மோக முள்
தி. ஜானகிராமன்
காலச்சுவடு பதிப்பகம்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 494
பக்கங்கள் 664
மோக முள் - தமிழ் கிளாசிக் நாவல். 1956 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த நாவல். ஆனாலும் இன்றளவும் வாசிக்கும் போது இளமையான உணர்வுகளைத் தந்துகொண்டே தான் இருக்கிறது. வயதில் குறைந்து இருக்கும் பாபுவுக்கு தன்னைவிட பத்து வயது அதிகமிருக்கும் யமுனாவின் மீது வரும் காதல் கைகூடியதா இல்லையா என்பதுதான் இந்த கதை.
இவர்களுக்குlஇளமை பருவத்தில் இருக்கும் பாசம் காலப்போக்கில் காதலாக மாறுகிறது. அந்த காலகட்டத்தில் இதுபோல காதல் மக்களின் மத்தியில் எவ்வாறு கவனம் பெறுகிறது என்பதை மையமாக வைத்துச் செல்கிறது இந்த கதை.
அழகான காதல் காவியம். இருபது வருடங்களுக்கு முன்பு நான் கும்பகோணத்தில் சுற்றித் திரிந்த நினைவுகளை மீட்டுக்கொடுத்தது என்றே சொல்லவேண்டும்.
காவிரி ஆறு, அணைக்கரை சாலை, மடத்துத் தெரு, கும்பேஸ்வரன் கோவில், ராமசாமி கோவில், மகாமக குளம், ரயிலடி, காந்தி பூங்கா, இன்றும் இளமையாகக் காவிரிக் கரையில் இருக்கும் கும்பகோணம் கலைக் கல்லூரி, ஆனையடி, டவுன் ஹைஸ் ஸ்கூல், யமுனாவின் வீடு இருக்கும் துக்காம்பாளையத் தெரு, கடலங்குடித் தெரு என ஒவ்வொரு இடமும் கண் முன்னே வந்து போகிறது.
பாபநாசம் மற்றும் அந்த ஊரில் இருக்கும் குடமுருட்டி ஆறு கடைத்தெரு மற்றும் வயல்வெளிகள் என அழகிய காட்சிகள் கண்களில் வந்து செல்கிறது.
கதையில் வாழ்த்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறக்க முடியாத வகையில் வாழ்ந்து சென்றுள்ளனர்.
உறவுகளுக்குக் கொடுத்திருக்கும் உணர்வு இயல்பாகவும் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்ததை ஆவணப்படுத்தியுள்ளார். பாபுவும் அவனது அப்பா வைத்தியும் கொண்டிருக்கும் அன்பும் இவர்களிடையே இருக்கும் நெருக்கமும் கொஞ்சம் மரியாதையும் இயல்பானது. நண்பன் ராஜத்திடமும், சகோதரன் சங்குவிடம் பாபு காட்டும் நெருக்கமும் அருமையான உணர்வு கொண்டிருக்கிறது.
சங்கீத கற்றுக்கொடுக்கும் ரங்கண்ணாவின் ஒவ்வொரு உரையாடலும் சங்கீதத்தின் உயிர்ப்பாகவே இருக்கிறது. ரங்கண்ணாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ளும் பாபு தனது மானசீக குருவிடம் காட்டும் அன்பும் மரியாதையும் அவனின் சங்கீதத்தின் வெளிப்பாட்டில் தெரிகிறது. இறுதியில் பாபுவின் மடியிலே தனது உயிரை விடும் ரங்கண்ணா என இவர்களின் இந்த வாழ்வுக்காலம் இந்த கதையின் மறக்க முடியாத ஒரு பயணம்.
தமிழ் பிராமணரின் இரண்டாவது மனைவியாக இருக்கும் மராட்டியப் பெண் பார்வதி ஆகிய இவர்களின் பெண்ணாக வரும் வலிமைமிக்க பாத்திரம் தான் கதையின் நாயகியாகிய "யமுனா".
யமுனாவின் தந்தை மரணத்திற்குச் சென்று வரும் நிகழ்வும், அதற்காக யமுனாவும் அம்மா பார்வதியும் துணையாக பாபுவும் சென்று வருவதும், கிராமத்தில் இருப்பவர்கள் இரண்டாவது மனைவியின் உறவை எப்படிப் பார்ப்பார்கள் என்பதை மிகைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறார்.
யமுனாவின் குடும்ப பின்னணியின் காரணமாக அவளின் திருமணம் தள்ளிப் போகிறது. அழகும் அறிவும் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில் வரும் திருமணத் தடை நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு விதமான குறையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். யமுனாவை இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்துகொள்ள வரும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை அவருக்குக் கொடுக்கும் உபசரிப்பும் இறுதியில் அவனின் வார்த்தைகளைக் கண்டு வெகுண்டெழும் பாபு என இவர்களின் உரையாடலும் சண்டையும் இயல்பாகவே இருக்கிறது.
யமுனாவின் வீடு, தந்தை இறந்த பிறகு முதல் தாரத்துப் பிள்ளை எதுவும் தொடர்ந்து கொடுக்காததால் வாழ்வாதாரம் குறைய ஆரம்பித்தது. இதற்காகப் பார்வதியிடம் இருந்த நகைகளை எல்லாம் விற்று வழக்கை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் போட்டுவிட்டனர். மனது தாங்காமல் தானாகவே பாபு யமுனாவின் அண்ணனிடம் சென்று நியாயம் கேட்டான் ஆனால் அதற்குச் சாதகமான பதில் ஏதும் இல்லை.
வயதானவருக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டு வரும் "தங்கம்மா". பாபுவின் பக்கத்து வீட்டில் குடிவருகிறார்கள். எதிர்பாராத நேரத்தில் உதவ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான் பாபு. இளமை ததும்பும் தங்கம்மாவின் வாழ்வின் தீராத ஏக்கம், அவற்றைத் தீர்த்துக்கொள்ள அவள் பாபுவை நாடுகிறாள். பாபுவிடம் ஒருமுறை தீர்த்துக்கொள்கிறாள். மீண்டும் மீண்டும் முயலுகிறாள் ஆனால் பாபு யமுனாவின் மீது கொண்ட மையலில் அவளிடம் இருந்து விலகுகிறான். இதை யமுனாவிடம் சொல்லிவிடுகிறேன் பாபு. தனது வாழ்வில் கிடைக்கப் பெறாத சுகத்திற்காகவா அல்லது தற்செயலாகவா, இல்லை இனிமேல் வாழ்வில் எதுவும் இல்லை என்றா எனத் தெரியாமல் மகாமக குளத்தில் தண்ணீரில் மூழ்கி மரணிக்கிறாள் தங்கம்மாள். தங்கம்மாளின் மரணம் பாபாவிற்கு ஒரு விதமான நினைவுகளைக் கொடுத்துச் செல்கிறது.
மராட்டிய நாட்டில் இருந்து சுற்று பயணம் வந்த சங்கீத வித்துவான்கள். அவர்கள் ரங்கண்ணாவை சந்திக்கின்றனர். அவர்கள் பேசும் மொழி தெரியாததால், பிறகு பாபு அவர்களை யமுனாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். யமுனாவின் வீட்டிலிருந்துவிட்டு சென்ற போது அவர்கள் நடத்திய ராமசாமி கோவில் கச்சேரி, அந்த சங்கீதத்தில் மயங்கிப் போகும் யமுனா என இவர்களின் வருகை கதையின் முக்கிய பகுதியில் ஆழமான அதிர்வலையினை பதித்துச் செல்கிறது.
இளமை முதல் யமுனாவின் மீது பாபுவிற்கு இருப்பது ஒருவகையான பாசம் கலந்த நட்பு. இந்த நட்பு பருவ வயதினை அடைந்ததும் அவள் மீது பாபுவிற்கு காதலாக மாறுகிறது. ஆனால் பாபு யமுனாவைத் தனது வாழ்வின் துணையாகவும் பார்க்கிறான் அதே நேரத்தில் அவள் தெய்வீகமானவள் அவளைச் சாதாரண ஒரு குடும்ப பெண் போன்று பார்க்க முடியவில்லை என்றும் சொல்கிறான்.
பாபுவின் மனம் யமுனாவின் மீது தீராத காதல் கொண்டிருக்கிறது. அதை அவன் யமுனாவிடம் சொல்கிறான். யமுனாவோ அதை ஏற்க மறுக்கிறாள். இதைத் தெரிந்து கொண்ட பாபுவின் பெற்றோர்களும், யமுனாவின் அம்மாவும் ஏற்றுக்கொள்ளவில்லை.
திருமணமே செய்துகொள்ளத் தயங்கிய ராஜம் திடீரென திருமணம் செய்துகொண்டு காசிக்கு குடித்தனம் சென்றுவிட்டான். பாபுவிற்கு ஒருபக்கம் சந்தோசம் இருந்தாலும் மறுபக்கம் நெருங்கிய நண்பன் தூரத்திற்குப் போகிறானே என்ற வருத்தம் மறுபக்கம் என நட்பின் அவசியத்தைச் சொல்கிறார். தொடர்ந்து இவர்களிடையே நடக்கும் கடித வழக்கம் நட்பின் தொடர்ச்சியினை காட்டுகிறது.
பாபு தனது காதலை விட்டுக்கொடுக்கவில்லை. அவன் தனது வாழ்வின் சில மாற்றங்களுக்காக வேண்டி சென்னை பயன்படுகிறான். சென்னைக்கு வந்த பாபுவிற்கு ஆரம்பத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. அவன் தனக்குக் கிடைத்த வேலையினை பார்த்துக்கொண்டு வாழ முயலுகிறான். சென்னையின் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளான பாபு எல்லாம் பழகிப்போகிறது.
சென்னையில், ரங்கண்ணாவின் வேறொரு மாணவன் இப்போது ஒரு பெரிய சங்கீத வித்துவானாக இருப்பவர் வந்து பாபுவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு கதையின் கடைசி வரை பலமாகச் செல்கிறது. இருவருக்கும் இடையே சங்கீதத்தில் வரும் முரண்பாடுகளும் வாதங்களும் அருமை. இந்த போக்கு இவர்கள் இருவரின் நெருக்கத்தை அதிகரிக்கிறது அல்லாமல் பாபுவின் சங்கீத வாழ்க்கைக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாகத் திகழ்கிறது.
காலச்சக்கரம் வேகமாக ஓடுகிறது. யமுனா ஒருநாள் பாபுவின் அலுவலகத்திற்கு வருகிறாள். பாபுவிற்கு உங்களைப் பார்க்க ஒரு அம்மா வந்திருக்கிறார்கள் என்று உதவியாளர் சொல்கிறான். வந்து பார்த்த பாபுவிற்கு அதிர்ச்சி. வந்தவள் யமுனா அல்லவா. மெலிந்த தேகத்துடன் வேறொரு கோலத்தில் யமுனா வந்து நிற்கிறாள்.
இந்த சந்திப்பு மெல்ல மெல்ல இவர்களுக்கு இடையே நன்றாகப் புரிதல் கிடக்கிறது. யமுனா, தான் அம்மா சொல்வது போல ஜமீன்தாருக்கு வாழ்க்கைப் படவில்லை என்று ஏற்பட்ட விரிசலில் அம்மாவை விட்டுப் பிரிந்து கடலங்குடி தெருவில் தனியாகக் குடித்தனம் வந்துவிட்டாள். அங்கிருந்து பாபுவை தேடி வந்திருக்கிறாள்.
யமுனாவிற்கு ஒரு ஆசிரமத்தில் வேலை கிடக்கிறது. பிரதி ஞாயிறு விடுமுறை. தன உறவினர் வீட்டிலிருந்து அந்த ஆசிரமத்திற்குச் செல்கிறாள் இதற்கெல்லாம் பாபு உதவி செய்கிறான். இந்த சந்திப்பு மேலும் இவர்களின் நெருக்கத்தை ஏற்படுகிறது. ஒரு சமயத்தில் பாபுவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே அவனைக் கவனிக்க வேண்டி யமுனா வருகிறாள்.
பாபுவின் நீண்ட நாள் கனவு அல்ல வாழ்வே யமுனாதான் என்று இருக்கும் பாபுவிடம் இனிமேல் என்வாழ்வு எல்லாமே உன் சந்தோசம் மட்டுமே எனக்கென எந்த வித உணர்வுகளும் இல்லை என்று சொல்கிறாள். தன்னையே தன் மானசீகனுக்கு கொடுக்கிறாள். மீண்டும் மீண்டும் இவர்களின் சந்திப்பு அதிர்க்கரிக்கிறது. கடற்கரையில் சந்திக்கும் தருணமும் அவர்களிடையே நடக்கும் உரையாடல்கள் என வேகமாகச் செல்கிறது இவர்களின் வாழ்க்கை.
பாபுவிற்கு, தன் வாழ்வின் லட்சியமாகக் கற்றுக்கொண்ட சங்கீதத்தினை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக அவன் மராட்டியத்திலிருந்த வந்த சங்கீத வித்துவான்களிடம் கற்றுக் கொள்ளவேண்டி கடிதம் எழுகிறான் அதற்குப் பதிலும் கிடைக்கிறது.
தனது வாழ்க்கையின் லட்சியத்திற்காக மராட்டியம் நோக்கி பயணப்படுகிறான். யமுனா தன் கணவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். யமுனா தனக்கு நேர்ந்த எல்லா சம்பவங்களையும் பாபுவின் அப்பாவிற்குக் கடிதம் எழுதுகிறாள் அதற்கு அவரும் சம்மதம் சொல்லி பதில் எழுதுகிறார். அந்த கடிதத்தை அவன் ரயில் புறப்படும் போது கொடுக்கிறாள்.
அணைக்கரையில் இருந்து வரும் பேருந்து மேலக்காவேரி வழியாக புழுதியினை கிளப்பிக் கொண்டு செல்லும் போது ஆரம்பிக்கும் இந்த கதை சென்னையிலிருந்து மராட்டியம் செல்லும் ரயில் வண்டியின் புகையுடன் முடிகிறது.
இந்த காலகட்டத்தில் எத்தனை மாற்றங்கள்.
அன்புடன்.
தேவேந்திரன் ராமையன்
26 அக்டோபர் 2021
No comments:
Post a Comment