Sunday 23 August 2020

ஊர் திரும்புதல் - 23

அறுவடை 


தை பொங்கலின் கடைசி நாள் அன்று இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட அவனுடைய கிராமத்து மக்கள் தங்களின் வயல்களில் அறுவடை செய்வதைப்பற்றி  பேசிக்கொண்டே சென்றனர்.


மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே அவன் வீட்டிலிருந்து அறுவடைக்கு அரப்பு  அரிவாளுடன் கிளம்பினான். தை மாதம் அதிகாலை குளிரும்  இருளும்   விலகாத   நேரம், விக்ரமனாற்றில்  சலசலவென்ற  சத்தத்துடன் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பொங்கல் முடிந்தவுடன் தாளடி அறுவடை தொடங்கும் என்பதால்,  அறுவடைக்கு அவனது ஊர் ஆட்கள் போதாதென்று சுற்றியுள்ள பத்து பதினைந்து கிராமங்களில் இருந்து அறுவடைக்கு வருவார்கள். மாணிக்கம் டீ கடையின் வாசலில், வாட்ட சாட்டமான வாலிபர்கள் தலையில் முண்டாசுடன் நீண்டு  வளைந்த   அரப்பு   அரிவாட்களுடன் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களில்  சிலர்  குளிருக்கு  இதமாக  மாணிக்கம்  கடை  டீயுடன்  பீடியும் குடித்து  புகைவிட்டுக் கொண்டிருந்தனர். அவனது ஊரின் ஆட்களும் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.  அதில் அவனும் ஒரு ஆளாக அன்று அவர்களுடன்  சேர்ந்துகொண்டான். 


அப்போதெல்லாம்  தாளடி அறுவடை காலத்தில்  முதல் நாள் அறுவடை செய்து வயலிலே விட்டுவிடுவார்கள். அதிகாலையிலேயே அறுப்பு  வேலை  நடக்க  வேண்டும். ஏனென்றால் நெற்கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும். அதனால்  அறுப்பின்போது  நெல் உதிராமல் வரும்.  மறுநாள் வேறொரு வயலினில் அறுவடை செய்துவிட்டு, பின்னர்  காலை உணவிற்கு பிறகு முதல் நாள் அறுத்த வயலின் நெற்பயிர்களை கண்டுமுதல் செய்வார்கள்.  நெற்கதிர்கள் வெயில்  ஏறிய பிறகுதான்  காயத்தொடங்கும்.  அது  காய்த்த  பிறகு கதிரடித்தால்தான்  வேலை  சுலபமாக  இருக்கும். மதியம் இரண்டு மணிக்கு  மேல்தான்  நெல்லைத்தூற்றுவதற்கு  ஏதுவாக  காற்று  வீசும்.  இந்தக்காரணங்களை  மனதில்  நிறுத்திதான்  வேலை  அட்டவணைகள்  இருக்கும். இயற்கையுடன்  இணைந்து வாழ்த்த  வாழ்க்கையில்,  நம்மவர்கள்  பட்டறிவுடன்  செய்யும்  வேலை  ஒவ்வொன்றுக்கும்  நேரம்  வகுத்து  வந்திருக்கிறார்கள். 




அன்றும் வெள்ளி  முளைக்கும் பொழுதிற்கு  முன்னதாகவே  அவர்கள்   ஒரு வயலில்  இறங்கி  அறுப்பு வேலையைத் தொடங்கினார்கள்.  அருகில் இருப்பவர்களே தெரியாத பனிக்காலைப்பொழுது. ஆட்கள் ஒரு முனையிலிருந்து, மறு முனைக்கு குனிந்த தலை நிமிராமல் சரக்  சரக்கென்று  கதிர்களை அறுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.  பல  அரப்பரிவாள்கள் பயிர்களை  கூடி  எழுப்பும்  ஒலி  கேட்பதற்கே இனிமை.  அவனுக்கு அந்த நாட்களில் முதல் ஓரிரெண்டு நாட்கள் மிகவும்  கடினமாகவும் இருக்கும்.  குனிந்தே  அறுப்பு செய்வதால்,  முதுகுவலி தாங்க முடியாத அளவுக்கு  இருக்கும். ஆனாலும்  எப்போதும் வேலை செய்பவர்களுக்கு இது  சாதாரணம்.  



அந்த நாட்களில்  ஊரே புது  நெல்  வாசனையால்  நிரம்பி  இருக்கும்.  அவன் அவனது ஊர்ப் பண்ணை வயல்களுக்கு மட்டும்தான் அறுப்புக்கு  போவது  வழக்கம். அவனது படிப்பு காலத்தில் அந்த ஓரிரெண்டு வாரங்கள் மட்டும் எப்போதும் அவன் விடுமுறை எடுப்பான்.  அவன் மட்டுமல்ல அவன் வயதில்  இருக்கும் ஐந்தாறு நண்பர்களும் எப்போதும் இதைச்  செய்வார்கள்.  ஏனென்றால், அவன் அறுவடைக்கு ஒருநாள் போனால் குறைந்தது ஒரு  கலம் நெல் கூலியாகக் கிடைக்கும். அப்படியே அந்த பதினைந்து நாட்களில் சுமாராக ஒரு பத்து மூட்டை நெல் சேர்ந்துவிடும்.   அதனால் மூன்று  நான்கு மாதங்களுக்கு  சாப்பாடுக்கு தேவையான நெல் கிடைத்துவிடும்.  அவன் ஊரில் இருக்கும் மற்ற வேலைக்கு செல்லும்  வாலிபர்களும்,  அந்த அறுவடை நாட்களில் வேறெந்த வேலைக்கும் போகாமல்,  அறுவடைக்கு மட்டும் போவது வழக்கம்.

தாளடி வயலில் அறுவடைக்கு  முன்னரே  உளுந்து பயறு தூவப்பட்டு  விதைக்கப்பட்டிருக்கும். அறுவடை  நேரத்தில் இருக்கும். உளுந்துப்  பயிறு அறுவடை  நேரத்தில்  ஒரு சான் உயரம் வளர்ந்து இருக்கும்.  தவறுதலாக  அதை அறுத்துவிடாமல், லாவகமாக நெற்பயிரினை மட்டும் அறுக்க வேண்டும். நெற்கதிர்களை அறுவடை செய்வது என்பது சாதாரண வேலை இல்லை.  அதுவும்  கதிர்களை அறுத்து தாள்களின் மீது போடவேண்டும். அதற்கும் ஒரு அளவு உண்டு.  ஏனெனில் மறுநாள் அதனை கட்டி களத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக அந்தக்  கதிர்கள் காய்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் மனதில்  வைத்து  கதிர்  அறுக்க  வேண்டும்.  இல்லையெனில் வேலை தெரிந்தவர்கள் கோபப்படுவார்கள்.  

அறுவடைக்கு பயன்படுத்தும் கதிர் அரிவாள்  பெரிதாக வளைந்து கூர்மையாக இருக்கும். அதனைக்  கொண்டு அறுவடை செய்வது சிலருக்கு நிரம்பவே  கடினமான வேலைதான். அப்படித்தான் அவனுக்கும் முதல்நாள் கொஞ்சம் கடினமாக இருந்தது.  ஆனால் அவன் மற்ற ஆட்களுக்கு சமமாகவும் அவனது பங்கினை சரியாக அறுவடை செய்துவிடுவான்.     நெல் அறுவடை எப்போதும் ஒரு குழுவாக செய்யும்  வேலை.  சிலர் வேகமாக அறுத்து விட்டு பின்னால் இருப்பவர்களின் கதிர்களையும் அறுத்துக்  கொடுப்பார்கள்.  

காலையிலேயே பயிர்களை  அறுத்து  முடிந்த பின்னர் வீட்டுக்கு சென்று காலை உணவு  உண்ட  பிறகு  எல்லோரும் வயலில் கூடுவார்கள்.  முதல்நாள் காலையில் அறுவடை செய்த வயலிலிருந்து, அறுத்த கதிர்களை கட்டுகளாக கட்டி களத்திற்கு தூக்கி செல்லவேண்டும். இதுவும் ஒரு குழுவாக எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யும் வேலை. இதில் கட்டுகளை கட்டுவதற்கு ஆக்கைகள் பயன்படுத்தப்படும். இந்த ஆக்கையினை வைக்கோலினால் திரிப்பதும்கூட ஒரு விதமான திறமைதான்.  இதனை எல்லோரும் செய்துவிட  முடியாது.  இந்த ஆக்கை மிகவும் வலிமையானது. ஒருமுறை கைதேர்த்தவர்களால் திரிக்கப்பட்ட ஆக்கையானது பத்து பதினைந்து நாட்கள் அறுபடாமல்  இருக்கும். அதனால் ஆக்கைகளை  வேலை  முடிந்தபின்  எடுத்து பத்திரமாக வைத்துக்  கொள்ளவேண்டும். 

கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள் வயலில் இருந்து கட்டு கட்டிவிடுவார்கள். அப்படியாக கட்டிய கட்டுகளை தலைச்சுமையாக  ஒருவர் மாற்றி தூக்கி நெல்லடிக்கும்  களத்திற்கு கொண்டு  சேர்க்கவேண்டும். அதில் கட்டுகளைத் தூக்கி வருவதற்கு முக்கியமாக இள வட்டங்களிடம்தான் சொல்வார்கள். கரடு முரடான வரப்புகள், வாய்க்கால்கள், வரப்புகளில் இருக்கும் நீர்முள்  என்று பல இடையூறுகளை கடந்து வரவேண்டும். 
 
கட்டு கட்டுவதில் ஒரு சிலர் கைதேர்ந்தவர்களாக  இருப்பார்கள். அவர்கள் இறுக்கி இறுக்கி இருமடங்கு கதிர்களை கட்டிவைத்துவிடுவார்கள்.  அப்படி கட்டியிருக்கும் கட்டுகளை தூக்கிக்கொண்டு போகும்போது,  ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றி கொடுக்கும் பொது, கொடுப்பவர் லாவகமாக தள்ளிவிடவேண்டும். அதுபோலவே வாங்குபவரும் லாவகமாக இழுத்து தலையில் வைத்துக்கொள்ளவேண்டும். இதில் யாரேனும் ஒருவர் தவறு  செய்தாலும் இருவருக்கும் பாதிப்பு. அப்படி சரியாக மாற்றிக்கொள்ளாவிட்டால் கழுத்து வலி உண்டாகும். சிலநேரங்களில் கழுத்து சுளுக்கு விழுவதுமுண்டு.

கட்டுக்  கட்டி முடிந்த வயல்களில், பெண்கள் சிதறிய கதிர்கள் ஒவ்வொன்றாய் அங்கும் இங்குமாய் பொறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதனைப்  பார்த்த தலையாரி திட்டுவதும், அதை காதிலேயே வாங்காமல், சிலர் தொடர்ந்து செய்வதும், சிலர் வெட்கி வேண்டாமென்று வெளியேறுவதும் உண்டு.  இவர்கள் கதிர் பொறுக்குகிறோம் என்று வளரும் உளுந்து செடிகளை மிதித்து விடுவார்கள்.  அதனால்தான் தலையாரி கொஞ்சம்  கடினமாக  நடந்து கொள்வார்.   

அவன் சிறுவனாக இருந்த காலத்தில் ஆட்களே அறுத்த கதிர்களை  களத்தில் ஒரு கல்லில் அடிப்பார்கள். ஆனால் இப்போது அந்த காலம் மாறி டிராக்டர் வைத்தோ அல்லது மாடுகளை வைத்தோ கதிரடிப்பது வழக்கமாகிவிட்டது. அப்படி களம் வந்து சேரும் நெற்கதிர்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பரப்பி விடுவதும், பரப்பிய நெற்கதிர்களை நேர்த்தியாக கிண்டி விடுவதும் இதெற்கென சிலர் களத்தில் இருந்து பார்த்துக்கொள்வார்கள். 

அந்த  நாட்களில் இதுபோல அவன் ஊரில் இருக்கும் அத்தனை களங்களும், களை  கட்டியிருக்கும். எங்கு பார்த்தாலும் ஆட்கள் தலையில் ஒரு முண்டாசுடனும், அழுக்கு வேட்டி, கிழிந்த பனியன்களுடனும் சற்றும் ஓய்வின்றி அங்கும் இங்கும் ஓடி ஆடி வேலை செய்யத்தவண்ணம் இருப்பார்கள்.            

எப்படியும் அறுவடை செய்த கதிர்கள் களம் வந்து சேருவதற்கு மதியம் ஒரு மணி ஆகிவிடும்.  அதற்குள் டிராக்டர் ஒருமுறை முழுவதுமாக சுற்றியிருக்கும். சற்றும் நிதானிக்க கூட நேரமில்லாமல் எல்லோரும் வண்டுகள் மொய்ப்பதுபோல அந்த நெற்கதிர்களை திரும்ப கிளறிவிட வேண்டும். மீண்டும் ஒரு முறை டிராக்டர் சுற்றி வருவதற்கு இலகுவாக செய்யவேண்டும்.

பிறகு டிராக்டர் அடித்து விட்ட அந்த நெற்கதிர்களை நெல் தனியாக வைக்கோல் தனியாக உதரவேண்டும். அதாவது பிரித்து எடுக்க வேண்டும். வைக்கோலினை தனியாக எடுத்து அருகில் போர் போடவேண்டும்.

ஒருபுறம் நெல்லினை காற்றில் தூற்றி சுத்தம் செய்யவேண்டும்.  அப்படி நெல்லினை தூற்றும்போது,  இரண்டு பக்கமும் இருவர் நின்று கொண்டு ஒரு கூடையில் களத்தில் இருக்கும் நெல்லை அள்ளி மெல்லவும்  சீராகவும் வீசுவார்கள். அதில் பதர்கள் எல்லாம் எடை இல்லாததால் காற்றில் பறந்து தூரத்தில் போய்விழும். சுத்தமான புதிய நெல் மட்டும்  தங்கத்தினை உருக்கி உதிர்த்தது போல பிரமாண்டமாக குவிந்து கிடக்கும். 




அந்த நெற்குவியல்களை  அளந்து மூட்டைகளாகக் கட்டி பண்ணையில் கொண்டு சேர்க்கவேண்டும். 12 மரக்கால் ஒரு கலம். இரண்டு கலம் சேர்ந்தது  ஒரு  மூட்டை, அதாவது இருபத்து நான்கு மரக்கால்கள் அல்லது நான்கு பறவைகள்.  

கடைசியில் ஒரு மூட்டை நெல் கண்டுமுதல்  செய்தால் இரண்டு  மரக்கால் அறுப்புவேலைகள் செய்தவர்களுக்கு கூலியாக கிடைக்கும். அதாவது பன்னிரெண்டு மூட்டை கண்டுமுதல் செய்தால் கூலி ஒரு மூட்டை.  அதனை வேலைசெய்தவர்கள் எல்லோரும் சரி சமமாக பிரித்து எடுத்துக்கொள்வார்கள்.         

வெளியூரிலிருந்து அறுவடைக்கு வந்தவர்கள் தங்களின் கூலியில் இருந்து, காலையில் இட்லியும் பொங்கலும் மதியம்   சாப்பாடும் கொடுத்த பாட்டிக்கு நெல் கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். மற்ற எல்லோரும் போனபிறகு பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் மிஞ்சியிருக்கும் கருக்காய் முட்டில் இருந்து பொழுது சாயும் வரை தூற்றுவார்கள். அதிலிருந்து எப்படியும் ஆறேழு மரக்கால் நெல்  கிடைக்கும்.




ஊர் திரும்புதல் - 1



No comments:

Post a Comment