இந்தியக் கலைச் செல்வம்
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய்
பக்கங்கள்
இந்தியக் கலைச் செல்வம் - இந்த நூல் உண்மையிலே ஒரு கலைச் செல்வம் தான். இந்த புத்தகத்தில் எத்தனை தகவல்கள்.
இந்தியாவின் புகழ்பெற்ற கலைகள் எல்லாம் பட்டியலிட்டிருக்கிறது. பாரத தேசத்தின் பண்புகள், கலைகள், நாகரிகம், கலாச்சாரம் என்று எல்லாம் ஒன்றாக உருவாகி இன்றளவும் நிலைத்திருக்கிறது.
"கலை" என்ற இந்த ஒரு சொல்லுக்கு மிக எளிதாக விளக்கம் சொல்லிவிடமுடியாது. கலைகளை இவ்வாறாகப் பிரித்துச் சொல்லலாம் அவைகள் கவிதை, இசை, சித்திரம், நடனம் மேலும் பல்வேறு கலைகளைச் சொல்லலாம். ஆனால் நாம் எல்லோரும் அன்றாடம் காண்பது இவைகளேயே.
நமது தேசத்தில் பிரசித்தி பெற்ற எண்ணற்ற கலைகள் இருக்கிறது அவற்றுள் முதன்மையாக இந்த புத்தகம் "அஜந்தா - எல்லோரா" வை பற்றித்தான் பேசுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் என்ற மாவட்டத்தில் இருக்கிறது. அஜந்தா குடவரைகளின் சிறப்பான அம்சம் அங்குள்ள சித்திரங்கள் தான். காலத்தால் அழியாத ஒரு அற்புதமான படைப்பு அந்த சித்திரங்கள். அதுபோலவே எல்லோரோவும் உலக புகழ்பெற்றது தான் இந்த சித்திரங்கள் இந்து, சமணம் மற்றும் பௌத்தம் என மூன்று சமயங்களும் ஒன்றி உரையாடுவதுதான் என்கிறார். நாம் வாழ்வில் ஒரு முறையாவது காணவேண்டிய கலையுலகம் தான் இந்த அஜந்தா மற்றும் எல்லோரா.
கஜீராஹோ - இந்திய நாட்டின் கட்டிடக் கலையினை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவைகள் நாகரம், வேசரம் மற்றும் திராவிடம் என்கிறார். ஆனால் ஆங்கிலேயர்கள் இவற்றுள் நாகரம் மற்றும் வேசரம் இவற்றை இண்டோ -ஆரியன் என்று விதமாகக் கருதினார்கள். இவ்வகையில் புவனேஸ்வரத்தில் இருக்கும் கஜீராஹோ கோவில் இண்டோ -ஆரியன் கலையில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் சிறப்புகளையும் அங்கு அமைந்திருக்கும் இந்த பகுதியில் இருக்கும் ஏராளமான கோவில்களைப் பற்றிப் பேசுகிறது. சந்திரவம்ச அரசர்கள் அதிக கோவில்களைக் கலை நயத்துடன் நிர்மாணித்திருக்கிறார்கள்.
ஹொய்சலர் மன்னர்கள்: கிருஷ்ணா நதியின் தென்புறம் உள்ள மைசூரில் தங்களது ஆட்சிக் காலத்தில் பல்வேறு கோவில்களைக் காட்டியுள்ளனர். இந்த ஹொய்சலர்கள் முதலில் துவாரகையிலிருந்த யாதவர்கள், இவர்கள் துவாரகையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக இங்கு வந்து குடியேறினார்கள் என்கிறார், மட்டுமல்லாமல் இவர்களின் கலை ரசனையும் திறனும் இன்றளவும் பேசப்படுகிறது ஏனெனில் இவர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டிய கோவில்கள் இன்றும் பெயர் சொல்கிறது. ஹலபேடில் உள்ள ஹொய்சலேஸ்வரர் கோவில், பேலூரில் உள்ள சென்ன கேசவர் கோவில் மற்றும் சோமநாதபுரத்துக் கேசவர் கோவில் என மூன்று பெரிய கோவில்கள் கட்டிடக்கலைக்கு, சிற்பச் செல்வத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு கலைக்கோயில்களில் மிகவும் சிறப்பான நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்திருப்பது இந்த ஹொய்சலர் கோவில்களே என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார்.
தமிழர் சிற்பக் கலை மற்றும் தமிழர் கோவில்கள்.
தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள், நாயக்கர்கள் என அவரவர் ஆட்சி புரிந்த மண்ணிலும் காலத்திலும் ஏற்படுத்திய கலைகளின் சுவடு காலத்தால் அழிக்க முடியாதது என்று தான் சொல்லவேண்டும்.
பல்லவர்களின் சிற்பம் இன்றளவும் மாமல்லபுரத்தில் பெயர்சொல்லிகொண்டேதான் இருக்கிறது மட்டுமல்லாமல் இவர்கள் கட்டிய காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இன்றளவும் பல்லவர்களின் புகழை ஓங்கிக் காட்டுகிறது.
சோழ மன்னர்கள் கட்டிய கோவில்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம் அவற்றுள், தஞ்சாவூர் பெரிய கோவில் இன்றும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது என்றால் இவர்களின் கட்டிடக் கலையின் திறமை மற்றும் அவர்கள் அன்று செய்த விலை மதிக்கமுடியாத அர்ப்பணிப்புதான் காரணம் என்றே சொல்லவேண்டும். சோழர்கள் ஆண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் அதுவும் ஒவ்வொரு கோவிலும் ஒரு தனிச்சிறப்பினை சொல்லி ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என்றுதான் சொல்வது வழக்கம் ஆனால் ஆசிரியர் சொல்கிறார் தஞ்சாவூர் கலைகளின் களஞ்சியம் என்று. தஞ்சாவூர் முதல் பூம்புகார் (காவேரிப்பூம்பட்டினம்) வரை இவர்கள் கட்டிய கோவில்கள் ஏராளமானவை. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில், திருபுவனம் கோவில், கும்பகோணத்தில் திரும்பிய தெருவெல்லாம் ஒரு பெரிய கோவில் இருக்கும், சீர்காழி, திருவென்காடு, திருமணஞ்சேரி, கோனேரிராஜபுரம், திருநல்லம், தென்குரங்காடு என பல்வேறு கோவில்களை அமைத்துள்ளனர். இந்த கோவில்களில் வீற்றிருக்கும் மூலவர்களின் சிலை வடிவமைத்த கலை நுணுக்கம், வெளிப் பிரகாரங்களில் இடம்பெற்றிருக்கும் சிற்ப வேலைகள் என இன்றளவும் பேசப்படுகிற புகழ்வாய்ந்த சிற்பங்கள் தான் என்று சொல்லவேண்டும்.
பாண்டிய மன்னர்களும் கலையில் சிறந்தவர்கள் தான், இவர்களின் கலையும் வெவ்வேறு கோவில்களில் தங்களுக்கு இருக்கும் சிறப்பான திறமையினை வெளிப்படுத்தியிருக்கிறது.
தமிழர்கள் கலையில் வெவ்வேறு பரிணாமங்களில் பெயர்பெற்று இருந்தனர், நடனம், ஓவியம், சிற்பம், இசை போன்ற பல்வேறு கலைகளில் இவர்கள் அதீத ஈடுபாடுகள் கொன்றிருந்தனர். தமிழ் மண்ணில் மட்டுமல்லாமல் தாங்கள் சென்ற இடமெல்லாம் தங்களின் கலைகளின் சுவட்டினை விட்டுச் சென்று வந்திருக்கின்றார்கள். மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் இலங்கை என பல்வேறு நாடுகளில் தங்களின் கலையினை பெரிதாக வளர்த்துவிட்டுத் தான் வந்திருக்கின்றனர்.
இவ்வாறாக வளர்த்து வந்த இந்த கலைகளில் பெரும்பாலான கலைகளை நாம் இன்று மதிப்பது இல்லை அல்லது அதன் மதிப்பு தெரிந்து கொள்ளக் கூட ஆசைப்பட்டதே இல்லை என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான கோவில்கள் சிதிலம் அடைந்து விட்டன, சில கோவில்கள் இன்றும் பராமரிக்க படுகிறது இதற்காக முன்னோர்கள் நிலத்தையும் இந்த கோவில்களின் பணிகளுக்காக எழுதி வைத்துவிடுகின்றனர், அதன் படியே இந்த நிலங்களும் விவசாயம் செய்யப்படுகிறது கடைசியில் குத்தகை நெல் கொண்டுவந்து கோவிலின் களஞ்சிய பெட்டகத்தில் கொட்டிவைக்கப் படுகிறது. ஆனால் இதுவோ பல்வேறு மக்களளால் கொள்ளை அடிக்கப்படுகிறது இதுதான் இன்றைய நிலைமை என்றே சொல்லவேண்டும்.
கலைகளின் தொடர்பான ஒரு நல்ல நூலினை வாசித்த அனுபவத்தினை பகிர்ந்துகொள்கிற மன நிறைவுடன் இந்த பதிவினை பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
01 அக்டோபர் 2021
No comments:
Post a Comment