ரெயினீஸ் ஐயர் தெரு
ஆசிரியர் : வண்ணநிலவன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் 80
விலை ரூபாய் 70
ரெயினீஸ் ஐயர் தெருவில் இருப்பதோ ஆறு வீடுதான் ஆனால் இந்த ஆறு வீட்டிலும் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நம் கண் முன்னே நடப்பது போன்ற ஒரு அற்புதமான உணர்வினை கட்டாயம் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச் செல்கிறது வண்ணநிலவனின் ஆழமான எழுத்துக்கள்.
எத்தனை மனிதர்கள், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு அக வாழ்க்கை ஒளிந்துகொண்டிருக்கிறது. அந்த வாழ்வியலையும் அவர்களின் அன்றாட நிகழ்வுகளையும் அவர்களின் மனதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பல்வேறுவிதமான விருப்புவெறுப்புகளையும் மிக நேர்த்தியாகவும் துல்லியமாக விவரித்துச் செல்கிறார்.
இருதயம் டீச்சர் - சேசய்யா, இவர்களின் வாழ்க்கை ஆரம்பம் முதல் இன்று சேசய்யாவின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் நோய் வரையும். இருதயத்தின் மாமியார் இடிந்தகரையாள், மாமியாருக்கும் இருதயத்திற்கு இடையே இருக்கும் சின்ன சின்ன உரசல்கள் என இருதயத்தின் வாழ்வியலின் அத்தனை நிகழ்வுகளையும் மிக ஆழமாகச் சொல்லிச் செல்கிறார். இருதயம் டீச்சர் தனது கணவன் சேசய்யாவிற்கு தேவையான முட்டைக்காகத் தனது வீட்டில் வளர்க்கும் கோழிகளாகட்டும் அந்த கோழிகள் எங்கெல்லாம் சென்று இறை தேடுகிறது என்பதாகட்டும், மழைக்காலங்களில் கோழிகள் செய்யும் அசுத்தம் அதனால் ஏற்படும் வாடை, கோழிகளின் இறகுகள் அதைக் காது குடையப் பயன்படுத்தும் விதமும் அதிலே ஏற்படும் சுகமும் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆசீர்வாதம் பிள்ளை - ரெபேக்கா, ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்து முடிந்த ஒருசில தம்பதிகள் இருப்பார்கள் அதுபோலவே இந்த தெருவிலும் ஆசீர்வாதம் பிள்ளை - ரெபேக்கா தம்பதியர் வாழ்கிறார்கள். இவர்களின் வீடு எந்த அளவிற்குப் பழுதடைந்து இருக்கிறது. மழை பெய்யும் நேரம் அவர்களின் வீடு எவ்வாறு இருக்கும் என்பதும் ஒரு நேரத்தில் அடுப்படியின் சுவர் இடிந்து விழுந்ததும், அந்த வீட்டின் தாமரை பதித்த கல்படி அந்த படியில் பழகி வாழ்ந்து இளம் வயதிலே இறந்து போன இவர்களின் மகள் என இவர்களின் வீட்டில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் இவர்களுக்கு உதவிய தியோடர் எனச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.
அன்னமேரி டீச்சர் வீடும் மற்றும் இவரின் மகன் தியோடர் என இவர்களின் வாழ்க்கையும். தியோடர் எவ்வாறு அவனின் மனைவியினை இழந்து தனது வாழ்வின் தற்காலத்தில் படும் அவலங்கள் மற்றும் குடிபோதைக்கு அடிமையாகி அல்லல் படுவது என எல்லா நிகழ்வுகளும் சொல்லாமல் இல்லை.
ஹென்றி மதுர நாயகம், இவரின் மகன் சாம்சன் மற்றும் இவர்களுடன் வாழும் அற்புதமேரி, அவ்வப்போது வந்துபோகும் எஸ்தர் சித்தி என இவர்களுக்குள் நடக்கும் வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சொல்லியிருக்கிறார். இந்த வீட்டில் நடக்கும் உறவுகளின் அத்துமீறல்கள் அவற்றைத் தனது சிறுவயதிலே அற்புதமேரி பார்க்கிறாள். பிறகு அற்புதமேரிக்கு தனது அண்ணன் சாம்சன் மீதும் சித்தி எஸ்தர் மீது ஏற்படும் உறவின் வலிமையையும் இந்த நிகழ்வால் சிறுவயதிலே அவளுக்கு ஏற்படும் சகிப்புத்தன்மை என உறவின் மீது ஏற்படும் வலிமையான நெருக்கத்தினை சொல்கிறார். தனது அம்மாவின் வயதினை உடைய அன்னமேரிடீச்சரின் உடல்பால் ஏற்படும் ஈர்ப்பினை மறைக்க முடியாமல், தனது மனதின் தாகத்திற்கு ஏற்றாற்போல அவன் தனது வீட்டின் ஜன்னலோரம் அமர்ந்து அன்னமேரி டீச்சரினை பார்ப்பதும் அதற்காக அன்னமேரி டீச்சரிடம் ஏற்படும் வெறுப்பு என இயல்பான வாழ்க்கையின் தடங்களைத் தவறாமல் பதியவைத்திருக்கிறார்.
ஒவ்வொரு மழைக்காலங்களிலும் தெருவில் இருக்கும் பழைய மணல் அடித்து போகப்படுகிறித்து அங்கே புதிய மணல்களை மழை கொண்டுவருகிறது. இது இயல்பாக எல்லா இடங்களிலும் நடக்கும் ஒரு நிகழ்வுதான் ஆனால் இங்கே சிறிய பெண் டாரதிக்கு ஏற்படும் சந்தேகம் அதாவது எப்படி இந்த மணல் வருகிறது இவற்றை யார் கொண்டுவருகிறார்கள் என்ற கேள்விக்கு அவளின் அம்மா சொல்லும் பதில் இறைவனைத் தவிர வேறு யாராயிருக்கும்.
இந்த ரெயினீஸ் ஐயர் தெருவில் வசிக்கும் சொற்பமான மக்களின் உணவுப் பழக்கம், உடைகள் மற்றும் அவற்றின் வண்ணங்களும் அவற்றை அவர்கள் தேர்வுசெய்யும் விதங்களும், நுகர்ந்து பார்க்கும் வாசனை, மற்றவர்கள் மீது ஏற்படும் ஆசைகள், விருப்பங்கள்,வெறுப்புகள், ஏற்படும் காழ்ப்புணர்ச்சி, அடக்கமுடியாத காமம், பரிதாபம், பிரியமும் காதலும், பாசமும் எனச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இவற்றையெல்லாம் ஒரு குறுநாவலுக்குள் அடக்கி வாசிப்பவர்களின் மனதிற்குக் கடத்திச்செல்வது அவ்வளவான சுலபமான காரியமில்லைதான் ஆனால் இவற்றை மிக எளிதாகவும் சாதாரணமாகவும் வண்ணநிலவன் தனது எளிய எழுத்துக்களின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.
குறிப்பாக ஒவ்வொரு மனிதன் மேலும் ஏற்படும் வாசனை அது எவ்வாறெல்லாம் வேறுபடுகிறது என்றும் ஆசீர்வாதம் பிள்ளை ஆசிரியராக பணிபுரியும் பொழுது அவர்மீது இருந்து வரும் சாக்பீஸ் மற்றும் பேப்பர் கலந்த வாசனை அதை நுகர்ந்து பார்க்கும் அவரின் மனைவி ரெபேக்கா அதுபோலவே ரெபேக்கா மீது வரும் காய்ச்சிய பாலின் வாடையும் அடுப்படியில் சமைத்துக்கொண்டிருப்பதால் அதனால் ஏற்படும் வாசனையும், கல்யாணி அண்ணன், சாம்சன் அண்ணன் என இவர்களைப் பற்றிப் பேசும் போதும் இவர்களின் மீதிருந்து வரும் வாசனை பற்றிப் பேசிச்செல்லும் ஜீனோ மற்றும் டாரதி கூடவே பள்ளித் தோழியின் பட்டுப்பாவாடையின் வாசம் என இவர்களின் நுகர்வின் நுணுக்கங்களை ரசனையுடன் சொல்லியிருக்கிறார்.
அக்காவிற்குத் திருமண ஆன பிறகு அவள் மீது கோபம் கொள்ளும் தங்கைகள், சிறுபெண்கள் தங்கள் வயதில், தான் பருவம் அடைந்த நேரத்தில் ஏற்படும் மனமற்றதாக எல்லோரையும் எதிரியாகப் பார்க்கும் பெண்குழந்தைகள் என இந்த தெருவில் வசிக்கும் பெண்பிள்ளைகளின் மனதையும் எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்.
ரோஸம்மாள், தனது கணவன் தன்னை விட்டு வேறொருவாளிடம் வாழ்கிறான். தனது பிறந்த வீட்டிற்கே அழைத்து வருகிறார்கள். அதுதான் ஜாஸ்லின் பிள்ளை வீடு அதுவும் இந்த தெருவின் முதல் வீடு. இந்த வீட்டின் மனிதர்கள் நன்றா வாழ்ந்தவர்கள் ஆனால் இப்போது யாருமற்று கிடக்கிறது. தனது வாழ்வினை தொலைத்து விட்டு வந்த ரோஸம்மாள், தன்னை விட்டுச்சென்ற கணவன் இறந்துவிட்டான் என்றதும் அவனைப் பார்க்கச் சென்றவள் அங்கே அவன்மீது வேறொரு பெண்ணும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் விழுந்து அழும்போது மணம் தாங்காமல் அவர்களைத் தனது பிள்ளைபோலவே பாவித்தது மட்டுமல்லாமல் எல்லோர் மீது பாசம் வைத்து ஒரு தாயைப் போலவே இருந்தாள் என்பதே அவளின் குணநலன்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.
மொத்தத்தில் இந்த ரெயினீஸ் ஐயர் தெருவில் வாழ்ந்த மனிதர்கள் பற்றி மட்டும் இங்குப் பேசவில்லை, அவர்களின் வீடு அந்த வீடுகளின் வரலாறு மேலும் அந்த வீடுகளுக்கு மட்டுமிருக்கும் சில உணர்வுகள், இந்த தெருவில் வாழ்ந்து இறந்து போன தியோடரின் மனைவி, சிறுப்பென் அலீஸ் மற்றும் இந்த தெருவிற்கு விருந்தாளிகளாக வந்துபோகும் மனிதர்கள் மற்றும் தெருவின் பண்டிகை காலத்தில் ஏற்படும் கொண்டாட்டங்கள் அந்த கொண்டதின் போது வந்து போகும் குளிர்ச்சியான மழை முக்கியமாக அதே தெருவில் இரைதேடி அலையும் கோழிகள், அந்த கோழிகள் உதிரும் இறகுகள் மற்றும் முட்டைகள் என எல்லாவற்றின் பயன்பாடுகள் என மிக அடர்த்தியாகவும் ஆழமாகவும் ரெயினீஸ் ஐயர் தெருவின் வாழ்வியல் பதியப்பட்டுள்ளது.
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
18 ஜூலை 2022