இன்ப நினைவு
ஆசிரியர் : அகிலன்
தாகம் பதிப்பகம் - கிண்டில்
பக்கங்கள் 67
விலை ரூபாய் 99
தமிழின் தவிர்க்கமுடியாத ஒரு எழுத்தாளரான அகிலன், 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ல், புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் என்ற ஊரில் பிறந்து 1988ல் தனது 65வது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்தார். எதார்த்தமான மற்றும் ஆக்கபூர்வமான எழுத்துக்களுக்கு பெயர் பெற்ற இவரின் பெரும்பாலான எழுத்துக்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகியாகவும் இருந்திருக்கிறார். பல்வேறு புதினங்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுவர் நூல்கள், வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் பல்வேறு கட்டுரைகள் என இவரின் எழுத்து பல்வேறு தடம் பதித்திருக்கிறது.
1963ல் இவர் எழுதிய "வேங்கையின் மைந்தன்" என்ற வரலாற்று நாவலுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மற்றொரு நூலான "சித்திரப் பாவை" என்ற வரலாற்று நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான "ஞானபீட விருதை வென்றது இது மட்டுமல்லாமல் இந்த நாவல் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் மற்றொரு நூலான "எங்கே போகிறோம்" என்ற சமூக அரசியல் நூல் 1975ல் "ராசா சர் அண்ணாமலை" என்ற விருதினை பெற்றுத் தந்தது.
இவர் பிறந்து 100 ஆண்டுகள் என்பதால் "2022" ஆம் ஆண்டை "அகிலன் நூற்றாண்டு" என்று கொண்டாடப்படுகிறது. நாமும் அதைக் கொண்டாடும் விதமாக நமது குழுமத்தில் இவரின் எழுத்துக்களை வாசித்து அவரை போற்றவேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த ஆண்டு விழா போட்டியில் ஒரு வாரத்தினை இவரின் படைப்புக்களுக்காக ஒதுக்கி அவரின் பெருமையினை அனைவருக்கும் அறியப் படுத்துகிறோம்.
இந்த கொண்டாட்டத்தில் பங்குபெற நான் தேர்வு செய்த நூல், "இன்ப நினைவு". இந்த நூல் - ஒரு புறம் அருமையான மற்றும் இளமையான காதல் கதை ஆனால் அதே சமயம் மற்றொரு பக்கம் ஆசிரியர் சமூகத்தின் மீது கொண்ட அக்கரையினையும் கூடவே காந்தியின் மீதுள்ள ஈர்ப்பினையும் அதன் காரணமாகக் காந்திய கொள்கையினை ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கையினையே மாற்றிக் கொள்ளும் வகையில் இந்த கதையின் நாயகனை அமைத்துள்ளார்.
கதையின் நாயகன் ராமநாதன், கமலம் மற்றும் சுப்பையா என இந்த மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கியமாக வாழும் இந்த நாவலில் ஒவ்வொருவரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சந்திக்கின்றனர். ஆனால் இவர்கள் மூவரும் மற்றொரு தருணத்தில் சந்திக்கும் பொழுதில் கதை முடிகிறது.
ராமநாதன் தனது கல்லூரி படிப்பின் போது கிடைக்கும் விடுமுறைக்குத் தனது மாமாவின் கிராமத்திற்குச் செல்கிறார். அந்த கிராமத்தில் தனது மாமாவின் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீட்டு இளம் பெண்ணாக இருக்கிறாள் நாயகி கமலம். கமலம் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அழகான சுட்டி பெண். எதிர்பாராத நேரத்தில் இவர்களிடையே ஏற்படும் ஒரு சில சந்திப்புகள் இவர்களைக் காதல் பந்தத்தில் கொண்டு சேர்க்கிறது.
இந்த கதையின் கால கட்டம் சுதந்திரத்திற்கு முன்பான காலம் என்பதால், கதை முழுவதும் சுதந்திர தாகம் கதையின் கூடவே வலுவாகப் பயணம் செய்கிறது.
விடுமுறைக்குச் சென்று வந்த ராமநாதன் தனக்கு ஏற்பட்ட காதல் மயக்கத்திலிருந்து சற்றே மீண்டெழுந்து மீண்டும் கல்லூரி செல்கிறார். அங்கே காந்தியைச் சந்திக்கிறார். ஆசிரியர் காந்தியத்தின் மீது கொண்டிருந்த தனது ஈடுபாட்டினை இந்த கதையின் நாயகனின் வழியே மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். காந்தியின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார் ராமநாதன். ஆனால் சுதந்திரத்திற்காகவும், பொதுமக்கள் மீது அக்கறை காட்டவும், பொதுவாழ்க்கை தேவைதான் ஆனால் அதற்காக தனக்கென ஒரு சுயமான வாழ்க்கையினை வாழ வேண்டாம் என்பது ஏன் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.
காந்தியைச் சந்தித்த பிறகு ராமநாதன் தனது காதலுக்கு முழுவதும் முழுக்கு போட்டுவிட்டு சமுதாயத்தின் மீது காதல் கொள்கிறார். பிறகு ஒரு நாடோடி போல வாழ ஆரம்பிக்கிறார். அதே சமயம் அவரின் வருகைக்காக ஒவ்வொரு மணித்துளியும் காத்துக் கிடக்கும் கமலத்தின் மீது இவர் கொண்டிருந்த காதல் எங்கே போனதென்றே தெரியவில்லை.
தான் மீண்டும் கமலத்தினை சந்திக்கவே கூடாது என்று தனது வாழ்க்கை முழுவதும் பொதுநலம் என்று கருதி வந்த ராமநாதனுக்கு விதி மீண்டும் ஒரு புதிய ரூபத்தில் கமலத்திடம் கொண்டு சேர்க்கிறது. போலீசாரால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதன், போலீசாரால் நாடு காட்டில் கண்ணைக் கட்டி விட்டுவிடுகின்றனர். தனக்கு இனிமேல் உயிர் பிழைக்க வழியில்லை என்று கருதுகிறார். ஆனால் கமலத்தின் தந்தையர் வழியிலே அவரை கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் கமலத்தின் வீட்டிற்கு வருகிறார். எதிர்பாராத இந்த வருகையினை கமலம் தனது பக்குவமான மனநிலையினால் சமாளித்து ராமநாதனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்கிறாள்.
மீண்டும் நடந்த இந்த சந்திப்பின் காரணமாக இருவீட்டாரும் இவர்களின் திருமணத்தினை நடத்த ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் தனது காதலியிடம், தான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று எடுத்த தீர்மானத்தினை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் போராடுகிறார். ஆனால் இறுதியில் ஒரு வழியாகத் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று தனது முடிவினை தனது உறவினர்களிடம் சொல்லிவிட்டு, தனது சமுதாய சேவை செய்ய ஆரம்பித்துவிடுகிறார்.
அப்படி அவர் எடுத்துக்கொள்ளும் புதிய அவதாரம் அவரை சிறையில் கொண்டு சேர்க்கிறது. தனது சிறைவாசத்தில் அவ்வப்போது கமலத்தின் நினைவு வராமலிருக்குமா என்ன. சில வருடங்களுக்குப் பிறகு கமலம் கல்யாணம் செய்துகொண்டாள் எனக் கேள்விப்பட்டு நிம்மதியடைகிறார். தனது மனதில் இருக்கும் நினைவுகளையும் பெண்கள் மீது அவர் கொண்ட மரியாதையினையும் கலந்து "பெண் தெய்வம்" என்று புத்தகத்தினை எழுதுகிறார். அந்த புத்தகத்தினை சிறையில் வந்து சேரும் சுப்பையாவிடம் கொடுத்து கருத்து பரிமாறிக்கொள்கிறார். இவர்கள் இருவரும் இரு வேறு விதமான அனுபவங்களைக் கொண்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதே சமயம் இவர்கள் சந்தித்த பெண்கள் இருவேறுவிதமானவள் என்ற கருத்தினையும் வாசகர்கள் புரிந்துகொள்ளும் விதமாகச் செல்கிறது இவர்களின் உரையாடல்கள். ஆனால் இவர்கள் இருவரும் தங்களது வாழ்வில் சந்தித்தது ஒரே பெண் தான் என்ற முடிச்சியினை கதையின் இறுதியில் வைத்திருக்கிறார் ஆசிரியர்.
அருமையான கதை, இளைஞர்களிடையே சுதந்திரத்தின் தாகத்தினையும் அதே நேரத்தில் காந்தியின் கொள்கைகளையும் கொண்டு செல்வதற்கு இந்த காதல் கதையினை கதையின் தளமாக எடுத்துச் சிறப்பாக முடித்திருக்கிறார்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
28 செப்டெம்பர் 2022