Wednesday 17 November 2021

புல்புல்தாரா - வாசிப்பனுபவம்

 புல்புல்தாரா 

நாவல் 

பா. ராகவன் 

கிண்டில் பதிப்பு 

பக்கங்கள் 277

விலை ரூபாய் 150 


இந்நாவல், கல்கியில் தொடராக வெளிவந்தது. தற்பொழுது கிண்டில் பதிப்பாகவும், அச்சு பதிப்பாகவும் கிடக்கிறது. வாசிக்க ஆரம்பித்தால், நாமும் நிச்சயமாக  மோனாவின் பயணத்தில் கூடவே சென்றுகொண்டிருப்போம். அவள் எங்கே நிற்கிறாளோ அதுவரையில் உங்களின் வாசிப்பும் நிற்காது என்பது   நிச்சயம். 

உறவுகளின் வலிமையையும் அதற்காக அந்த உறவுகள் உள்ளுக்குள்ளே தாங்கிக்கொள்ளும் வலிகளையும் ஒரே ஒரு குடும்பத்தில் கோணத்திலிருந்தது உணர்ச்சிகளின் பெரும்பகுதியினை மிக அழகாகவும்,  மிக நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார். 

கதையின் நாயகி மோனாவின் பாத்திரத்தின் வழியே நம்மை அந்த குடும்பத்தில் ஒருவனாக  அழைத்துச் செல்கிறார்.

வாழ்வில் ரகசியம் இல்லாவிட்டால் ஒரு சுவாரசியம் இல்லாமல் போவது உண்மைதான். ஆனால் முழு வாழ்க்கையும் ரகசியத்தின் முடிச்சுகளினால் இறுக்கிக் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் கதை. 

அப்பாவுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உரையாடல்கள் ரசிக்க வைக்கிறது. அப்பா ஏட்டு என்பதால் அவரை "ஏட்டு" என்றே மிடுக்காக அழைக்கும் மோனாவின் பாசம் இறுதிவரைக்கும் ஒரு கடுகளவு கூட குறையாமல் இருப்பதுதான் இந்த கதையின் பலமே.

ஒரு குடும்பம் சூழ்நிலையின் காரணமாகக் கணவனும் மனைவியும் பிரியும் சமயத்தில் அப்பாவுடன் இளைய பெண்ணும், அம்மாவுடன் பெரிய மகனும், பெரிய மகளும் செல்கின்றனர்.

அம்மாவுடன் இருக்கும் இருவரும் அம்மாவின் மீதிருந்த பாசமும் மரியாதையும் வெளிப்படுத்தும் விதமாக அம்மா கிழித்த கோட்டை தாண்டாத பிள்ளைகளாக இருக்கின்றனர்.

அப்பாவுடன் இருக்கும் பெண் "மோனா" எப்போதும்   சுதந்திரமாகவே  இருக்கிறாள்.

மோனாவின் மனதில் அவளின் கூடவே படிக்கும் மனோகர் காதல் விதையினை விதைக்கிறான். அவள் சாதாரண பெண் போல இல்லாமல் அப்பாவிடம் சொல்லிவிட்டுத் தான் அவனுக்குச் சரியா இல்லையா என்று சொல்வேன் என்று பதில் சொல்லிவிடுகிறாள்.

தனது காதலை மனோகரிடம் சொல்லப்போகும் மோனாவிற்கு கிடைத்த  ஒரு பெரிய அதிர்ச்சி தான் கதையின் திருப்பமாக இருக்கிறது. அவள் காதுக்கு வரும் அந்த செய்தி அவளை ஒரு பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அங்கிருந்து வீட்டுக்கு வரும் அவளுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி. 

ஒரு பெண்ணுக்குத் தனது இருபது வயதிற்கு மேல் தெரிய வரும் தனது  பிறப்பின் ரகசியம் பற்றிய தெரியாமல் இருக்கும் விவரங்கள் எந்தளவு மனதைப் பாதிக்கும் என்பதையும் கடந்து அவள் அந்த ரகசியத்தினை நிதானமாகத் தேடுகிறாள்.

அவள் மனதில் இவர்கள் தான் அப்பா, அம்மா என்று இதுவரையில் குடியிருந்தவர்கள் இப்போது இவர்கள் இல்லையென்று தெரிந்ததும் அவள் அம்மாவிடம் ஏன் என்று கேட்கச் செல்கிறாள். அங்கேயும் அவளுக்கு ஒரு புதிய அதிர்ச்சி கிடைக்கிறது.

குதுகூலமாக துள்ளித் திரிந்த அவளுக்கு திடீரென எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு ஒரு தனியறையில் சிறைப்பட்டது  போல ஒரு நிலைக்கு வருகிறாள்.

மீண்டும் மீண்டும் அவளை நோக்கிப் பாயும் ஒவ்வொரு அதிர்ச்சியும் தாங்கிக்கொள்ளும் நிதானமான பெண்ணாக வளம் வருகிறாள் மோனா


அப்பாவின் வாழ்வில் எந்த ஒரு ரகசியமும் இல்லை என்று எக்களித்துக்கொண்டிருந்த மோனாவிற்கு ஒரு புள்ளிக்குப் பிறகு அப்பாவின் வாழ்வு முழுவதும் மறைத்து வைக்கப்பட்ட ஒரு பெரிய ரகசியத்தின் மூட்டை என்று தெரியவருகிறது. அதில் இதுவும் ஒரு ரகசியம் அது அவள் அப்பாவிற்கு "புல்புல்தாரா" என்ற இசைக்கருவியை நன்றாகவே வாசிக்கத் தெரியும் என்பது.

ஒருமுறை வாசித்துத் தான் பாருங்களேன் மோனாவின் பிறப்பின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள.

வாசித்து முடித்த பிறகு, எனது மனதை விட்டு விலகாமல் இருப்பது இத்தனை பேரதிர்ச்சிக்கும் பிறகும் மோனா தனது அப்பாவின் மீது அவள் செலுத்தும்  இயல்பான பாசம் ஒரு துளிகூட குறையாமல் இருப்பதே.    

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

15 நவம்பர் 2021