தண்ணீர்
அசோகமித்திரன்
ஒலி புத்தகம்
லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலியின் குரலில்
ஸ்டோரி டெல் தளத்தில்.
ஒரு புத்தகத்தினை வாசித்து உணரும் அனுபவம் தனிதான் என்று இருந்த நேரத்தில் வாகனத்தில் பயணிக்கும் வேளைகளில் ஒலி புத்தகமாக மற்றொருவர் வாசிக்க அதை நேசித்து கேட்கும் அனுபவம் கூட ஒரு வகையில் கதையின்களத்திற்குள் நம்மை பயணிக்க வைக்கின்றது. அதுவும் வாசிப்பவரின் வசீகரமான குரல் நம்மை அந்த கதைக்குள்ளே கட்டிபோட்டுவிடுகிறது.
அப்படிதான் நான் இந்த தண்ணீருக்குள் முழ்கி கிடந்தேன். அந்த அனுபவத்தினை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
தண்ணீர்..... மூன்று மணி நேரத்தில் பெரும்பாலும் வந்து போகும் வார்த்தை தண்ணீர் .. தண்ணீர்.. தண்ணீர்..
மேலும் ஜமுனா, சாயா கூடவே டீச்சர் அம்மா அவர்களுடன் தண்ணீர் இல்லாததால் வரும் கடினம், அந்த பகுதியில் ஏற்படும் சிரமங்கள், முனிசிபாலிட்டி ஆட்களால் தோண்டப்பட்ட குழியும் அதனால் தெருவிளக்கு இல்லாமல் போவதும், பல்வேறு இடங்களில் கழிவு நீர் குழாய் உடைந்து தண்ணீரில் கலந்து வரும் வழக்கம் போல இருக்கும் பல்வேறு விதமான அதே சமயத்தில் சமுதாயத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகளை மிக நேர்த்தியாகப் பேசும் நாவல் தான் இது.
அசோகமித்திரனின் எழுத்து நடை வாசிக்கும் நம்மைப் பிரமிக்க வைக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த கதையில் வரும் பெரும்பாலான இடங்களில், மிகவும் நுட்பமாக வரும் உரையாடல்கள், மேலும் அந்த இடத்தையும் அங்கு இருக்கும் ஆட்களையும் பற்றி விவரிக்கும் பொழுது கொடுக்கப்படும் மிகவும் நுட்பமான விவரங்கள் என வாசிக்கும் நம்மையும் அந்த கதையின் களத்திற்குக் கையை பிடித்து அழைத்துச் செல்கிறார்.
தண்ணீர் இல்லாததால் படும் அவதியும் அதனால் ஏற்படும் பல்வேறு சிரமங்களையும், சிக்கல்களையும் சிலந்தி வலைபோல பின்னி அந்த வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஜமுனா என்று ஒரு பெண்ணையும் ஒரே நேர்கோட்டில் தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்துச் செல்கிறது இந்த தண்ணீர்.
இந்த கதையில் வரும் பம்ப அடிக்கும் ஓசை ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது எனது சிறுவயதில் எங்கள் கிராமத்தில் அதிகாலையில் ஆரம்பிக்கும் பம்ப அடிக்கும் ஓசையினை சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு உணர (கேட்க) முடிந்தது.
தண்ணீருடன் சேர்ந்து பயணிக்கு ஜமுனா, அவளின் தங்கை சாயா, கூடவே பலம் கொடுக்கும் டீச்சர் அம்மா என இவர்களின் வாழக்கையில் வரும் வெறுமையும் அந்த வெறுமையினை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் தங்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மனத் தையிரியம் என மிக இயல்பான சொல்லாடல்களுடன் நம்மையும் அந்த தண்ணீர் இல்லாத தெருவிற்கே அழைத்துச் செல்கிறது.
ஜமுனாவிற்கும் சயாவிற்கும் இடையே ஏற்படும் பந்தமும் இடையில் ஏற்படும் மனவிரிசல்களும் இதற்குக் காரணமாக இருக்கும் பாஸ்கர் ராவும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வரும் உரையாடல்களில் அக்காவிற்கும் தங்கைக்கும் இடையே இருக்கும் உறவின் பொறுப்பிற்கும் அதனால் எடுத்துக் கொள்ளும் அக்கறையும் கதையின் பலமாக இருக்கிறது.
ஒரு வீட்டில் பல்வேறு குடித்தனங்கள் வாடகைக்கு இருக்கும் இடத்தில் ஏற்படும் கருத்து பரிமாற்றங்கள் அதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களைக் காத்துக்கொள்ளும் பக்குவம் என வந்து போகும் ஒவ்வொரு பாத்திரமும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
டீச்சர் அம்மா, ஜமுனாவிற்குக் கொடுக்கும் அறிவுரையும் அதன் கூடவே அவளும் வெந்தும் நொந்தும் வாழும் வாழ்க்கையினை சொல்லும் விதமும் அந்த வாழ்க்கையில் அவள் எதிர்கொண்ட கரடுமுரடான பாதையும் அதே பாதையில் கவனமாகப் பயணிக்க கற்றுக் கொண்டு பயணிக்கும் விதத்தையும் சொல்லி வாழ்க்கையினை முடித்துக் கொள்ள முடிவெடுக்கும் ஜமுனாவிற்கு ஒரு புதிய வாழ்க்கையினை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது.
இந்த நாவலுக்கு உயிரோட்டமாகக் குரல் கொடுத்து இருக்கும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலியின் அவர்கள் பல்வேறு கதாபாத்திரங்களின் குரல்களை அந்த அந்த பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் மிகவும் அழகாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உயிர் கொடுத்து இருக்கிறார்
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
23 ஜூலை 2022.
No comments:
Post a Comment