மூன்றாம் உலகப்போர் - வாசிப்பனுபவம்
ஆசிரியர் - கவிஞர் வைரமுத்து
கிண்டில் பதிப்பு
பக்கங்கள் 540
இந்த புத்தகம் விவசாயிகளின் துயரத்தினையும், தரிசாக மாறிப்போன நமது விவசாய நிலங்கள் எல்லாம் இப்போது எப்படி பல்வேறு தொழிற்சாலைகளாகவும், பல்வேறு வகையான அடுக்கு மாடி வீடுகளாகவும் பரிணாமம் பெற்றிருப்பதையும், உலகெலெல்லாம் உணவளிக்கும் விவசாயம் எவ்வாறு அழிந்து போகிறது என்பதை பற்றியும், மேலும் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தால் வளரும் நாடுகள் எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதை இந்த மூன்றாம் உலகப்போர் என்று நூலின் வழியே தெரிந்துகொள்ளமுடிகிறது.
தொன்று தொட்டு நடக்கும் விவசாயிகளின் தற்கொலைக்கு, கடன் ஒரு முக்கிய மூலகாரணம் என்பதையும் அதனுடன் கூடி ஒவ்வொரு விவசாயியும் எப்படியாவது தனது நிலம் தரிசாக கூடாது என்று நினைத்து அதற்காக பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு எவ்வாறு விவசாயம் செய்கிறான் என்பதற்கு இன்றளவும் மாற்றுக்கருத்தே இல்லை அதுதான் நிதர்சனமான உண்மையும் கூட.
இந்த நூல் ஒரு கிராமத்தில் வாழ்கின்ற விவசாயிகளை முன்னிறுத்தி அவர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும், அவர்களின் அன்றாட வாழ்க்கை நிலையினையும், சமுதாயத்தில் அவர்களின் நிலைமையும், அதே சமுதாயத்திற்கு அவர்கள் கொடுக்கும் தங்களுடை விலைமதிப்பில்லா பங்களிப்பையும் மிக தெளிவாக விவரித்து மிக தெளிவாக நகர்கிறது கதையின் ஓட்டம்.
கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும், இந்த புத்தகம் வாசிக்க ஆரம்பித்தமுதல் இறுதிவரை "கருத்தமாயி" என்ற கதாபாத்திரதின் ஆளுமையாக எனது மனக்கண்ணில் வாழ்ந்தவர் மறைந்த அய்யா "பூ.ராமு" அவர்கள் தான்.
சின்னப்பாண்டி, எமிலி மற்றும் இஷிமோரா என மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் வழியே தான் சொல்ல நினைத்ததை தெளிவாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
இந்தியாவில் கடைக்கோடியில் இருக்குக்ம் ஒரு கிராமம் எப்படி இருக்கும் அங்கே வாழும் மனிதர்களின் வாழ்க்கை நிலை எப்படியிருக்கும் என்பதையும் அட்டணம்பட்டி என்ற கிராமத்தில் வாழும் மனிதர்களோடு நம்மையும் சில காலம் வாழ வைத்திருக்கிறார்.
கருத்தமாயி, சிட்டம்மா, முத்துமணி மற்றும் சின்னப்பாண்டி குடும்பத்தினை மையமாக வைத்து அவர்களை சுற்றி அந்த கிராமத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளை மிக இயல்பான நடையில் எடுத்துச்செல்கிறார்.
வளர்ந்த நாடுகளின் லாபத்திற்காக ரசாயன உரங்களை வளரும் நாடுகளின் மீது சுமத்தியது. இந்த ரசாயன உரம் இன்று நமது மண் வளத்தினை முற்றிலும் நஞ்சாக்கிவிட்டது. இயற்கை விவசாயம் என்ற நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ரசாயன உரமில்லாமல் விவசாயம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு படு பாதாளத்தில் நிற்கிறோம். இதிலிருந்து கரை சேர வழி என்ன என்பதை தேட கூட முடியாத நிலையில் வாழ்கிறார்கள் இன்றைய விவசாயிகள்.
வேளாண்மை கல்லூரிக்கு விருந்தினராக அமெரிக்காவில் இருக்கிற எமிலிக்கு அழைப்பு கொடுத்து அவள் இந்தியா வருகிறாள். அதே சமயம் ஜப்பானிலிருந்து வரும் இஷிமோராவும், கல்லூரியில் இருக்கும் சின்னப்பாண்டியும் ஒரு நேர்கோட்டில் சேருகிறார்கள். இவர்களின் கூட்டு முயற்சியினால் அட்டணம்பட்டி ஒரு மாதிரி கிராமமாகி போகிறது. இந்த முயற்ச்சிக்கு சின்னப்பாண்டி எதிர்கொள்ளும் ஏராளமான சிக்கல்கள் என எல்லாவிதத்திலும் குறைவில்லாமல் செல்கிறது கதை.
புவிவெப்பமாதல், தாராளமயமாக்கல் மற்றும் தானியார்மயமாக்கல் என இந்த மூன்று முக்கிய காரணங்களை சிறப்பாக விவரித்து இருக்கிறார்.
ஒரு கிராமத்தில் இருக்கும் விளை நிலங்களை தனியாரிடம் விலைபேசி விற்று கொடுக்க குறுக்கு வழியில் செல்லும் பெரிய மகன் அதற்க்கு எதிராக ஊரை ஒன்று சேர்த்து போராடுகிறான்.
இந்த நூல் மொத்தத்தில் இயற்கை விவசாயம் எவ்வாறு அழிந்து போனது மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளால் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் பல்வேறு இடையூறுகளையும் தெளிவாக சொல்கிறது.
எல்லோரும் படிக்கவேண்டி ஒரு நூல்,எண்ணற்ற விவரங்களை கொண்டுள்ளது.
தொலைந்து போன நமது இயற்கை விவசாயத்தினையும் அவற்றுடன் கூடிய இயற்கை வாழ்வினையும் திரும்பப் பெறமுடியுமா முடியாதா என்ற கேள்விக்கு விடை தெரியாத ஒரு நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.
தேவேந்திரன் ராமையன்
16 ஜூலை 2022
No comments:
Post a Comment