Monday, 2 January 2023

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆசிரியர் - ஜெயகாந்தன்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்  

ஆசிரியர் - ஜெயகாந்தன் 

காலச்சுவடு பதிப்பகம் 

தமிழ் கிளாசிக் நாவல் 

பக்கங்கள் 319

விலை ரூபாய் 375

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -  இந்த நாவல் தான் அவர் எழுதியவற்றிலே மிகவும் அவருக்குப் பிடித்தது என்று ஜெயகாந்தன் சொல்லியிருக்கிறார்.

இந்த கதையின் பயணிக்கும் கதைமாந்தர்கள் கூடவே நானும் அதன் அழகிய கிருஷ்ணாபுரம் மற்றும் குமார புரம் ஆகிய ஊர்களில் கொஞ்சம் நாள் வாழ்ந்துவந்த ஒரு உணர்வினை தந்து செல்கிறது இந்த நாவல். அவர்கள் கூடவே நானும் அந்த லாரியில் பயணிக்க ஆரம்பித்தேன். இறுதியில் அவன் புதுப்பித்த அந்த புது வீட்டின் விழாவில் உணவை ருசித்து விட்டு வந்துதான் இந்த பதிவினை பதிவிடுகிறேன்.

மொழி, இனம், தனது பிறப்பின் ரகசியம் என எதுவுமே தெரியாத ஹென்றி அவன் வாழும் விதம் முற்றிலும் அருமையாக கையாளப்பட்டிருக்கிறது. படித்து பள்ளியில் ஆசிரியராக இருக்கும் தேவராஜன் அவனது அக்கா அக்கம்மாள்,  லாரி ஓட்டும் துரைக்கண்ணு, லாரி உதவியாளர் பாண்டு, மணியக்காரர், தருமகர்த்தாபோஸ்ட் ஐயர், ஹோட்டல் காரர் மற்றும் என கிருஷ்னராஜபுரத்தில் வாழும் ஒவ்வொருவரின் பாத்திரமும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. இது ஒரு கிராமத்தில் எப்படி இருக்குமோ அதுபோலவே அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இவர்களுடன்  கதையின் முக்கிய பாத்திரமாக வாழ்ந்து செல்லும் பப்பா சபாபதி மட்டும் மம்மாவும் எனக் கதை அருமையாக இருக்கிறது.

அந்த ஊரின் புலவர் வீடு என்று பெருமையாகச் சொல்லப்படும் வீட்டின் ஒரு மகன் சபாபதி, அவரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்ற அதே நாளில் யாருக்கும் தெரியாமல் அவர், தனது வீட்டைப் பூட்டிவிட்டு ஊரைவிட்டு வெளியேறுகிறார்.  ஊரைவிட்டு வந்தவர் ராணுவத்தில் வேலைபார்க்கிறார். அந்த நேரத்தில் பர்மாவில் யுத்தத்தில் இருக்கும் பொழுது தனது நண்பர் மைக்கேல் இறந்துபோகிறார். நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க நண்பரின் மனைவி அழைத்துவருகிறார் அதேநேரத்தில் வரும் வழியில் கேட்பாரின்றி கிடந்த ஒரு குழந்தையும் எடுத்துவருகிறார். அப்படியாக அவர்களிடம் வந்து சேரும் அக்குழந்தை தான் ஹென்றி. அவர்கள் பெங்களூரில் வந்து வாழ்கின்றார்கள். அன்றிலிருந்து சபாபதி ஹென்றிக்கு பாப்பாவும் ஆங்கிலோஇந்தியன் பெண் மம்மவாகவும் வாழ்கிறார்கள். பிறகு பப்பா ரயில்வேவில் வேலைக்குச் சேர்கிறார். 

காலப்போக்கில் முதலில் மம்மா இறந்துவிடுகிறார் பிறகு பாப்பாவும் இறந்துவிடுகிறார்.   இவர்கள் மற்றும் தான் தனது உலகம் என்று இருந்த ஹென்றிக்கு பப்பா சொல்லிய அவரின் கிராமத்தின் நினைவுவருகிறது. அங்கிருக்கும் அவரின் பூட்டிய வீடும் மற்றும் சொத்துக்களும் உனக்கே சேரும் என்ற உயிலும் அவர் கொடுக்கிறார். அங்கிருந்த அவரின் கிராமமான கிருஷ்ணராஜபுரத்திற்கு  வந்து சேருகிறான்.

இங்கு வரும் ஹென்றிக்கு தேவராஜன் நண்பராகிறான். அவன் வீட்டிலே தங்கவைத்துக்கொள்கிறான். அவன் வீட்டிற்கு எதிரே இருக்கும் வீடுதான் 30 வருடத்திற்கு மேலாகப் பூட்டியே இருக்கும் பப்பாவின் வீடு எனத் தெரிந்துகொள்கிறான்.

மணியக்காரர் முன்னிலையில் ஊர்பஞ்சாயத்து கூடி புதிதாக வந்த ஹென்றி இந்த சொத்துக்கள் அனைத்துக்கும் சொந்தம் என அதிகாரப் பூர்வமாகப் பாத்திரங்கள் சொல்கிறது ஆனால் என்ன செய்யலாம் என்ற கூடிப் பேசிக்கொள்கின்றனர். சாதாரணமாக ஊர் மக்கள் எப்படியெல்லாம் பேசுவார்களோ அப்படியே உரையாடல்கள் நடக்கிறது. இறுதியில் துரைக்கண்ணு எல்லாவற்றையும்  ஹென்றிக்கே கொடுத்துவிடவேண்டும் அதுதான் ஞாயம் என்கிறான் அதே சமயம் ஹென்றி நான் இந்த சொத்துக்களுக்காக வரவில்லை இது என் பப்பா வாழ்ந்த ஊர் அவர் என்னை விட்டுப் போனபிறகு அவர் வாழ்ந்த வீட்டில் வாழலாம் என்றுதான் இங்கு வந்தேன் அதனால் வீடு மற்றும் எனக்கு போதும் என்கிறான். அப்படியே அனைவரும் ஒப்புக்கொண்டு தீர்ப்பு நடக்கிறது.

துரைக்கண்ணு, நன்றியைப் பாசமாகத் தனது அண்ணனின் மகன் எனப் பார்த்துக்கொள்கிறான். அந்த வீட்டையும் பப்பா வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதுபோலவே கட்டிவிடுகிறார்கள்.  துரைக்கண்ணு மற்றும் அவனுடைய முழு குடும்பமும் தங்கள் வீட்டுப் பிள்ளை போலவே பார்த்துக்கொள்கிறார்கள். 

இடையில் நிர்வாணமாக ஒரு பெண் வருகிறாள் அவளைப் பற்றி துரைக்கண்ணு ஏற்கனவே சொல்லியிருக்கிறான். ஆனால் அன்று அவள் ஹென்றி வீட்டிற்கும் இடத்திற்கே வருகிறாள். அவள் அவன் பேசுவதை மட்டும் கேட்டுக்கொள்கிறாள் அவன் கொடுக்கும் உடையினை அணிந்து கொள்கிறாள்.பிறகு அக்கம்மாவிடம் இருக்கிறாள். ஹென்றி அவளுக்கு பேபி என்று பெயரிடுகிறான்.

மணியக்காரர் இறந்து போகிறார், அவரின் மகளுக்கு குழந்தை பிறக்கிறது, அவளின் கணவன் அவளை விட்டுப் பிரிந்து இருக்கிறான். 

பிரிந்து இருந்த தேவராஜனின் மனைவி அவனுடன் வந்து சேர்கிறாள். அக்கம்மாள், தேவராஜனின் அக்காவாகவும் அம்மாவாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.  மொத்த கதையிலும் அக்கம்மாவின் பெயர் ஒரே ஒரு முறை மட்டுமே வருகிறது ஏனெனில் அவள் அக்கம்மாவாகவே வாழ்கிறாள்.

சின்னான், மண்ணாங்கட்டி, பாண்டு மற்றும் பள்ளி படிக்கும் சிறுவர்கள் என அவரவர்கள் சிறப்பாக வந்துசெல்கின்றனர்.

மொத்தத்தில், சபாபதி அவர்களின் உலகமாகத் திகழ்ந்த அந்த  வீட்டில் ஹென்றி,  தேவராஜன், துரைக்கண்ணு மற்றும் அந்த கிராமத்தினருடன் சிறிது காலம் வாழ்ந்த ஒரு அனுபவம் தான் இந்த "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்".


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 டிசம்பர் 2022

No comments:

Post a Comment