ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர் - சுந்தர ராமசாமி
காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் கிளாசிக் நாவல்
பக்கங்கள் 220
தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் வரும் இந்த "ஒரு புளியமரத்தின் கதை" என்ற நூல் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மிக ஆழமான சிந்தனைகளை எளிதான வார்த்தைகளால் கொடுத்திருக்கிறார்.
ஒரு புளியமரத்தின் முழு வாழ்க்கையும் சொல்லிச்செல்லி இந்த கதையில் மரமும் ஒரு மனிதனைப் போலத் தான் உயிரோடே தான் இருக்கிறது. இறுதியில் நம்மைப் போலவே தான் அதுவும் இறந்து(பட்டு)போகிறது என்ற ஒரு இயல்பான விவரத்தினை பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி எடுத்துச்செல்கிறார்.
தான் பார்த்தும், தாமோதர ஆசானிடம் கேட்டுத் தெரிந்தும் கொண்ட ஒரு பெரிய பின்னணிகொண்ட இந்த புளியமரத்தின் கதையினை தனது அனுபவமாகச் சொல்லும் விதம் மற்றும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கதையினை சொல்லப்படும் விதம் அருமை.
ஒரு மரத்தினை சுற்றி விவசாயம் நிறைந்து இருந்த காலத்திலிருந்து அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகரமயமாகிப் போனதும் அந்த மரம் மட்டும் இத்தனை மாற்றங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே தான் இருந்தது.
முனிசிபாலிடி அவ்வப்போது எடுக்கும் ஒரு முடிவுகளிலிருந்து அந்த மரம் பாடும் பாடு, கூடவே ஒவ்வொரு வருடமும் ஏலத்தில் வரும் வருமானம் என ஒரு காலத்தில் இந்த புளியமரத்தின் வருமானம் முனிசிபாலிட்டிக்கு முக்கிய வருமானமாக இருக்கிறது.
அரசியல் மற்றும் வியாபாரத்தில் வரும் காழ்ப்புணர்ச்சி அதனால் ஏற்படும் விரோதங்கள், அதற்காக இவர்கள் செல்லும் எல்லை என பல்வேறு நிலைகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இந்த புளியமரத்தின் உயிரோடு சேர்ந்தே நடக்கிறது.
மரத்தின் வளர்ச்சியினை தாமோதர ஆசான் சொல்லும் விதமும் அதைக் கேட்பதற்காக அவருக்குப் பிரியமான யாழ்ப்பாணம் சுருட்டு வெற்றிலை வாங்கிக்கொண்டு மற்றும் செலவுகளைச் செய்து கொடுத்தும் அவரிடம் இருந்து கதையினை கேட்டுத் தெரிந்துகொள்ளும் விதத்தில் தான் எத்தனை ஆர்வம். இவரைப் போல ஒரு கதைசொல்லி எங்கள் கிராமத்திலும் இருந்தார் அவர் எப்போதும் பீடி குடித்துக்கொண்டே எங்கள் கிராமத்தில் அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையார் கோவிலருகில் அமர்ந்துகொண்டு சொன்ன கதைகள் ஏராளம் அவற்றை நினைவு படுத்திச் சென்றது தாமோதர ஆசானின் கதாபாத்திரம்.
ஆரம்பக்காலத்தில் புளிக்குளம் என்ற ஊரில் நடு குளத்தில் சிறு தீவுபோல காட்சிதந்த இந்த புளியமரம், பிறகு காலத்தின் சூழலால் நிலத்திற்கு இடம்பெயர்ந்து இப்போது இருக்கும் இடத்திற்கு வந்த கதையும், அந்த மரத்தில் செல்லம்மாள் தூக்கிலிட்டு இறந்துபோனதும் அப்போது அவர் அங்கே வந்து அந்த மரத்தினை அனைவரிடம் இருந்து காப்பாற்றியதும் பிறகு ஒருநாள் மகாராஜாவிற்கு ஏற்பட்ட ஒரு சோக கதையும் என இந்த மரத்தின் பல்வேறு பரிணாமத்தின் வளர்ச்சியும் அதன் கூடவே வளர்ந்த அந்த நகரமும் என அவரின் கதை வாசிக்கும் நம்மையே நேரில் கதை கேட்ட ஒரு நிலைக்கு அழைத்துச் செல்கிறது இவரின் எழுத்து.
காதர், ஒன்றுமில்லாமல் இருந்த தனது கசப்பான ஆரம்பக்கால வாழ்க்கையினை மறந்து பிற்காலத்தில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு முன்னேறியதும், கூடவே தனது முதலாளியின் மகளையே காசுக்காகத் திருமணம் செய்துகொண்டு பிறகு அவளை வேண்டாமென்று சொல்வதும், ஒரு காலத்தில் முழு கடையும் தனியாக நடத்த ஆரம்பித்து புகையிலை வியாபாரத்தில் வரும் வாய்ப்பினை விடாமல் பிடித்துக் கொண்டு செல்வது எனச் சொல்கிற கதையில் அந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் நிலவரங்களை மிக நேர்த்தியாக இந்த கதாபாத்திரத்தின் ஊடக நமக்குச் சொல்கிறார்.
தாமுவும் எப்படியாவது தனது வியாபார எதிரிகளை அழித்துவிட்டுத் தான் மட்டும் தான் கோலோங்கி இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னால் முடிந்த அளவிற்குச் செல்கிறான்.
எம். சி. ஜோசப், முனிசிபாலிடி தலைவர் தன்னால் முடிந்த வரையில் தனது அதிகாரங்களை எடுத்துக்கொண்டு முனிசிபாலிடி ஊழியர்களை எப்படி நடத்துவது மற்றும் அந்த முனிசிபாலிடிக்கு உள்ளடங்கிய இடங்களை எல்லாம் எப்படிக் கையாள்வது கூடவே தலைதூக்கும் ஒவ்வொருவரையும் எவ்வாறு அடக்கி வைப்பது என்று தனக்கு இருக்கும் அரசியல் பலத்தாலும் அதிகார பலத்தாலும் முடிந்த வரை முயன்றுபார்க்கிறார்.
கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த புளியமரத்தினை கதையினை முழு பலத்துடன் தாங்கி செல்கிறது.
தன்னை சுற்றிலும் நடக்கும் பல்வேறு சாதி மத வேறுபாடும், அவற்றைச் சரிப்படுத்தவும் தான் செய்தது சரியென நிலை நிறுத்தவும் ஒவ்வொருவரும் செய்யும் அல்லது செய்யத் தூண்டும் பல்வேறு துரோகங்களும் இதற்குள் புகுந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அரசியலும் அதற்காக ஏற்படும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் என எல்லாவற்றையும் ஒரு தனிமரமாக நின்று மௌனமாக வளர்ந்து நிற்கும் புளியமரத்தை ஒரு சிலர் மதத்தின் அடிப்படியில் கடவுளாக்கவும் ஒரு சிலர் இடையூறு என்று சொல்லித் தகர்க்கவும் என போட்டிப்போட்டுக் கொண்டு நடத்தும் பல்வேறு சூழ்ச்சிகளை மையமாகக்கொண்டு இந்த மரத்திற்கும் மனிதருக்கும் இருக்கும் உறவினால் எவ்வாறு சக மனிதர்கள் தங்களைப் பிளவுபடுத்திக்கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த நாவல் அற்புதமான தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரும் படைப்பாகவே தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.
தமிழ் இல்லை இந்திய இலக்கியத்தின் ஒரு மைல்கல் என பல்வேறு வகையில் கூறப்படும் இந்த நாவல், கண்டிப்பாக எப்போதும் வாசிப்பவர்களின் மனத்தில் ஒரு சிறிய தாக்கத்தினையும் ஒரு காலத்தில் நடந்தேறிய அரசியல் சூழல்களையும் நினைவுபடுத்திச் செல்லும் என்பது தான் இந்த நாவலின் மைல்கல் ஆக இருக்கிறது.
மேலும் தமிழிலிருந்து ஆங்கிலம்,மலையாளம், இந்தி மற்றும் ஹீப்ரு என்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
16 ஜூலை 2022
No comments:
Post a Comment