Saturday, 24 September 2022

விண்வெளி (வியப்பு - விநோதம் - விசித்திரம்)

 விண்வெளி 

(வியப்பு - விநோதம் - விசித்திரம்)

ஆசிரியர் : என். ராமதுரை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 105

பக்கங்கள் 216 


விண்வெளி - என்ற தலைப்புடன் இருக்கும் இந்த புத்தகம் அநேகமான விண்வெளி விவரங்களை அள்ளி கொடுத்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பத்திரிகைகளில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்தவர். ஆதலால் இவர் அறிவியல் சார்ந்த பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் காரணமாகத் தான் தெரிந்துகொண்ட விவரங்களை  அருமையாகத் தொகுத்து ஒரு நூலாக நமக்குக் கொடுத்திருக்கிறார். 

இந்த நூல் விண்வெளி பற்றிய அபூர்வமான தகவல்கள், ராக்கெட்  மற்றும்  செயற்கைக்கோள்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மிக எளிமையான மொழி நடையில் கொண்டுள்ளது.

செயற்கைக்கோள்களின் தேவை என்ன என்பதிலிருந்து அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது முதல் அவைகள் எந்த வழிகளில் நமக்குப் பயன் கொடுக்கிறது என்றும் மேலும் நமது அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் பல்வேறு விதமான வசதிகளுக்கு  பின்னால் இருந்து இயங்குவது இந்த செயற்கைக்கோள்கள் தான் என்ற அருமையான தகவலும் வாசிக்கும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணுக்கு அனுப்புகிறது. அவற்றில் எந்த நாடுகள் தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் மேலும் எந்த நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்துள்ளது என்றும்  அவ்வாறு செலுத்தும் செயற்கைக் கோள்களில் எந்த விதமான பயன்பாடுகளுக்காகத் தயாரிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் மிக நேர்த்தியான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் மேலும் ராக்கெட் பற்றிய பல்வேறு தகவல்களைச் சொல்கிறது. மேலும் ராக்கெட் எப்படித் தயாரிக்கின்றனர், அவைகள் எவ்வாறு செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது என்பதிலிருந்து ஒவ்வொரு படியாக மிக அருமையாக விளக்குகிறார்.

முதலில் ராக்கெட் கண்டுபிடித்தவர்கள் மற்றும் மென் மேலும் ரொக்கெட்டினை செம்மைப் படுத்தியவர்கள் என பல்வேறு மேதைகளைப் பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் சொல்லப்படுகிறது.

செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்த ஏன் ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்பதினையும் அதற்க்கான ஆதாரமான பல்வேறு கூற்றுகளையும் சொல்கிறார். ராக்கெட் தொலைதூரம் வரை மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் செல்லும் வல்லமை கொண்டுள்ளதால் செயற்கைக் கோள்களை மற்ற கோள்களுக்குச் செலுத்துவதற்கு உகந்தது ராக்கெட் என்பதால் தான் ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

ராக்கெட்டின் துணையுடன் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் எவ்வாறு பறக்கிறது என்பது பற்றியும் மேலும் விண்ணுக்குச் சென்ற பிறகு ராக்கெட் எவ்வாறு செயற்கைக்கோள்களைத் தனியாக விடுவிப்பது என்பதும், அவ்வாறு விடுவித்த செயற்கைக்கோள்கள் எவ்வாறு தனியாகப் பயணிக்கும் என்றும் மேலும் அவைகள் தனக்குக் கொடுத்தும் வேலையினை எவ்வாறு செய்கிறது என்பது வரை மிகத் தெளிவாகவும் எளியமுறையில் கொடுத்துள்ளார்.

நாம் பயன்படுத்தும் தொலைப்பேசி முதல் தொலைக்காட்சி, வானிலை சார்ந்த முன்னறிவிப்புகள் என பல்வேறு வகையில் செயற்கைக் கோள்கள் நமக்குத் தகவல்களை மிகத் துல்லியமாகத் தருகிறது. இவை இன்றைய வாழ்வியலில் மிக அத்தியாவசியமாகிப்போன பல்வேறு தேவைகளை நமக்குக் கொடுக்கிறது என்பதில் வியப்பேதுமில்லை.

பொதுவாக இந்த நூல் விண்வெளியில் ஏற்படும் வியப்பான காரியங்கள், விசித்திரமான பல்வேறு விஷயங்கள் மற்றும் வினோதமான நிகழ்வுகள் என வாசிக்கும் நமக்குத் தொய்வில்லாமல் இருக்கம் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு ஒவ்வொரு நாடும் தனது அண்டை நாடுகளையும் எதிரி நாடுகளையும் கண்காணிக்கிறது அதற்கு எவ்வாறு இந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்கள் உறுதுணையாக உள்ளது என்பது பற்றிய     விரிவான விவரங்களைச் சொல்கிறது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 செப்டெம்பர் 2022

No comments:

Post a Comment