Tuesday, 5 October 2021

சந்துருவுக்கு என்னாச்சு?

சந்துருவுக்கு என்னாச்சு? 

எஸ். பாலபாரதி 

கிண்டில் பதிப்பு

விலை ரூபாய் 49

பக்கங்கள் 25 



 

ஆசிரியர் யெஸ்பாலபாரதி யின் இந்த நூல்,  இன்றைய சமுதாயத்தில் நாம் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒரு பெரிய உண்மையினை எடுத்துச்சொல்லியுள்ளார்

ஒரு சிறப்புக் குழந்தையை நமது சமுதாயம் எவ்வாறு ஏளனமாகப் பார்க்கிறது என்ற கசப்பான உண்மையினை பற்றிப் பேசுகிறது. வாசித்ததும் நாமும் அந்த சமுதாயத்தில்  ஒரு அங்கம் என்கிறபோது மனதுக்குள் ஒரு நெருடல் வரவேண்டும் அவ்வாறு வந்தால் கண்டிப்பாக நமது சமுதாயத்தில் படிந்த இந்த கரையினை நீக்கிவிடலாம் என்று சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.       

இது ஒரு சிறிய புத்தகம் தான் என்றாலும் ஒரு பெரிய உண்மையும் அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்கிறது.  ஒரு சகோதர குடும்பத்தின் வழியே மூடியிருந்த நம் கண்களைத் திறக்கிறார். 

சிறு வயது முதலே நம் குழந்தைகளுக்கு,  சக குழந்தைகளையும், சிறப்பியல்புக் குழந்தைகளையும் எவ்வாறு நட்புடனும், தனக்கு சமமாக கருதி   பழகுவது என்பதைக் கண்டிப்பாகச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியத்தினை இந்த புத்தகத்தின் வழியே நமக்கு ஒரு வேண்டுகோளாக விடுகிறார்.

இந்த புத்தகத்தின் கதையின் முக்கிய  நாயகனாக வரும் சந்துரு, ஆட்டிசம் குழந்தையாகப் பிறந்ததில் அவன் என்ன தவறு செய்தான். 

நகரத்தில் வாழும் சந்துருவின் வீட்டுக்கு அவன் உறவினர் குடும்பம் கிராமத்திலிருந்து வருகிறார்கள். நகர வாழ்க்கை முதல் முறையாக அனுபவிக்க வரும்  தருணுக்கு அங்கே அவன் காண்பது எல்லாமே ஒரு விதமான குழப்பமும் ஒரு பதட்டமும் கொடுக்கிறது. ஆசை ஆசையாக அவன் தனது அண்ணனான சந்துருவுடன் சேர்ந்து விளையாடலாம் என்று வருகிறான் ஆனால் அது நடக்கவில்லை என்றதும் அதற்காகக் கொஞ்சம் மனவருத்தம் அடைகிறான் தருண். அதற்கான காரணத்தினையும் மற்றும் அவன் மனதில் சந்துரு அண்ணாவின் நிலமைலயினை பற்றித் ஏற்பட்ட பல்வேறு வினாக்களுக்கும் விடை தெரிந்து கொள்ள விழைகிறான். 

அண்ணனுக்கு யாரும் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் நண்பர்கள் இல்லை என்றும் அவன் சந்தித்த ஒருவனும் அண்ணனை  வேறுமாதிரியாகப் பேசியதும் தருணின் மனதில் ஒரு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டன.

தருணின் மனதில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் சந்துருவின் அம்மா மிகவும் அருமையாகப் பதில் சொல்லி அவனுக்குள் ஒரு புதிய மனநிலையினை ஏற்படுத்துகிறாள்.

இந்த அம்மா போலவே ஒவ்வொரு அம்மா மற்றும் அப்பா தங்கள் குழந்தைகளை நெறியுடன் வழிநடத்தினால் நம்மில் வேறுபாடுகள் இல்ல வேறொரு உலகம் காணலாம்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

05 அக்டோபர் 2021

 


              

No comments:

Post a Comment