ட அந்த நெற்கதிர்களை நெல் தனியாக வைக்கோல் தனியாக உதரவேண்டும். அதாவது பிரித்து எடுக்க வேண்டும். வைக்கோலினை தனியாக எடுத்து அருகில் போர் போடவேண்டும்.

ஒருபுறம் நெல்லினை காற்றில் தூற்றி சுத்தம் செய்யவேண்டும்.  அப்படி நெல்லினை தூற்றும்போது,  இரண்டு பக்கமும் இருவர் நின்று கொண்டு ஒரு கூடையில் களத்தில் இருக்கும் நெல்லை அள்ளி மெல்லவும்  சீராகவும் வீசுவார்கள். அதில் பதர்கள் எல்லாம் எடை இல்லாததால் காற்றில் பறந்து தூரத்தில் போய்விழும். சுத்தமான புதிய நெல் மட்டும்  தங்கத்தினை உருக்கி உதிர்த்தது போல பிரமாண்டமாக குவிந்து கிடக்கும். 




அந்த நெற்குவியல்களை  அளந்து மூட்டைகளாகக் கட்டி பண்ணையில் கொண்டு சேர்க்கவேண்டும். 12 மரக்கால் ஒரு கலம். இரண்டு கலம் சேர்ந்தது  ஒரு  மூட்டை, அதாவது இருபத்து நான்கு மரக்கால்கள் அல்லது நான்கு பறவைகள்.  

கடைசியில் ஒரு மூட்டை நெல் கண்டுமுதல்  செய்தால் இரண்டு  மரக்கால் அறுப்புவேலைகள் செய்தவர்களுக்கு கூலியாக கிடைக்கும். அதாவது பன்னிரெண்டு மூட்டை கண்டுமுதல் செய்தால் கூலி ஒரு மூட்டை.  அதனை வேலைசெய்தவர்கள் எல்லோரும் சரி சமமாக பிரித்து எடுத்துக்கொள்வார்கள்.         

வெளியூரிலிருந்து அறுவடைக்கு வந்தவர்கள் தங்களின் கூலியில் இருந்து, காலையில் இட்லியும் பொங்கலும் மதியம்   சாப்பாடும் கொடுத்த பாட்டிக்கு நெல் கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். மற்ற எல்லோரும் போனபிறகு பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் மிஞ்சியிருக்கும் கருக்காய் முட்டில் இருந்து பொழுது சாயும் வரை தூற்றுவார்கள். அதிலிருந்து எப்படியும் ஆறேழு மரக்கால் நெல்  கிடைக்கும்.




ஊர் திரும்புதல் - 1



Tuesday 11 August 2020

கரை தொடா அலைகள் - சிறுகதை தொகுப்பு

கரை தொடா அலைகள்  - சிறுகதை தொகுப்பு 

 ஆசிரியர் : மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி 


சமீபத்தில் கிண்டிலில்,  ஆசிரியர் மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி அவர்களின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான கரை தொடா அலைகள் வாசிக்க வாய்ப்புக்கிடைத்தது. 

எழுத்தாளர் எமது  மயிலாடுதுறை  மண்ணின்  மைந்தர். அவர்  எழுதிய மற்றைய  நூல்கள்: உயிரோவியம், சுட்ட தோண்டிகள், அழமட்டுமா விழிகள். இந்த தொகுப்பில், 'முன்னாள் காதலி' தொடங்கி, 'பிரியா வரம்', என பதிமூன்று சிறுகதைகளை பெரிதும்  பாச உணர்ச்சியின் போக்கிலே எழுதியிருக்கிறார்.

பொதுவாக ஒரு ஆசிரியர் எப்போதும் அவர்களின் மண்ணின் வாசனையுடனே ஒரு கதையினை எழுத முற்படுவார்கள் என்பது உண்மையே. நமது தொகுப்பின் ஆசிரியரும் விதிவிலக்கு இல்லை. ஒவ்வொரு கதையிலும் மயிலாடுதுறையையும், அதனைச் சுற்றி உள்ள ஊர்களையும் கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

முன்னாள் காதலி:

ஓரே தெருவில் வசித்தும், ஓரே பள்ளியில் பயின்றும்,  இரண்டு மனங்களும் நேசித்து ஓன்று சேர்ந்து வாழ்வதென்பது சில அல்ல பல நேரங்களில் ஒரு பெரிய போராட்டம்தான். அப்படித்தான், அவர் தனது முன்னாள் காதலி சாந்தியினை, நிகழ்காலத்தில் கணவனை இழந்த ஒரு விதவையாக இரண்டு குழந்தைகளுடன் வெகு நாட்களுக்கு பின்னர் அதே தெருவில் சந்திக்கிறார். மன வேதனையினால் அவரே மறுமணம் செய்துகொள்கிறேன் என்றும் சொல்கிறார். அதற்கு அப்பாவின் முட்டுக்கட்டை அவரை சாதாரண மனிதராகவே திருப்பி விட்டது. சாந்தியும் இட்லிக்கடை போட்டு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்கிறார்.  போராடி பிள்ளைகளை வளர்க்கிறார். வளர்ந்த மகனும் இறந்துவிட,  மீண்டும் அதே இட்லிக்கடை, கடைசியில் இட்லிக்கடை பணம் கொடுத்ததோ இல்லையோ அந்த  பெண்மணிக்கு காச நோய் வந்துவிடுகிறது. அருகில் கூட வந்து பேசாத அவருடைய மகளிடம் இருந்து விலக்கி, கதாநாயகன் தன்னுடைய  முன்னாள் காதலியை ஒரு அன்பு இல்லத்தில் சென்று சேர்த்துவிடுகிறார். சேர்கிறார். அந்தப்பெண்மணி கடைசி  மூச்சினை அன்பு இல்லத்தில் விடுகிறார். அந்த  முன்னால்காதலியின் இறுதிச்சடங்குகளை கதாநாயகனே செய்கிறார்.   

ஆணைக் கால் குவளை:  

இந்த கதை ஒரு நடுத்தர குடும்பத்தின் எதார்த்த வாழ்வியலை மிக அழகாக விவரிக்கிறது. நம்மில் பலரும் இன்றளவும் சில பொருள்களின் மீது உயிரினும் மேலான சில பற்றுகளை  வைத்திருப்போம். அதையே இந்த கதை சொல்கிறது. கிராமத்தில் வறுமையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும்   ஆணைக் கால் குவளையில் சுண்ணாம்பினால் சேட்டு அடகுக்கடையில் எழுதிய எழுத்து மறையாமலே இருக்கும் என்பது தெரிந்த உண்மையே.

இனிய தோழா :

இந்த கதை ஒரு தெருவில் வசிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் எவ்வளவு நட்புடன் வளர்க்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பின் மீதான நம்பிக்கையும் அழகாக எழுதியிருக்கிறார்.

ஈதலிசை:    

காதல் திருமணம் செய்து கொண்ட மகனிடம் சேராமல் இருந்த பெற்றோர், தனது மகளின் வாழ்வுக்காக மகனிடம் வருகிறார்கள். தனது சகோதரிக்கு உதவி கேட்டு மகன் கொடுக்க மறுக்கும் போது, அவர்கள் ஒதுக்கிவைத்த  மருமகள், தனது நகைகளை கொடுத்து உதவ சொல்வதில் தெரிகிறது அவளின் ஈதல் குணம்.

ஆபீஸ் பாய்: 

ஒன்றாக படித்து வளர்கிறார்கள் சங்கரும், பிரியாவும். சங்கர் மேல்படிப்பு படிக்காமல் ஒரு அலுவகத்தில் ஆபிஸ் பாய் வேலை செய்வதும், அதே ஆபிசில் பிரியா வேலைக்கு சேர்வதும், இவர்களுக்கு  இடையே இருக்கும் நடிப்பினை அழகாக  சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

ஓய்வு ஊழியம் :

இந்த கதையில் ஒரு மருமகன் தனது மாமனாரை ஒரு மகனாக இருந்து,  ஓய்வு காலத்தில் பாசத்துடன் பார்த்துக்கொள்வதை  சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

 கரை தொடா அலைகள்:    

சுனாமியில் இழந்த தனது ஒரே மகனை கண்டுபிடிக்க முடியாதலால் ஒவ்வொரு வருடமும்,  சுனாமி தினத்தன்று,  வேளாங்கண்ணி சென்று நினைவுகூர்தலை வழக்கமாக வைத்திருந்த அந்த பெற்றோர்,  நடப்பு   வருடம் தங்களது வளர்ப்பு நாயினை கூடவே அழைத்து செல்கின்றனர். இந்த முறை அங்கே வந்திருந்த ஒரு இளைஞனை கண்டு அவர்களின் நாய் போய் தழுவிக்கொள்கிறது. இதை அறிந்த அவர்கள் அவனை விசாரித்தனர். அதில் அவன் தான் அவர்களின் தொலைந்துபோன மகன் என்பது தெரிந்தும் அவர்களால் அவனை சொந்தம் கொண்டாடமுடியாமல் தவிக்கின்றனர்.  அவன்  தொலைத்த தினத்திலிருந்து  வேறு ஒரு  பெண்  அவனை  வளர்த்து  வந்திருக்கிறாள். அவளுடன்தான்  அவர்களுடைய  மகன்  அங்கே  வந்திருந்தான். கடைசியில் வளர்த்த தாயிடம் அதை சொல்லி அவன்தான் தங்கள் மகன் என்று தெரிந்தும், ஒரு பிள்ளையினை இழந்து துடிப்பது எவ்வளவு துயரம் என்பதை உணர்ந்த அவர்கள், அவனை வளர்த்த தாயிடமே விட்டு விட்டு மனிதாபிமானத்துடன் திரும்புகின்றனர்.

காதல் ஓய்வதில்லை:      

நாச்சியார் கோவிலில் நடந்த ஒரு அழகிய காதல் கதை இது.  கடைசி வரைக்கும் நிறைவேறாத காதலானது அது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் பூர்விக ஊருக்கு திரும்ப வந்த காதலன் கலையிழந்த தனது காதலியை சந்திக்க நேரிடுகிறது. அவன்  நினைவாகவே இருந்து திருமணமே செய்யாமல் இருந்த அவனுடைய காதலி  காயத்ரிக்கு ஆறுதலாக பேசியவனிடம், அவனுடைய குடும்பம்  எப்படி  இருக்கிறது  என்று  கேட்டுவிட்டு  அவள் தனக்கே  உரித்தான  தனிமையில்  மீண்டும் ஆழ்ந்துவிடுகிறாள்.    

காவல்காரன்:

இந்த கதையில்  காவல் காக்க வேண்டிய காவல்காரனை விட ஒரு நாய் ரொம்ப நன்றியுள்ளது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

சுமைத்  தாங்கி:  

பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் ஒரே பகுதியில் வசிப்பதும் அவர்கள் பணி புரிவதையும் அழகாக மண் வாசனையுடன் சொல்லியிருப்பதும் இறுதியில் ஓட்டுனர் தன் உயிரை கொடுத்து பயணிகளின் உயிர்களை காப்பாற்றுவதும் பின்னர் ஓட்டுனரின் மகளையே தனது மருமகளாக்கி கொள்வதும் என மணி ஒரு சுமை தாங்கியாகவே வாழ்கிறார்.

நட்பதிகாரம்:  

இந்த கதையில் கூடவே படிக்கும் நண்பனின் கடினமான சூழ்நிலையினை தெரிந்து அவனுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவினால் நன்றாக வாழ்ந்த அவர்களுக்கு அது ஒரு இழிவாக இருக்கும் என்பதினை குறிப்பறிந்து, தனது தந்தை வழியாக அவர்களின் கட்டுமான நிறுவனத்திற்கு தேவையான  எல்லா மூலபொருள்களையும் அந்த நண்பனின் தந்தை நடத்தும்  நிறுவனத்திடம் வாங்க சொல்லி கேட்டுக்கொள்கிறான். இப்படியாக தனது நண்பனுக்கு ஒரு பெரிய உதவியினை அவனுக்கு தெரியாமலே செய்து தனது நட்புக்கு பெருமை சேர்த்தான்.

பச்சை துண்டு:    

கதிராமங்கலத்தில் பிறந்து வளர்ந்து இளைஞன் புவனேஷ் பெங்களூரில் பணி புரிய சென்றதால், அங்கு அவனது நண்பனின் பெற்றோர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி சோதிடம் பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்களை கிராமத்தின் வாசனையுடன் வரவேற்று உபசரித்து வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் பல கோவில்களுக்கு சென்று வந்தனர். குளிப்பதற்கு மோட்டார் போட்டவுடன் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வந்ததால் அதிர்ச்சியடைந்த நண்பனின் அப்பா ஏன் இப்படி வருகிறது என்று கேட்கிறார். அதற்கு காரணம் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம். ஆசிரியர்  கதையில் மேற்படி  திட்டங்களை  பற்றி  விளக்குகிறார். அது  ஆசிரியரின் ஊர் மீதான அக்கரையினை காட்டுகிறது.

பிரியாத வரம் :    

திருமணமாகி 32 வருடங்கள் ஆன ஒரு தம்பதியின் பிள்ளைகள், அவர்களுடைய திருமணம்  முடிந்தவுடன், தனியே குடித்தனம் போய்விடுகிறார்கள். வாழ்வில் பல ஏற்ற இறங்களினால் கிடைக்கும் எல்லா அனுபவங்களும் இறுதிக்காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும்போதும் காலம் விட்டுவைப்பதில்லை என்பதே உண்மை. இருவரும் கரங்கள் கோர்த்தபடி ஓய்ந்து போவது அன்பின் எல்லை.


நல்லதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.


ராம.தேவேந்திரன்  

  

     


  

   



   

Saturday 8 August 2020

தாலிபன் புத்தகம் வாசிப்பு அனுபவம்

நூல்    :  தாலிபன்
 
ஆசிரியர் : பா. ராகவன் 



நான் சமீபத்தில் தாலிபன் புத்தகம் வாசித்தேன். எனக்கு திரும்பவும் ஒரு முறை ஆப்கானிஸ்தான் பயணித்த போல ஒரு உணர்வு வந்தது என்றால் அது மிகையாகாது. 

என்னுடைய நண்பர் ஆசிரியர் பா. ராகவன் அவர்களின்  வலைப்பக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதில் முதலில் நான், 'ஆதியிலே நகரமும் நானும்',  என்ற தொடரின் சில பாகங்களை வாசித்தேன். அதன் பிறகு ஆசிரியரின் எழுத்துக்கள் மீது ஒரு ஆர்வம் தானாகவே வந்தது.

அந்த ஆர்வத்தின் காரணமாக நான், கிண்டிலில் வாங்கிய சில புத்தகங்கள்:  தாலிபன், நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் மற்றும் யதி. இதில் எனக்கு முதலாவதாக  தாலிபன் புத்தகத்தை படித்தற்கு ஒரு ஆசை எழுந்தது. அதற்கு முழு முக்கிய காரணம்,  நான் பல முறை ஆப்கானிஸ்தான் பயணித்திருக்கிறேன் என்பதுதான். அதுவும் குறிப்பாக 2004 முதல் 2007 ம் ஆண்டு வரை பலமுறை அங்கு சென்றுவந்திருக்கிறேன். அங்கு எனக்கு கிடைத்த  அந்த அனுபவங்களில், நான் ஒவ்வொரு நாளும்  சந்தித்த மக்களிடமும் கேட்டு தெரிந்து கொண்ட பல விஷயங்களில், எனக்கு விடை தெரியாத பல வினாக்கள் இருந்தன.
 

அந்த  விடைகளை  தேடியே  நான்  ஆசிரியரின்  'தாலிபன்', நூலை  வாசிக்கத் தொடங்கினேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை!. நான் தேடிக்கொண்டிருந்த பதில்கள் ஒவ்வொன்றுக்கும், ஆசிரியர் மிக மிக அழகாக, ஒவ்வொரு அத்தியாயமாக, இந்த புத்தகத்தில் பூச்சரம் போல தொடுத்து கொடுத்துள்ளார்.    

தலைநகரான காபூல், அழகிய நகரான கந்தகார், ஈரானின் பக்கமுள்ள ஹெராத், பாக்கிஸ்தான் பக்கமுள்ள ஜலாலாபாத் மற்றும்   பழைய சோவியத் ரஷியாவின் பக்கமுள்ள நீலநிற பள்ளிவாசலை கொண்ட நகரான மஸார் போன்ற பெருநகரங்களையெல்லாம் சுற்றிவந்ததுபோல ஒரு  உணர்வை  ஆசிரியரின் இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது. ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த தலிபான்கள் முதலில்,  ஒரு சிறிய கிராமத்தில் தோன்றியத்தில் தொடங்குகிறது. அதன்  தலைவர் முல்லா ஒமர் பொறுப்பேற்று கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சியடைந்ததும், பின்னாளில் பாக்கிஸ்தான் தங்களது சுயநலத்திற்காக தாலிபான்களை வளர்த்து விட்டதுவரை, மிக தெளிவாக விவரித்துள்ளார்.

நான் இந்த புத்தகத்தை வாசிக்கும்  பொழுது, மீண்டும் அந்த ஆப்கான் பயண நாட்கள் என் கண் முன்னே திரையில் ஓடிகொண்டிருப்பது போல உணர்ந்தேன். நாம்   பயணித்த ஒரு நாட்டின் வரலாற்றை நமது தாய் மொழியில் ஒரு நூலின் வாயிலாக வாசித்து கிடைக்கும்  விபரங்களும், அனுபவங்களும் ஒருவகையான சுகம். 


ஆசிரியர் இந்த புத்தகத்தில் தாலிபன்களின் முழு வரலாற்றையும்  மிக ஆழமாக ஆராய்ந்து எழுதியிக்கிறார். இந்த நூல்  தாலிபன்களின் ஆரம்பகால பின்னடைவுகள், ஆட்சி அதிகாரத்தை நோக்கிய முன்னேற்றங்கள்,  அவர்களுடைய  வாழ்வியல்,  அவர்கள்  தங்களுக்கு ஆதரவு திரட்டிய முறைகள், அவர்களின்  ஆட்சிமுறை, அவர்களுடைய  ஆட்சியில்  மக்கள்  பட்ட  அல்லல்கள் என்பன  போன்ற  விஷயங்கள்  நுட்பமான  விவரணைகளுடன் தரப்பட்டிருக்கிறது.

போராடிப்  பெற்ற ஆட்சி அதிகாரத்தை, தேச நன்மைக்கு  எதுவும்  செய்யாமல், அடிப்படைவாதம்  பேசி, மக்களையும் நாட்டையும்  வெகு தூரத்திற்கு பின்னோக்கி இட்டுச்சென்றதையும், அவர்களே அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததையும் ஆசிரியர் மிகத் தெளிவாக விவரித்துள்ளார்.


ஆசிரியரின்  மற்ற  புத்தகங்களை போலவே,    நிறைய செய்திகளை உள்ளடக்கிய ஒரு நூல் இது. தாலிபன்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் இந்த நூலினை வாசிக்கலாம்.



இனிய  வாசிப்பு அனுபவங்களுடன் 


நன்றி
ராம. தேவேந்திரன் 












  

Monday 3 August 2020

கபாடபுரம் - வாசிப்பு அனுபவம்

கபாடபுரம் - வாசிப்பு அனுபவம் 


ஆசிரியர் : நா. பார்த்தசாரதி  


இது ஒரு வரலாற்று (சரித்திர) நாவல்






ஆசிரியர் இந்த நாவலில் முக்கிய கதை களமாக பாண்டிய மன்னர்களின் துறைமுகமாக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கபாடபுரத்தை  தான் முன்னெடுத்துள்ளார். 

இந்த கபாடபுரம் நாளைடைவில் கடலுக்கு இரையாகி போனதால் பின்னர் மதுரையினை தலைமையிடமாக கொண்டனர் என்று ஆசிரியர் விவரித்துள்ளார்.   

பாண்டிய மன்னர் வெண்தேர்ச் செழியன் இந்த கபாடபுரத்தினை அழகிய பொருநை நதி நரகை கடந்து கடலில் சேரும் இடத்தில் அருகில் உள்ள பல தென் பழத்தீவுகளில் இருக்கும் யவனர்களை கொண்டு இந்த கபாடபுர கோட்டையினை கட்டி எழுப்பினார் என்றும் அந்த கோட்டையில் ரத்தினமும் முத்தும் பதித்த வாயிற்கதவுகளால் அலங்கரித்து இருந்தன என்றும் அழகாக விளக்கியுள்ளார்.

கபாடபுரம் இரத்தின சுரங்கள் நிறைந்த ஒரு நில பரப்பு என்பதால் இங்கு பல நாட்டினர்கள் வந்து ரத்தினம் வெட்டி எடுத்து  தங்கள் பிழைப்பை நடத்தினார்கள் என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது அந்த நாட்டின் செழுமையினை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.  

பெரிய பாண்டியர் வெண்தேர்ச்  செழியனும் அவரது ஆட்சிக்காலத்துக்கு பிறகு  அவரது வாரிசான மன்னர் அநாகுல பாண்டியனும் ஆட்சி காலத்தில் தான் இந்த கதை நகர்கிறது. 

அநாகுலபாண்டியனின் வாரிசான அரசகுமாரனாகிய      சாரகுமாரனுடைய  அழகினையும் அவனுக்கு இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வமும் மிக மிக அழகாக விவரித்துள்ளார். பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியன் எவ்வாறு சரகுமாரனை ஒரு வலிமையான அரசனாக்க வேண்டும் ஒவ்வொரு வினாடியும் சிந்திப்பதும் அதை செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சியும் மிக அழகாக விவரித்துள்ளார்.    

கதையின் நாயகியாக கண்ணுக்கினியாளும் அவளின் அழகை சொல்லியிருக்கும் விதம் நம் கண் முன்னே அந்த கண்ணுக்கினியாள் என்ற ஒரு தேவதை நகர்வது போலவே வர்ணித்திருக்கிறார் ஆசிரியர். மேலும் அவளுக்கு இசையின் மீது கொண்ட ஆர்வமும் அவளது யாழ் இசையினையும் மிக இனிதாகவே வர்ணித்திருப்பது அழகிலும் அழகு. 

வெண்தேர்ச் செழியன் பேருக்கேற்ப அவரது தேர்கள் வெண்முத்துக்களால் மிக அழகாகவும் அற்புதமாகவும் அமைத்திருந்த தேர் படை வரலாற்று சிறப்பு மீக்கது இதுவே பிற்காலத்தில் இவரது பெயர் வெண்தேர்ச் செழியன் என்று போற்றப்பட்டது. 

இந்த பின்னணியில் கபாடபுரத்தின் பெருமை மிக்க விழாவான நகரணி மங்கல விழா நாள். சித்திர பௌர்ணமி நாளில் அரசகுடும்பம் தங்களது அரண்மனையில் உள்ள  தேர்க்கோட்டத்தில் உள்ள மூவாயிரத்துக்கு மேலான அலங்கரிக்கப்பட்ட அந்த அழகு தேர்கள் அரச வீதியெங்கும் உலா வரும் அவற்றுள் பெரிய பாண்டியர் ஒரு தேரிலும், அரசர் அநாகுல பாண்டியரும் அரசி திலோத்தம்மையும் ஒரு தேரிலும் மற்றும் மூன்றாவது தேரில் சரகுமாரன் மற்றும் அவனை தொடர்ந்து மற்ற தேர்கள் வீதியங்கும் உலா வரும்.   

சரகுமாரன் தான் வரும் வழியில் கண்ட கண்ணுக்கினியாள் மற்றும் அவளது யாழ் இசையின் மீது கொண்ட காதல் கொஞ்சம் கொஞ்சம் மலர தொடங்கியது அதுவும் சாரகுமாரனின் இளகிய மனம் மிக எளிதாக கண்ணுக்கினியாளை காதல் வயப்பட வைத்தது.  இவை அனைத்தும் சரகுமாரனின் பாதுகாவலர் முடிநாகனுக்கும் தெரிந்த காரியம் என்பதால்  பெரிய பாண்டியர் முடிநாகன் மீது பெரும் கோபம் கொண்டார்.

சரகுமாரனின் காதல் கதையினை தெரிந்த பெரிய பாண்டியர் அவனின் இளகிய மனதில் இருந்து விளக்கி அவனை ஒரு பெரிய வீர தீர அரசனாக்க வேண்டும் என்று ஆசையினால் அவனை பாண்டியநாட்டினை சுற்றி உள்ள பழந்தீவுகளுக்கு ஒரு ரகசிய பயணம் போகவேண்டும் என்று கட்டளையிடுகிறார் இதன் நடுவே கடற்கரை புன்னை தோட்டத்தில் தங்கியிருக்கும் கண்ணுக்கினியாளிடம் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற முடியாமல் சரகுமாரன் பழந்தீவு பயணம் மேற்கொண்டான். அந்த தீவு பயணத்தில் அவன் பல சம்பவங்களை சந்தித்தது மட்டுமில்லாமல் பல தீவுகளின் ரகசியங்களை அறிந்து கொண்டு தனது பயணத்தை முடிநாகனுடன் மிக வெற்றியாக முடித்து வருகிறான்.

காலங்கள் நகர்கிறது, ஒரு நேரத்தில் சரகுமாரனின் ஆசான் சிகண்டியாசிரியர் இசைஇலக்கணத்தை ஒரு அரங்கேற்றம் செய்யவேண்டும் என்றும் அதில் சரகுமாரனின் இசையினை அரங்கேற்ற செய்யவேண்டும் ஒரு பெரிய விழாவினை ஏற்பாடு செய்தார். அந்த விழாவிற்கு சாரகுமாரன் தனது காதலி கண்ணுக்கினியாள் வரவேண்டும் என்று அவளுக்கு அவன் அழைப்பு விடுத்தான். இதை தெரிந்த பெரிய பாண்டியர் வஞ்சகத்தால் அவளை வரவேண்டாம் என்று சொல்லுகிறார்.

இறுதியில் சாரகுமாரன் தனது அரங்கேற்றத்தில் தனது காதலி கண்ணுக்கினியாளும் அரங்கேற்றுவாள் என்று வாஞ்சையுடன் எண்ணியிருந்தான் இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.  

தனது குதிரையின் மீது ஏறி அவளை தேடி பின்தொடர்ந்தான் சரகுமாரன் ஆனால் கடைசியில் கண்ணுக்கினியாள் தனது யாழ் தவற விட்டு குமாரனின் கண்ணுக்கு தெரியாதவளாய் கண்ணீருடன் கரைந்து சென்றாள்..... 

- ராம. தேவேந்திரன்