ஆலவாயன்
பெருமாள் முருகன் தனது "மாதொருபாகன்" நாவல் மூலம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டவர். ஒரு படைப்பாளர், எதோ ஒரு தருணத்தில் எங்கோ பார்த்தோ அல்லது கேட்டோ இருக்கும் சில நிகழ்வுகளைத் தனது படைப்புக்கள் மூலம் கொண்டுவர நினைப்பதும் அவற்றை இந்த உலகிற்கு தனது எழுத்துக்களின் மூலமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால், அதன் விளைவாக எதிர்கொள்கின்ற இடையூறுகள் இருக்கத்தான் செய்கிறது.
தனது கற்பனையின் வழியில் பெருநோம்பிற்கு சென்ற பொன்னாவின் வாழ்வில் ஏற்படும் இன்னல்களையும் அதை அவள் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் இரண்டு விதமாக சொல்லியிருக்கிறார். அவற்றில் ஒன்று அர்த்தநாரி - இங்கே காளி தற்கொலைக்கு முயன்று அவன் தனது தாயால் காப்பாற்றிவிட்டு பிறகு பொன்னாவிடம் பேசாமலே இருப்பதும் இந்தக் கொடுமையெல்லாம் எதிர்கொண்டு தனது வாழ்க்கையை நடத்திச் செல்லும் பொன்னா ஒரு கட்டத்தில் உயிரையே மாய்த்துக்கொள்ள முயல்கிறாள் அப்போது அவளின் கையினை பிடித்துக் கொள்கிறான் காளி என்று முடித்திருக்கிறார். ஆனால் இங்கே பொன்னாவிற்கும் காளியிற்கும் இடையே இருக்கும் ஊடல் மிக அழகாகச் சொல்லியிருப்பார்.
"ஆலவாயன்" - இது பொன்னா மற்றும் காளியின் வாழ்வில் வரும் இரண்டாவது கற்பனையின் போக்கில் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இங்கே, தனது மனைவி இப்படிச் செய்துவிட்டாளே என்று மனம் வருந்தி தொண்டுப்பட்டிக்கு வந்த காளி தான் ஆசையாக வளர்த்த பூவரச மரத்தின் வாதில் தூக்குப்போட்டுக்கொண்டு இறந்து விடுகிறான்.
குழந்தை வேண்டும் என்று பெருநோம்பிற்க்கு போய் வேறொரு ஆணுடன் இருந்து வந்தது தனது கணவருக்குத் தெரியாது என்பதை அவன் இறந்த பிறகு தான் பொன்னா தெரிந்து கொள்ளுகிறாள். விதவையாகவும் அதே சமயத்தில் கர்பிணியாகவும் இருக்கும் பொன்னா, தனது மீதி காலத்தில் சந்திக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.
கணவனை இழந்தவள் , விதவை கோலம் பூண்டு வெள்ளை சீலை கட்டி தொண்டுபட்டியில் அடைபட்டுக் கிடப்பது ஒருபக்கம் வலியாக இருந்தாலும் மற்றொருபக்கம் தன்னுடன் உயிருக்கு உயிராக இருந்த காளி மாமா இப்படி தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விட்டானே என்ற வருத்தம் தான் அவளை ஒரு பைத்தியக்காரியாக மாற்றியுள்ளது.
பொன்னாவிற்க்கு துணையாக காளியின் அம்மா சீராயும் அவளுடன் பொன்னாவின் அம்மா வல்லாயி இருந்து பார்த்துக்கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் கணவன் போன இடத்திற்கே நாமும் போய்விடலாமென நினைக்கும் பொன்னா, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வாழ்க்கையினை வாழ நினைத்து தான் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறாள். பொன்னாவின் பாத்திரம் மிக நேர்த்தியாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கணவன் இறந்த பிறகு, அவன் வாழ்ந்த தொண்டுப்பட்டியில் முழுவதும் வாழவேண்டி அங்கேயே குடிசை போட்டு பண்ணையம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் காளியின் நினைவை நினைத்து நினைத்து உருகி வாழ்கிறாள். அவள் தொண்டுப்பட்டியில் பார்க்கும் ஒவ்வொரு அடையாளமும் காளியின் முகத்தினை அவளுக்கு நினைவூட்டுகிறது.
காளி, இறந்த பிறகு அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. கணவன் இறந்த பிறகு இதுபோல நடந்தால் அவர்களின் வழக்கப்படி ஊர்க்கூட்டி, எல்லோருக்கும் இது தனது கணவனின் கருதான் என்று தெரியப்படுத்த வேண்டும். அந்த நிகழ்வில் பல்வேறு விதமான பேச்சுக்கள் என இயல்பான நடைகள் அந்த ஊர்க்கூட்டத்தில் நடக்கிறது.
அவள் தான் நினைத்த விதத்தில் தொண்டுப்பட்டியினை மாற்றிச் சீரமைக்கிறாள். அவன் போனபிறகு அந்த இடத்திலே வாழ்வதுதான் அவனுக்கு அவள் செய்யும் உபகாரம் என நினைத்து நிரந்தரமாக அங்கேயே வாழ்கிறாள்.
பொன்னாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. எல்லோரும் காளியே வந்து உனக்குப் பிறந்திருக்கிறான் என்றார்கள் ஆனால் அவள் மனதில் அவனுக்குப் பெயர் வைக்கும் பொழுது, எனது பெயரை வைப்பாயா என்று கேட்ட அந்த "ஆலவாயன்" நினைவுக்கு வருகிறான். இதுதான் எத்தனை இயல்பான ஒரு காரியம்.
காளியின் சித்தப்பாவின் வாழ்க்கை கதை மிகவும் சுவாரஸ்யமான கதையாகவே செல்கிறது. நாடோடியாக நடமாடும் அவர், தனது சகோதரர்களிடம் இருந்து தனது சொத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைவும் மேலும் அவரின் வாழ்க்கை முறையும் பெரும்பாலான கிராமங்களில் இப்படி ஒருவர் இருப்பதை நினைவுகூர்கிறது.
இந்த ஆலவாயன் கதையில் வரும் ஒவ்வொரு வரியும் கிராமத்து மண்வாசனையும் அந்த வட்டாரத்து வழக்கும், நையாண்டியும் நக்கலும் கலந்து இயல்பான சொல்லாடல்கள் நிரம்பிய ஒரு முழுமையான கதை இது.
மாதொருபாகனின் முடிவுக்கு, தனது மனதில் தோன்றிய இரண்டு விதமான முடிவில் காளியின் இறப்பில் அவன் தன்மானம் கொண்டவன் என்ற அவனது நிலையினையும் அதே நேரத்தில் தன்னை இப்படி தனியாகத் தவிக்க விட்டுவிட்டு போய்விட்டானே என்று என்னும் பொன்னாவின் பின்னாளில் வாழ்க்கையும், அவள் பெற்றெடுக்கும் குழந்தையும் அதற்கு அவள் நினைவாகப் பெயர் வைக்கும் விதமும் தனது மனதில் இருந்ததை சொல்லியிருக்கிறார்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
10 பிப்ரவரி 2022
No comments:
Post a Comment