பெண்ணியம் சார்ந்ந நூல்கள்
நூல். : பெண் ஏன் அடிமையானாள் ?
ஆசிரியர் : தந்தை பெரியார்
1942 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் சிந்தனைகள் தான் இன்று நாம் அனுபவிக்கும் ஏகபோக சுதந்திரங்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 78 வருடங்களுக்கு முன்னரே எழுதிய எழுத்துக்களை படிக்கும் போது அவரின் சிந்தனைகள் எந்த அளவுக்கு ஒரு மனித இனம் சிக்கிக்கொண்டிருக்கும் கொடுமைகளையும் அடிமைத்தனத்தையும் உதறி தள்ளி ஒரு புதியதோர் உலகம் காண வேண்டும் என்ற கனவுகளின் விடியலே இன்றைய நிலை ....
இந்த நூலின் கருத்துக்கள் உலகில் உள்ள எல்லா பெண்களும் எவ்வாறு அடிமைக்கு உட்பட்டிக்கிறார்கள் என்ற உண்மையினை தனது மனதில் ஏற்பட்டதின் விளைவே இந்த நூல். இந்த கருத்துக்கள் ஐரோப்பியர்கள், ரஸ்சியர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் எந்தெந்த விதத்தில் பெண் அடிமைப்படுகிறாள் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விவரித்துள்ளார்.
1.கற்பு
கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்றது சரியல்ல அது இருபாலருக்கும் அதாவது ஆண் - பெண் என்ற இரு சாராரில் பெண்களுக்கு மாத்திரமே அது (கற்பு) வலியுறுத்தப்பட்டிருக்கிறதென்றும், இவ்வலியுறுத்தலே பெண்ணை அடிமையாக்குவதற்குப் பெரிதும் காரணமாய் வந்திருக்கிறதென்றும், ஆண் - பெண் இருவரும் சரிசமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்கிற நிலைமை ஏற்படவேண்டுமானால், மேற்கண்ட கற்பு என்பதன் அடிப்படையான லட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு அது விஷயத்தில் ஆண், பெண் இருவருக்கும் ஒன்று போன்ற நீதி ஏற்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.
2. வள்ளுவரும்-கற்பும்.
நீதி நூல்கள் என்பவைகள் எப்படிப்பட்ட பெரியோர்களால் எழுதப்பட்டவைகள் என்றாலும் அவை அக்கால நிலையையும், எழுதப்பட்ட கூட்டத்தின் சவுகரியங்களையும் அனுசரித்து எழுதப்பட்டதென்றும், மற்றும் ஒரு நீதியானது எக்காலத்தும் எல்லாத் தேசத்திற்கும், எல்லாக் கூட்டத்தாருக்கும் சவுகரியமாகவும், பொதுவாயும் இருக்கும்படியாக எழுத முடியாதென்றும், ஆதலால் எந்தக் கொள்கையும் எக்காலத்தும், எல்லாத் தேசத்திற்கும், எல்லோருக்கும் சவுகரியமாயிருக்குமென்றும் கருதி, கண்மூடித்தனமாய், பின்பற்றக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
3. காதல்.
காதலைப்பற்றிப் பேசுகிறவர்கள், “காதெலன்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல” என்றும், “அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு. காதல் வேறு” என்றும், “அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்” என்றும், அதுவும் “இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்”
எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனதிஷ்டத்தை - திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்களென்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.
4. கல்யாண விடுதலை.
கல்யாணம் என்பது ஆண்-பெண் இவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்திற்கேற்பட்ட ஒரு ஒப்பந்த விழாவே ஒழிய, அதில் எவ்விதத் தெய்வீகத் தன்மை என்பதும் இருக்க நியாயமில்லை என்பதையும், அப்படிப்பட்ட கல்யாணம் சான்பதும் இருபாலார்களுடைய வாழ்க்கைச் சவுகரியத்திற்கு ஒத்து வரவில்லையானால், ரத்து செய்துவிடத்தக்கதே என்பதையும் விளக்க எழுதப்பட்டதாகும்.
5. மறுமணம் தவறல்ல
கல்யாணம் என்பது முன் குறிப்பிட்டதுபோல ஆண் - பெண் இருவர் வாழ்க்கை சவுகரியத்திற்கும், சந்தோசத்திற்கும் ஏற்றதே ஒழிய வேறில்லை என்றும், அது அப்படி இல்லாமல் போகுமாயின், ஒரு தடவை கல்யாணம் செய்துகொண்டோமே, இரண்டு பேரும் உயிருடன் இருக்கிறோமே; இனி எப்படி இதில் யாராவது ஒருவர் மறுமணம் செய்துகொள்வது என்று மயங்காமலும், இந்நிலையில் முன் மணம் செய்துகொண்ட பெண்ணின் கதியோ, அல்லது ஆணின் கதியோ என்ன ஆவது என்பதாய்க் கருதி ஒருவருக்கு அசவுகரியம் ஏற்படுமே என்பதற்காக ஒருவர் கஷ்டப்படுவது என்பதைக் கண்டிக்கவும், மறுமண முறையை இருவரும் கைக்கொண்டால் யாருக்கும் கஷ்டம் ஏற்படாது என்பதை வலியுறுத்தவும், இன்னின்ன சந்தர்ப்பங்களில் மறுமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் விளக்கவும் எழுதப்பட்டதாகும்.
6. விபச்சாரம்
விபச்சாரம் என்னும் குற்றம் சுமத்தப்படுவதானது பெண்ணுக்கே உரியதாயிருக்கின்றதே தவிர, அது உலக வழக்கில் ஆணுக்குச் சம்பந்தப்படுவதில்லை என்றும் கேள்விகளின் விளைவாக எழுதபட்டது.
7. விதவைகள் நிலைமை
இளம் வயதிலேயே திருமணம் முடித்து விதவையான எத்தனையோ பெண்கள் விதவைத் தன்மையால் அனுபவிக்கும் கொடுமையை எடுத்துக்காட்டவும், அவர்களுக்கு மறுமணம் செய்யவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் எழுதப்பட்டதாகும்.
8. சொத்துரிமை.
பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்படவேண்டுமானால், அவர்கள் ஆண்களுடைய அடிமைகள் அல்லவென்றும், ஆண்களைப்போலவே வாழ்க்கையில் சகல துறைகளிலும் சம அந்தஸ்துடையவர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களானால், உலகச் செல்வங்களுக்கும், போக போக்கியாங்களும் ஆண்களைப் போலவே பெண்களும் உடைமையாளராக வேண்டும் என்பதை வலியுறுத்தவும், பெற்றோர்களுடைய சொத்துகளுக்குப் பெண்களும் ஆண்களைப் போலவே பங்குபெற உரிமையுடையவர்கள் ஆகவேண்டும் என்பதை வலியுறுத்தவும் எழுதப்பட்டதாகும்.
9. கர்ப்பத்தடை
பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்றும் பெரியார் கூறுகிறார். பெண்கள் சுயேச்சையாக இல்லாமல் சார்ந்து இருப்பதால் அவர்களுக்கு சொத்தும், வருவாயும், தொழிலும் இல்லாததால் தங்கள் குழைந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை நாடியே இருக்கவேண்டுகிறதென்றும் ஆதலால் பெண்கள் கருத்தடை அவசியம் என்று பெரியார் எழுதுகிறார்.
10. பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழியவேண்டும்
பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்றும், எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பாடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தவே எழுதப்பட்டவையாகும்.
நன்றி
No comments:
Post a Comment