Tuesday, 30 July 2024

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வாசிப்பனுபவம்

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது 

வைக்கம் முகம்மது பஷீர்

தமிழில் குளச்சல் யூசுஃப் 

காலச்சுவடு பதிப்பகம் 

விலை ரூபாய் 125

பக்கங்கள் 111




மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளுள் ஒருவரான  "வைக்கம் முகமது பஷீர்" எழுதிய இந்த நாவலைத் தமிழில் குளச்சல் யூசுஃப் மொழிபெயர்த்துள்ளார். 

இந்த நாவலில், அன்றாட நடக்கும் ஒரு முஸ்லீம் குடும்பத்தின்  அக காட்சிகளை மையமாகக்கொண்டு அந்த குடும்பத்தின் சுற்றிலும் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும் சேர்த்து, எப்படி ஒரு குடும்பத்தின் உள்ளே நடைபெரும் பல்வேறு நிகழ்வுகளின் வெளிப்பாடாகவும், நாவலின் கதைக்காலத்தில் நிகழ்ந்த     வெளிப்படுத்தியும் அந்த காலகட்டத்தில் நடந்த  ஊடக பல்வேறு கேள்விகளையும் அவற்றுக்கு காரணமாக இருக்கும் சூழ்நிலைகளையும் சொல்லிச் செல்கிறது.

வட்டனடிமை காக்காவின் மனைவி குஞ்சுதுதச்சும்மாவு அவரின் அப்பா ஒரு யானை வைத்திருந்த  தோரணையும் அவர்களின் குடும்பம் எவ்வாறு இருந்தது என்ற தகவல்களை உள்ளடக்கிய பாத்திரமாக    குஞ்சுதுதச்சும்மாவு வாழ்கிறாள். ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பம் எவ்வாறு தங்களின் கடந்து போன காலத்தை அசைபோட்டுக்கொண்டே நிகழ்காலத்தினை கடக்கும் என்பது இந்த நாவலின் உயிர்ப்பாய் வரும் குஞ்சுதுதச்சும்மாவின் ஒவ்வொரு நிகழ்விலும் பார்க்கமுடிகிறது.    

குஞ்சுதுதச்சும்மாவு  எப்போதுமே தனது ஆதிக்கத்தினை  வட்டனடிமையின் மீது  செலுத்துவதாகக் கதை செல்கிறது.

இவர்களின் ஒரே பெண்ணான "குஞ்சுபாத்தும்மா". செல்வச் செழிப்புடன் இருந்த சமயத்தில் அவள் வளர்ந்த விதம் மிக அழகா வர்ணிப்பட்டிக்கிறது. அவளின் முகத்தில் இருக்கும் கருத்த மச்சம், அந்த கருத்த மச்சம் தான் அவளின் அதிர்ஷ்ட மச்சம் என்று அவளுக்குள் ஒரு பிம்பத்தினை விதைத்துவிட்டனர்.

அவர்கள் வாழும் அந்த வீட்டின் அக்கம் பக்கம் இருப்பவர்களில் முஸ்லீம் அல்லாதோர்  எல்லோரும் காபிர்கள் என்றும் அவர்கள் அப்படிப்பட்ட  காபிர்களுடன் பழகக் கூடாதென்றும் அப்படி மீறி அவர்களிடம் பழகினால் தம்மால் நல்ல வாழ்வு வாழமுடியாது என்றும் அவளின் பெற்றோர்  அவ்வப்போது அவளுக்குச் சொல்லிவளர்த்தனர்.    

குஞ்சுபாத்துமாவிற்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன ஆனால் அந்த கல்யாணம் நடக்கவில்லை. கடைசி வரை முதிர்கன்னியாகவே வாழ்கிறாள்.

குஞ்சுபாத்தும்மா ஆற்றில் குளிக்கச் செல்லும் வேளையில் அவளைச் சந்திக்கும் நிறையப் பெண்கள் இவளின் அழகில் கண்டு வியப்படைந்தனர் ஆனால் குஞ்சுபாத்துமாவிற்கு அவளின் உம்மை ஆணை இட்டிருக்கிறாள் காபிர்களிடம் பேசவோ பழகவோ கூடாதென்று எனவே அவள் ஒவ்வொரு முறையும் யாரிடமும் பேசாமலே வந்து செல்வாள்.  

இந்த சந்தோசமான வாழ்க்கை ஒரு கட்டத்தில் நின்று அவர்களின் செல்வா செழிப்பு மற்றும் வீடு, ஜமாத்தில் இருந்துவந்த பதவி என எல்லாமே அவர்களின் உறவினர்களால் கைவிட்டுப் போய்விட்டது. தீர்ப்பும் இவர்களுக்குப் பாதகமாகவே வந்தது.

வாழ்வில் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை இங்கே ஒவ்வொரு காட்சியிலும் சொல்லியிருப்பார். தாங்கள் வாழ்ந்த வீடு போனபிறகு அங்கிருந்து புலம்பெயர்ந்து வேறொரு இடத்திற்கு வந்து ஒரு குடிசை போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். 

வட்டனடிமை, மீன் விற்று நாட்களை நகர்த்தினார். வறுமையும் முதுமையும் வட்டனடிமைக்கும் அவரின் மனைவி குஞ்சுதுதச்சும்மாவுவிற்கும் வாழ்வில் நித்தமும் சமாதானமில்லாத வாழ்வே இருந்தது.

குஞ்சுத்தும்மாவிற்கு இதெல்லாம் புதிதாகி இருந்ததால் அவள் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்ந்தாள். அவள் பொழுதுபோக்கெல்லாம் அவள் வீட்டின் அருகே இருக்கும் ஒரு குளம் அந்த குளத்தில் இருக்கும் மீன் மற்றும் தவளைகள் என அந்த அழகினை ரசித்துக்கொண்டே நாட்களை நகர்த்தினாள்.

அங்கே ஒரு புதிய குடும்பம் வருகிறது அவர்களும் காபிர்கள் எனவே அவள் அம்மா சொல்கிறாள். ஆனால் அந்த வீட்டில் இருக்கும் ஒரு ஆள் இவளுக்கு ஒருமுறை உதவி செய்கிறான். ஆனால் அவளுக்குத் தெரியாது அவன் அந்த வீட்டில்தான் இருக்கிறான் என்று. அவளுக்கு அந்த புதிய வீட்டு ஒரு பெண் அவள் பெயர் ஆயிஷா. இவர்களுக்கிடையே நெருங்கிய சினேகிதம் வளர்ந்தது. அவளை அவள் துட்டாபி என்றுதான் அழைப்பாள்.

அதிர்ஷ்ட மருவினை கொண்ட குஞ்சுபாத்தும்மா இப்போது அவளின் உம்மாவிற்கு ஒரு பெரிய தருத்திரியமாகவும்  சுமையாகவும் ஆகிவிட்டாள் என அவள் அம்மா அவளிடமே சொல்லுவாள்.

அவளுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று அவளிடமிருந்து அதை விரட்ட வேண்டும் என்று மந்திரித்து அவளைப் பிரம்பால் அடிக்கிறான் அப்போது அவள் அலறும் சத்தமா "என்னை அடிக்கவேண்டாமென்று சொல்லுங்க வாப்பா", என்பதை வாசிக்கும் சமயம்  நம் கண்ணிலும் ஒரு துளி கண்ணீர் விழாமல் செல்லாது.

என இந்த கதை ஒரு முஸ்லீம் குடும்பத்தில் உள்ளே இருக்கும் கதையினை வெளிப்படுத்துகிறது.        

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 அக்டோபர் 21         



   

Wednesday, 17 July 2024

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை  

ஆசிரியர் : பெருமாள் முருகன் 

காலச்சுவடு பதிப்பகம் 

பக்கங்கள் 143

விலை ரூபாய் 175




பெருமாள் முருகன் எழுத்துக்கள் பெரும்பாலும் வாசிப்பவர்களை வியக்கவைக்கும் வகையிலான கதை மாந்தர்களையும்  அதற்கேற்ற கதையின் கலமும் என மிக அருமையாகவும் வாசிப்பவர்களைத் தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் விதமாக  இருக்கும் என்பதில் என்ற சந்தேகமும் இருக்காது ஏனெனில் அவரின்  கதைகளில் வாழும் கதைமாந்தர்கள், ஏதோ ஒருவகையில் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களாகவே இருப்பார்கள் மேலும் அவரின் இயல்பான கதையின் ஓட்டம் நம்மை அந்த கதை மாந்தர்களுடனே சேர்ந்து நம்மையும் பயணிக்க வைக்கும்.

அப்படித்தான் நான் இந்த "  பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை" என்ற அவரின் முதல் நாவலை வாசித்தேன். இதற்கும் முன்னர் நான் வாசித்த "மாதொருபாகன்" மற்றும் "ஆலவாயன்" கதைகளிலும் வாழ்ந்து செல்லும் கதைமாந்தர்கள் நம் மனதில் நீங்கா  இடம்பிடித்துள்ளனர். அப்படிதான் இந்த கதையிலும் வளம் வரும் பூனாச்சியும் அவளுடன் உறவாடிவரும் ஒவ்வொரு பாத்திரமும் பத்திரமாக மனதுக்குள் வந்து ஆக்கிரமித்துக்கொண்டன. 

ஒரு கதையின்  கருவினை மனிதர்களை மாந்தர்களாக வைத்துச் சொன்னால் நமக்கு எளிதில் புரிந்துகொள்ளவும் கூடவே எங்கேயாவது ஒருவரின் வாழ்க்கையினை அந்த கதையுடன் மையப்படுத்தி நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இங்கே இவர் சொல்ல வந்த கதையினை மனிதர்களை மையமாக வைக்காமல் ஒரு "வெள்ளாட்டினை" கதையின் நாயகியாக்கி அவளுடன் நம்மைப் பயணிக்க வைத்திருக்கிறார் மட்டுமல்லாமல் அவளை அருமையாக ரசிக்கவும் சிலநேரங்களில் அனுதாபபடவும்  மற்றொரு புறம் ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறார் ஆசிரியர்.

தனது காட்டிலிருந்து கொஞ்சம் தூரத்திலிருந்த குட்டிக்கரட்டின் மேல் உட்கார்ந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  கிழவனிடம், அதுவரையில் கிழவனுக்கு அறிமுகமில்லாத நெடுவான ஒருவன் தனது கையில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியுடன் வருகிறான். வந்த அவன் தனது குட்டியை "பூங்குட்டியினை" எப்படியோ சமாளித்து கிழவனிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறான். அப்படியாக அந்த கிழவனிடம் வந்து சேரும் பூங்குட்டிதான் நம் கதையின் நாயகி பூனாச்சி கதையின் உயிரோட்டமாக நம்மை அவளோடவே அழைத்துச் செல்கிறாள், வாருங்கள் நாமும் அவளின் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்வோம். 

அவள் வந்து சேர்ந்த பிறகு, தனது மகளைக் கல்யாணம் கட்டிக்கொடுத்து விட்டு தனிமையில் இருக்கும்  கிழவனுக்கும்  கிழவிக்கும் இவள் வழியாக  ஒரு புதிய உறவும் புதியதோர் உலகமும் அறிமுகமாகிறது.  பூனாச்சியின்  பிறப்பிற்குள் இருக்கும் அதிசயம் என்னவென்று தெரியாமல் அவர்கள் அவளை அவர்களோடய மற்ற ஆட்டுக்கூட்டத்துடன் சேர்த்து வளர்க்கிறார்கள்.


பூனாச்சி மிகச் சிறிய குட்டி என்பதால் அவளைக் கிழவி பொறுமையுடன் பாதுகாத்து வைத்திருக்கிறாள்.  இதுவே கிழவிக்கும்  பூனாச்சிக்கும் இடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. 

மேலோட்டமாக பார்த்தால் ஆட்டின் கதை என்றுதான் தோணும் ஆனால் கதை பேசும் விதம் ஒரு அரசாங்கம் எவ்வாறு அடக்குமுறையாகவும், அதன் மக்களை எப்படி அடிமையாகவும் வைத்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக ஒரு சில நிகழ்வுகளின் வழியாகச் சொல்லிச்செல்கிறது.  இயல்பாக எவ்வாறு மக்கள் கணக்கெடுப்பு இருக்குமோ அதுபோலவே அந்த நாட்டில் பிறக்கும் ஆடுகள் அனைத்தும்   அந்த அரசாங்கத்தின் சட்டப்படி,  அரசாங்க பதிவேட்டில் பதியவேண்டும் மேலும் அவற்றுக்கு ஒரு அடையாளமாக எண்ணும் காதில் தோடும் போடவேண்டும் என்ற நடைமுறை சட்டம் வழக்கத்தில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் வலியோர் மற்றும் அரசாங்கத்தின் பலமும் உடையவர்கள் சாதாரண மக்களை எவ்வாறெல்லாம் நடத்துகின்றனர் என்பதை சொல்லியிருக்கிறார்அப்படியாகக் கிழவனிடம் வந்து சேர்ந்த பூனாச்சியும் பதிவேட்டில் பதியவைக்க வேண்டும் அதற்கு அவளின் பிறப்பு தெரிந்திருக்கவேண்டும், ஆனால் இங்கே அதுதான் அதிசயம் என்பதால், அரசாங்கத்திற்கு அவளது பிறப்பைப் பதிவு செய்யக் கிழவனும் கிழவியும் படும் அவதிகள் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார். ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படும் இன்னல்களையும் அதே நேரத்தில் அந்த இன்னல்களிருந்து எப்படி மீண்டு வருவதென்பதையும் சொல்லியிருக்கிறார். இங்கேயும் பலமும் பலவீனமும் போட்டிப்போட்டுக்கொண்டு நீயா நானா எனச் செல்கிறது. 

பூங்குட்டி - பூனாச்சியாகிறாள். அவள் மேய்ச்சல் காட்டிற்குப் போகும் விதமும் அங்கே அவளுக்குக் கிடைக்கும் நண்பர்கள் மற்றும் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் அழகு தான்.  ஊத்தனும்உழும்பனும் அவளது நெருங்கிய நண்பர்கள் அதேபோல கடுவாயனும் பீத்தனும் அவளுக்குப் பிடிக்காதவர்கள். அவளுக்கு அன்றாடம் மேய்ச்சல் காட்டில் ஏற்படும் அனுபவங்களை எல்லாம் அன்றிரவே கிழவியிடம் சொல்லிவிடுவாள். ஒரு ஆடு தன்னை வளர்பவரிடம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்று இவர் கூறும் விதம் அருமையாக இருக்கிறது.    

வருடாவருடம் வரும் நோன்பிற்காகக் கிழவனும் கிழவியும் தனது மகள் வீட்டிற்குச் செல்வது வழக்கம் அதுபோலவே இந்த வருடமும் செல்ல வேண்டும் ஆனால் அவர்கள் போகும்போது தங்களது ஆடுகளைக் கூட்டிக்கொண்டு நடந்தே தான் செல்வார்கள்.  அதுபோலவே இந்த வருடமும் செல்ல திட்டமிட்டனர் ஆனால் பூனாச்சி எப்படி வருவாள் என்ற கேள்வி இருவருக்கும் எழவே  இறுதியில் வேறுவழியின்றி பூனாச்சியும் பயணம் மேற்கொள்கிறாள். அங்கே அவள் சந்திக்கும் ஒவ்வொரு அனுபவமும் அவளைப்போலவே அழகுதான். அந்த பயணத்தில் அவள் தொலைந்து போகிறாள், அவளை தொலைத்துவிட்டு கிழவனும் கிழவியும் தவித்துப் போகின்றனர். ஒரு வழியாகக் கடைசியில் பூனாச்சி கிழவியிடம் கிடைத்துவிடுகிறாள்.  இந்த பயணத்தில் போது அவள் சந்திக்கும் நண்பர்கள், புதிய காடுமேடுகள் அங்கே வந்து போகும் வெவ்வேறு  விதமான நினைவுகள் என மகள் வீட்டிற்கு வந்தடைகின்றனர்.

இதுவரையில் பூனாச்சிக்கு எந்த ஒரு ஆண் ஆட்டின் மீது கவனம் சென்றதே இல்லை. அப்படியிருந்த இவளுக்கு விருந்துக்கு வந்த இடத்தில் இருக்கும் பூவன் மீது ஓர் கொள்ள ஆசை. இங்கே இவர்களுக்கும் ஏற்படும் உறவு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  இறுதியில் இவர்கள் பிரிய வேண்டிய நேரத்தில் ஏற்படும் நிகழ்வுகள் எத்தனை நயத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் கிழவி தனது வேறொரு ஆடான பொறுமியினை மகளிடம் விட்டுவிட்டு வருகிறாள் அப்போது பூனாச்சி தனது பூவனுக்கு இந்த பொருமி பக்கம் திரும்பிவிடுவானோ என்றும் மேலும் அவனைப் பிரிந்த சோகமும் அவளை மிகவும் பாதிக்கிறது.

கதை முழுவதும் இயல்பான கிராமத்துப் பேச்சுவழக்கு கதையின் மிகப் பெரிய பலமாகவும்,  அந்த மண்ணின் வாசனை வசமாகச் சொல்லிச்செல்கிறது கதை. கிராமத்தில் ஆட்டுக் கிடாவுக்கு விதயடிப்பு செய்வார்கள், எனது பக்கத்துக்கு வீட்டுத் தாத்தா தான் மிக நேர்த்தியாகச் செய்வார், அப்படிச் செய்யும் போதும் அந்த கிடாயின் கதறல் மட்டுமல்லாமல் ஒரு சில நாட்கள் அது நடமாடும் விதம் மனதை நெருடவைக்கும்  அதே நெருடல் இங்கே இவர் விவரிக்கும் போதும் வந்து போகிறது.

பொதுவாகக் கிராமத்தில் ஒரு சிலர் தங்கள் வீட்டில் வளர்த்த ஆடுகளைச் சாப்பிடமாட்டார்கள் இதுபற்றியும் பேசியிருக்கிறார் அதேசமயம் பஞ்சம் வந்தால் மனிதன் எந்த எல்லைக்கும் போவான் என்பது இறந்துபோன ஆட்டை உப்புக்கண்டம் போட்டு வைத்துச் சாப்பிடுவதும் யதார்த்தமான நிகழ்வுகளைக் காட்டுகிறது. அதேசமயம் கெடுபிடியான காட்டப்பட்ட அரசாங்கம் தனது மக்களுக்குப் பஞ்சம் வந்ததும் ஒவ்வொருவீட்டுக்கும் கூழ் காய்ச்சி குடிக்கவும் மாவும் கொடுத்து உதவுவது அரசாங்கத்தின் மீதும் ஒரு நம்பிக்கை வைக்கத் தோன்றுகிறது.

மொத்தத்தில் வாசித்த சிலநாட்கள் பூனாச்சி என்னை வலைகூடவே உலாவ அழைத்துச் சென்றாள் ஆனால் நான் இன்னும் அங்கிருந்து விலகிவரவில்லை அவள் தான் எடுத்துக்கொண்ட உணவை எவ்வாறு அசை போடுகிறாளோ அதுபோலவே என் மனதிலும்  பூனாச்சியின் வாழ்க்கை அசைபோட்டுக்கொண்டேயிருக்கிறது.

ஆட்டை பற்றிய ஆசிரியரின் ஆழமான மற்றும் நுணுக்கமான விவரங்களை மிக தெளிவாக அனைவரும் அறிந்துகொள்ளுவிதமாக சொல்லியிருக்கிறார்.  

அனைவரும் கட்டாயமாக வாசிக்கவேண்டியவள் இந்த பூனாச்சி....


அன்புடன் 

தேவேந்திரன்