Thursday, 10 February 2022

ஆலவாயன் - பெருமாள் முருகன்

ஆலவாயன்  


பெருமாள் முருகன் தனது "மாதொருபாகன்" நாவல் மூலம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டவர். ஒரு படைப்பாளர், எதோ ஒரு தருணத்தில் எங்கோ பார்த்தோ அல்லது கேட்டோ இருக்கும் சில நிகழ்வுகளைத் தனது படைப்புக்கள் மூலம்  கொண்டுவர நினைப்பதும் அவற்றை இந்த உலகிற்கு தனது எழுத்துக்களின் மூலமாக வெளிப்படுத்துவார்கள்.  ஆனால், அதன் விளைவாக எதிர்கொள்கின்ற இடையூறுகள் இருக்கத்தான் செய்கிறது.

தனது கற்பனையின் வழியில் பெருநோம்பிற்கு சென்ற பொன்னாவின் வாழ்வில் ஏற்படும் இன்னல்களையும் அதை அவள் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும்  இரண்டு விதமாக சொல்லியிருக்கிறார்.  அவற்றில் ஒன்று அர்த்தநாரி - இங்கே காளி தற்கொலைக்கு  முயன்று அவன் தனது தாயால் காப்பாற்றிவிட்டு பிறகு பொன்னாவிடம் பேசாமலே இருப்பதும் இந்தக் கொடுமையெல்லாம் எதிர்கொண்டு தனது வாழ்க்கையை நடத்திச் செல்லும் பொன்னா ஒரு கட்டத்தில் உயிரையே மாய்த்துக்கொள்ள முயல்கிறாள் அப்போது அவளின் கையினை பிடித்துக் கொள்கிறான் காளி என்று முடித்திருக்கிறார். ஆனால் இங்கே பொன்னாவிற்கும் காளியிற்கும் இடையே இருக்கும் ஊடல் மிக அழகாகச் சொல்லியிருப்பார்.

"ஆலவாயன்"   - இது பொன்னா மற்றும் காளியின் வாழ்வில் வரும் இரண்டாவது கற்பனையின் போக்கில் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இங்கே, தனது மனைவி இப்படிச் செய்துவிட்டாளே என்று மனம் வருந்தி தொண்டுப்பட்டிக்கு வந்த  காளி  தான் ஆசையாக வளர்த்த பூவரச மரத்தின் வாதில் தூக்குப்போட்டுக்கொண்டு இறந்து விடுகிறான்.

குழந்தை வேண்டும் என்று பெருநோம்பிற்க்கு  போய் வேறொரு ஆணுடன் இருந்து வந்தது தனது கணவருக்குத் தெரியாது என்பதை அவன் இறந்த பிறகு தான் பொன்னா தெரிந்து கொள்ளுகிறாள். விதவையாகவும் அதே சமயத்தில் கர்பிணியாகவும் இருக்கும்  பொன்னா, தனது மீதி காலத்தில்  சந்திக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

கணவனை இழந்தவள் , விதவை கோலம் பூண்டு வெள்ளை சீலை கட்டி தொண்டுபட்டியில் அடைபட்டுக் கிடப்பது ஒருபக்கம் வலியாக இருந்தாலும் மற்றொருபக்கம் தன்னுடன் உயிருக்கு உயிராக    இருந்த காளி மாமா இப்படி தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விட்டானே என்ற வருத்தம் தான் அவளை ஒரு பைத்தியக்காரியாக மாற்றியுள்ளது.

பொன்னாவிற்க்கு துணையாக காளியின் அம்மா சீராயும்  அவளுடன்  பொன்னாவின் அம்மா வல்லாயி இருந்து பார்த்துக்கொள்கிறார்கள்.  

ஆரம்பத்தில் கணவன் போன இடத்திற்கே நாமும் போய்விடலாமென நினைக்கும் பொன்னா, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வாழ்க்கையினை  வாழ நினைத்து   தான் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறாள்.  பொன்னாவின் பாத்திரம் மிக நேர்த்தியாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கணவன் இறந்த பிறகு,  அவன் வாழ்ந்த தொண்டுப்பட்டியில் முழுவதும் வாழவேண்டி அங்கேயே   குடிசை போட்டு பண்ணையம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் காளியின் நினைவை நினைத்து நினைத்து உருகி வாழ்கிறாள். அவள் தொண்டுப்பட்டியில் பார்க்கும் ஒவ்வொரு அடையாளமும் காளியின் முகத்தினை அவளுக்கு நினைவூட்டுகிறது. 

காளி, இறந்த பிறகு அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. கணவன் இறந்த பிறகு இதுபோல நடந்தால் அவர்களின் வழக்கப்படி ஊர்க்கூட்டி, எல்லோருக்கும் இது தனது கணவனின் கருதான் என்று தெரியப்படுத்த வேண்டும். அந்த நிகழ்வில் பல்வேறு விதமான பேச்சுக்கள் என இயல்பான நடைகள் அந்த ஊர்க்கூட்டத்தில் நடக்கிறது. 

அவள் தான் நினைத்த விதத்தில் தொண்டுப்பட்டியினை மாற்றிச் சீரமைக்கிறாள். அவன் போனபிறகு அந்த இடத்திலே வாழ்வதுதான் அவனுக்கு அவள் செய்யும் உபகாரம் என நினைத்து நிரந்தரமாக அங்கேயே வாழ்கிறாள்.

பொன்னாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. எல்லோரும் காளியே வந்து உனக்குப் பிறந்திருக்கிறான் என்றார்கள் ஆனால் அவள் மனதில் அவனுக்குப் பெயர்  வைக்கும் பொழுது, எனது பெயரை வைப்பாயா என்று கேட்ட அந்த "ஆலவாயன்" நினைவுக்கு வருகிறான். இதுதான் எத்தனை இயல்பான ஒரு காரியம். 

காளியின் சித்தப்பாவின் வாழ்க்கை கதை மிகவும் சுவாரஸ்யமான கதையாகவே செல்கிறது. நாடோடியாக நடமாடும் அவர், தனது சகோதரர்களிடம் இருந்து தனது சொத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைவும் மேலும் அவரின் வாழ்க்கை முறையும் பெரும்பாலான கிராமங்களில் இப்படி ஒருவர் இருப்பதை நினைவுகூர்கிறது.

இந்த ஆலவாயன் கதையில் வரும் ஒவ்வொரு வரியும் கிராமத்து மண்வாசனையும் அந்த வட்டாரத்து வழக்கும், நையாண்டியும் நக்கலும் கலந்து இயல்பான சொல்லாடல்கள் நிரம்பிய ஒரு முழுமையான கதை இது.

மாதொருபாகனின் முடிவுக்கு, தனது மனதில் தோன்றிய இரண்டு விதமான முடிவில் காளியின் இறப்பில் அவன் தன்மானம் கொண்டவன் என்ற அவனது நிலையினையும் அதே நேரத்தில் தன்னை இப்படி தனியாகத் தவிக்க விட்டுவிட்டு போய்விட்டானே என்று என்னும் பொன்னாவின் பின்னாளில் வாழ்க்கையும், அவள் பெற்றெடுக்கும் குழந்தையும் அதற்கு அவள் நினைவாகப் பெயர் வைக்கும் விதமும் தனது மனதில் இருந்ததை சொல்லியிருக்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

10 பிப்ரவரி 2022 

                       

Tuesday, 1 February 2022

அம்மா வந்தாள்

அம்மா வந்தாள்  

தி. ஜானகிராமன் 

காலச்சுவடு பதிப்பகம் 

பக்கங்கள் 180

விலை ரூயாய் 225


அம்மா வந்தாள், இது நான் வாசிக்கும் ஆசிரியர் தி. ஜானகி ராமன் அவர்களின் இரண்டாவது  நாவல். 

முதலில் வாசித்தது  மோகமுள். இந்த நாவல் ழுவதும் கும்பகோணம், காவேரி அதன் கரையோரம் இருக்கும் கல்லூரி மற்றும் பாபநாசம் கூடவே சென்னையும் கலந்து அந்த கதையின் பாத்திரங்கள் வாழ்ந்திருப்பது போலவே இந்த அம்மா வந்தாளிலும் காவேரி கரையில் இருக்கும் சித்தன் குளம் என்ற  ஒரு கிராமமும் கதையின் மற்றொருபுறம் சென்னை என அப்புவும் அவனைச் சுற்றியுள்ள வாழும் எல்லா கதா பாத்திரங்களும்  வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் இந்த கதையினை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுதியிருக்கிறார்.  அந்த காலகட்டத்தில் நடந்தோ அல்லது அவர் பார்த்தோ இருக்கலாம் இந்த கதையில் வரும் மாந்தர்கள். ஆனால் அந்த கதை வந்த காலத்தில் அவர் பிறந்த ஊருக்குள்ளே அவரை விடாமல் தடுத்து வைத்தார்கள் என்ற ஒரு செய்தியும் நமக்கு தெரிகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் விதவை திருமணம் இல்லை ஆனால் அன்று இவர் சொல்லும் பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கலாம் ஏன் இன்றும் கூட உறவுகள் மீறல் நடக்காமலா இருக்கிறது. இது பிறருக்குத் தெரியாமல் ரகசியமாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் மீறல் தான் என்றாலும் சமுதாயம் அதை ஏற்றுக்கொள்வதில்லை  ஏனெனில் நாம் சமுதாயம் என்ற ஒரு அழகான வேலிக்குள் பத்திரமாக இருக்கிறோம் என்ற ஒரு வகையான உணர்வுதான் காரணம்.  

அம்மா வந்தாளைப் பொருத்தவரை, இந்த கதை அவர் கண்ட பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையின் சாரத்தினை கொண்டு ஒரு கதைக்குள் கொண்டுவந்திருக்கிறார். ஆனால் பல்வேறு வகையில் இந்த கதைக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் வரம்பு மீறும் மனிதக் குலம் இல்லாமல் இல்லைதான் என்பது தான் நிதர்சனம்.

என்னதான் கதையில் ஆரம்பம் முதல் கடைசி வரிவரை "அப்பு" இடம்பெற்றிருந்தாலும் கதையின் ஆதாரமாகவும் மேலும் வலுசேர்க்கும் மையப்புள்ளியாகவும்  "அலகாரத்தம்மாள்" தான் பயணிக்கிறாள். ஏனெனில் ஒரு தாயாகவும், மனைவியாகவும் தனது நிலையினை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அலங்காரத்தம்மாள், அவள் தனது வாழ்வில் தேர்தெடுத்து பயணிக்கும் ஒரு மாற்றுப்பாதையினால் ஏற்படும் அனைத்துவகையான இடர்பாடுகளையும் சரியாக எடுத்துச்சொல்லாமல் இல்லை. இதுவே கதைக்கு மிகுந்த பலமாகவே இருக்கிறது என்றே சொல்லலாம்.

அலகாரத்தம்மாளுக்கு, தன்னை ஒரு கணம் கூட இம்சிக்காத கணவர் "தண்டபாணியை" விட "சிவசு" ஏன் முக்கியமானவனாகி போனான் என்பது பற்றி விடை தெரியாமலே இருக்கும் ஒரு வினாவாகவே தான் இருக்கிறது. அதுவும் தண்டபாணி கணவர் என்றும் குடும்பத்தில் அவரின் நிலையை வைத்துக்கொண்டு சிவசுவின் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டதும் மேலும் தன்னை ஒரு முக்கியமான நபராக நிலைபெற்று, எப்படி அலகாரத்தம்மாளால்  இதுபோலவே இறுதிவரையில் அதே இடத்தில் உழன்றுகொண்டிருக்க முடிந்தது.

அப்புவை, அலகாரத்தம்மாள்  எப்போதுமே தனது கடைசி மகன் என்று சொல்லும்போதெல்லாம் அவனுக்குக் கீழ் இருக்கும் மூன்று குழந்தைகள் பிறகு எப்படி என்ற கேள்வி எழுகிறது.

அப்பு, தனது பெரும்பாலான வாழ்க்கையினை வேதம் படிப்பதிலே கழித்துவிட்டு, கிராமத்துச் சூழலிலிருந்து சென்னைக்கு வருகிறான். அது அவனுக்கு ஏனோ அந்த சென்னை பட்டினம், கிராமத்து நிம்மதியினை கொடுக்கவில்லை. அழகான குடும்பம் அண்ணன், தம்பி, தங்கை, அப்பா மற்றும் அழகான அம்மா என எல்லோரிருந்தும் அவனுக்கு அங்கே இருக்க முடியாமல் செய்யும் அம்மாவின் செயல் என்ன செய்வது. அம்மா அவனை அன்பாகக் கவனிக்கிறாள் ஆனாலும் அவனுக்கு அவளை ஏறெடுத்து பார்க்கக்கூட முடியாத சங்கடத்தில் ஏன் இன்னும் இங்கே இருந்து வெந்துபோகவேண்டும் என்றும் மனம் போராடுகிறது.  அப்பு தனது அம்மாவைப் பற்றிய நிலையினை கேட்கும்போதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு தவிப்பிற்கு ஆளாகிறான். அப்படித்தான் இந்து அப்புவின் அம்மாவை பற்றி அவனிடம் சொல்லும்போதும் அவளிடம் தனது கோபத்தைக் காட்டிய அப்புவிற்கு  இன்றுஅவள் சொன்னதெல்லாம்  உண்மையாகவே தன் கண் முன்னே நடக்கிறது என்று பார்க்கும் போது அவனின் மனம் படும் வேதனையினை மிகவும் எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்.

அம்மாவின் நடத்தையினை பற்றி அப்பாவிடம் பேசும்போதும்  அதற்கு அவர் கொடுக்கும் எதார்த்தமான பதிலும் அப்புவிற்கு இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. பிறகு அக்காவின்  வீட்டிற்கு போகும் அப்புவிற்கு அக்கா, அம்மாவைப் பற்றிய விவரங்களையெல்லாம் சொல்லும்போதும் அவனுக்கு ஒரு வியப்பாகவே இருக்கிறது. நானும் இந்த குடும்பத்தில் ஒரு ஆள் தானே ஆனால் என்னை தவிர மற்ற எல்லோருக்கும் ஏன் ஊருக்கே தெரிந்திருக்கும் இந்த செய்தி ஏன் எனக்கு மட்டும் தெரியாமல் போனது என்ற வருத்தமும் அவனை மேலே ஆட்கொள்ள ஆரம்பிக்கிறது.

இத்தனை வருடம் வாழ்ந்த சித்தன்குளத்தில் இருக்கும் அத்தை பவானியம்மாளும், தனக்காகவே காத்து கொண்டிருக்கும்  இந்துவும் மற்றும் தன்னை மெருகேற்றிய வேதபாடசாலையும் போதுமென்ற அவனின்  நீண்ட மனப்போராடத்திற்கு பிறகு அவன் இங்கே வருகிறான். அவன் வருகைக்காக இந்து காத்துக்கொண்டேதான் இருக்கிறாள். இந்துவும் அப்புவின் வாழ்விலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு பெண் என்று போகிறது இவனின் வாழ்க்கை. 

சித்தன்குளத்திற்கு மீண்டும் சென்னையிலிருந்து புறப்படும் போது அம்மா அவன்கூடவே ரயில் ஏற்றி விட வருகிறாள் அப்போது அவள் தன்நிலையினை அவனிடம் சொல்கிறாள் அவள் செய்வது தவறென்றும் தெரிந்தும் அதிலிருந்து தன்னால் மீண்டுவர முடியாததையும் அவனிடம் சொல்லியழுகிறாள் அதற்கு அப்புவின் காலில் விழுந்து அந்த பாவத்தையெல்லாம் எரிச்சுடனும் என்கிறாள். அம்மாவின் இந்த செயலை தெரிந்துகொண்டுதானே இங்கிருந்து போகிறாய் என்றும் அதுவும் திரும்ப வரமாட்டாயா என்று அம்மா கேட்கும் கேள்விகளுக்கு அப்பு மனம் படும் வேதனைகளை அருமையாகச் சொல்கிறது.

இந்து, கல்யாணம் பண்ணிக்கொண்டு போனவள் மீண்டும் தனியாக வந்துவிட்டாள். பவானியம்மாள் வீட்டிலே தான் விதவையாக இருக்கிறாள் அவளுக்கு அப்புவென்றால் சிறுவயதிலிருந்தே விருப்பம். அப்பு இங்கு வேதம் சொல்லிக்கொள்ள வந்த நாள்முதல் அவன் மீது இந்துவிற்கு ஒரு தனி பிரியம் ஆனால் அவளுக்குக் கல்யாணம் செய்து வேறு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அவள் விதி அந்த வீடு நிலைக்காமல் திரும்பி இங்கேயே வந்துவிடுகிறாள். அப்புவிடம் தனகானவன் நீ தான் என்றும் வெளிப்படையாகவே சொல்கிறாள் ஆனால் அப்புவிற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கிறது அவள் தான் வாழ்வின் பாதியென்று. 

தண்டபாணி, தனது அறிவுத்திறமையால் நீதிபதியையும், வங்கி சேர்மனையும் மற்றும் பல்வேறு  பெரியவர்களையெல்லாம் வேதத்திற்கு பதில் தெரியவில்லை என்றால் தட்டிக்கேட்கும் திறமையும் குணமும் இருக்கும் இவர் தனது மனைவி  வேறொரு ஆடவனுடன் இருந்து மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாள் என்பது தெரிந்தும் அவளை எதுவே சொல்லாமல் அவள் பிரிவைத் தாங்கமுடியாமல் இருப்பது அவருடைய வெறுமையைக் காட்டுகிறது. தனது வெறுப்பை ஒரே இடத்தில மட்டும் தான் அவர் வெளிப்படுத்துகிறார் அதுவும் மனைவிக்கு எத்தனையோ பெயர் இருந்தும் இதுபோல அலகாரத்தம்மாள் என்ற பெயரை ஏன் வைத்தார்கள் என்று குமுறும் போது மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார்.

ஒரு அழகான குடும்பத்திற்குள், தன்னிடம் இருக்கும் சில சௌகரியங்களை வைத்துக்கொண்டு உறவாகப் போகும் குடும்பத்தில் ஒரு பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் சிவசு போலப் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்று சொல்வது? யார் மீது குறைசொல்வது?

அலகாரத்தம்மாள், தான் இப்படி மாறிவிட்டோமே என்ற தனது நிலையினை தெரிந்துகொண்ட  பிறகு தனது மகனான அப்புவை வேதம் படிக்க வைக்க விரும்புகிறாள். அதன்படியே அவனை வேதம் சொல்லிக்கொள்ளவைக்கிறாள்வெகுகாலமாக இருக்கும் இந்த செயல் பாவம் என்று தெரிந்தும், இது தனது  காலைச் சுற்றிய பாம்புபோல தொடர்ந்துகொண்டிக்கிறது என்றும் அப்புவிடம் சொல்லித் தான் செய்த இந்த தவற்றுக்குப் பிராயச்சித்தமாக உனது காலில் விழுந்து, தான் செய்த அந்த பாவத்தை எல்லாம் எரிச்சுடனும் என்றும் சொல்வதும், பிறகு அவன் இருக்கும் சித்தன்குளத்திற்கு வருவதும் அங்கிருந்து அப்பு மீண்டும் சென்னைக்கு வரமாட்டான் என்று தெரிந்துகொண்ட பிறகு தான் காசிக்குப் போகிறேன் அங்கே போய் என் பாவத்தையெல்லாம் தொலைத்து நானும் தொலைந்து போகிறேன் என்கிறபோது அப்பு அப்பாவை பற்றிக் கேட்கும் போது அவள் சொல்லும் அந்த வார்த்தைகளில் அவள் தனது கணவர் பற்றி என்ன நினைத்து இருக்கிறாள் என்பதை  "அது ஞானசூரியன், கருணாமூர்த்தி நான் செய்ததெல்லாம் பார்த்துக்கொண்டு என்னை கருக்கிபோடாம இருந்ததே அதுவே பெரிது" என்று மிக இயல்பாக சொல்வது தான் சிறப்பானது. இதுநாள் வரை நான் செய்த தவருக்கு நான் மட்டும் தான் மடியவேண்டுமே தவிர எந்த விதத்திலும் அப்பா பாதிக்க கூடாதே என்று சொல்லிக்கொண்டே தனது முடிவை நோக்கி  காசிக்குப் போகிறாள்.