Monday, 1 June 2020

ஊர் திரும்புதல் - 12


உயர்நிலைப்  பள்ளி 


அவன் தனது ஐந்தாம் வகுப்பை வெற்றிகரமாக செண்பகச்சேரி அரசு தொடக்க பள்ளியில் முடித்துவிட்டிருந்தான். அவனுடைய அப்பா  அவனை ஆறாம் வகுப்பு படிக்க திருமங்கலம் அரசினர் உயர்நிலை பள்ளியில் சேர்த்துவிட்டார் (தற்போது மேல்நிலைப்  பள்ளியாக தரம் உயர்ந்திருக்கிறது).  அவனை  ஆறாம் வகுப்பு 'அ' பிரிவுக்கு  அனுப்பினார்கள்.




அந்த பள்ளிக்கூடம் திருமங்கலதையும், செஞ்சியையும் இணைக்கும்  இடத்தில் இருந்தது.  பள்ளியின்  இரண்டு பக்கங்களிலும் பசுமை நிறைந்த வயல்களும், ஒருபக்கத்தில்  அழகிய அல்லி பூக்கள் நிறைந்த குளமும் இருந்தது. பள்ளியின்  நுழைவாயில் காளி மெயின் ரோட்டை  பார்த்தபடியும்  இருக்கும்.  அந்த பள்ளிக்கூடத்தில் பெரிய விளையாட்டு திடல் இருந்தது. அதில்   இப்போது வகுப்பறைகள் ஆக்கிரமித்துள்ளன.


அவனுக்கு அந்த பள்ளி முற்றிலும் புதியது. புதிய முகங்களும், புதிய ஆசிரியர்களுமென அவனுக்கு அழுகையே வருவதுபோல்  இருக்கும்போதுதான் மதிய உணவு  இடைவேளைக்காண மணியடித்தது. அவன்  தன்னை   சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டான். வகுப்பறையை  விட்டு  வெளியில்  வந்தபோதுதான் அவனது ஊரின் மற்ற நண்பர்களையும் சந்தித்தான்.  அதில் சிலர்  'ஆ'  பிரிவில் இருந்தனர்.   

அவனும் அவனுடைய  நண்பர்களில் சிலரும் அவர்கள்  ஊரில்  இருந்து  தினமும் மூன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்தே  பள்ளிக்கூடம் போய் வருவார்கள்.





அவனது வகுப்பாசிரியர் திரு. ஆறுமுகம். அவர் ஆங்கிலத்திற்கும், திரு . வே. சம்பந்தம் கணக்குக்கும், திரு. நடராசர் தமிழுக்கும், திரு  பி.சௌந்தரராஜன் அறிவியலுக்கும், திரு. பூலோகம் வரலாறு-புவியியலுக்கும் ஆசிரியர்களாக அறிமுகமானார்கள். கூடவே புதிய நண்பர்களும்.

அவன் படித்த  தொடக்கப்பள்ளியில்  ஒரு ஆசிரியர்  இரண்டு  வகுப்புகளை  நடத்துவதை  பார்த்தவனுக்கு, ஒரு  வகுப்பில்  5 ஆசிரியர்கள்  பாடம்  நடத்தவந்தது  ஆச்சரியமாக  இருந்தது. வீட்டில்  வந்து  அம்மாவிடமும்  அப்பாவிடமும்  சொல்லிச்சொல்லி  பெருமைபட்டுக்கொண்டான். 

அந்தப்பள்ளியில்  விவசாயத்  தொழில் பற்றிய ஒரு வகுப்பு இருக்கும். இதற்காக அந்த பள்ளியின் ஒரு காய்கறித்  தோட்டமும் இருந்தது. அதெற்கென  ஒரு ஆசிரியரும் இருந்தார்.  ஒவ்வொரு  வகுப்பும்  ஒரு  பாடவேளை அங்கே  சென்று  விவசாயம் கற்றுக்  கொள்ளவேண்டும். இப்போதெல்லாம்  அந்த வகுப்பு  இருப்பதாக  தெரியவில்லை.



மற்றொரு  பாடவேலையில் உடற்பயிற்சி  வகுப்பு  நடக்கும்.  உடற்பயிற்சி  ஆசிரியர் கிடாத்தலை மேட்டில் இருந்து சிகப்பு கலர் புல்லட்டில் வருவார். அவர் வண்டி வரும் சத்தம் கேட்டாலே அவனுக்கு மட்டுமல்ல, அந்தப்  பள்ளி மாணவர்களுக்குமே ஒரு பயம்.     



அவனுக்கு திருமங்கலம் சேக்கலான் கடை பரோட்டாவும், பட்டாணி குருமாவும் மிகவும்  பிடிக்கும். அவனுடைய  பள்ளியில்  சத்துணவு  இருந்தது. ஆசைப்படும்  நாட்களில்  மட்டும்  பரோட்டா  வாங்கிக்கொள்வான். பள்ளிக்கு போகும்போது ஒரு சில நாட்கள் அவனுடைய  டிபன்  பாக்ஸில்  பரோட்டா மீது  குருமாவை  ஊற்றி  வாங்கிக்  கொள்வான்.  அவனுக்கு  மதியநேரத்தில்  குருமாவில்  ஊறிய  புரோட்டாவை  ருசிப்பதென்றால்  கொள்ளை  ஆசை.  அந்த சுவை இன்றளவும் எங்கும்  கிடைக்கவில்லையே  என்ற  ஏக்கம்  அவ்வப்போது  வருவதுண்டு.

அவன் ஊரில்  இருந்து பள்ளியில்  படிக்க  திருமங்கலம்  செல்பவர்கள்,  நாட்டு கன்னி வாய்க்கால் ஓரத்தில் இறங்கி, குறுக்கே வயல்வெளி வழியாக திருமங்கலத்தின் சாவடிக்  குளம் அருகே போய்,  அப்படியே ரோட்டைக்கடந்து, திருமங்கலத்தின் பின்பக்கமாக போனால் காளி வாய்க்கால் போய்சேர்வார்கள். அவ்வழியே பள்ளிக்கு  போக  ஒருகிலோ மீட்டர் தூரம் குறையும் என்று அவனும்  அவனுடைய நண்பர்களும்  தெரிந்து வைத்திருந்தனர். வளைந்து நெளிந்திருக்கும்  திருமங்கலம்  சாலையில்  போவதென்றால்  தூரமும்  நேரமும்  அதிகமாகும்  என்பதால் அவர்கள் அந்த  குறுக்கு வழியாக போய்வருவார்கள்.  ஆனால் இந்த பாதையில் குறிப்பிட்ட  பருவங்களில்தான்  போக  முடியும். அந்த  வழியே  போனபோது  ஒருநாள்  அவன்  காலில், வழியில்  கிடந்த ஈச்ச  முள் குத்தி, உள்ளே ஏறிவிட்டது.



அந்த பள்ளிக்கூடம் போகும் வழி நல்ல பேருந்து போகும் சாலைதான். ஆனால் திருமங்கலம் பள்ளிவாசல் திருப்பத்திலிருந்து காளி வாய்க்கால் போகும் வரை மழைக்காலங்களில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு கொள்ளிடம் போல காட்சியளிக்கும். அது மட்டுமல்ல சுமார் இரண்டு அடி உயரத்திற்கு மழை தண்ணீர் அலையடித்து ஒருபுறமிருந்து மறுபுறத்தில்  வயலில் இருக்கும்  நெற்பயிர்  சாய்த்துக்கொண்டு  போகும். எங்கும்  வெள்ளக்காடுபோல  காட்சியளிக்கும். அதில் கால் சட்டை நனைய நனைய கடந்து பள்ளிக்குச்  சென்ற அந்த காட்சி இன்றளவும் அவனுக்கு மறப்பதில்லை.

அப்படியே அவன் ஏழாம் வகுப்பில் தேறி, எட்டாம் வகுப்பிற்கு போனபோது மேலும் சில புதிய ஆசிரியர்கள் அறிமுகமானார்கள். அவர்கள்தான் திருவாளர்கள்  ஜி முருகேசன் (GM),  TR கலியமூர்த்தி (TRK). அவர்கள்  பத்தாம்  வகுப்புவரை கூட  பாடம்  எடுக்கும்  ஆசிரியர்கள்.

எட்டாம்  வகுப்பு  தொடங்கியபோதுதான்  அவனுடைய  அப்பா  அவனுக்கு ஒரு சைக்கிள்  வாங்கிக்  கொடுத்தார்.  அதிலிருந்து  அவன்  மூன்று  வருடங்களும் சைக்கிளில்தான்  பள்ளிக்கு  போய் வந்துகொண்டிருந்தான். இதனால் அவன்  வீட்டுக்கு  நேரத்தில்  திரும்பமுடிந்தது.   சாயங்காலகளில் பள்ளியில்  இருந்து  வந்ததும்,  தனது ஆடுகளுடன் ஒரு பாடப்  புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு  அவன் மேய்ச்சலுக்கு போய்விடுவான்.  நாளடைவில் அதையே  அவனது படிக்கும் இடமாகவும், நேரமாகவும் அவன்  மாற்றிக்கொண்டான்.





அப்படியே மழைக்காலமும் கோடைகாலமும் மாறி மாறி நாட்கள் கடந்து கொண்டே இருந்தது. அவன் பாடங்களை  சிறு சிறு  கற்களை  அடுக்கி கட்டுவதுபோல  படித்துப் படித்துக் கடந்துகொண்டே  இருந்தான்.

பத்தாம்  வகுப்பு  பொதுத்தேர்வும்  வந்தது. பொதுத்தேர்வு  எழுத  அவர்களுடைய  பள்ளியிலிருந்து அருகில்  இருக்கும் பெரிய  ஊரான குத்தாலத்தில்  இருக்கும்  அரசு  மேல்நிலைப்பள்ளிக்குத்தான்  போக வேண்டும். அது அவனுக்கு  புது அனுபவமாகவும் ஒரு விதமான படபடப்புமாக இருந்தது. அந்தப்   புது  இடத்தில  கூடியிருந்த  மாணவ  மாணவியர்களை  பார்த்து  அவன்  பிரமித்துப்போனான். தேர்வுகளும்  முடிந்தது.

அவனுடைய தேர்வு  முடிவுகளுக்காக  அவன்  ஆவலுடன்  காத்துக்கொண்டிருந்தான்.


No comments:

Post a Comment