Sunday 13 December 2020

வேலை நிறுத்தம் ஏன் - நூல் விமர்சனம் ( ஆசிரியர் : மக்கள் எழுத்தாளர் விந்தன்)

நூல்.         :  வேலை நிறுத்தம் ஏன்            

ஆசிரியர்   :  மக்கள் எழுத்தாளர்  விந்தன்



இந்த கட்டுரை தமிழ்நாட்டில் (1945-46) எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின் தாக்கத்தினால் எழுத்தாளர் விந்தன் எழுதிய கட்டுரை தொகுப்பு தான் இந்த நூல். 

எழுத்தாளர் 'விந்தன்' அவர்கள் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் என்றுதான் தமிழ் உலகம் அறியும். அவர் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளிலும் தீவிரமாகச் சிந்திக்கிறார் என்பதற்கு இச் சிறுநூல் ஒரு சான்று.

இந்த கட்டுரையில் ஆசிரியரால் கேட்கபடும் கேள்விகளுக்கு அன்று முதல்  இன்றுவரை விடை தெரியாத  புதிராகவே இருக்கிறது. இத்தகைய சூழல் இன்றளவும் இருக்கிறது என்றால் இந்த பிரச்சனைகள் இருந்துகொண்டே தான் இருக்கும் எனபதில் நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?


“அன்றைய வாழ்க்கைச் சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆடம்பரங்களும் வசதி வாய்ப்புகளும் கூடியுள்ள இன்றைய நிலையிலும் கீழ்த் தட்டு மக்கள் நிலை மாறாமலேயே - வறுமைக்கோடு என்பதற்குக் கீழேயே பலகோடி மக்கள் பாரதப் புண்ணிய பூமியில் வாழ்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்”


ஆசிரியர் ஒரு தனி மனிதனை பற்றி கூறும்போது, சமுதாயத்தில் எவரும் தவிர்க்க முடியாதவர்கள்; தனித்தியங்க, தனித்து நிற்க, தனித்து ஒதுங்க எவராலும் இயலாது.  ஒட்டு மொத்த சமுதாயமே மனித குல அமைப்பு. இதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.  மனிதகுலம் முழுமைக்கும் ஒரு நல்வழியைத் தேடி ஆய்ந்து முடிவாக அறிவித்தவர், மனித குலத்தின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர் காரல் மார்க்ஸ்.  சிறு சிறு குழுக்களின், சிறு சிறு நாடுகளின் வளர்ச்சியிலும், தனிமனிதனின் உழைப்பிலும் வளர்ச்சியிலும் முழுமையான சிந்தனை செய்து முடிவுகண்டு முதலில் உரைத்தவர் அறிஞர் கார்ல் மார்க்ஸ்!

விடை காண முடியாத வினாக்களே மிகுதி! இதுவே வாழ்வு இதுவே உலகம்...

நோய் தோன்றத் தொடங்கினால் தொடக்கத்திலேயே கண்டறிந்து தீர்க்க முயல வேண்டும். மனிதர்க்கு உரியதே சமூகத்திற்கும் பொருந்தும். தொழிற் கூடங்களுக்கும் பொருந்தும்; ஆட்சிச் செயலரங்குக்கும் பொருந்தும்.  நீயா, நானா என்பதும், உயர்வு தாழ்வு என்பதும், அமைப்புகளின் வேர்களைப் பறிக்கின்ற தீயவுணர்வுகளாகும்.  நாம் அனைவரும் சமமானவர்கள். பாரத சமுதாயம் எனப் பாரதி பாடியதைப் பாடுவதோடு நிற்காமல், பாராட்டுவதோடு நிற்காமல், சிந்தித்துச் செயலில் கைக்கொள்ள வேண்டும்.

தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத் துறையிலும் இந்தியா தங்களுக்குச் சமமாகத் தலை தூக்குவதைப் பிரிட்டிஷார் எப்பொழுதுமே விரும்புவது இல்லை யென்பது எல்லோரும் அறிந்த விஷயம்.  ஆனால், ஜப்பான் குள்ளர்கள் இந்தியாவின் வாயிலில் காலடி எடுத்து வைத்தபோது, பிரிட்டிஷார் தங்கள் சுயநலக் கொள்கையை ஓரளவாவது மாற்றிக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்.

பாடுபடும் ஏழை எலும்புந் தோலுமாகி மடியவும், பாடுபடாத பணக்காரன் பருத்திப் பொதியைப் போன்று வளரவும், பிரிட்டிஷாரின் சுயநலக் கொள்கை இடம் கொடுத்தது.  இந்திய முதலாளி வர்க்கமும், வர்த்தக வர்க்கமும் பிரிட்டிஷாரின் கணக்கற்ற காகித நோட்டுகளைக் கைநிறைய பெற்றுக் கொண்டு, அவர்களுடைய ராணுவத் தேவையைப் பூர்த்தி செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தன.  ஏழை ஜனங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று அவர்கள் ஏகாதிபத்தியத்தின் சதிக்குத் துணையாக நின்றனர். 

இந்தக் காலத்தில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் புண்ணியவான்கள், அவர் களுடைய வாழ்க்கைத் தேவையைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்க்க வேண்டும். 

இன்னும், போதாக் குறைக்குக் கள்ள மார்க் கெட்டில் ஒன்றுக்கு இரண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து அரிசி வாங்கவேண்டிய அவசியமும் தொழிலாளிகளுக்கு ஏற்படாமற் போகவில்லை. விலைவாசிகள் விஷம்போல் ஏறியிருக்கும் இந்தக் காலத்தில் மேற்கூறிய சம்பள விகிதங்கள், பஞ்சப்படிகள் எல்லாம் எந்த மூலைக்கு?

துரதிர்ஷ்ட வசமாக இந்த நாட்டில் இன்று பிரபலமடைந்திருக்கும் பொதுஜனத் தலைவர்களில் பெரும்பாலோர், ஏழைத் தொழிலாளிகளின் உண்மையான வாழ்க்கை நிலையை அறியாதவர்கள்; அறிய முடியாதவர்கள்!  ஏனெனில், மேற்கூறிய தலைவர்களின் வாழ்க்கைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.  பசித்தவனுடைய வேதனையைப் பசித்தவன்தான் அறியமுடியும்; பசியாதவன் அறிய முடியாது.  அதே மாதிரி பசியாதவனுடைய சுகத்தைப் பசியாதவன்தான் உணர முடியும்; பசித்தவன் உணர முடியாது.

அதிகார வர்க்கம், "அமைதியை நிலை நாட்டுகிறோம்!" என்று சொல்லிக் கொண்டு, தன் மிருகத்தனமான அடக்கு முறைகளைப் பிரயோகித்தது.  எத்தனையோ அவசரச் சட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பிறந்துகொண்டே யிருந்தன.

உணவுப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கல்ல; உடைப் பஞ்சத்தை ஒழிப்பதற்கல்ல; கள்ள மார்க்கெட்டைத் தொலைப்பதற்கல்ல; லஞ்சப் பேயை விரட்டுவதற்கல்ல;  தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காகத்தான்!

தங்களுடைய வேலை நிறுத்தத்துக்குப் பங்கம் நேர்ந்து விடுகிறதென்று அஞ்சித் தொழிலாளிகள் மறியல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அமைதி குலைகிறது.  முதலாளிகள் போலீசாரின் உதவியை நாடுகிறார்கள்.  சர்க்கார் கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய போலீஸ் உதவி அளிக்கிறது.  தொழிலாளிகள் ஆத்திரமடைகின்றனர். அதன் பலன் படுகொலையில் வந்து முடிகிறது! - சமீபத்தில் நடந்த சம்பவம் பற்றி 75 வருடங்களுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாய் சொல்லியிருப்பதில்  வியப்பதற்கு ஒன்றுமில்லை.  

இந்தப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டால் உழைக்காமல் உண்ணும் முதலாளிகள் எந்த வேஷந் தரித்தாலும் பொதுமக்களிடையே இடம் பெற முடியாது.

நல்லொதொரு சமுதாய சிந்தனை உள்ள ஒரு கட்டுரை தொகுப்பினை வாசித்த அனுபவமும் அதனால் ஏற்பட்ட தாக்கமும் குறைய வெகு நாட்கள் ஆகும் என்றே நினவுகிறான்.

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் வாசிக்கலாம் ....

                    

நன்றி 

ராம. தேவேந்திரன் 

No comments:

Post a Comment