Tuesday, 25 January 2022

ஹிட்லரின் - வதைமுகாம்கள்  

ஆசிரியர் மருதன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 210

பக்கங்கள் 232 



இந்த வருடத்தின் முதல் வாசிப்பாக பா.ரா. அவர்களின் "ஹிட்லர் வாழ்க்கை வரலாறு" வாசித்ததிலிருந்து, ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி வாசிக்கவேண்டும் என்று ஆரம்பித்த  தேடலில் கிடைத்தது தான் ஆசிரியர் மருதனின் " ஹிட்லரின் - வதைமுகாம்கள்".

உலகிலேயே ஹிட்லர் எடுத்த கொடுங்கோலன் என்ற பெயருக்கு  இணையாக வேறு யாரும் எடுத்து இருக்க மாட்டார்கள்  என்று தான் நினைக்கிறேன். இந்த புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வரியும், வாசிக்கும் போது வாசிக்கும் நமக்குக் கிடைக்கும் வலியே இவ்வளவு கொடுமை என்றால் இந்த கொடூரத்தை அனுபவித்த மக்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

நேற்றுவரை பக்கத்துக்கு வீட்டில் வசித்தவர்கள் இன்று ஒரு இனத்தின் அடையாளமாக மாறி அழிக்கப்பட வேண்டியவர்களாக எப்படி நினைக்கமுடிந்தது என்று பார்க்கும் போதும் மனிதம் எங்கே சென்றது என்ற கேள்வி எழாமல் இல்லை ஆனால் நாம் என்ன செய்யமுடியும். 

இந்த ஒட்டுமொத்த இன அழிப்பு என்பது ஹிட்லர் என்ற ஒற்றை ஆளால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது என்றால் அது சாத்தியமாகாது தான். என்னதான் ஹிட்லர் என்ற ஓர் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர் கூட இருந்த பெரும்பாலான விசுவாசிகளின் ஒத்துழைப்பது இல்லாமல் இது நிறைவேற்றியிருக்க முடியாது தான். இத்தனை பெரிய இனப் படுகொலைக்குப் பின்னால் ஒரு சமூகமே இருந்திருக்கிறது என்று பார்க்கும் போது அவர்களுக்கு எவ்வாறு இந்த நஞ்சினை விதைத்தார்கள் இந்த நாஜிகள்.

யூதர்கள் இருந்தால் நாம் வாழமுடியாது, நமக்குச் சேரவேண்டியது எல்லாம் அவர்கள் இருப்பதால் கிடைக்காமல் போகிறது ஆகவே அவர்களை அழித்தொழிக்கவேண்டும் என்ற எண்ணத்தினை ஜெர்மனியின் மக்களிடம் புகுத்தியது தான் நாஜிகளின் பெரிய வெற்றியே. 

யூதர்களைத் தேடித் தேடி அழித்தார்கள். ஜெர்மனியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தம் ஐரோப்ப்பிவில் இருக்கும் அணைத்து யூதர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கென அடையாளங்களை வெளிப்படையாக காட்டச்சொன்னதும், அதன் அடிப்படையில் அவர்களைக் கைது செய்ததும், அவர்களின் உடைமைகளைச் சூறையாடி மட்டுமல்லாமல் அவர்களை வதை முகாம்களுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர்.

எத்தனைவதைமுகாம்கள், ஆஷ்விட்ஸ்,பெல்செக்செம்னோபுச்சன்வால்ட்,  டாச்சவ்ரேவன்ஸ்ப்ருக்ஸ்டுட்டாப்தெரெசின்ஸ்டாட்கெய்ஸ்ர்வால்ட்கெம்னாட்ரெப்ளின்காமஜ்டானெக்மாத்தாசென்சாஷ்சென்ஹாசென் என பல்வேறு வதைமுகாம்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த யூதர்களைக் கைதிகளாக இந்த முகாம்களில் அடைத்து வைத்து அவர்களின் உழைப்பினை சுரண்டிக்கொண்டது மட்டுமல்லாமல் உழைக்க முடியாதவர்களை கொன்று குவித்ததும் அப்படி கொல்லப்பட்டவர்களை அள்ளிக்கொட்டுவதற்கும் யூதர்களையே பயன்படுத்தினார்கள் என்றால் அது கொடூரத்தின் உச்சம் என்றே தான் சொல்லவேண்டும்.

இவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்து ரயிலில் ஏற்றியதும், அந்த ரயில் பயணத்தில் மூச்சுக் காற்று கூட விட இடமில்லாமல் மக்களை அடைத்துவைத்து கதவை மூடி செய்யாத ரயில் பயணத்தினை அவர்கள் சொல்லும்போது உலகில் இதைவிட வேறொரு கொடுமை இல்லை என்கிறார்கள்.

கைது செய்த இவர்களுக்கு இருந்த அணைத்து அடையாளங்களை அழித்துவிட்டு அவர்களுக்கு எண்கள் மட்டுமே அடையாளமாகக் கொடுத்தனர். இவர்களில் உயிர்பிழைத்து வந்தவர்கள் சொல்வது எங்களின் ஒட்டுமொத்த அடையாளத்தினையும் அழித்து விட்டு ஒரு நரகத்தில் வாழ்ந்தோம் என்கிறார்கள்.

கொலை செய்யப்பட்டவர்கள் அல்லாமல் பெரும்பாலோனோர் தற்கொலையும் செய்து கொண்டார்கள் என்பது இன்னும் பெரிய கொடூரம் தான்.  இவர்களைக் கொன்று குவித்த விதம் ஒவ்வொருவரின் மனதில் எத்தனை விதமான வன்மம். ஒரு சக மனிதன், எப்படி ஒரு மனிதனைக் கூட்டமாக வைத்துக் கொல்ல முடியும்? அப்படித்தான் செய்திருக்கிறார்கள் நாஜிகள்

யூதர்களைக் கைது செய்து, வதை முகாம்களுக்கு அழைத்து வந்து அவர்களின் அடையாளத்தினை அழித்து, உடல் முழுவதும் முடியினை மழித்து, ஆடைகளை அகற்றி, அவர்களுக்கு என ஒரு எண்ணைக் கொடுத்து கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்து அவர்களின் உடலில் பலம் இருக்கும் வரை அவர்களின் உழைப்பினை சுரண்டி பிறகு கொன்றதும் அப்பப்பா நெஞ்சம் பத பதைக்கிறது.            

வதை முகாம்களுக்கு வரும் பெரும்பாலோனோர் காஸ் சாம்பருக்குள் செல்வதும்,  அவர்களுக்கு நாம் எங்கே செல்கின்றோம் என்று தெரியாமலே செல்வார்கள். குளிக்கச் செல்லுங்கள் என்று உள்ளே அனுப்புவார்களாம் அதுதான் அவர்களின் கடைசி தருணம் எனத் தெரியாமல் சென்றவர்கள் எத்தனை பேர்கள்.

குழந்தைகள் கூட விட்டுவைக்க வில்லை இவர்கள். இவர்களின் மனதில்  எப்போதும் யூதர்கள் அழியவேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் இருந்திருக்கிறது போலும்.

தங்கள் உழைப்பினை சுரண்டிக் கொண்டு நம்மால் உழைக்க முடியாத தருணம் வரும் போது எப்படிய கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்ட சில யூதர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதைத் தெரிந்து கொண்ட நாஜிகள் தற்கொலை நடக்காமலும் பார்த்துக்கொண்டார்கள்.  யூதர்களை வேலை வாங்குவதற்காக ஒரு யூதரைத் தான் தலைவனாக நியமித்து அவர்கள் கைக்கொண்டே அவர்களை அடிக்க வைத்து வேடிக்கை பார்த்தார்கள். அது நிகழவும் செய்தது யார்தான் ஒரு பதவி கொடுத்தால் அந்த போதையிலிருந்து விலகுவார்கள். அப்படி அவர்களில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவன் என நியமித்தனர்.

லட்சக் கணக்கில் தமது இனம் அழிந்து போன போதும் எஞ்சி உயிர்வாழ்ந்த சிலர் விடுதலைக்குப் பிறகு அனுபவித்த துயரம் ஒன்றல்ல இரண்டல்ல என்று தான் சொல்லவேண்டும். தனது உறவினர்கள் தேடி அலைந்தவர்கள் வெகு வானவர்கள். வயிறு காய்ந்து ஒட்டிப் போன பிறகு அவர்களால் உணவினை உட்கொள்ள முடியாமல் இறந்து போனவர்கள் ஏராளம். மனநிலை சோர்ந்து போனவர்கள் ஏராளம்.    


வதைமுகாம்கள் நாஜிகள் ஆரம்பித்தது இல்லை என்றும் இது பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டனால் ஆரம்பிக்கப்பட்டது என்றும் பிறகு பல்வேறு நாடுகளில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த புத்தகம் வதைமுகாம்களின் முழு விவரத்தினையும் மிக எளிமையாக விவரிக்கிறது. மேலும் பல்வேறுபட்ட நபர்கள் இந்த முகாம்களிலிருந்து விடுதலை பெற்ற பிறகு வெளியிட்ட கருத்துக்களையும் விவரமாக விளக்குகிறது.

வரலாற்றில் கரை படிந்த அந்த கொடூர முகத்தின் ஒவ்வொரு சம்பவங்களும் தெளிவாகச் சொல்கிறது இந்த புத்தகம்.

இத்தனை விதமான கொடூரத்தின் மையமாக இருந்த ஹிட்லர் தனது காதலியுடன் ரகசிய அறையில் தற்கொலை செய்துகொண்டார். உலக ஜனநாயகத்தின் குரல்வளையினை நெரித்த கொடுங்கோலன் இறுதியில் உயிருக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டது வரலாற்றில் அவர் பதித்து போன தடம்.



   

                                            

          




No comments:

Post a Comment