Saturday 30 October 2021

மோக முள்

மோக முள்

தி. ஜானகிராமன் 

காலச்சுவடு பதிப்பகம் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய்   494

பக்கங்கள் 664



மோக முள் - தமிழ் கிளாசிக் நாவல். 1956 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த நாவல். ஆனாலும் இன்றளவும் வாசிக்கும் போது இளமையான உணர்வுகளைத் தந்துகொண்டே தான் இருக்கிறது. வயதில் குறைந்து இருக்கும் பாபுவுக்கு தன்னைவிட பத்து வயது அதிகமிருக்கும் யமுனாவின் மீது வரும் காதல் கைகூடியதா இல்லையா என்பதுதான் இந்த கதை.

இவர்களுக்குlஇளமை பருவத்தில் இருக்கும் பாசம் காலப்போக்கில் காதலாக மாறுகிறது. அந்த காலகட்டத்தில் இதுபோல காதல் மக்களின் மத்தியில் எவ்வாறு கவனம் பெறுகிறது என்பதை மையமாக வைத்துச் செல்கிறது இந்த கதை.   

அழகான காதல் காவியம்.  இருபது வருடங்களுக்கு முன்பு நான் கும்பகோணத்தில்  சுற்றித் திரிந்த நினைவுகளை மீட்டுக்கொடுத்தது என்றே சொல்லவேண்டும்.

காவிரி ஆறு, அணைக்கரை சாலை, மடத்துத் தெரு, கும்பேஸ்வரன் கோவில், ராமசாமி கோவில், மகாமக குளம், ரயிலடி, காந்தி பூங்கா,  இன்றும் இளமையாகக் காவிரிக் கரையில் இருக்கும் கும்பகோணம் கலைக் கல்லூரி, ஆனையடிடவுன் ஹைஸ் ஸ்கூல், யமுனாவின் வீடு இருக்கும் துக்காம்பாளையத் தெரு, கடலங்குடித்  தெரு என ஒவ்வொரு இடமும் கண் முன்னே வந்து போகிறது. 

பாபநாசம் மற்றும் அந்த ஊரில் இருக்கும் குடமுருட்டி ஆறு கடைத்தெரு மற்றும் வயல்வெளிகள் என அழகிய காட்சிகள் கண்களில் வந்து செல்கிறது. 

கதையில் வாழ்த்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறக்க முடியாத வகையில் வாழ்ந்து சென்றுள்ளனர்.

உறவுகளுக்குக் கொடுத்திருக்கும் உணர்வு இயல்பாகவும் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்ததை ஆவணப்படுத்தியுள்ளார். பாபுவும் அவனது அப்பா வைத்தியும் கொண்டிருக்கும் அன்பும் இவர்களிடையே இருக்கும் நெருக்கமும் கொஞ்சம் மரியாதையும் இயல்பானது. நண்பன் ராஜத்திடமும், சகோதரன் சங்குவிடம் பாபு காட்டும் நெருக்கமும் அருமையான உணர்வு கொண்டிருக்கிறது.

சங்கீத கற்றுக்கொடுக்கும் ரங்கண்ணாவின் ஒவ்வொரு உரையாடலும் சங்கீதத்தின் உயிர்ப்பாகவே இருக்கிறது.  ரங்கண்ணாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ளும் பாபு தனது மானசீக குருவிடம் காட்டும் அன்பும் மரியாதையும் அவனின் சங்கீதத்தின் வெளிப்பாட்டில் தெரிகிறது. இறுதியில் பாபுவின் மடியிலே தனது உயிரை விடும் ரங்கண்ணா என இவர்களின் இந்த வாழ்வுக்காலம் இந்த கதையின் மறக்க முடியாத ஒரு பயணம்.  

தமிழ் பிராமணரின் இரண்டாவது மனைவியாக இருக்கும் மராட்டியப் பெண் பார்வதி ஆகிய இவர்களின் பெண்ணாக வரும் வலிமைமிக்க பாத்திரம் தான் கதையின் நாயகியாகிய "யமுனா". 

யமுனாவின் தந்தை மரணத்திற்குச் சென்று வரும் நிகழ்வும், அதற்காக யமுனாவும் அம்மா பார்வதியும் துணையாக பாபுவும் சென்று வருவதும், கிராமத்தில் இருப்பவர்கள் இரண்டாவது மனைவியின் உறவை எப்படிப் பார்ப்பார்கள் என்பதை மிகைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறார். 

யமுனாவின் குடும்ப பின்னணியின் காரணமாக அவளின் திருமணம் தள்ளிப் போகிறது. அழகும் அறிவும் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில் வரும் திருமணத் தடை நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு விதமான குறையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.  யமுனாவை இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்துகொள்ள வரும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை அவருக்குக் கொடுக்கும் உபசரிப்பும் இறுதியில் அவனின் வார்த்தைகளைக் கண்டு வெகுண்டெழும் பாபு என இவர்களின் உரையாடலும் சண்டையும் இயல்பாகவே இருக்கிறது.

யமுனாவின் வீடு, தந்தை இறந்த பிறகு முதல் தாரத்துப் பிள்ளை எதுவும் தொடர்ந்து கொடுக்காததால் வாழ்வாதாரம் குறைய ஆரம்பித்தது. இதற்காகப் பார்வதியிடம் இருந்த நகைகளை எல்லாம் விற்று வழக்கை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் போட்டுவிட்டனர். மனது தாங்காமல் தானாகவே பாபு யமுனாவின் அண்ணனிடம் சென்று நியாயம் கேட்டான் ஆனால் அதற்குச் சாதகமான பதில் ஏதும் இல்லை. 

வயதானவருக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டு வரும்  "தங்கம்மா". பாபுவின் பக்கத்து வீட்டில் குடிவருகிறார்கள். எதிர்பாராத நேரத்தில் உதவ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான் பாபு. இளமை ததும்பும் தங்கம்மாவின் வாழ்வின் தீராத ஏக்கம், அவற்றைத் தீர்த்துக்கொள்ள அவள் பாபுவை நாடுகிறாள். பாபுவிடம்  ஒருமுறை தீர்த்துக்கொள்கிறாள். மீண்டும் மீண்டும் முயலுகிறாள் ஆனால் பாபு யமுனாவின் மீது கொண்ட மையலில் அவளிடம் இருந்து விலகுகிறான். இதை யமுனாவிடம் சொல்லிவிடுகிறேன் பாபு. தனது வாழ்வில் கிடைக்கப் பெறாத சுகத்திற்காகவா அல்லது தற்செயலாகவா, இல்லை இனிமேல் வாழ்வில் எதுவும் இல்லை என்றா  எனத் தெரியாமல் மகாமக குளத்தில் தண்ணீரில் மூழ்கி   மரணிக்கிறாள் தங்கம்மாள்தங்கம்மாளின் மரணம் பாபாவிற்கு ஒரு விதமான நினைவுகளைக் கொடுத்துச் செல்கிறது.

மராட்டிய நாட்டில் இருந்து சுற்று பயணம்  வந்த சங்கீத வித்துவான்கள். அவர்கள் ரங்கண்ணாவை சந்திக்கின்றனர். அவர்கள் பேசும் மொழி தெரியாததால், பிறகு பாபு அவர்களை யமுனாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். யமுனாவின் வீட்டிலிருந்துவிட்டு சென்ற போது அவர்கள் நடத்திய ராமசாமி கோவில் கச்சேரி, அந்த சங்கீதத்தில் மயங்கிப் போகும் யமுனா என இவர்களின் வருகை கதையின் முக்கிய பகுதியில் ஆழமான அதிர்வலையினை பதித்துச் செல்கிறது.    

இளமை முதல் யமுனாவின் மீது பாபுவிற்கு இருப்பது ஒருவகையான பாசம் கலந்த நட்பு. இந்த நட்பு பருவ வயதினை அடைந்ததும் அவள் மீது பாபுவிற்கு காதலாக மாறுகிறது. ஆனால் பாபு யமுனாவைத் தனது வாழ்வின் துணையாகவும் பார்க்கிறான் அதே நேரத்தில் அவள் தெய்வீகமானவள் அவளைச் சாதாரண ஒரு குடும்ப பெண் போன்று பார்க்க முடியவில்லை என்றும் சொல்கிறான்.

பாபுவின் மனம் யமுனாவின் மீது தீராத காதல் கொண்டிருக்கிறது. அதை அவன் யமுனாவிடம் சொல்கிறான். யமுனாவோ அதை ஏற்க மறுக்கிறாள்.  இதைத் தெரிந்து கொண்ட பாபுவின் பெற்றோர்களும், யமுனாவின் அம்மாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

திருமணமே செய்துகொள்ளத் தயங்கிய ராஜம் திடீரென திருமணம் செய்துகொண்டு காசிக்கு குடித்தனம் சென்றுவிட்டான்பாபுவிற்கு ஒருபக்கம் சந்தோசம் இருந்தாலும் மறுபக்கம் நெருங்கிய நண்பன் தூரத்திற்குப் போகிறானே என்ற வருத்தம் மறுபக்கம் என நட்பின் அவசியத்தைச் சொல்கிறார். தொடர்ந்து இவர்களிடையே நடக்கும் கடித வழக்கம் நட்பின் தொடர்ச்சியினை காட்டுகிறது. 

பாபு தனது காதலை விட்டுக்கொடுக்கவில்லை. அவன் தனது வாழ்வின் சில மாற்றங்களுக்காக வேண்டி  சென்னை பயன்படுகிறான். சென்னைக்கு வந்த பாபுவிற்கு ஆரம்பத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. அவன் தனக்குக் கிடைத்த வேலையினை பார்த்துக்கொண்டு வாழ முயலுகிறான். சென்னையின் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளான பாபு எல்லாம் பழகிப்போகிறது.    

சென்னையில், ரங்கண்ணாவின் வேறொரு மாணவன் இப்போது ஒரு பெரிய சங்கீத வித்துவானாக  இருப்பவர் வந்து பாபுவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு கதையின் கடைசி வரை பலமாகச் செல்கிறது. இருவருக்கும் இடையே சங்கீதத்தில் வரும் முரண்பாடுகளும் வாதங்களும் அருமை. இந்த போக்கு இவர்கள் இருவரின் நெருக்கத்தை அதிகரிக்கிறது அல்லாமல் பாபுவின் சங்கீத வாழ்க்கைக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாகத் திகழ்கிறது.

காலச்சக்கரம் வேகமாக ஓடுகிறது. யமுனா ஒருநாள் பாபுவின் அலுவலகத்திற்கு வருகிறாள். பாபுவிற்கு உங்களைப் பார்க்க ஒரு அம்மா வந்திருக்கிறார்கள் என்று உதவியாளர் சொல்கிறான். வந்து பார்த்த பாபுவிற்கு அதிர்ச்சி. வந்தவள் யமுனா அல்லவா. மெலிந்த தேகத்துடன் வேறொரு கோலத்தில் யமுனா வந்து நிற்கிறாள். 

இந்த சந்திப்பு மெல்ல மெல்ல இவர்களுக்கு இடையே நன்றாகப் புரிதல் கிடக்கிறது. யமுனா, தான் அம்மா சொல்வது போல ஜமீன்தாருக்கு வாழ்க்கைப்  படவில்லை என்று ஏற்பட்ட விரிசலில் அம்மாவை விட்டுப் பிரிந்து கடலங்குடி தெருவில் தனியாகக் குடித்தனம் வந்துவிட்டாள். அங்கிருந்து பாபுவை தேடி வந்திருக்கிறாள்.

யமுனாவிற்கு ஒரு ஆசிரமத்தில் வேலை கிடக்கிறது. பிரதி ஞாயிறு விடுமுறை. தன உறவினர் வீட்டிலிருந்து அந்த ஆசிரமத்திற்குச் செல்கிறாள் இதற்கெல்லாம் பாபு உதவி செய்கிறான். இந்த சந்திப்பு மேலும் இவர்களின் நெருக்கத்தை ஏற்படுகிறது.  ஒரு சமயத்தில் பாபுவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே அவனைக் கவனிக்க வேண்டி யமுனா வருகிறாள். 

பாபுவின் நீண்ட நாள் கனவு அல்ல வாழ்வே யமுனாதான் என்று இருக்கும் பாபுவிடம் இனிமேல் என்வாழ்வு எல்லாமே உன் சந்தோசம் மட்டுமே எனக்கென எந்த வித உணர்வுகளும் இல்லை என்று சொல்கிறாள். தன்னையே தன் மானசீகனுக்கு கொடுக்கிறாள்.  மீண்டும் மீண்டும் இவர்களின் சந்திப்பு அதிர்க்கரிக்கிறது. கடற்கரையில் சந்திக்கும் தருணமும் அவர்களிடையே நடக்கும் உரையாடல்கள் என வேகமாகச் செல்கிறது இவர்களின் வாழ்க்கை.

பாபுவிற்கு,  தன் வாழ்வின் லட்சியமாகக் கற்றுக்கொண்ட சங்கீதத்தினை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக அவன் மராட்டியத்திலிருந்த வந்த சங்கீத வித்துவான்களிடம் கற்றுக் கொள்ளவேண்டி கடிதம் எழுகிறான் அதற்குப் பதிலும் கிடைக்கிறது.

தனது வாழ்க்கையின் லட்சியத்திற்காக மராட்டியம் நோக்கி பயணப்படுகிறான். யமுனா தன் கணவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். யமுனா தனக்கு நேர்ந்த எல்லா சம்பவங்களையும் பாபுவின் அப்பாவிற்குக் கடிதம் எழுதுகிறாள் அதற்கு அவரும் சம்மதம் சொல்லி பதில் எழுதுகிறார். அந்த கடிதத்தை அவன் ரயில் புறப்படும் போது கொடுக்கிறாள்.

அணைக்கரையில் இருந்து வரும் பேருந்து மேலக்காவேரி வழியாக புழுதியினை கிளப்பிக் கொண்டு செல்லும் போது ஆரம்பிக்கும் இந்த கதை சென்னையிலிருந்து மராட்டியம் செல்லும் ரயில் வண்டியின் புகையுடன் முடிகிறது.

இந்த காலகட்டத்தில் எத்தனை மாற்றங்கள்.


அன்புடன்.

தேவேந்திரன் ராமையன் 

26 அக்டோபர் 2021 

                   

           

               

                   


            

                                

 



கில்காமெஷ் (உலகத்தின் ஆதிகாவியம்) - வாசிப்பனுபவம்

 கில்காமெஷ் 

உலகத்தின் ஆதிகாவியம் 

தமிழில் : க.நா.சு .

கிண்டில் பதிப்பு 

பக்கங்கள் 

விலை ரூபாய் 99




கி.பி. 1839 இல் லேயார்ட் என்ற ஆங்கிலேயன், சிலோனில் தங்கியிருந்த தனது நண்பனை காண புறப்பட்டுச் சென்றான். போகிற வழியில் மெசபடோமிய நகரில் தங்கி அகழ்வாராய்ச்சி செய்தான். தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் விளைவே நாம் இன்று பார்க்கும் இந்த   உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூலான கில்காமெஷ்

கி.மு 2500 அளவில் (குணிபார்ம்)  திரிகோண வடிவ எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மெசபடோமிய நகரான பாபிலோனியாவின் வழக்கொழிந்த அக்காடியின் மொழியில் பொறிக்கப்பட்டிருந்த இக்கதையைக் கண்டெடுத்து ஒன்று திரட்டி உருவாக்கியிருக்கிறார்கள். பல்வேறு இடங்களிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த நிபுணர்களால் வடிவமைத்த காவியம் தான் இந்த கில்காமெஷ்.  

கில்காமெஷ் என்ற மன்னன் மெசபடோமிய நகரான "ஊருகி " என்ற நகரினை ஆண்டுவந்தான் என்றும் அவனது தந்தையான  "லுகல்பாண்டா" இவனுக்கு முன்னர் அந்த நகரினை ஆண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. கில்காமெஷ் காலத்தில் தான் ஊருகி நகரின் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டது மேலும் பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்த கதை முழுவதும் இந்த கில்காமெஷ் பற்றித் தான் நகர்கிறது.

உலகின் மிக பலமுள்ளவனாக வலம்வந்த கில்காமெஷுக்கு, போட்டியென்று யாரும் இல்லை. இதற்காகவும் அவனை அழிக்கவேண்டும் என்றும் "எங்கிடு" வருகிறான். எங்கிடு உடல் கரடு முரடானது. பெண்களுக்கிருந்த போல நீண்ட கூந்தல் இருந்தது. ஆடுமாடுகள், மான்கள் கூட வாழ்ந்து அவனது உடல் முழுவதும் ரோமம் படர்ந்திருந்தது. கால்நடைகளின் கூடவே அவனும் சேர்ந்து தரையில் வளர்ந்திருந்த  புற்களை  மேய்ந்து தான்  உயிர்வாழ்ந்தான். இவன் மிகவும் பலசாலியாக இருந்தது தெரிந்து கொண்டு சிலர் கில்காமெஷிடம் இவனைப் பற்றி மிகவும் பெருமையாகக் கூறினார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கோபம்கொண்ட கில்காமெஷ் அவனை என்னிடம் வந்து சண்டையிடச் சொல்லுங்கள் என்றான். 

தங்கள் வேட்டைக்கு இடையூறாக இருந்த "எங்கிடு"வை திசை மாற்ற வேண்டி அவனை மயக்குவதற்காகத்  தெய்வத்தின் கோவிலில் உள்ள பெண்ணழகியை அழைத்துவந்து அவனை மயக்கச் செய்கிறான் வேட்டைக்காரன்.  இந்த அழகியின் மாயையில் மயங்கிய எங்கிடு கொஞ்சம் நாள் அவளுடனே இருந்தான். பிறகு அவன் அவளை விட்டு தனது காட்டுக்குள் சென்றான் அப்போது அவனது கால்களில் பலமில்லை அவன் சோர்வடைந்து இருந்தான் ஆனால் கால்நடைகள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.  அதனால் மீண்டும் அவன் அவள் வசம் வந்து சேர்ந்தான். அவள் திட்டப்படி அவனை ஊருகி நகருக்கும் அங்கே இருக்கும் இஷ்டார் என்கிற தேவியின் கோவிலுக்கும்  அழைத்துச் செல்கிறாள். அங்கு கில்காமெஷுடன் சண்டையிட வைக்கிறாள்.

கில்காமேஷை வென்று காட்ட வந்த எங்கிடு ஒரு சந்தர்ப்பத்தில் அவனின் உடன்பிறவாது சகோதரனாகவே மாறிவிடுகிறான். இவன் மனம் மாறியதில் கில்காமெஷ் இவனை தன்னுடனே வைத்துக்கொண்டான். கில்காமெஷின் தாய் நிம்சீனும் எங்கிடுவை தன் தத்துப் பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறாள்.

காடுகளின் காவலனான "ஹம்பாபா" வை வென்று செடார் மரங்களை வெட்டி வீழ்த்துவதற்காக அவன் இருக்கும் காடுகளை நோக்கி இருவரும் பயணமாகிறார்கள். இவர்கள் துணையாக சூரியக்கடவுள்  மற்ற கடவுள்களும் இருந்து ஹம்பாபாவை வென்று வர உதவி செய்கிறது.

ஹம்பாபாவை வென்று ஊருகி நகருக்குள் திரும்பிய இவர்கள் வெற்றி கொண்டாட்டத்திலிருந்தனர். அதே சமயம் எங்கிடுவுக்கு உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் விழுந்தான். அவன் நிலையினை அறிந்த கில்காமெஷ் கதறி அழுதான் பல்வேறு வழியில் நண்பனின் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்று போராடினான் ஆனால் அவனின் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. அவன் கண்முன்னே அவன் உயிர் பிரிந்துபோனது. துக்கம் தாளாமல் ஊருகி நகரின் எல்லோரும் துக்கம் அனுசரிக்கவேண்டினான். அவனின் உயிரற்ற உடலை அடக்கம் செய்யவிடாமல் ஏழு நாட்கள் காத்துக்கொண்டிருந்தான் அவன் எப்படியாவது உயிர் மீண்டுவருவான் என்று. அவனின் இந்த பாசம் அவன் மனதில் சாவின் மீது ஒரு பெரிய பயத்தினை கொடுத்துச்சென்றது.

ஊருகி நகரின் எல்லவகையான் கலைஞர்களை எல்லாம் அழைத்து நண்பனின் உருவத்தினை தத்துருவமாக வரையவும் சிலையாக வடிக்கவும் கட்டளையிட்டான்.  கலைஞர்களின் கைவண்ணத்தில் அச்சு அசல் அவனைப் போலவே அவனின் உருவம் கல்லிலும், மரத்திலும் மற்றும் பல்வேறு உலோகத்திலும்   உருவானது.

சாவின் மீது உள்ள பயத்தில் கில்காமெஷ் ஒரு கட்டத்தில் மனம் குழம்பிப் போய்  பல்வேறு திசைகளில் திரிந்துகொண்டிருந்தான். தனது நண்பனுக்கு நேர்ந்த சாவு தனக்கும் வந்துவிடுமோ என்று எண்ணம் அவனின் மனதில் மேலோங்கியது. எப்படியாவது சாவிலிருந்து தப்பித்துவிட வேண்டி உலகின் சாவா வரம் பெற்ற தூரத்துத் தேசத்தில் இருக்கும் உத்பிஷ்டியை சந்திக்கப் புறப்படுகிறான்.

வழியில் தேள் -மனிதன் வழிமறிக்கிறான் அவனிடம் தான் எங்கே, எதற்காகச்  செல்கிறேன் என்றும் தனது வேண்டுகோளினை சொல்கிறான். தேள் மனிதன் வழி திறந்து விடுகிறான் ஆனால் பத்து காதாய் தூரம் நடக்கவேண்டும் அதும் கும்மிருட்டில் நடக்கவேண்டும் என்றும் அதனால் நீ இந்த பயணத்தினை விட்டுவிட்டுத் திரும்பிப் புறப்படு என்று சொல்கிறான். கில்காமெஷ் தனது இலக்கினை அடைந்தே தீருவேன் என்ற ஒரே மனவுறுதியுடன் தேள் மனிதன் காட்டிய வழியில் நடக்கிறான்.

அந்த வழி முழுவதும் இருட்டு. அருகில் இருப்பது கூட என்னவென்று தெரியாத கும்மிருட்டு. ஒரு வழியாக அந்த வழியினை கடந்து வெளியே வருகிறான்.  வெளியே வந்தவுடன் அவனிடம்  சூரிய கடவுளான காமாஷ்  சொல்கிறான். நீ தேடிவந்த அந்த சாவா வரம் உனக்குக் கிடைக்காது ஆதலால் நீ திரும்பிப் போய்விடு என்கிறான். அதற்கு அவன், நான் இந்த இடையூறுகளை மீறி இவ்வளவு தூரம் வந்து விட்டேன் எனவே நான் அடைந்தே தீருவேன் என்று மன உறுதியுடன் முன்னோக்கிச் செல்கிறான்.

அங்கே சிதுரி என்ற பெண் இருக்கிறாள் அவளும் உன்னால் நீ தேடிவந்த சாவா வாழ்வினை அடைய முடியாது என்று அவனக்கு மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று தடை சொல்கிறாள் ஆனால் அவன் தனது முழு கதையும் அவளிடம் சொல்லி அவளும் அவனுக்கு உத்பிஷ்டியினை  எப்படிச் சந்திப்பது என்பதைச் சொல்கிறாள். உர்ஷ் நபி (படகோட்டி) இருக்கிறான் அவனுடன் சென்றால் மட்டுமே உன்னால் அந்த கடலையும் சாவு நதியையும்  கடக்க முடியும் என்று சொல்கிறாள்.  

இவர்கள் சந்தித்து ஒரு மோதல் ஏற்படுகிறது. பிறகு அங்கிருந்து சென்று உத்பிஷ்டியினை சந்திக்கிறான். ஆனால் அவரும் சாவா வரம் உனக்குக் கிடைக்காது என்று சொல்கிறார். ஆனால் அவன் மனம் ஏற்க மறுக்கிறது. அப்போது அவர் ஒரு காரியம் சொல்கிறார் அதாவது நீ தொடர்ந்து ஏழு நாட்கள் தூங்காமல் கண்விழித்து இருந்தால் உனக்கு ஒருவேளை நான் பரிசிலினை செய்வேன் என்கிறார் அதற்குச் சம்மதித்து ஆரம்பிக்கும் முதல் நாளே தூங்கிவிடுகிறான் அவன் தூங்கும் ஒவ்வொரு நாளும் ஒரு ரொட்டி சுட்டு வைக்கச் சொல்லி அவரின் மனைவியிடம் சொல்கிறார்.

அவன் தூங்கிவிட்டதால் அந்த பலன் கிடைக்காமல் அவன் திரும்பிவிட்டுடுகிறான் அப்போது அவரின் மனைவி அவன் மீது பாவம் கொண்டு அவனுக்கு உதவவேண்டும் என்று என்றும் இளமையாக இருக்கும் பூவினை பறித்துப் போகச் சொல்லி அவரிடம் பரிந்துரைக்கிறாள் அத்துப்படி அவனும் பறித்து வருகிறான் ஆனால் வரும் வழியில் ஒரு சர்ப்பம் அந்த பூவை உண்டுவிடுகிறது, இறுதியில் வெறுங்கையுடன் வருகிறான் ஊருகி நகருக்கு.

இந்த கதையில் சொல்லப்படும் இந்த சாகா வரம் பெற்ற மனிதன், தனக்கு எப்படி இந்த வரம் கிடைத்தது என்பதைச் சொல்லும் பொது அந்த கதைகள் "பைபிள்" மற்றும்  "குரான்"  லில் இருக்கும் நோவா பேழை என்ற கருத்தை  சொல்லுகிறது. அதாவது இறைவன் மனிதர்கள் அநீதி செய்கிறார்கள் எனவே அவர்களை ஒரேமூச்சில் அழித்து விட்டு ஒரு புதிய உலகம் படைக்கவேண்டும் என்பதற்காக ஒரு பிரளயத்தினை உருவாக்குகிறார் அப்போது எந்த குற்றமும் செய்யாத நோவாவிடம் ஒரு படகு செய்து அவற்றுள் சகல ஜீவராசிகளையும் ஒவ்வொரு ஜோடியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தேவையான உணவுப்பொருள்கள் என அவருக்கு கட்டளையிடுகிறார். அதுபோலவே இங்கு       "உத்பிஷ்டி"க்கும் அவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றும் அதனால் தான் இவர்க்கு இந்த சாகா வரம் கிடைத்து என்றும் சொல்கிறார்.

எழுதியது யாரென்றே தெரியாத இந்த கதை படிக்கும் போது விறுவிறுப்பாகச் செல்கிறது. முடியாத என்று எதுவுமில்லை எனவும் நிரந்தர பகைவன் என்பவன் யாரும் இல்லையென்றும் சொல்லும் இந்த கதை இறுதியில் மனிதன் தனது வாழ்வில் என்றாவது ஒரு நாள் மரணத்தினை சந்தித்தே தீரவேண்டும் என்ற இயற்கையின் நீதியினை தெளிவாக விளக்குகிறது.

தான் சாகாமல் வாழ வேண்டும் என்ற கனவுடன் போராடிய கில்காமெஷ் ஒரு நேரத்தில் மரணத்தினை சந்திக்க நேரிடுகிறது.

பல்வேறு நிகழ்வுகளைக் கனவுகளின் மூலமாக நாயகர்கள் தெரிந்து கொள்வதும் அதற்காக அவற்றிலிருந்து எப்படிப் பிழைத்துக் கொள்ளவேண்டும் என்ற வழியினை கண்டறிய உதவுகிறது.   

மொத்தத்தில் இது மனிதக் குலத்தின் பூர்வ சரித்திரம். ஆடையின்றி அலைந்தவன், ஆலயத்தில் புழங்கும் தாசிகள், போர் வெறியர்கள், வேதாகமத்திற்கு முந்திய பிரளயம் எனப் பல்வேறு காட்சிகள் நம்மைப் பரவசப்படுத்துகின்றன இத்தனை அம்சங்களும் கொண்ட ஒரு அருமையான உலக  காவியம்தான் கில்காமெஷின் கதை.


\அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 அக்டோபர் 21  

               


            

                  

     

            

  



   


 

Tuesday 5 October 2021

சந்துருவுக்கு என்னாச்சு?

சந்துருவுக்கு என்னாச்சு? 

எஸ். பாலபாரதி 

கிண்டில் பதிப்பு

விலை ரூபாய் 49

பக்கங்கள் 25 



 

ஆசிரியர் யெஸ்பாலபாரதி யின் இந்த நூல்,  இன்றைய சமுதாயத்தில் நாம் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒரு பெரிய உண்மையினை எடுத்துச்சொல்லியுள்ளார்

ஒரு சிறப்புக் குழந்தையை நமது சமுதாயம் எவ்வாறு ஏளனமாகப் பார்க்கிறது என்ற கசப்பான உண்மையினை பற்றிப் பேசுகிறது. வாசித்ததும் நாமும் அந்த சமுதாயத்தில்  ஒரு அங்கம் என்கிறபோது மனதுக்குள் ஒரு நெருடல் வரவேண்டும் அவ்வாறு வந்தால் கண்டிப்பாக நமது சமுதாயத்தில் படிந்த இந்த கரையினை நீக்கிவிடலாம் என்று சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.       

இது ஒரு சிறிய புத்தகம் தான் என்றாலும் ஒரு பெரிய உண்மையும் அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்கிறது.  ஒரு சகோதர குடும்பத்தின் வழியே மூடியிருந்த நம் கண்களைத் திறக்கிறார். 

சிறு வயது முதலே நம் குழந்தைகளுக்கு,  சக குழந்தைகளையும், சிறப்பியல்புக் குழந்தைகளையும் எவ்வாறு நட்புடனும், தனக்கு சமமாக கருதி   பழகுவது என்பதைக் கண்டிப்பாகச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியத்தினை இந்த புத்தகத்தின் வழியே நமக்கு ஒரு வேண்டுகோளாக விடுகிறார்.

இந்த புத்தகத்தின் கதையின் முக்கிய  நாயகனாக வரும் சந்துரு, ஆட்டிசம் குழந்தையாகப் பிறந்ததில் அவன் என்ன தவறு செய்தான். 

நகரத்தில் வாழும் சந்துருவின் வீட்டுக்கு அவன் உறவினர் குடும்பம் கிராமத்திலிருந்து வருகிறார்கள். நகர வாழ்க்கை முதல் முறையாக அனுபவிக்க வரும்  தருணுக்கு அங்கே அவன் காண்பது எல்லாமே ஒரு விதமான குழப்பமும் ஒரு பதட்டமும் கொடுக்கிறது. ஆசை ஆசையாக அவன் தனது அண்ணனான சந்துருவுடன் சேர்ந்து விளையாடலாம் என்று வருகிறான் ஆனால் அது நடக்கவில்லை என்றதும் அதற்காகக் கொஞ்சம் மனவருத்தம் அடைகிறான் தருண். அதற்கான காரணத்தினையும் மற்றும் அவன் மனதில் சந்துரு அண்ணாவின் நிலமைலயினை பற்றித் ஏற்பட்ட பல்வேறு வினாக்களுக்கும் விடை தெரிந்து கொள்ள விழைகிறான். 

அண்ணனுக்கு யாரும் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் நண்பர்கள் இல்லை என்றும் அவன் சந்தித்த ஒருவனும் அண்ணனை  வேறுமாதிரியாகப் பேசியதும் தருணின் மனதில் ஒரு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டன.

தருணின் மனதில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் சந்துருவின் அம்மா மிகவும் அருமையாகப் பதில் சொல்லி அவனுக்குள் ஒரு புதிய மனநிலையினை ஏற்படுத்துகிறாள்.

இந்த அம்மா போலவே ஒவ்வொரு அம்மா மற்றும் அப்பா தங்கள் குழந்தைகளை நெறியுடன் வழிநடத்தினால் நம்மில் வேறுபாடுகள் இல்ல வேறொரு உலகம் காணலாம்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

05 அக்டோபர் 2021

 


              

Monday 4 October 2021

பாரதிக்கும் எனக்கும் பழக்கம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை

பாரதிக்கும் எனக்கும் பழக்கம் 

வ.உ. சிதம்பரம் பிள்ளை 

கிண்டில் பதிப்பு 

விலை   49

பக்கங்கள் 50 




இந்த புத்தகம் வ.உ. சிதம்பரம் பிள்ளை, தனக்கு சுப்பிரமணிய பாரதியாருடன் இருந்த பழக்கத்தினையும் உறவினையும் நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.

எட்டயபுரம் சமஸ்தானத்தில் ஸ்ரீ சின்ன சாமியின் மகனாக சுப்பிரமணிய பாரதியார் பிறந்தார், அதே சமஸ்தானத்திலிருந்துவந்த ஸ்ரீ வ.உலகநாத பிள்ளையின் மகனாக வ.உ. சிதம்பரம் அவர்களும் பிறந்தார். இவர்களின் தந்தையர்கள் பழக்கத்திலிருந்து பாரதியார் அவர்களை பற்றித்த் தெரிந்துகொண்டதாகவும் அவரை சந்திக்க வேண்டு என்றும் எண்ணமும் இருந்தது என்கிறார்.

முதல் முதலாக 1906 ஆம் ஆண்டு சென்னையில் தான் சந்தித்தாக குறிப்பிருக்கிறார் அதுவும் பாரதியார் "இந்தியா" என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்ததாகவும் அப்போது அவரை முதலில் பத்திரிகையின் அலுவலகத்தில் சந்திருந்திருந்தார்.  முதல் சந்திப்பிலே இருவரும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு ஏற்பட்டது. பிறகு இந்த சந்திப்பு நாள்தோறும் தொடர்ந்தது மேலும் பத்திரிகையின் அதிபர் வீடும், திருவல்லிக்கேணி கடற்கரையும் என எங்கள் நாட்கள் நகர நகரச் சோழனும் கம்பனுமாக இருந்த நாங்கள் மாமன் மருமகனாக மாறினோம் என்கிறார்.

ஒருநாள் கடற்கரையில் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் வங்காள நாட்டில் காளிக்கு ஆடு பலி கொடுக்கிறார்கள் அது பாவமில்லையா என்ற கோபத்துடன் வியக்கனாம் செய்ததாகக்க் குறிப்பிடுகிறார்.

சூரத் காங்கிரசில் மாநாட்டில் தலைவரை மாற்றுவதற்காக ஏற்பாடு செய்தனர் ஆனால் இந்த முயற்சிகள் அதிக முன்னெடுத்து பிறகு இறுதியில் இந்த நிலை கலவரத்தில் தான் முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழர் தலைவர்களுக்கு எதிராக வாசிக்க இருந்த வாசகத்தை நீக்கச்ச் சொல்லி    முழக்கம் இட்டதும் அதனால் ஏற்பட்ட கட்சி பிளவு என்று பல்வேறு தகவல்களைக்க் குறிப்பிடுகிறார்.

வெள்ளையர்களை விரட்டியடிக்க நம்மிடம் கப்பல் வேண்டும் என்றதும் அதற்காகப்ப் போட்ட திட்டத்தின் காரணமாக ஆரம்பிக்கப்பட்டுத் தான் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பனி. இதற்காக வெகுண்டெழுந்த வெள்ளையர்கள் எங்களை தேசத்துவேஷாஹ் வழக்கில் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறைக்குச்ச் சந்திக்க வந்த மாமா கண்கலங்கிவிட்டார்.

கலெக்டர் ஆஷ் துறையின் கொலையின் காரணமாக என்னைக்க் கைது செய்த போது குழுமத்தை சேர்ந்த மற்றவர்களையும்,  பாரதியையும்  கைது செய்யவாய்ப்பு இருந்ததால் பாண்டிச்சேரிக்குப்ப் போகச்ச் சொன்னதற்கு மறுத்துவிட்டார் இறுதியாகப்ப் போகவைத்தாயிற்று.  புதுச்சேரியில் அரவிந்தர் மற்றும் வ.வே.சுப்பிரமணிய அய்யரும் வந்துசேர்ந்தார்கள். பாரதி அங்கே சென்றவுடன் பத்திரிகை மற்றும் வேறு வழிகளிலும் தந்து தேசிய விடுதலை பற்றிய வேலைகளைச்ச் செய்துகொண்டுதான் இருந்தார் என்கிறார்.

ஒருமுறை 

எனது சிறைத்த் தண்டனையை கோவை சிறையிலும், கண்ணூர் சிறையிலும் கழித்து விட்டு வந்த பிறகு, ஒரு முறை புதுச்சேரி சென்று மாமாவின் விலாசம் கண்டுபிடித்துச்ச் சந்தித்தது மற்றும் அரவிந்தர் எல்லோரும் சேர்ந்து தேச விடுதலைக்காகப்ப் பேசியது என தங்கள் நாட்களை நினைவுகூருகிறார். அப்போது அரவிந்தரிடம் இருபத்தேழு மொழிகளில் பத்திரிகை ஆரம்பிக்கவேண்டும் என்று சொன்னபோது மாமா அவர்கள் என்னைப்ப் பரிகாசம் செய்தார்கள் நானும் அதற்காக கோவப்பட்டேன் ஆனால் இறுதியில் தான் தெரிந்தது அவர் சொன்னதது உண்மை என்று. 

கப்பல் வணிகத்தில் நட்டம் வந்ததால் ஒரு கப்பலை மற்ற அதிகாரிகள், ஒரு வெள்ளைக்காரர்களுக்கு விற்று விட்டனர் அதைக்க் கேட்டுக்க் கொதித்து எழுந்து விட்டார் மாமா அல்லாமல் ஒரு கவிதையும் சொன்னார் அதில் "மானம் பெரிது பெரிது மானம்" மேலும் அந்த கப்பலை விரோதிகளிடம் விற்பது அதைத்த் துண்டு துண்டாக்கி கடலில் வீசியிருக்கக்கூடாதா என்று கேட்டார்.      

நான் அவரை நான்  சென்னையில் வசித்த நேரத்தில் ஒரு முறை மாமனும் ஒரு சாமியாரும் வந்தார்கள் என்றும் கூட வந்த சாமியாரின் மீது எப்படித்தான் மாமாவிற்கு நட்பு வந்ததோ தெரியவில்லை அவர்கள் இருவரும் எதையோ மென்றுகொண்டிருந்தார்கள்  எனக்க் குறிப்பிருக்கிறார். இந்த சந்திப்புதான் நான் மாமாவை இறுதியாகச்ச் சந்தித்தது என்று தந்து கவலையினை குறிப்பிடுகிறார்.   


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

07 செப்டம்பர் 2021 

         

   

Saturday 2 October 2021

இந்துக்களுக்கு ஒரு கடிதம் - லியோ டால்ஸ்டாய்

 இந்துக்களுக்கு ஒரு கடிதம் 

லியோ டால்ஸ்டாய்

முன்னுரை - மோ.க.  காந்தி  

தமிழில் - வானதி

  

ரஷ்யாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான லியோ டால்ஸ்டாய் அவர்களுக்கு வங்காள பத்திரிக்கையாளரான  "தாரகநாத் தாஸ்கனடாவிலிருந்து 1902 ஆம் ஆண்டு மே 22 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் இந்திய மக்களின் நிலை குறித்து, அதாவது உலகப்போரில் இறப்பவர்களை விடப் பசியால் இறப்பவர்களே அதிகம் எங்கள் தேசத்தில் என்ற தகவலைச் சொல்லி அவரிடம் எங்கள் தேச மக்களின் மீது கொஞ்சம் கவனம் கொள்ள வேண்டுமாறு  கேட்டுக்கொள்கிறார்.    

கடிதம் பெற்றுக்கொண்ட லியோ டால்ஸ்டாய்உடனே பதில் எழுத ஆரம்பிக்கிறார் ஆனால்   இந்த கடிதத்திற்காக அவர் இந்தியாவின் சமூக மற்றும் வரலாறு போன்ற பல்வேறு விதமான தகவல்களைத் திரட்டி ஒரு முழுமையான பதில் எழுதி முடிக்க ஆறு மாதம் காலம் எடுத்துக்கொண்டது. இறுதியில் இந்த கடிதத்தினை   தனி நபர் கடிதமாக இல்லாமல் ஒரு பதிப்பாக டிசம்பர் 1902 ல் பதிப்பிக்கிறார். இந்த கடிதத்தில் நாகரிக உலகின் வன்முறையினை சுட்டிக் காட்டியிருக்கிறார். லியோ டால்ஸ்டாய்தனது பதில் கடிதத்தில் கிருஷ்ணரின் வாசகங்களைப் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டி அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் "இன்னா செய்யாமை" என்ற திருக்குறள் அதிகாரத்திலிருந்து ஆறு குறள்களையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.  

இந்த பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புதென்னாப்பிரிக்கா போராட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்காக லண்டன் வந்த காந்திக்குக் கிடைக்கிறது. அந்த கடிதத்தினை படித்த காந்திக்கு இந்தியாவின் விடுதலை பற்றிய நம்பிக்கையும் ஊக்கமும் கிடக்கிறது.இந்த கடிதத்தின் படித்த பிறகு காந்தி, லியோ டால்ஸ்டாய் அவர்களைத் தனது ஆசிரியராகவே ஏற்றுக்கொண்டார். 

உடனே காந்தி, டால்ஸ்டாய் க்கு கடிதம் எழுதுகிறார், அந்த கடிதத்தில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் வணிகத்திலும் சமூகத்திலும் உயர்ந்து வருவதைக் கண்டு பொறாமை கொண்ட அம்மக்கள் இனம் மற்றும் நிறவெறியின் காரணமாக பல்வேறு வழக்குகளைப் பதிந்து சிறையில் அடித்து வைத்திருக்கின்றனர். ட்ரான்ஸ்வால் சிறையில் இருக்கும் பெரும்பாலோனோர் கூலி வேலை செய்பவர்கள் இவர்கள் சிறையிலிருந்தால் இவர்களின் குடும்பத்திற்கு யார் பார்ப்பது எனவே நீங்கள் இந்த மக்கள் மீது அக்கறை கொண்டு நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைக்கு இரு முடிவு கொண்டுவரவேண்டும் அதுமட்டுமல்லமால்  தங்களின் "இந்துக்களுக்கு ஒரு கடிதம்" என்ற பதிப்பினை இந்திய மொழிகளில் நண்பர் ஒருவர் அவருடைய செலவில் 20,000 பிரதிகள் அச்சிட்டு விநியோகம் செய்ய விருப்பப்படுகிறார், ஆதலால் இந்த பதிப்பு தங்களுடையது தான் என்றும் மேலும்   பதிப்பிக்க அனுமதியையும் கொடுக்குமாறு  கேட்டுக்கொண்டு தனது கடிதம் வழியாக  எழுதினார் மேலும் தங்கள் பதிப்பில் கடைசி பத்தியில் இருக்கும் மறுபிறவிபற்றிய கருத்துக்களுக்குத் தனது தரப்பிலிருந்து ஒரு மாற்றுக் கருத்தினை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மூன்று கடிதங்கள் பரிமாறிப்பட்டன.

காந்தியின் கடிதம்  பெற்ற டால்ஸ்டாய், 07 அக்டோபர் 1909 இல்  இவ்வாறாகப் பதில் எழுதுகிறார். தங்கள் கடிதம் மிகவும் மகிழ்வினை தருகிறது மேலும் ட்ரான்ஸ்வால் சிறையில் இருக்கும் தங்கள் சகோதரர்களின் நிலைமையினை நினைத்து வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.    இந்துக்களுக்கு ஒரு கடிதம் நான் எழுதியது தான் என்றும் கிருஷனாவை பற்றிய புத்தகங்கள் மாஸ்கோவில் இருந்து அனுப்பச் சொல்லியிருப்பதாகவும் மறுபிறவி குறித்த எனது கருத்தில் நான் பின்வாங்கவில்லை என்றும் மேலும் எனது பதிப்பினை இந்திய மொழிகளில் பதிப்பிக்கலாம் என்று குறிப்பிட்டு அதற்குத் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

இந்த பதில் கடிதத்துற்கு  காந்தி, 10 நவம்பர் 1909 இல் நன்றி கடிதம் இவ்வாறாக எழுதியுள்ளார். தங்களின் பதிப்பினை இந்திய மொழிகளில் பதிப்பிக்க அனுமதித்தற்கு முதல் நன்றியும், தங்கள் உடல் நலம் சீராகவில்லை என்று தெரிந்தது அதற்காகத் தான் இந்த பதில் தாமதமாக எழுதுகிறேன்.  நான் லண்டன் வந்த காரியம் தோல்வியில் முடிந்துவிட்டது  நான் மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்புகிறேன் அங்கே சென்றவுடன் கைது செய்யப்படுவேன் என்றும் தாங்கள் இந்த கடிதத்திற்குப் பதில் எழுத விழுந்தால் இந்த முகவரிக்கு அனுப்பவும் என்று தென்னாப்பிரிக்காவின் முகவரியினை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

மேலும் பல்வேறு செய்திகளையும் தனது பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

02 அக்டோபர் 2021.

Friday 1 October 2021

இந்தியக் கலைச் செல்வம் -

 இந்தியக் கலைச் செல்வம் 

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 

பக்கங்கள் 


இந்தியக் கலைச் செல்வம் - இந்த நூல் உண்மையிலே ஒரு கலைச் செல்வம் தான். இந்த புத்தகத்தில் எத்தனை தகவல்கள்.

இந்தியாவின் புகழ்பெற்ற கலைகள் எல்லாம் பட்டியலிட்டிருக்கிறது. பாரத தேசத்தின் பண்புகள், கலைகள், நாகரிகம், கலாச்சாரம் என்று எல்லாம் ஒன்றாக உருவாகி இன்றளவும் நிலைத்திருக்கிறது. 

"கலை" என்ற இந்த ஒரு சொல்லுக்கு மிக எளிதாக விளக்கம் சொல்லிவிடமுடியாது. கலைகளை இவ்வாறாகப் பிரித்துச் சொல்லலாம் அவைகள் கவிதை, இசை, சித்திரம், நடனம் மேலும் பல்வேறு கலைகளைச் சொல்லலாம். ஆனால் நாம் எல்லோரும் அன்றாடம் காண்பது இவைகளேயே.

நமது தேசத்தில் பிரசித்தி பெற்ற எண்ணற்ற கலைகள் இருக்கிறது அவற்றுள் முதன்மையாக இந்த புத்தகம் "அஜந்தா - எல்லோரா" வை பற்றித்தான் பேசுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் என்ற மாவட்டத்தில் இருக்கிறது. அஜந்தா குடவரைகளின் சிறப்பான அம்சம் அங்குள்ள சித்திரங்கள் தான். காலத்தால் அழியாத ஒரு அற்புதமான படைப்பு அந்த சித்திரங்கள். அதுபோலவே எல்லோரோவும் உலக புகழ்பெற்றது தான் இந்த சித்திரங்கள் இந்து, சமணம் மற்றும் பௌத்தம் என மூன்று சமயங்களும் ஒன்றி உரையாடுவதுதான் என்கிறார். நாம் வாழ்வில் ஒரு முறையாவது காணவேண்டிய கலையுலகம் தான் இந்த அஜந்தா மற்றும் எல்லோரா.

கஜீராஹோ - இந்திய நாட்டின் கட்டிடக் கலையினை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவைகள் நாகரம், வேசரம் மற்றும் திராவிடம் என்கிறார். ஆனால் ஆங்கிலேயர்கள் இவற்றுள் நாகரம் மற்றும் வேசரம் இவற்றை இண்டோ -ஆரியன் என்று விதமாகக் கருதினார்கள். இவ்வகையில் புவனேஸ்வரத்தில் இருக்கும் கஜீராஹோ கோவில் இண்டோ -ஆரியன் கலையில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் சிறப்புகளையும் அங்கு அமைந்திருக்கும் இந்த பகுதியில் இருக்கும் ஏராளமான கோவில்களைப் பற்றிப் பேசுகிறது. சந்திரவம்ச அரசர்கள் அதிக கோவில்களைக் கலை நயத்துடன் நிர்மாணித்திருக்கிறார்கள்.

ஹொய்சலர் மன்னர்கள்: கிருஷ்ணா நதியின் தென்புறம் உள்ள  மைசூரில் தங்களது ஆட்சிக் காலத்தில் பல்வேறு கோவில்களைக் காட்டியுள்ளனர்.  இந்த ஹொய்சலர்கள் முதலில் துவாரகையிலிருந்த யாதவர்கள், இவர்கள் துவாரகையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக இங்கு வந்து குடியேறினார்கள் என்கிறார், மட்டுமல்லாமல் இவர்களின் கலை ரசனையும் திறனும் இன்றளவும் பேசப்படுகிறது ஏனெனில் இவர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டிய கோவில்கள் இன்றும் பெயர் சொல்கிறது. ஹலபேடில் உள்ள ஹொய்சலேஸ்வரர் கோவில், பேலூரில் உள்ள சென்ன கேசவர் கோவில் மற்றும் சோமநாதபுரத்துக் கேசவர் கோவில் என மூன்று பெரிய கோவில்கள் கட்டிடக்கலைக்கு, சிற்பச் செல்வத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு கலைக்கோயில்களில் மிகவும் சிறப்பான நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்திருப்பது இந்த ஹொய்சலர் கோவில்களே என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார்.

தமிழர் சிற்பக் கலை மற்றும் தமிழர் கோவில்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த  சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள்  மற்றும் பல்லவர்கள், நாயக்கர்கள் என அவரவர் ஆட்சி புரிந்த மண்ணிலும் காலத்திலும் ஏற்படுத்திய கலைகளின் சுவடு காலத்தால் அழிக்க முடியாதது என்று தான் சொல்லவேண்டும்.

பல்லவர்களின் சிற்பம் இன்றளவும் மாமல்லபுரத்தில் பெயர்சொல்லிகொண்டேதான் இருக்கிறது மட்டுமல்லாமல் இவர்கள் கட்டிய காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இன்றளவும் பல்லவர்களின் புகழை ஓங்கிக் காட்டுகிறது. 

சோழ மன்னர்கள் கட்டிய கோவில்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம் அவற்றுள், தஞ்சாவூர் பெரிய கோவில் இன்றும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது என்றால் இவர்களின் கட்டிடக் கலையின் திறமை மற்றும் அவர்கள் அன்று செய்த விலை மதிக்கமுடியாத அர்ப்பணிப்புதான் காரணம் என்றே சொல்லவேண்டும். சோழர்கள் ஆண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் அதுவும் ஒவ்வொரு கோவிலும் ஒரு தனிச்சிறப்பினை சொல்லி ஓங்கி உயர்ந்து நிற்கிறது. 

தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என்றுதான் சொல்வது வழக்கம் ஆனால் ஆசிரியர் சொல்கிறார் தஞ்சாவூர் கலைகளின் களஞ்சியம் என்று. தஞ்சாவூர் முதல் பூம்புகார் (காவேரிப்பூம்பட்டினம்) வரை இவர்கள் கட்டிய கோவில்கள் ஏராளமானவை. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில், திருபுவனம் கோவில், கும்பகோணத்தில் திரும்பிய தெருவெல்லாம் ஒரு பெரிய கோவில் இருக்கும், சீர்காழி, திருவென்காடு, திருமணஞ்சேரி, கோனேரிராஜபுரம், திருநல்லம், தென்குரங்காடு என பல்வேறு கோவில்களை அமைத்துள்ளனர். இந்த கோவில்களில் வீற்றிருக்கும் மூலவர்களின் சிலை வடிவமைத்த கலை நுணுக்கம், வெளிப் பிரகாரங்களில் இடம்பெற்றிருக்கும் சிற்ப வேலைகள் என இன்றளவும் பேசப்படுகிற   புகழ்வாய்ந்த சிற்பங்கள் தான் என்று சொல்லவேண்டும்.

பாண்டிய மன்னர்களும் கலையில் சிறந்தவர்கள் தான், இவர்களின் கலையும் வெவ்வேறு கோவில்களில் தங்களுக்கு இருக்கும் சிறப்பான திறமையினை வெளிப்படுத்தியிருக்கிறது.    

தமிழர்கள் கலையில் வெவ்வேறு பரிணாமங்களில் பெயர்பெற்று இருந்தனர், நடனம், ஓவியம், சிற்பம், இசை போன்ற பல்வேறு கலைகளில் இவர்கள் அதீத ஈடுபாடுகள் கொன்றிருந்தனர்.  தமிழ் மண்ணில் மட்டுமல்லாமல் தாங்கள் சென்ற இடமெல்லாம் தங்களின் கலைகளின் சுவட்டினை விட்டுச் சென்று வந்திருக்கின்றார்கள். மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் இலங்கை என பல்வேறு நாடுகளில் தங்களின் கலையினை பெரிதாக வளர்த்துவிட்டுத் தான் வந்திருக்கின்றனர்.

இவ்வாறாக வளர்த்து வந்த இந்த கலைகளில் பெரும்பாலான கலைகளை நாம் இன்று மதிப்பது இல்லை அல்லது அதன் மதிப்பு தெரிந்து கொள்ளக் கூட ஆசைப்பட்டதே இல்லை என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான கோவில்கள் சிதிலம் அடைந்து விட்டன, சில கோவில்கள் இன்றும் பராமரிக்க  படுகிறது இதற்காக முன்னோர்கள் நிலத்தையும் இந்த கோவில்களின் பணிகளுக்காக எழுதி வைத்துவிடுகின்றனர், அதன் படியே இந்த நிலங்களும் விவசாயம் செய்யப்படுகிறது கடைசியில் குத்தகை நெல் கொண்டுவந்து கோவிலின் களஞ்சிய பெட்டகத்தில் கொட்டிவைக்கப் படுகிறது. ஆனால் இதுவோ பல்வேறு மக்களளால் கொள்ளை அடிக்கப்படுகிறது இதுதான் இன்றைய நிலைமை என்றே சொல்லவேண்டும்.

கலைகளின் தொடர்பான ஒரு நல்ல நூலினை வாசித்த அனுபவத்தினை பகிர்ந்துகொள்கிற மன நிறைவுடன் இந்த பதிவினை பகிர்ந்துகொள்கிறேன்.


அன்புடன்,                         

தேவேந்திரன் ராமையன் 

01 அக்டோபர் 2021