மறக்கமுடியாத கடிதங்கள்
ஆசிரியர் : எம். ஞானசேகரன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 72
இந்த நவீனக்காலத்தில் சில தலைமுறைகள் கண்டிராத ஒரு பொக்கிஷம் தான் கடிதங்கள். இது இவர்களின் வரமா? அல்லது சாபமா? என்ற கேள்விக்கு விடையேதும் தெரியாது ஆனால் இன்னும் சில தலைமுறைகள் சென்ற பிறகு கடிதம் என்ற ஒன்று இருந்ததா என்றே தெரியாமல் போகும் என்ற அபாய குரலுடன் நான் இந்த பதிவினை பகிர்ந்துகொள்கிறேன்.
"ஒரு கடிதம்", தன்னை எழுதுபவரின் எண்ணத்தினை மட்டும் சுமந்து வருவதில்லை, கூடவே விலைமதிப்பில்லா பல்வேறு விஷயங்களைக் கூட்டிவருகிறது. எழுதுபவரின் கைகள் பதிந்த தடத்தின் வாசனையும் அவரின் கைப்பட்ட மையின் மனமும் கூடவே அவர் எழுதிய இடத்தில் இருந்த நறுமணத்தினையும் நயம்பட தன்னுள்ளே தத்ரூபமாகத் தாங்கி வருவதே கடிதம் என்றால் அது மிகையாகாதே.
கடிதம் என்பது உலகில் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷம். கடிதம் ஒருவரின் மனதில் ஏற்படும் உள்ளார்ந்த எண்ணங்களை அழிக்க முடியாத ஓவியமாகத் தீட்டிவைத்துக்கொள்ளக் கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதம் தான் கடிதம் என்றே சொல்ல வேண்டும்.
கடிதம் வெறும் நலம் விசாரிக்கும் ஒரு சாதனமாக மட்டும் இல்லை. எண்ணங்களின் பரிமாற்றம், சுயமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு கருத்துக்களை எழுத்து வடிவில் ஆவணப்படுத்தும் அழகிய சாதனம் தான் கடிதம்.
எனக்கு இன்றளவும் நினைவில் இருக்கிறது, நான் முதல் முதலாக வீட்டை விட்டு வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற போது தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் தங்கவேண்டிய சூழல் வந்த போது நான் முதலாவது என் அம்மாவிற்குக் கடிதம் எழுதியது இன்றளவும் என்னுள் இருக்கிறது.
பிறகு 1999 ல் வெளிநாட்டிற்கு வந்த பிறகு ஒவ்வொரு வாரமும் விடாமல் நான் கடிதம் எழுதியவன். சமீபத்தில் நான் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்ற போது எனது எண்ணங்களை எழுத்தாகத் தாங்கி நிற்கும் கடிதங்கள் இன்றளவும் என் அம்மாவின் அலமாரியில் அலங்கரித்துக் கொண்டே இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அந்த வழியில் நண்பரும் இந்த நூலின் ஆசிரியருமான எம். ஞானசேகரன் அவர்கள் தனது உறவுகளும் நபர்களும் தனக்கு எழுதிய கடிதங்களை ஒரு அற்புதமான பொக்கிஷமாக வெளியிட்டிருக்கிறார்.
பொதுவாகக் கடிதங்களை வெளியிடுவார்கள் புகழ்பெற்றவர்கள் மட்டும் என்று ஒரு திரையினை விளக்கி சாமானியரும் தங்களின் கடிதங்களை ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ள வசதியாக ஒரு முன்னோட்டமாக இந்த நூல் இருக்கிறது .
கடிதங்கள் தான் எத்தனை எத்தனை உள்ளுணர்வுகளையும், மனதில் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷங்களைப் புதுப்பொலிவுடன் எந்நாளும் கண்குளிர வாசிக்க கிடைக்கும் வசதியான ஒரு சிறப்பானது தான் கடிதம்.
இந்த நூலின் இடம்பெற்றுள்ள பல்வேறு கடிதங்கள் ஒவ்வொன்றும் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் இடையே நடந்த ஒவ்வொரு எண்ணங்களின் பரிமாற்றம் மிக அழகா பதிய வைத்திருக்கிறார்.
சகோதரி செல்வியின் கடிதம் - இந்த கடிதங்கள் வாசிக்கும் போது அக்கா தம்பிகளுக்கு இடையே ஏற்படும் உரையாடல்கள் மட்டுமல்லாமல் இந்த உடன்பிறவா உறவுகளுக்கு இடையே இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலிருந்த உறவுகளின் மீதான பரிவு, பாசம், பங்களிப்பு மற்றும் கொண்டுள்ள ஈடுபாடுகள் என எல்லாவற்றையும் வார்த்தைகளால் வரையப்பட்ட ஒளிவீசும் ஓவியமாகத் திகழ்கிறது.
மற்றொன்று கடிதம் - நண்பர்கள் இடையே ஏற்பட்ட பல்வேறு உரையாடல்கள். இந்த கடிதங்களில் வெறும் நலம் மட்டும் விசாரிக்கவில்லை. இவர்களின் கருத்து பரிமாற்றங்கள் நலம் விசாரிப்பு முதல் நாட்டு நடப்பு, அரசியல் அக்கரை, பொருளாதார வளம் மற்றும் புதைந்து போகும் மக்கள் நலன் என விசாலமாக விரிந்து கிடக்கும் விவரங்களை விளக்கமாகப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த கடிதங்கள் உண்மையாகவே ஒரு சமுதாய நோக்கில் வரையப்பட்ட அழகான மடல்கள்.
பேனா நட்பு: இது நானறிந்திராத ஒரு வகையான நட்பு. இந்த நட்பின் வழியாக உண்மையான உணர்வுகளுக்கு இடங்கொடுக்கும் நண்பர்கள் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் தான். அப்படியாக ஆசிரியருக்குக் கிடைத்த பல நண்பர்களின் கடிதங்கள் பகிர்ந்திருக்கிறார். அப்படியாக ஈழத்திலிருந்து வந்த யாழினி மற்றும் நந்தினி கடிதங்கள்.
சிங்கப்பூர் தோழியின் உறவு மற்றும் மற்றொரு சகோதரியின் கடிதங்கள் மற்றும் அந்த சகோதரியின் கைவண்ணத்தில் வரைந்த ஒதுக்கிப் போட்ட ஓவியத்தினை புத்துயிர் கொடுத்து அவருக்கே புத்தாண்டு வாழ்த்து மாதிரியாக அனுப்பியது என இன்றளவும் உயிர்ப்புடன் கடிதங்கள் இருக்கும் வகையில் இந்த கடிதங்களை ஒரு நூலாக வெளியிட்ட நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
முடிந்த வரையில் நமக்கு கிடைத்த கடிதங்களை பொக்கிஷங்களாக பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அவ்வப்போது ஒரு கடிதம் எழுதி தான் பாருங்களேன். கடிதம் எழுதும் பொது கிடைக்கும் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து தன்னை தானே செதுக்கி கொள்ளும் ஒவ்வொரு கடிதமும் - இவைகள் காலத்தால் அழிக்க முடியாத அற்புத படைப்பாக மாற்றிவைக்க வேண்டும்.
என்றும் அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
25 செப்டம்பர் 2022
No comments:
Post a Comment