Sunday, 20 December 2020

ஊர்திரும்புதல் -25

ஸ்ரீ மந்தகரை காளியம்மன் கோவில் திருவிழா 


அவனின் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதுதான் காளி என்றோரு அழகிய பெரிய கிராமம்.  அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாய் ஸ்ரீ மந்தகரை காளி அம்மன் அரணாக வீற்றிருக்கும்.




தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் வந்தாலே பக்கத்து ஊர்களுக்கெல்லாம் காளியின் மந்தகரை காளியம்மன் கோவில் காவடித்திருவிழாதான் நினைவுக்கு வரும். வருடம் தவறாமல் காவடித்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.  

அப்படித்தான் அவனும் தனது சிறுவயதில், நண்பர்களுடனும்,  ஊர்ப்  பெரியவர்களுடனும் அந்தத்  திருவிழாவுக்கு போய்வருவதுண்டு. அவன் சிறிய வயதில் திருவிழாவுக்கு  செல்வதுபற்றி  திட்டமிடுவான். யாரிடம் எவ்வளவு காசு வாங்குவது, எந்த நேரத்தில் போவது, என்னென்ன வாங்கி சாப்பிடுவது, என்ன விளையாட்டு பொருள் வாங்கிவருவதென்பதுவரை அதில் எல்லாம் அடங்கும். 

சித்திரை மாத வெயிலில் நண்பர்களுடன் நடந்தே  காளிக்குப்  போய் அந்த திருவிழாவினை கண்டு களிக்க அவனுக்கு  வருடாவருடம்  எழும்  ஆவல்  தணிந்ததே  இல்லை. 
 
ஸ்ரீ மந்தகரை காளியம்மன், காளி கிராமத்தின்  மெயின் ரோட்டிலேயே  கோவிலில்  வீற்றிருக்கும். திருவிழா சமயத்தில் அந்த ரோடு முழுவதும் தென்னங் கீற்றினால் பெரிய பந்தல் போடப்பட்டிருக்கும். பந்தலின் உட்புறம் வெள்ளை வேட்டிகளால் மறைக்கப்பட்டு இருக்கும். அந்த பந்தலின் நுழைவு வாயிலின் இருபுறமும் குலைதள்ளிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருக்கும். தங்கநிறம் கொண்ட தென்னம்  பாளைகளினாலும், பனை குலைகளினாலும், ஈச்சங் குலைகளினாலும் அழகாக  அலங்கரிக்க பட்டிருக்கும்.  அதனுடன் நடுநடுவே  வண்ண வண்ண காகித பூக்களின்  வரிசை இளங்காற்றில்  அசைந்தாடி பார்ப்பவர்  கண்களை  ஈர்க்கும். தென்னைஓலை  தோரணங்களும் அந்த  பந்தலினையும்  வீதிகளையும்  திருவிழா மனநிலைக்கு உரிய  மங்களத்தை   கொண்டுவரும்.  

பந்தல் முகப்பு வண்ணம் தீட்டிய தென்னங்  கீற்றுகளால் கோபுரம் போல அலங்கரிப்பட்டிருக்கும். அதன் மீது வண்ண வண்ண மின்மினி விளக்குகள் அழகாக பொருத்தி இருக்கும். அந்த மினுக்கும் மின் விளக்குகள்  இரவில் கண்கொள்ளாக்  காட்சியாக இருக்கும்.   

திருவிழா என்றாலே புதிது புதிதாக  கடைகள் வருவது வழக்கமாக தொன்று தொட்டு இருந்து வருவது. அதுபோலத் தான் இந்த ஊர் திருவிழாவிலும் ஒவ்வொருமுறையும் எண்ணற்ற கடைகள் வருவது வழக்கம். காளியம்மன் கோவில் தெருவெங்கிலும் புதிதாய் முளைத்த திருவிழா கடைகள் வண்ண வண்ணமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும். கண்ணாடியினால் நான்குபக்கமும் மூடப்பட்ட தள்ளு வண்டியில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  அருகில் செல்பவர்களை பலகாரங்களின் வாசனை சுண்டி இழுக்கும்.  நினைக்கும் தோறும் நாவில் எச்சில் ஊரும்.  




சாலையின் ஓரத்தில் வண்ணவண்ண பலூன்களுக்குள் காற்றினை ஊதி அழகாய் அதனை பல உருவங்களாக மாற்றி அருகில் செல்லும் குழந்தைகளின் மனதையும் மாற்றி கொண்டிருக்கும் பலூன் வியாபாரிகள் ஒருபுறம்.  

மூங்கிலில் செய்த ஊதுகுழல்களை  வியாபாரிகளிடம்மும்,  அடிக்கும் ரோஸ் வண்ணத்தில் ஜவ்வு மிட்டாயை  ஒரு கம்பத்தில்  சுற்றிவைத்து அதனை  இழுத்து இழுத்து கைக்கடிகாரம், மோதிரம், மீசை மற்றும் வித விதமான அணிகலன்களை செய்துவிற்கும் வியாபாரியிடம் சிறுவர்கள்  ஈ மொய்ப்பது போல் கூட்டமாக நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள்  சிறுவர்களுக்கு  காட்டும்  வேடிக்கைகளும்  ரசிக்கும்படி இருக்கும். அந்த  ஊதுகுழல்களை  வாங்கிய  சிறுவர்கள்  ஆர்வத்தில்  ஊதி எழுப்பும்  ஒலிகள்தான்  அங்கே  திருவிழா  நிகழ்ந்து  கொண்டிருப்பதையே நினைவுபடுத்தும். 


மற்றொரு இடத்தில் விளையாட்டுக்கடைகளும்  இருக்கும். அது  கொஞ்சம்  பெரியவர்களுக்கானது. அங்கே பிஸ்கெட், சோப்பு  டப்பா என்று  பலவிதமான  பொருள்களைப் சீரான இடைவெளியில் பரப்பி வைத்திருப்பார்கள். அந்த  வியாபாரி  கைகளில்  வளையங்கள் இருக்கும். போட்டியில்  பங்கேற்க  விரும்புபவர்  வியாபாரியிடம்  ஒரு  ரூபாய் கொடுக்க  வேண்டும். அதற்கு 3 வளையங்கள்  கிடைக்கும். போட்டியாளர் மூங்கில்  தடுப்புக்கு  பின்  நின்று  அடுக்கடுக்காக  வைக்கப்பட்டிருக்கும்  பொருட்களின்  மீது  குறிவைத்து  வளையங்களை ஒன்றின்  பின்  ஒன்றாக  எறியவேண்டும்.  அது எந்த பொருள்மீதாவது சரியாக  சுற்றி விழுந்துவிட்டால், அதுதான்  வெற்றி. எறிந்த  போட்டியாளருக்கு  அந்தப்  பொருள் கொடுக்கப்படும். 

அதை  அடுத்து  வளையல்கள், மணிகள், மற்றும் அழகுசாதன பொருட்கள் என பெண்களுக்கான சிறப்பு கடைகள் அதிக அளவில் இடம் பிடித்திருக்கும். காளியம்மன் கோவில் வீதியின்  கடைசியில் ராட்டினம் மேலும் கீழுமாக  சுழன்று கொண்டிருக்கும்.  அதனுள்ளே ஆரவாரத்துடன் சிறுவர் சிறுமியர்கள் கத்திக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். 

சித்திரை மாதவெய்யிலின் தாக்கத்தைப் போக்க தண்ணீர்ப் பந்தல்களில் , நீர்  மோர் கொடுக்கப்படும். ரோஸ் மில்க், சேமியா பாயசம், நன்னாரி சர்பத் என எந்த பக்கம் திரும்பினாலும் இரண்டு மூன்று கடைகள் இருக்கும். 

அங்கேயே  இரும்புச் சாமான்  கடைகளையும் காணலாம். இரும்புக்கடைகளில் தோசைக்கல் முதல் அரிவாள்மனை வரை எண்ணற்ற இரும்பாலான  வீட்டு உபயோகப்  பொருள்கள் கிடைக்கும். பெரும்பாலான வீடுகளில் இது போன வருட திருவிழாவில் வாங்கியது, இது மூன்று வருடம் முன்பு வாங்கியது என பேசக்  கேட்கலாம்.

இந்தத்  திருவிழா காளியம்மன் கோவில் வீதியில்  நடப்பதால் அங்கு இருக்கும் மண்பானைகள் செய்யும் நண்பனின் வீட்டுக்காரர்கள் கடையும் இருக்கும். இதில் பெரும்பாலும் சிறியவகை மண்பாண்டங்கள் விற்பனை செய்யப்படும். மண்சட்டிகள் முதல் சூட்டு அடுப்புவரை எல்லாம் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.

அவனுக்கு அதிகளவில் பள்ளி நண்பர்கள் அந்த ஊரில் இருப்பதால், திருவிழா சமயங்களில்  அவனுடைய நேரங்களை வெகுவாக நண்பர்களுடனே செலவழிப்பான். கடை வீதியெங்கும் சுற்றுவதும் பலவகையான தின்பண்டங்கள் வாங்கி சுவைப்பதுமாக அவனது நேரம் இனிமையாகக்  கழியும். ராட்டினம் ஏறி விளையாடியதும், காந்தி தாத்தா கண்ணாடிபோல பிளாஸ்டிக் பேப்பரில் செய்த வண்ண வண்ண கண்ணாடிகள் வாங்கி மாட்டிக்கொள்ளுவதும், அது ஒருமணி நேரத்திற்குள்ளவே கிழிந்து போவதும் என, சில சந்தோஷங்களும் சில சோகங்களும் சேர்ந்து அந்த பொழுதுகள் கழியும். 

அவன் தனது சிறுவயதில் எப்போதும் அவனது பெற்றோருடனோ அல்லது உறவினர்களுடனோ  நடந்தே போவான். சற்று வளர்ந்து அவன் அந்த ஊர்ப்  பள்ளியில் சேர்ந்த பிறகு தனியாகவே  அவனுடைய பள்ளி நண்பர்கள்கூட  போய்விடுவான்.


அப்போதெல்லாம் சிறுவர்கள்  வண்ண வண்ணக்  கண்ணாடிகளை அணிந்து, கைகளின் ஊதுகுழலும், வண்ண வண்ண பலூன்களும், பலூன்களினால் செய்த பொம்மைகளுமென கூட்டம்  கூட்டமாகப் போவது அவனுக்கு  குட்டி குட்டியாக கடைகளே நடந்து போவதுபோல ஒரு காட்சி தோன்றும்.      எல்லா திசையிலும் சுற்றி இருக்கும் கிராமங்களின் மக்கள்   இந்த திருவிழாவில் ஆண்களும் பெண்களுமாய்  பெரும்திரளாக வருவதும் போவதுமாக ஒரே மக்கள் கூட்டமாக இருக்கும். 

பெரும்பாலான பக்தர்கள் பால் குடம் எடுப்பதும், காவடி எடுப்பதும் என தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டிருப்பார்கள். 

வண்ணமயமான அந்த திருவிழாவில் சுற்றி இருக்கும் அத்தனை கிராமங்களும் கூடி கொண்டாடுவதும், திருவிழா முடிந்ததும் வீடுகளுக்கு திரும்பும் மக்களை பார்க்கும் போது எறும்புகள் கூட்டம் கூட்டமாக செல்வது போல ஒரு வகையான உணர்வு  தோன்றும்.  

சித்திரை மாதத்தினை மிகவும் விமரிசையாக இந்த கோவில் திருவிழாவுடன் அந்த சுற்று கிராமங்கள் எல்லாம் வரவேற்கும். அந்த நாளில் வந்து இருக்கும் எல்லோரும் காளியம்மன் அருளோடு புது வருடத்தினை ஆரம்பிக்கிறார்கள்.

இன்றளவும் இந்த திருவிழா நடைபெற்றுக்  கொண்டே இருக்கிறது.

  
              


1 comment:

  1. திருவிழா நினைவுகள் நன்று. திருவிழாவிற்கு நாங்களும் சென்று வந்த உணர்வு.

    தொடரட்டும் நினைவுகள்/பதிவுகள்.

    ReplyDelete