Saturday, 23 May 2020

ஊர் திரும்புதல் - 3


மறுநாள், அவன் பக்கத்து ஊரிலுல்ல கடைவீதிக்கு செல்ல மிதிவண்டியை எடுத்து மிதிக்க தொடங்கினான்.

அந்த சாலையின் பக்கத்தில்  ஓடும்  ஆற்றின்  மறுகரையில் நெடுகிலும் உயர்ந்திருந்த  பனைமரங்களும், ஈச்சை மரங்களும் புதிதாக நடப்பட்டு இருந்த  தேக்கு மரங்களும் விழாக்காலங்களில்  பச்சைத்தோரணங்கள்  கட்டியது போல இருந்தது. அந்த  மரங்களின்  வேர்கள்  ஆற்றங்கரையின்  மண்ணை  இறுக்கப்பிடித்திருந்தது.










அவன் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான் அந்த கடைவீதி. அந்த வளைந்து நெளிந்து செல்லும் சாலையின் பாதி தூரத்தில் ஓர் ஒற்றை ஆலமரம்,   நடை  பயணமாய்  செல்பவர்களுக்கு  நிழல் கொடுக்க வென்றே  வீற்றிருப்பது  கம்பீரமாக அகண்டு  விரிந்திருந்தது. அதற்கு அடுத்து  அவன் முன்பு  கண்டிருந்த  ஒரு  இரட்டை  ஆலமரத்தை  காணாமல்  அவன்  துணுக்குற்றான். அந்த மரங்கள் இல்லாமல்  அந்த இடமே களையிழந்து  காணப்பட்டதுபோல்  அவன் வருந்தினான்.







ஒற்றை ஆலமரத்திற்கு அருகில் அந்த ஆறு வளைந்து போவதால் ஆற்றின் நீரின் வேகத்தில் அந்த கரை மழைக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் இருந்தது. ஆனால் புதிதாக நடப்பட்ட  தேக்குமரங்கள் அந்த கரையை ஆபத்தில் இருந்து மீட்டு எடுத்துள்ளதை  கண்டு  அவன் மகிழ்ச்சியுற்றான்.




அந்த அழகை ரசித்த வண்ணமே பயணித்த அவன், வழியே நடந்து போய்க்கொண்டிருந்த அந்த தாத்தாவை கண்டான்.

அவர் வேறுயாருமில்லை, அவனின் பக்கத்துக்கு வீட்டு தாத்தா. சுற்றுப்பட்டு கிராமத்தில்  ஆடு மாடுகளுக்கு ஏதாவது என்றால் உடனே ஆட்கள் வண்டியுடன் வீடு தேடி வந்துவிடுவார்கள். பின்னர் வைத்தியம் முடிந்தவுடன் திருப்பிக்கொண்டுவந்து  வீட்டில் விடவேண்டும். அது  எப்போதும்  அவர்  விதிக்கும்  நிபந்தனை. ஏனெனில் அவருக்கு வண்டி ஏதும் ஓட்டத்  தெரியாது. 

என்றும்  இளமைபோல எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் அந்த தாத்தாவின் பழக்க வழக்கங்கள். அவர் தனக்கென்றே சில விசயங்களை கடைபிடிப்பார். அவைகளின் ஒன்றுதான்  வாரந்தோறும் சனிக்கிழமை நல்லெண்ணை குளியல். அவருடைய  வாழ்வியல்  எப்போதும்  எளிமையாகவே இருக்கக்கண்டிருக்கிறான். 

அந்தத்  தாத்தா அவனுக்கும்  அவன் உடன்  பிறந்தோருக்கும்  அவர்களுடைய  இளம் வயதில்  நித்தமும் கதை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார் .

 அவரிடம், "எங்கே போகிறீர்கள் தாத்தா?", என்று  கேட்டான்.

“பக்கத்து ஊரில் ஏதோ மாடு ஒன்று காலையிலேயிருந்து சுகமாக இல்லை என்று செய்திவந்தது, யாருமில்லையாம். வந்து அழைத்துத்  செல் என்று சொன்னார்கள், அதான் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்று போய்கொண்டிருக்கிறேன்” , என்றார்.

கேட்டதும்,"சரி வாங்க நான் உங்களை திருமங்கலத்தில் இறக்கிவிடுகிறேன்", என்று அழைத்துக்கொண்டான். 


அவன் அப்படியே, மனதுக்குள் அந்த  தாத்தாவுடனான தன் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே மிதிவண்டியை மிதிக்க தொடங்கினான் திருமங்கலத்தை நோக்கி.




தாத்தா அவனிடம் "உனக்கு  இங்கு இருந்த கௌசல்தார் பற்றி தெரியுமா?", என்று கேட்டார்.

அவன்,"ஆம் நன்றாகவே தெரியும்", என்றான்.

அந்த கௌசல்தார்  தாத்தாவையும் அவரின் பெட்டி கடையையும்,  அவர் வீட்டிற்கு அருகில் இருந்த பெரிய புளியமரத்தையும்  அதில் பழுத்து ரோட்டில் விழும் இனிய புளியம்பழங்களையும், அதற்கு கொஞ்சம் தூரத்தில் எதிரே இருந்த தூங்குமூஞ்சி மரத்தையும் அவனுக்கு நன்றாகவே  நினைவில்  இருந்தது. அதை  பின்னால் அமர்ந்திருந்த  தாத்தாவிடம்  விவரித்தான்.  கூடவே அந்த வீட்டின் அண்ணனும் அவரால் தயாரிக்கப்படும் வண்ண வாசல் தோரணங்கள், வண்ண வண்ண மாலைகள் பற்றியும் சொல்லிக்கொண்டே  வந்தான். கண்கள்  விரிய  பேசிக்கொண்டே வந்தவன்   அந்த  இரண்டு மரங்களும்  இல்லாமல்  வெறிச்சோடி  இருந்த  இரண்டு   வெற்றிடங்களை  கடந்து  சென்றான். அந்த கௌசல்தார் தாத்தாவின்  வீடு  மட்டுமே  அங்கே இருந்தது.

தொடரும்



ஊர் திரும்புதல் - 1

ஊர் திரும்புதல் - 2

Friday, 22 May 2020

ஊர் திரும்புதல் - 2




ஆறு மணியளவில்  அவன் காதில் அழகிய முருகனின் 'அறுபடை வீடு கொண்ட  திருமுருகா' , என ராமமூர்த்தியின் சவுண்ட் சர்வீஸ்  ஊர் முழுவதுமாய் ஓலிக்க அதை கேட்டுக்கொண்டே அவன் அவனுடைய தந்தையுடனும் தாயுடனும்  வீடுவந்து  சேர்ந்தான். 

வீட்டில்  நுழைந்ததும்  அவன்   வீட்டின் நாய் ஓடி  வந்து  வாலை ஆட்டிக்கொண்டே  அவனை கட்டித்தழுவிக்கொண்டது. 

நாய்தான்   எவ்வளவு  நன்றி உள்ளது. நீண்ட நாள் கழித்து வீடு திரும்பினால் நாய் முதலில் வந்தவரின்  கால் விரல்களை முகர்ந்து  பார்த்து   அடையாளம் கண்டு உடனே கட்டிக்கொள்ளும்.



அவன் எப்பொழுதும் ஊருக்கு வந்த உடன், அந்த தெருவில் இருக்கும் அனைவரின் நலம் விசாரிக்க சென்றுவிடுவான்.  சற்றே ஓய்வெடுத்த பின்பு அவன் புறப்பட்டான் அனைவரின் நலம் விசாரிக்க!.


காலை ஆகாரம் முடிந்த பின் வீட்டின் எதிரே வீற்றிருக்கும்   விநாயகரை வழிபட்டான். அங்கே அமைதியாக உட்கார்ந்திருந்த அவன் எதையோ யோசிக்க தொடங்கினான்.



அந்த ஊர் ஒருபுறம் ஆற்று நீராலும் மற்ற மூன்று பக்கங்களிலும் பசுமை நிறைந்த வயல்களினாலும்  சூழப்பட்டது.  சுமாராக 40 வீடுகளும், காவல் தெய்வமாக ஒரு அம்மன் கோயிலும், ஊர் நடுவில் ஒரு குளமும் என்று மொத்ததில் அழகே நிறைந்திருந்தது அந்த ஊர். 



ஆம், இத்தனை நாட்கள் அவன் தொலைத்த அந்த கிராமத்தின் அழகும் அந்த கிராமத்தில் மறைந்துபோன சிலபல வைபவங்களும்.

அதில் முதன்மையான ஒன்றுதான் அந்த மேடை நாடகம்.

ஆம், அந்த ஊரின் நாடகமென்றால் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் அங்கே கூடிவிடும். ஏனென்றால் எந்த  ஊரிலும் இல்லாத  நாடக  மேடையின்  சிறப்புதான். அதில் அப்படி என்ன சிறப்பு?

அந்த ஊர் நாடகத்தின் மேடை, அம்மன் கோவிலுக்கு  நேர்  எதிராக   விக்கிரமனாற்றின்  நடுவே கோவிலை  பார்த்து  அமைக்கப்படும்.  செங்கல் அறுத்து அதை சூளையில்   இடாமல்  செவ்வக  வடிவில்  சுவரெழுப்பி அதற்குள்  ஆற்றுமணல்கொண்டு  நிரப்பி  அந்த  மேடையினை  அமைப்பார்கள். அந்த மேடைக்கு  பந்தலிட்டு அழகான  வண்ண  அலங்கார விளக்குகளால்  அலங்கரிப்பார்கள்.  தோரணங்களும்  திரைசீலைகளுமாய்  மேடை  ஆர்ப்பரிக்கும்  தோற்றத்தில் எங்கும் இல்லாத  அளவிற்கு  அழகாய் இருக்கும்.



கோடையாதலால்  பார்வையாளர்கள்  அமர ஆற்று  மணலே  பாய்போல் விரிந்திருக்கும். அதுவே அழகு. மறுநாள் காலையில் மணல் மேல் அழகாய் வெவ்வேறு விதமான கால்தடங்கள் பரவியிருக்கும், அது  அதைவிட அழகு. 


மேடையே  சிறப்பென்றால்  அங்கு  அரங்கேறும்  அரிச்சந்திரா, வள்ளித் திருமணம், லவ குசா, சத்தியவான் சாவித்திரி என்று  ஒவ்வொரு  வருடமும்  அரங்கேறும் ஒவ்வொரு நாடகம் அழகு . 

அத்தனை  அழகான நாடகங்களை  வழங்க  வருகை தரும் மதுரையின் புகழ்பெற்ற நாடக கலைஞர்கள் என்பதே எல்லாவற்றிலும் மிகச்சிறப்பு. 

இந்த வைபவங்கள் எல்லாம் அவனது வீட்டின்  எதிரே  நடக்கும்.  அதெல்லாம் இல்லை  என்பதாலோ  என்னவோ அவனுடைய  முகம்  கவலையில்  ஆழ்ந்து  தெரிந்தது.

அந்த   கொண்டாட்டங்களை  எல்லாம்  நடத்திவைத்தவர்  ஒருவர். அந்த   மாமனிதர் துரைசாமி வாண்டையார் . அவரும்     இல்லையென்பதால் இனிமேல் இந்த நிகழ்வுகளை  காண இயலாது என்று  எண்ணியவாறே  இயலாமையும்  கவலையும்  தொனிக்க  சோர்ந்த  முகத்துடன்  வீடு திரும்பினான்.

தொடரும் 


Thursday, 21 May 2020

ஊர் திரும்புதல் - 1



அன்று மார்கழி திங்கள் வெள்ளிகிழமை அதிகாலை 5 மணி. அவன் ஊரை  நோக்கி சென்றுகொண்டிருந்த  அந்த  பேருந்தில் ஒரு இருக்கையில்  உறங்கியும் விழித்தும் நிலைகொள்ளாமல்  இருந்தான் அவன். அவன்  இறங்கவேண்டிய இடத்தின் பெயரை வண்டியின்  நடத்துனர்  சொல்லிக்கொண்டிருந்தது  அவன் காதில்  மெல்லியதாய்  கேட்டது. 

சட்டென எழுவதற்குள்  அந்த நிறுத்தத்தில் அந்த  பேருந்து நின்றது.

இறங்கிய  இடத்தில்  அவன்  வாடிக்கையாய்  தேனீர்  அருந்தும்  தில்லைபவன் இருப்பதை கண்டான். அதை  நோக்கி  மெல்ல  நடக்கத்தொடங்கினான். 

நெற்றி முழுவதும்  விபூதியும் அதன் மத்தியில் சிறிய சந்தனப்பொட்டும்  வைத்த  தில்லை பவன் முதலாளி  இவனை நலம் விசாரித்தார்.  அவருக்கு இவன் நன்கு  பரிச்சயமானவன்தான்.  இவன்  தந்தையின் நெருங்கிய சினேகிதர்தான் தில்லை பவன் உரிமையாளர்.

அவனுக்காக  அவனுடைய  தந்தை  அங்கே காத்திருந்தார். அவருடன்  அவன்  அவர்களுடைய  ஊரை  நோக்கி  புறப்பட்டான். 

அந்த வழி  நெடுகிலும் சல சலவென்று விக்கரமனாறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் தண்ணீர்  சத்தமும்   அதிகாலை பறவைகளின் குரல்களுமாய் அவன்  பயணித்துக்கொண்டிருந்தான். 

அவன் சென்றுகொண்டிருந்த  அந்த  வழிதான்  அவன்  கிராமத்தை நோக்கி போவது. இடையிடையே  தென்பட்ட  தேநீர்  கடைகளில்  விறகடுப்புகளின்  தீ  வெளிச்சம் அவனுக்கு ஏதோ  ஒரு  நெருக்கத்தை  உணர்த்தியது.



பாதையில்  எதிரே  உதிக்க  தொடங்கியிருந்த  சூரிய  வெளிச்சமும் இளம்சிவப்பாய்  பாதையின்  பக்கங்களில்  வளர்ந்திருந்த  பச்சை  புற்களில்  சொட்டிக்கொண்டிருந்த  பனிநீர்  துளிகளில்  ஊடுருவி  ஜாலம்  காட்டிக்கொண்டிருந்தது. பக்கங்களில்  பச்சையும்  மஞ்சளும்  கலந்து  அறுவடைக்கு  தயாரான  பயிர்களுடன்  வயல்கள்   அந்த  காலைவேளையை இன்னும்  ரம்யமாக்கின.



அது மார்கழி மாதமென்பதால் வழி நெடுக தெருக்களில் மங்கையர்களின் ஓவிய போட்டியாய் கோலங்கள். கோலங்களின்  மத்தியில் பரங்கி பூக்களும் அருகம்புல் கற்றைகளும் அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்தன. கோலம் வரைந்த  தேவதைகளின்  கூந்தல்களினூடே விரல் கோதி செல்லும்  மார்கழி பனிகாற்று.





அவன் கண்களில் இருந்து இரண்டு வருடமாய் விலகி  இருந்த  அத்தனையும் கண்டு  ரசித்துக்கொண்டே சென்றான். விக்ரமன்  ஆற்றங்கரையில்  நூறாண்டு  முதிர்ந்த அந்த  அரச மரத்தடியில்  வீற்றிருக்கும்  விநாயகருடன் உரையாடிக்கொண்டே வழி மேல் விழி வைத்து தன்மகனின் வருகைக்காக காத்திருத்தாள் அந்த தாய். 



ஆம் அவன் தன்தாயை காண தூர தேசத்திலிருந்து  வந்துகொண்டிருந்தான்.