சில நேரங்களில் சில மனிதர்கள்
ஆசிரியர் : ஜெயகாந்தன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 404
பக்கங்கள் 503
ஜெயகாந்தனின் எழுத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த புத்தகம். எத்தனை விதமான மனித முகத்தில் உலாவரும் கதாபாத்திரங்கள், ஒவ்வொரு பாத்திரமும் வாழும் வாழ்வு தான் இந்த கதையின் பலம் கங்கா.
இந்த நாவல் பேசும் கதை ஒரு பெண்ணின் துயர கதை. தனக்கு நேர்ந்த ஒரு துயர சம்பவத்தால் தன் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கி விட்ட சமுதாயத்தில், தன்னாலும் வாழ முடியும், அதுவும் என் எண்ணம் போலவே தான் என்னால் வாழ முடியும் என்று தனது மனத்திற்கு உகந்ததாக அந்த வாழ்க்கையினை வாழ்ந்து செல்லும் கங்கா என்ற ஒரு இளம்பெண்ணின் உளவியல் ரீதியான பல்வேறு மன போராட்டங்களைக் காட்சிப் படுத்திச் செல்கிறது இந்த நாவல். முழுவதும் கங்கா அவள் நினைத்த அவளின் வாழ்க்கையை நம்மிடம் அவளாகவே சொல்லிச் செல்கிறாள்.
அக்னி பிரவேசம் சிறுகதை வாசித்த பிறகு அந்த சிறுகதையினையே கருப்பொருளாக வைத்து ஒரு மாபெரும் நாவலாக மாற்றி எழுதியிருக்கிறார் என்று அதை உடனே வாசிக்கத் தூண்டியது.
ஒரு சிறுகதையின் முடிவினை மாற்றி அமைத்து அதனையே கதைக் களமாகக் கொண்டு ஒரு பெரிய நாவலினை, ஆரம்பத்தில் "காலங்கள் மாறும்" என்ற தலைப்பில் ஒரு தொடர்கதையாகத் தினமணி கதிரில் வெளிவந்தது. பிறகு இந்த தொடர்கதை ஒரு நூலாக உருப்பெற்ற சமயத்தில் இந்த நாவலுக்குச் சரியான தலைப்பு என அவர் நினைத்ததைத் தலைப்பாக வைத்தார் அப்படி வந்தது தான் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற தலைப்பு.
ஒவ்வொரு பாத்திரத்தின் வார்ப்பும் அந்த பாத்திரத்தின் குணாதிசயங்கள் மற்றும் தன்மையினையும் ஆரம்பத்திலேயே புரிந்து கொள்ளும்விதமாக அமைந்திருக்கிறது.
கங்கா, ஒரு கல்லூரி மாணவி, ஒரு நாள் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்துக்காக காத்திருக்குக்கும் அந்த மாலை வேளையில் மழையும் பெய்கிறது. அந்த நேரத்தில் பேருந்து வராமல் இருக்க அந்த இளம் பெண்ணை ஒரு வாலிபன் தனது வாகனத்தில் ஏற்றிச் செல்கிறான் அவனிடம் சந்தர்ப்ப சூழ்நிலையில் தன்னையே இழந்து விட்டு வீடு திரும்புகிறாள்.வந்தவுடன் தனது தாய் கனகத்திடம் சொல்லி அழுகிறாள் உடனே அந்த தாய் இதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று \சொல்லி அவளை நீராடி அவளை அவளுக்கு ஏற்பட்ட கரையிலிருந்து கழுவிட்டு, நீ இனிமேல் புனிதமாகிவிட்டாய் என்று தனது மகளை தேர்த்திக்கொள்கிறாள். இப்படி ஒரு முடிவிடுடன் "அக்னி பிரவேசம்" என்ற சிறுகதையினை முடிந்ததால் மக்களிடம் ஏற்பட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்குப் பதிலாகவே இந்த நாவல் தொடர்ந்தது.
அதே சிறுகதையின் முடிவினை மாற்றி, அந்த கங்காவின் தாய் அவளின் மகனிடம் சொல்லி அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் கங்காகவும் அவளின் அம்மாவும் தனியே விடப்படுகிறாள். அவள் அண்ணன் அவளைக் கொச்சைப்படுத்திப் பேசுகிறான். அப்போது கங்காவின் மாமா அவளுக்கு அடைக்கலம் கொடுத்து அவளை மேலும் படிக்க வைக்கிறார். அவளும் பெரிய அளவில் படித்து நல்ல வேலைக்குச் செல்கிறாள். அவள் ஒரு தன்னிறைவான வாழக்கையை தனது அம்மாவுடன் நடத்துகிறாள்.
கங்காவிற்கு உதவிய மாமாவின் குணாதிசயங்களை மாமாவின் மனைவியிடம் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளும் கங்கா மாமாவின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டி கணித்து அதற்குத் தகுந்தாற்போல மிக நேர்த்தியாகத் தன்னை பாதுகாத்துக்கொள்கிறாள். ஆனாலும் மாமாவிற்கு அவள் மேல் ஏற்பட்ட சபலம், அதனால் அவர் ஒவ்வொருமுறையும் அவளிடம் நடந்துகொள்ளும் விதம் எனச் சமுதாயத்தில் அந்த மாதிரி உறவுகளின் போர்வையில் உலாவரும் ஒரு பாத்திரமாக மாமாவின் பாத்திரத்தினை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.
கங்காவின் அம்மா கனகம், தனது பெண் வாழ்க்கையே தொடங்காமல் தனித்து தன்னுடன் வாழும் தனது பெண்ணின் நிலைமையினை எண்ணி எண்ணி ஒவ்வொரு மணித்துளியும் அவள் படும் துயரம், அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்குச் சொல்லிச் செல்கிறது. கனகத்தின் இயல்பான பாத்திரம் ஒரு ஆதங்கமான அம்மாவாக அவள் வாழ்ந்து செல்கிறாள்.
கதையின் முக்கியமான பாத்திரமாக வாழும் பிரபு, இளமையிலே தனது அப்பாவின் செல்வாக்கில் வாழும் அவன் பணத்தால் எல்லாவற்றையும் பெறமுடியும் என்ற போக்கில் தனது இளமை வாழ்க்கையினை வாழ்ந்து செல்கிறான். அப்படி அவன் தனது இளம் வயதில் செய்த ஒரு விளையாட்டால் பாதித்தது கங்கா. கங்கா தான் வாழ்வில் பாதித்து இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியாது. ஏனெனில் அவள் வாழ்வில் நித்தம் ஒருவர் வந்து செல்கிறார்கள் அதைப்போலவே அந்த பட்டியலில் கங்காகவும் ஒருத்தி. ஆனால் அது கங்காவிற்கு மற்றவர்களைப் போல இல்லாமல் அவள் தனக்கு நேர்ந்த இந்த விஷயத்தினை அம்மாவிடம் சொல்லி அது பெரிய பிரச்சினையில் போய்ச் சேர்கிறாள். அவள் ஒரு தனி விதமான பெண், தன்னறியாமலே நடந்தேறிய அந்த தவற்றை நினைத்து தனது வாழ்வின் அணைத்து சுகங்களையும் துறந்து வாழ்கிறாள்.
கிட்டத்தட்டப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு கங்காவிற்கு தனக்கு ஏற்படும் அவமானங்களும், அதனால் ஏற்பட்ட பல்வேறு இழப்புகளும் அவளைப் பின்தொடரும் சில பார்வைகளும் அவளை ஒரு வழியில் தன்னை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்த அவனை எப்படியாவது கண்டுபிடித்தாகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். அப்படியாக அவள் அவனைத் தேடும்போது அவளின் வாழ்வில் நடந்த அந்த சம்பவத்தை மையமாகக் கொண்ட ஒரு கதையினை கதாசியார் எழுதுகிறார்,எப்படியாவது அவரை கண்டுபிடித்து அங்கிருந்து அந்த அவனைக் கண்டு பிடிக்க வாய்ப்பிருக்கும் என்ற எண்ணத்தில் அவளும் முயல்கிறாள் அதில் அவள் வெற்றியும் காண்கிறாள்.
மீண்டும் அந்த அவனை அவள் சந்தித்தபோது ஏற்படும் உரையாடல்கள் அவர்கள் இருவரையும் ஒரு புதிய நிலைக்குக் கொண்டுசெல்கிறது. அப்படியாக அவள் ஆரம்பிக்கும் அந்த உறவு அவளைத் தற்காத்துக்கொள்ள வேண்டி அவள் ஆசைப்படுகிறாள். பிரபுவின் ஆசை நாயகி தான் என்ற ஒரு உறவில் வாழ்ந்தால் அவளுக்கு நேரும் பல்வேறு இடையூறுகளிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் அவள் நினைப்பது ஒருவழியில் சரியானதே. ஆனால் அவளுக்கு அவள் வீட்டிலிருந்து வரும் நெருக்கடிகள் அவளை மேலும் மனதில் துயருக்குள்ளாகிறது.
அம்மாவின் அழைப்பில் பேரில் வீட்டிற்கு வரும் மாமா அவளிடம் தனது இச்சையினை மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்க்கிறார், ஒரு நேரத்தில் அவள் முன்புபோல இல்லாமல் தற்போது துணித்தவளாய் அவருக்குக் கொடுக்கும் பதிலடியில் அவர் உறவையே முடித்துக்கொண்டு போய்விடுகிறார்.
கங்காவிற்கு, பிரபுவின் மனைவி மற்றும் மகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மஞ்சுவினை அவளுக்கு அதிகம் பிடித்துப்போக அவளுக்கு ஒரு ஆசானாகவே மாறுகிறாள். இருவருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் நல்ல உறவாக மலர்கிறது.
பிரபு மற்றும் கங்கா இருவரும் நித்தமும் சந்திக்கின்றனர். இவர்களிடையே ஒரு விதமான உறவு நீடிக்கிறது. அவள் அவளாகவும் அவன் தற்போது பொறுப்புடையவனாகவும் கொஞ்சம் காலம் வளம் வருகிறார்கள். இதுவும் அவளுக்கு நிரந்தரம் அல்ல என்ற நிலையாகிப் போகிறது அவளது வாழ்க்கை. கதையாசிரியரின் உறவினர் கங்காவை திருமணம் செய்துகொள்வதாக ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அதன்பொருட்டு கங்காவின் அம்மா அவளிடம் வந்து சேர்கிறாள், அவள் அண்ணனும் பிரபுவைச் சந்தித்து அவன் நினைத்ததைச் சொல்கிறான். அதன்படி பிரபுவும் இனி நான் அவளைச் சந்திக்க மாட்டேன் என்றும் சொல்கிறான், சொல்வதுமட்டுமல்ல அவன் அவனின் வாக்கின் படியே முற்றிலும் மாறுகிறான். அவனின் இந்த மாற்றம் மீண்டும் கங்காவின் வாழ்வில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் தான் இந்த கதையின் மிகவும் முக்கியமான திருப்பமாக இருக்கிறது.
ஒரு பெண், தனக்கு நேர்ந்த ஒரே ஒரு துயரத்தால் அவள் தள்ளப்படும் நிலை சமுதாயத்தால் அவளுக்கு நேர்ந்த அந்த அவமானங்கள் என அவள் மனதில் தீராத ரணமாகிப் போய்விட்டது. அதிலிருந்து அவள் மீண்டு வர இயலாமல் அவள் மதுவுக்கும் புகைக்கும் அடிமையாகி அவள் வாழ்வே மாறிப்போகிறது.
அவள் எடுக்கும் முடிவினை வாசிக்கும் நமக்கும் ஏற்க முடியாமல் மனம் ஒருவிதத்தில் தத்தளித்துச் செல்கிறது.
ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு அவமானங்களை எதிர்கொண்டு அவள் தனக்கென ஒரு தனி வழியில் வாழ்ந்து காட்டுகிறாள்.
அப்படியாக தனது வாழ்வின் வாசலை மாற்றி அமைத்துக்கொண்ட அந்த அவள் ஜெயகாந்தனின் கதையில் வரும் நாயகி கங்காவாகதான்.
இந்த கதையின் முடிவுதான் இந்த கதையின் மிக பெரிய பலமாக பேசப்படுகிறது.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
3 ஜனவரி 2023
No comments:
Post a Comment