கில்காமெஷ்
உலகத்தின் ஆதிகாவியம்
தமிழில் : க.நா.சு .
கிண்டில் பதிப்பு
பக்கங்கள்
விலை ரூபாய் 99
கி.பி. 1839 இல் லேயார்ட் என்ற ஆங்கிலேயன், சிலோனில் தங்கியிருந்த தனது நண்பனை காண புறப்பட்டுச் சென்றான். போகிற வழியில் மெசபடோமிய நகரில் தங்கி அகழ்வாராய்ச்சி செய்தான். தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் விளைவே நாம் இன்று பார்க்கும் இந்த உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூலான கில்காமெஷ்.
கி.மு 2500 அளவில் (குணிபார்ம்) திரிகோண வடிவ எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மெசபடோமிய நகரான பாபிலோனியாவின் வழக்கொழிந்த அக்காடியின் மொழியில் பொறிக்கப்பட்டிருந்த இக்கதையைக் கண்டெடுத்து ஒன்று திரட்டி உருவாக்கியிருக்கிறார்கள். பல்வேறு இடங்களிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த நிபுணர்களால் வடிவமைத்த காவியம் தான் இந்த கில்காமெஷ்.
கில்காமெஷ் என்ற மன்னன் மெசபடோமிய நகரான "ஊருகி " என்ற நகரினை ஆண்டுவந்தான் என்றும் அவனது தந்தையான "லுகல்பாண்டா" இவனுக்கு முன்னர் அந்த நகரினை ஆண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. கில்காமெஷ் காலத்தில் தான் ஊருகி நகரின் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டது மேலும் பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்த கதை முழுவதும் இந்த கில்காமெஷ் பற்றித் தான் நகர்கிறது.
உலகின் மிக பலமுள்ளவனாக வலம்வந்த கில்காமெஷுக்கு, போட்டியென்று யாரும் இல்லை. இதற்காகவும் அவனை அழிக்கவேண்டும் என்றும் "எங்கிடு" வருகிறான். எங்கிடு உடல் கரடு முரடானது. பெண்களுக்கிருந்த போல நீண்ட கூந்தல் இருந்தது. ஆடுமாடுகள், மான்கள் கூட வாழ்ந்து அவனது உடல் முழுவதும் ரோமம் படர்ந்திருந்தது. கால்நடைகளின் கூடவே அவனும் சேர்ந்து தரையில் வளர்ந்திருந்த புற்களை மேய்ந்து தான் உயிர்வாழ்ந்தான். இவன் மிகவும் பலசாலியாக இருந்தது தெரிந்து கொண்டு சிலர் கில்காமெஷிடம் இவனைப் பற்றி மிகவும் பெருமையாகக் கூறினார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கோபம்கொண்ட கில்காமெஷ் அவனை என்னிடம் வந்து சண்டையிடச் சொல்லுங்கள் என்றான்.
தங்கள் வேட்டைக்கு இடையூறாக இருந்த "எங்கிடு"வை திசை மாற்ற வேண்டி அவனை மயக்குவதற்காகத் தெய்வத்தின் கோவிலில் உள்ள பெண்ணழகியை அழைத்துவந்து அவனை மயக்கச் செய்கிறான் வேட்டைக்காரன். இந்த அழகியின் மாயையில் மயங்கிய எங்கிடு கொஞ்சம் நாள் அவளுடனே இருந்தான். பிறகு அவன் அவளை விட்டு தனது காட்டுக்குள் சென்றான் அப்போது அவனது கால்களில் பலமில்லை அவன் சோர்வடைந்து இருந்தான் ஆனால் கால்நடைகள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் மீண்டும் அவன் அவள் வசம் வந்து சேர்ந்தான். அவள் திட்டப்படி அவனை ஊருகி நகருக்கும் அங்கே இருக்கும் இஷ்டார் என்கிற தேவியின் கோவிலுக்கும் அழைத்துச் செல்கிறாள். அங்கு கில்காமெஷுடன் சண்டையிட வைக்கிறாள்.
கில்காமேஷை வென்று காட்ட வந்த எங்கிடு ஒரு சந்தர்ப்பத்தில் அவனின் உடன்பிறவாது சகோதரனாகவே மாறிவிடுகிறான். இவன் மனம் மாறியதில் கில்காமெஷ் இவனை தன்னுடனே வைத்துக்கொண்டான். கில்காமெஷின் தாய் நிம்சீனும் எங்கிடுவை தன் தத்துப் பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறாள்.
காடுகளின் காவலனான "ஹம்பாபா" வை வென்று செடார் மரங்களை வெட்டி வீழ்த்துவதற்காக அவன் இருக்கும் காடுகளை நோக்கி இருவரும் பயணமாகிறார்கள். இவர்கள் துணையாக சூரியக்கடவுள் மற்ற கடவுள்களும் இருந்து ஹம்பாபாவை வென்று வர உதவி செய்கிறது.
ஹம்பாபாவை வென்று ஊருகி நகருக்குள் திரும்பிய இவர்கள் வெற்றி கொண்டாட்டத்திலிருந்தனர். அதே சமயம் எங்கிடுவுக்கு உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் விழுந்தான். அவன் நிலையினை அறிந்த கில்காமெஷ் கதறி அழுதான் பல்வேறு வழியில் நண்பனின் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்று போராடினான் ஆனால் அவனின் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. அவன் கண்முன்னே அவன் உயிர் பிரிந்துபோனது. துக்கம் தாளாமல் ஊருகி நகரின் எல்லோரும் துக்கம் அனுசரிக்கவேண்டினான். அவனின் உயிரற்ற உடலை அடக்கம் செய்யவிடாமல் ஏழு நாட்கள் காத்துக்கொண்டிருந்தான் அவன் எப்படியாவது உயிர் மீண்டுவருவான் என்று. அவனின் இந்த பாசம் அவன் மனதில் சாவின் மீது ஒரு பெரிய பயத்தினை கொடுத்துச்சென்றது.
ஊருகி நகரின் எல்லவகையான் கலைஞர்களை எல்லாம் அழைத்து நண்பனின் உருவத்தினை தத்துருவமாக வரையவும் சிலையாக வடிக்கவும் கட்டளையிட்டான். கலைஞர்களின் கைவண்ணத்தில் அச்சு அசல் அவனைப் போலவே அவனின் உருவம் கல்லிலும், மரத்திலும் மற்றும் பல்வேறு உலோகத்திலும் உருவானது.
சாவின் மீது உள்ள பயத்தில் கில்காமெஷ், ஒரு கட்டத்தில் மனம் குழம்பிப் போய் பல்வேறு திசைகளில் திரிந்துகொண்டிருந்தான். தனது நண்பனுக்கு நேர்ந்த சாவு தனக்கும் வந்துவிடுமோ என்று எண்ணம் அவனின் மனதில் மேலோங்கியது. எப்படியாவது சாவிலிருந்து தப்பித்துவிட வேண்டி உலகின் சாவா வரம் பெற்ற தூரத்துத் தேசத்தில் இருக்கும் உத்பிஷ்டியை சந்திக்கப் புறப்படுகிறான்.
வழியில் தேள் -மனிதன் வழிமறிக்கிறான் அவனிடம் தான் எங்கே, எதற்காகச் செல்கிறேன் என்றும் தனது வேண்டுகோளினை சொல்கிறான். தேள் மனிதன் வழி திறந்து விடுகிறான் ஆனால் பத்து காதாய் தூரம் நடக்கவேண்டும் அதும் கும்மிருட்டில் நடக்கவேண்டும் என்றும் அதனால் நீ இந்த பயணத்தினை விட்டுவிட்டுத் திரும்பிப் புறப்படு என்று சொல்கிறான். கில்காமெஷ் தனது இலக்கினை அடைந்தே தீருவேன் என்ற ஒரே மனவுறுதியுடன் தேள் மனிதன் காட்டிய வழியில் நடக்கிறான்.
அந்த வழி முழுவதும் இருட்டு. அருகில் இருப்பது கூட என்னவென்று தெரியாத கும்மிருட்டு. ஒரு வழியாக அந்த வழியினை கடந்து வெளியே வருகிறான். வெளியே வந்தவுடன் அவனிடம் சூரிய கடவுளான காமாஷ் சொல்கிறான். நீ தேடிவந்த அந்த சாவா வரம் உனக்குக் கிடைக்காது ஆதலால் நீ திரும்பிப் போய்விடு என்கிறான். அதற்கு அவன், நான் இந்த இடையூறுகளை மீறி இவ்வளவு தூரம் வந்து விட்டேன் எனவே நான் அடைந்தே தீருவேன் என்று மன உறுதியுடன் முன்னோக்கிச் செல்கிறான்.
அங்கே சிதுரி என்ற பெண் இருக்கிறாள் அவளும் உன்னால் நீ தேடிவந்த சாவா வாழ்வினை அடைய முடியாது என்று அவனக்கு மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று தடை சொல்கிறாள் ஆனால் அவன் தனது முழு கதையும் அவளிடம் சொல்லி அவளும் அவனுக்கு உத்பிஷ்டியினை எப்படிச் சந்திப்பது என்பதைச் சொல்கிறாள். உர்ஷ் நபி (படகோட்டி) இருக்கிறான் அவனுடன் சென்றால் மட்டுமே உன்னால் அந்த கடலையும் சாவு நதியையும் கடக்க முடியும் என்று சொல்கிறாள்.
இவர்கள் சந்தித்து ஒரு மோதல் ஏற்படுகிறது. பிறகு அங்கிருந்து சென்று உத்பிஷ்டியினை சந்திக்கிறான். ஆனால் அவரும் சாவா வரம் உனக்குக் கிடைக்காது என்று சொல்கிறார். ஆனால் அவன் மனம் ஏற்க மறுக்கிறது. அப்போது அவர் ஒரு காரியம் சொல்கிறார் அதாவது நீ தொடர்ந்து ஏழு நாட்கள் தூங்காமல் கண்விழித்து இருந்தால் உனக்கு ஒருவேளை நான் பரிசிலினை செய்வேன் என்கிறார் அதற்குச் சம்மதித்து ஆரம்பிக்கும் முதல் நாளே தூங்கிவிடுகிறான் அவன் தூங்கும் ஒவ்வொரு நாளும் ஒரு ரொட்டி சுட்டு வைக்கச் சொல்லி அவரின் மனைவியிடம் சொல்கிறார்.
அவன் தூங்கிவிட்டதால் அந்த பலன் கிடைக்காமல் அவன் திரும்பிவிட்டுடுகிறான் அப்போது அவரின் மனைவி அவன் மீது பாவம் கொண்டு அவனுக்கு உதவவேண்டும் என்று என்றும் இளமையாக இருக்கும் பூவினை பறித்துப் போகச் சொல்லி அவரிடம் பரிந்துரைக்கிறாள் அத்துப்படி அவனும் பறித்து வருகிறான் ஆனால் வரும் வழியில் ஒரு சர்ப்பம் அந்த பூவை உண்டுவிடுகிறது, இறுதியில் வெறுங்கையுடன் வருகிறான் ஊருகி நகருக்கு.
இந்த கதையில் சொல்லப்படும் இந்த சாகா வரம் பெற்ற மனிதன், தனக்கு எப்படி இந்த வரம் கிடைத்தது என்பதைச் சொல்லும் பொது அந்த கதைகள் "பைபிள்" மற்றும் "குரான்" லில் இருக்கும் நோவா பேழை என்ற கருத்தை சொல்லுகிறது. அதாவது இறைவன் மனிதர்கள் அநீதி செய்கிறார்கள் எனவே அவர்களை ஒரேமூச்சில் அழித்து விட்டு ஒரு புதிய உலகம் படைக்கவேண்டும் என்பதற்காக ஒரு பிரளயத்தினை உருவாக்குகிறார் அப்போது எந்த குற்றமும் செய்யாத நோவாவிடம் ஒரு படகு செய்து அவற்றுள் சகல ஜீவராசிகளையும் ஒவ்வொரு ஜோடியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தேவையான உணவுப்பொருள்கள் என அவருக்கு கட்டளையிடுகிறார். அதுபோலவே இங்கு "உத்பிஷ்டி"க்கும் அவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றும் அதனால் தான் இவர்க்கு இந்த சாகா வரம் கிடைத்து என்றும் சொல்கிறார்.
எழுதியது யாரென்றே தெரியாத இந்த கதை படிக்கும் போது விறுவிறுப்பாகச் செல்கிறது. முடியாத என்று எதுவுமில்லை எனவும் நிரந்தர பகைவன் என்பவன் யாரும் இல்லையென்றும் சொல்லும் இந்த கதை இறுதியில் மனிதன் தனது வாழ்வில் என்றாவது ஒரு நாள் மரணத்தினை சந்தித்தே தீரவேண்டும் என்ற இயற்கையின் நீதியினை தெளிவாக விளக்குகிறது.
தான் சாகாமல் வாழ வேண்டும் என்ற கனவுடன் போராடிய கில்காமெஷ் ஒரு நேரத்தில் மரணத்தினை சந்திக்க நேரிடுகிறது.
பல்வேறு நிகழ்வுகளைக் கனவுகளின் மூலமாக நாயகர்கள் தெரிந்து கொள்வதும் அதற்காக அவற்றிலிருந்து எப்படிப் பிழைத்துக் கொள்ளவேண்டும் என்ற வழியினை கண்டறிய உதவுகிறது.
மொத்தத்தில் இது மனிதக் குலத்தின் பூர்வ சரித்திரம். ஆடையின்றி அலைந்தவன், ஆலயத்தில் புழங்கும் தாசிகள், போர் வெறியர்கள், வேதாகமத்திற்கு முந்திய பிரளயம் எனப் பல்வேறு காட்சிகள் நம்மைப் பரவசப்படுத்துகின்றன இத்தனை அம்சங்களும் கொண்ட ஒரு அருமையான உலக காவியம்தான் கில்காமெஷின் கதை.
\அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
30 அக்டோபர் 21
No comments:
Post a Comment