Friday, 11 June 2021

வசூல் ராஜாக்களின் வாழ்க்கை - வாசிப்பு அனுபவம்

 வசூல் ராஜாக்களின் வாழ்க்கை 

வாசிப்பு அனுபவம் 

ஆசிரியர் நா.கோபாலகிருஷ்ணன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 99

பக்கங்கள் 56

இது வெறும் சாதாரண  கற்பனையில் எழுதிய  கதையில்லை நிஜத்தில் நடந்த அனுபவங்களின் கதையே. அனுபவப்பூர்வமான அனுபவங்களின் தொகுப்பு அந்த தொகுப்பில் அனுபவத்தில் சந்தித்த விதவிதமான மனிதர்கள், அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் என ஒரு 12 வருட பணியின் பயணத்தில் கிடைத்த எண்ணிலடங்கா நிகழ்வுகளினை கொண்டதே இந்த வசூல் ராஜாக்களின் வாழ்க்கை. 

நண்பர் நா.கோபாலகிருஷணன், அவர்களின் அனுபவங்களையே இந்த கட்டுரை தொகுப்பின் வழியே நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் நமக்கு நிறைய வழிமுறைகளையும்  செய்திகளையும்  இந்த தொகுப்பின் மூலம் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

பெரும்பாலும் நாம் பிறர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில் கொஞ்சம் தயக்கம் தான் என்று சொல்வது சரியானதாகவே இருக்கும். அதனால் தான் பெரும்பாலோனோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றனர்.

வாருங்கள் நூலுக்குள் செல்லுவோம்.

இந்த தொகுப்பில் பதிமூன்று விதமான மனிதர்களின் விசித்திரமான அனுபவங்களைப் பார்க்கலாம்.

1. மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்.

பெரும்பாலும் பெண் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் அதிக கனிவாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். ஆனால் இங்கே, வயது முதிர்ந்த பெற்றோர்கள், தன் மகளின் மருத்துவப்படிப்பிற்காக வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றுப் படிக்க வைக்கின்றனர், மீண்டும் மேல்படிப்பிற்கும் மேலதிக கடன் வாங்குகின்றனர். கடைசியில் வீடு ஏலத்திற்குப் போய்விட்டது கடனால் பயன்பெற்ற மகள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. - மனதை கரையவைத்த நிகழ்வு - காலி செய்யப்பட்ட வீட்டின் படுக்கை அறையில் தனது மகளின் பேப்பரில் வந்த போட்டோ ஒட்டியிருப்பது. உண்மையிலே மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் தான் ...

2. ஓடாதே நில்..                    

சிலநேரங்களில் நமக்கு வாங்கிய கடனை அடைக்கும் சக்தியிருந்தும் சிலதவறுகளால் அந்த கடனை எதிர்கொள்ளும் சக்தியை இழந்துவிட்டு மறைந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படியாக ஓடி மறைந்த ஒரு ஆளைச் சந்திக்க அதிகாலையில் கொட்டும் பணியில் கதியிருக்கின்றனர். இறுதியில் அவருக்கு ஒரு தீர்வு கொடுத்து அவரை எல்லா கடன்களிலிருந்து மீட்டெடுத்தது அருமை.

3. பலமுருகா நீ எங்கேப்பா ?   

சில நேரங்களில்  தவறான முகவரி கொடுத்து கடனை வாங்கிவிட்டு, திருப்பி கட்டாமல் கட்டை நீட்டும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அப்படி மாற்று முகவரி கொடுத்து கடனை வாங்கிய ஒரு நபரைத் தேடி அலைந்து வெற்றியும் பெறுவது ஒரு மாபெரும் சாதனையே..

4. டக்கடாமங்கலம்.

அலுவலகத்தில் கடனாளிகள் விவரத்தை உள்ளிடும் நபர் ஒரு புள்ளிவைக்க மறந்ததால் ஏற்பட்ட ஒரு பெரிய விபரீதம். பாவம் வசூலுக்கு போறவர்களும் சக  மனிதன்தான் என்று யாரும் சிந்திக்க மறுக்கும் சில செயல். இறுதியில் அந்த ஊரைக் கண்டுபிடித்து வசூலும் செய்கிறார்கள்.

5. குடும்பமே சேர்ந்து திட்டிய கதை. 

ராங் கால் வரும் அது சாதாரணம் இங்கே ஒரு பெண் தன் காதலனை மறைக்கக் குருட்டாம்போக்கில் ஒரு எண்ணைக் கொடுக்க அந்த மொத்த குடும்பத்திடம் சிக்கி நூடுல்ஸாக போன கதை ஒரு விபரீதமான கதைதான்.

6. திட்டமிடாமல் கடனை எதிர்கொள்ளாதே...

வீட்டுக் கடன் சேர்த்து மொத்தம் அதிக கடன் வாங்கிவிட்டு கணவர் சண்டை போட்டுக்கொண்டு வீட்டைவிட்டே வெளியில் போக அந்த மனைவி மட்டும் தன் வருமானத்திலிருந்து வட்டி கட்டியே முடியவில்லை. அவர்களும் தகுந்த தீர்வினை கொடுத்து கடனளில் இருந்து மீட்டது அருமை.

7. நேர்மையின் பாதை .

வெகுநேரங்களில் மனிதன் நமக்குக் கடினமான சூழ்நிலை வரும்போது கிடக்கிற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வான். ஆனால் இங்கே ஒரு காவல் அதிகாரி தனக்கு ஏற்பட்ட சோதனைக்காலத்தில் கூட ஊதியம் தவிர வேற எந்த வகையிலும் பணம் சம்பாதிக்காமல் எதிர்பாராமல் வந்த மருத்துவச் செலவினால் கடனை கட்ட முடியவில்லை ஆனால் இறுதியில் அடைந்துவிட்டார்.

8. ஒரு நல்லவரும், நாணயம் கெட்டவரும்               

வீட்டுக் கடன் பொதுவாக நீண்ட வருடங்களுக்கு வாங்குவது வழக்கம். ஆனால் வருடம் செல்ல செல்ல நிலைமை மாறி வரும்போது மனிதனை மாற்றுகிறது.   அப்படிதான் இங்கே ஒருவர் தனது மனைவிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவினால் கடனை கட்டமுடியவில்லை இறுதியில் வீட்டை விற்றுக் கட்டிவிட்டார் உண்மையில் அவர் நல்லவர்தானே?..  இன்னொரு அற்புதமான மனிதர், ஆசிரியர் பணியிலிருந்துகொண்டு செய்வதெல்லாம் பித்தலாட்டம் கடைசி வரை ஆட்டம் காட்டுகிறார் என்றால் அவர் என்னவென்று சொல்லுவது.

9. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.   

நாம் செய்வதைத் தான் திரும்பிக் கிடைக்கும் என்பது மறந்துதான் மனிதர்கள் பெரும்பாலும் தவறுகளைச் செய்கிறார்கள். அப்படியாக இங்கே முதலில் போட்டுக்கட்டும் ஒரு முக்கிய நபரின். பியின் மேலாளர் அத்தனையும் கடந்து பொறுமை காத்து நமக்கு நேரம் வருமென்று இருந்து அப்படியே வந்த நேரத்தில் சரியான பாடம் புகட்டியது அருமை

10. மறக்க இயலாத கில்லாடி    

உண்மைதான் இப்படி ஒரு கில்லாடி பெரிய திறமைசாலிதான். இரண்டு குடும்பம் ஒரே ஊரில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வாழ்வது உண்மையிலே பெரிய காரியம்தான் அது ஒரு கில்லாடியால் தான் முடியும்.

11. எத்தனை மனிதர்கள். 

கடன் வசூல் பண்ணும் பொது ஏற்படும் கசப்பான அனுபவங்களில் இதுபோன்ற சில உள்ளது. கடன் வாங்கியது ஒருவர் கடனை அடைப்பது வேறொருவர் அதுவும் அடைப்பவர் ஏன் காட்டுகிறார் என்ற செய்திக்குள் போகாமல் வரவேண்டும் என்பது கொஞ்சம் கடினம்.

12. மயிரிழையில் தப்பிய கதை      

இதுவும் ஒரு விசித்திரமான அனுபவமே. கடனை வசூலிக்கப் போனால் தன்னை பலவந்தப் படுத்தினான் என்று பொய் வழக்குப் போடுவது அதிகம்தான் அப்படிப் பொய் மாட்டிக்கொண்டு கடைசி நிமிடத்தில் தப்பித்து வருவது அதிர்ஷ்டவசமானது தான். 


நண்பரின் மேற்கண்ட அனுபவங்களிலிருந்து நமக்குத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. அதுபோலவே தான் வசூலுக்கு வரும் எல்லோருக்கும் இரண்டு பக்கம் உண்டு.

கடனை வாங்கிவிட்டுக் கட்டாமல் இருப்பதை விட வசூல் செய்ய வருபவர்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்றே தான் சொல்லவேண்டும்.

வசூல் செய்யும் மனிதர்களின் கடினத்தையும், வேலைப்பளுவையும் அவர்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் ஆதாரத்துடன் அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.   


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

12 ஜூன் 2021 

     

Wednesday, 9 June 2021

கிடை - குறுநாவல் வாசிப்பு அனுபவம்

கிடை - குறுநாவல்  

ஆசிரியர் கி.ராஜநாராயணன் 

கிண்டில் பதிப்பு 

காலச்சுவடு பதிப்பகம் 

விலை ரூபாய் 63

பக்கங்கள் 56



இந்த கதையினை நான் கடந்த வருடம் வாசித்து பதிவிட்டிருந்தேன். நான் கடந்த முறை ஓரிரு வரியில் தான் பதிவிட்டேன்  ஆனால் இப்போது மீண்டும் வாசிக்கும் பொழுது கிடைத்த தெளிவான கதையின் கருத்து எனக்கு  அப்போது கிடைக்கவில்லை.  ஆனால் ஒன்று மட்டும் இன்றளவும் மனதிலிருந்து நீக்க மறுப்பது "செவனிக்கு" இழைக்கப்பட்ட அநீதி மட்டும்தான். ஆம் இந்த கதை கிடை ஆடுகளையும், கீதாரிகளையும், அவர்களின் உடல் மொழி, பாவனை, உணவுமுறை என கீதாரிகளின்  வாழ்வியலையும் பற்றிப் பேசினாலும் இந்தக் கதை நமக்குச் சொல்லுவது "பெண்களுக்கு" ஏற்படும் அநீதி தான்.

மீண்டும் ஒரு முறை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்த மறு வாசிப்பின் போது இந்த குறு நாவலின் முழு சாராம்சத்தையும் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. 

கி.ரா. அவர்கள் கதை சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரே ஆவார். 

"கிடை" இந்த கதையில் கீதாரிகளின் வாழ்வும் அவர்களின் அன்றாட நிகழ்வுகளையும் ஒறிரு  நாட்கள் நிகழும் நிகழ்வாகக் கிராமத்து வாசனையுடன் நம் மனதில் பதியவைத்திருக்கிறார்.

கி.ரா. அவர்கள்  ஒரு கதாபாத்திரத்தையும், ஊரையும் அறிமுகப்படுத்தும் போது நாமே அந்த கதையின் களத்திற்கும், காலத்திற்கும் சென்று விட்டது போல ஒரு உணர்வினை கொண்டுவருவார். அப்படிதான் அவர் அறிமுகம் செய்யும்     ரெட்டை கதவு நாயக்கர் வீடு அவரின் வாழ்க்கை வரலாறும் சிறப்பாகக் காட்டியிருப்பார்.

ஒரு கிடை என்றால் என்ன அவற்றில் கிடை ஆடுகள், அந்த ஆடுகள்  எத்தனை விதம், அந்த ஆடுகளுக்குக் கீதாரிகள் வைத்து அழைக்கும் பெயரும், ஆடுகளின் வண்ணத்திற்கு ஏற்ப அழைக்கும் பெயரும். மேலும் அந்த ஆடுகளைக் கீதாரிகள் எப்படி அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதைச் சொல்லும் விதம் கண்டு ஒரு ஆட்டுக் கிடையை எவ்வளவு அழகாக வர்ணிக்கமுடியும் என்றால் அது கி.ரா. அவர்களால் மட்டுமே முடியும்.

நான், எனது  சிறுவயதில் எங்கள் வீட்டில் 30 ஆடுகள் வைத்திருந்தோம், ஒவ்வொரு ஆட்டிற்கும் ஒரு பெயர் வைத்து அழைப்போம் அந்த பசுமையான நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்தது இந்த கிடை.

ஆவாரம்பூவின், அருமை, பெருமைகளை மற்றும் அதன் பயன்பாட்டையும் அதில் இருக்கும் மருத்துவ பயன்பாட்டையும், மேலும் என்தந்த விதத்திற்கு இந்த ஆவாரம்பூ, மற்றும் ஆவாரம்பூவின் செடிகள் என வித விதமான செய்திகளை அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். 

ஆட்டுப் பால்,  பொதுவாகக் கிராமங்களில் யாருக்காவது கண்களில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆட்டின் மடியிலிருந்து கறந்த உடன் பாலினை ஒரு சொட்டு விடுவது ஒரு மருத்துவ பண்பு. அதுபோல ஆட்டுப் பாலின் எண்ணற்ற பயன்களையும் இந்த கதையில் பதிவிடாமல் இல்லை.

"செவனி" ஒரு விடலை பருவப்பெண்  மற்றும் "எல்லப்பன்" ஒரு வாலிபன் இவர்களைச் சார்ந்து தான் இந்த கதை செல்கிறது அப்படிப்பட்ட இந்த  கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் பொழுது அவர்களின் இளமை மற்றும் உருவத்தோற்றம் எனக் கிராமத்துச் சொலவடையில் சித்தரித்து இருப்பது அவரின் தனித்தன்மை தான்.

இந்த கதையினை சொல்ல ஆரம்பிக்கும் போது, ஒருவர் காலையில் "ரெட்டை கதவு நாயக்கரை" பார்க்க வருகிறார், இன்னொருபுறம் வயற்காட்டில்  பட்டியிலிருந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர், அப்படிப்போகும்போது அந்த ஊரின் விதவை பெண் "ராக்கம்மாள்"  ஆவேசமாக வந்து அந்த கிடைகளை  மறித்து நிற்கிறாள்.  கீதாரிகள் எவ்வளவோ சொல்லியும் அவள் கிடைகளை விடவில்லை, கிடை மறுப்பது என்பது ஒரு முக்கியமான நிகழ்வு அந்த கிராமத்துக் கீதாரிகளின் வாழ்க்கையில்.

ஏன் ராக்கம்மாள் வந்து கிடையினை  மறித்தால் அது தான் இந்த கதையின் மொத்தமும் சுற்றாயுள்ள கதை. 

கீதாரிகள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் பட்டிக்கே திருப்பி விட்டு எல்லோரும் ஊர்க்கூட்டத்திற்கு வருகிறார்கள். ஊர்க்கூட்டத்தில் ராக்கம்மாளின் பருத்திக்காடு முழுவதும் அலங்கோலமாக  ஆடுகள் மேய்ந்து சேதமாகிப்போனது அதற்கான ஈடுகொடுக்கவேண்டும் என்று சொல்கிறாள். ஊர்க்கூட்டம் அதை ஊர்ஜிதப்படுத்தவும் மற்றும் சேதாரம் எவ்வளவு என்று கணக்கிடவும் மூன்று பேர்களை அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த குழுவில் இருக்கும் "திம்மய நாயக்கர்", இவர் தடயங்கள் கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர். அதன்படி அவர் செல்கிறார், அவர்கள் போகும் அந்த வழியினை கி.ரா.அவர்கள் விவரிக்கும் விதம், கிராமத்தில் மக்கள் வாழும் முறையும் சொல்லும் விதம் சிறப்பு. திம்மய நாயக்கரிடம் முக்கிய தடயங்கள் கிடைக்கிறது, அவரால் யாரால் இந்த வயலுக்குச் சேதம் வந்தது என்றும் தீர்மானிக்க முடிந்தது. அவர் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடித்து விடுகிறார் ஆனால் அவர் மௌனமாகவே இருக்கிறார். 

"ராமு கோனார்", அவரின் நடத்தையும் அவர் ஆடுமேய்க்கும் விதத்தையும் சொல்லும்போது, சம்சாரிகள் மழை எப்போது வரும் என்று ராமு கோனாரிடம் தான் கேட்பார்கள் அதற்கு அவர் தனது ஆடுகளின் நடத்தையினை கொண்டு துல்லியமாகப் பதில் சொல்வர் இன்று மழை வரும் என்று அல்லது வராது என்றும். அவரின் பக்தியும் அவர் செய்யும் செயலையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் கி.ரா.. முதல் முறையாக  வெளியூர் செல்கிறார் ராமு கோனார், அந்த பயணத்தில் அவர் முதல் முறையாக ரயிலில் பயணித்தது, திருச்செந்தூர் முருகனைத் தரிசித்தது அங்கு அவர் "கடலை" பார்த்து இந்த ஊரில் எவ்வளவு மழை பெய்திருக்கிறது அதனால் தான் இவ்வளவு தண்ணீ என்று சொல்வது  என அவரின் கதை சிறப்பானது.

மற்றொரு முக்கிய கதாபாத்திரியம் "பொன்னுசாமி நாயக்கர்" இவர் திருடுவதில் கைதேர்ந்தவர், ஊரில் எல்லா காடுகளிலும் இரவில் திருடுவதே  இவரது வழக்கம், இவரின் பெண்சாதியும் அப்படியே. இவர் திருடுவதற்கு வசதியாக ஊரில் பேய் பிசாசு நடமாட்டம் இருக்கு என்று பொய் சொல்லிப் பயமுறுத்தி வைத்திருக்கிறார். பலவேறு விதமான நூதனமான திருட்டு தனங்களை பொன்னுசாமி  நாயக்கர் செய்திருக்கிறார்.

ஏமாந்துபோகும் மனிதர்களுக்கு உவமையாகச் சொல்லும் புள்ளிமான்களின்  கதை, தண்ணீருக்காக, எதிரே தோன்றும்   கானல் நீரைப் பார்த்து மீண்டும் உடலில் சக்தியிருக்கும் வரை ஓடி ஓடி உயிரை விட்ட புள்ளிமான்கள் எனச்சொல்லியிருப்பது இன்றளவும் நம்மில் பலர் செய்யும் ஒரு தவறுதான் எனத் தோன்றுகிறது.

ஊர்க்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது, குறிசொல்லுபவரிடம் போய் குறிபோட்டு பார்த்தால் தெரியும் யாரு காரணம் என்று, அதன்படி சென்று குறிபார்த்து விட்டு வந்து "பொன்னுசாமி நாயக்கர்" தான் இந்த திருட்டுக்குக் காரணம் என்று சொல்கின்றனர். அவர் மறுத்துப் பார்த்தும் இயலவில்லை இறுதியில் அபராதத்தைக் கட்டிவிட்டு நினைத்துக் கொண்டார், இத்தனை  நாள் திருடியும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துவிட்டு இன்று திருடாமலே மாட்டிக்கொண்டோம் என்று.

எல்லப்பனுக்கும்செவனிக்கும் இருக்கும் ரகசியமான  காதல்  உறவை கண்டுகொண்ட "திம்மய நாயக்கர்" இந்த செய்தியை ரகசியமாக வைத்துக்கொண்டு "ரெட்டை கதவு நாயக்கரிடம்" சொல்லிவிட்டார் அதனால் ரகசியமாக எல்லப்பனுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்கிறது, இந்த நிகழ்வு செவனிக்கு தெரியாது.      

மறுநாள் காலையில் "செவனி" ஆடுகளை பற்றி கொண்டு மேய்ச்சலுக்காக வயற்காட்டுக்குப் போனவள், எல்லப்பனை காண ஆவலாகத் தேடிப்பார்த்தாள் ஆனால் அவன் வீட்டு ஆடுகளை  ஒரு புதுப்  பெண் தொரத்திவந்திருந்தாள், அவளிடம் எல்லப்பன் எங்கே கேட்டதுக்கு பதிலேதும் சொல்லமால் அவளை முறைத்து பார்த்துவிட்டு செல்கிறாள் அதை பார்த்த செவனிக்கு ஒன்னும் புரியவில்லை. இதனால்     கவலை கொண்ட செவனி களைப்பில்  அங்கேயே மயங்கிக்கி விழுந்துவிட்டாள், அவளுக்குக் காத்து கருப்பு பிடித்துவிட்டது என்று அவள் பெற்றோர்கள் பேயோட்டுகிறார்கள். 

ஒருபுறம் தன்னை ஏமாற்றிய எல்லப்பன் கல்யாண ஊர்வலம் அதுவும் அக்கா தங்கை என இருவரையும் மணந்து கொண்டு நடக்கும் ஊர்வலம் செவனியின் செவியில் ஆணி தைப்பதுபோல இருக்கிறது, அவன் தன்னை  ஏமாற்றி விட்டதை எண்ணி அவள் பேசும் பேச்சையெல்லாம் எதோ பேய் அவள் பிடித்துக் கொண்டது என்று கொடுமைப் படுத்துகிறார்கள். ஆனால் செல்வமும், செல்வாக்கும் இருக்கும் பெரியமனிதர்கள் ஒரு அவல பெண்ணிற்கு என்ன அநீதி வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் ரெட்டை கதவு நாயக்கரும், எல்லப்பனும் சேர்ந்து செவனிக்கு செய்த துரோகம்.   

"செவனி"க்கு நேர்ந்த இந்த கொடுமையிலிருந்தது அவளும்  மீளவில்லை அவளின் கதையை வாசிக்கும் நாமும் இந்த நிகழ்விலிருந்து மீள முடியவில்லை.       

அன்புடன், 

தேவேந்திரன் ராமையன் 
09 ஜூன் 2021

Tuesday, 8 June 2021

மாயமான் - கி. ரா. வின் சிறுகதை தொகுப்பு - வாசிப்பு அனுபவம்

 மாயமான் 

 கி. ரா. வின் சிறுகதை தொகுப்பு

காலச்சுவடு பதிப்பகம் 

அச்சு பதிப்பு விலை ரூபாய் 250

கிண்டில் பதிப்பு ரூபாய் 199.5

பக்கங்கள் 329

கி .ராஜநாராயணன், அவர்கள் கதை சொல்வதில் சிறப்பான உணர்ச்சிகளையும் விசித்திரமான மக்களின் அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை தனது சிறப்பான சொல்திறமையும் கொண்டவர். இவர் கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்ததான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒரு வித்தியாசமான மனிதர்களைக்கொண்டே மிக அழகாகவும், ஆழமான கிராமத்து சொல்லாடுலுடன் பிரமிக்க வைக்கும் ஆற்றல் தான் இவரின் காலை வன்மை.

அய்யா கி.ரா. அவர்களின் ஒவ்வொரு கதையினும் வாசிக்கும் பொழுது நம்மை ஒரு கிராமத்தின் உள்ளே அழைத்து செல்வார். கிராமத்தில் நடக்கும் எதார்த்தமான வாழ்வியலை அவரின்  கதைகளின் களமாக கொண்டிருக்கும். 
பல்வேறு மனநிலையினையும்,  வெவ்வேறான சம்பவங்களையும்.  நம்பிக்கைகளையும் ஒருசேர கொண்டுவரும் கிராமத்து பின்னணியுடன் கொண்ட கொண்ட   17 கதைகளின் தொகுப்பு தான் இந்த "மாயமான்" என்ற சிறுகதை தொகுப்பு. 

1. கதவு.
கிராமத்தில் வாழ்ந்து கெட்ட ஒரு  குடும்பத்துக் குழந்தைகளின் நிலையினையும் அவர்களின் தாயின் நிலைமையும் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார் கி. ரா.  அந்த குடும்பத்தின் பழைய காலத்து காரை வீடு அதுபோன்ற பெரிய வீடுகளுக்கு ஒரே பெரிய தான் இருக்கும்.  கிராமத்தில் காரை வீடு இருந்தால் அவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள் ஆனால் இந்த குடும்பம் இப்போது நொடித்துப்போய்விட்டது என்பதை அந்த வீட்டு குழந்தைகள் விளையாடும் போக்கிலே சொல்லியிருப்பார் கி.ரா. 
வாழ்ந்து நொடித்துப்போன குடும்பத்தில், பெரும்பாலும் வெளியூர்ப்போய்தான் எதாவது சம்பாதிப்பார்கள். இங்கேயும் அப்படித்தான், வீட்டின் தலைவன் வேற ஊருக்கு போயிருக்கிறான் , குழந்தைகள் அவையெல்லாம் அறியாமல் அவர்கள் தங்கள் குழந்தை பருவத்தை அழகாக அனுபவிக்கிறார்கள். அதுதான் இந்த குழந்தைகளின் "கதவாட்டம்" - கதவில் ஒவ்வொருவரும் ஏறிக்கொண்டு ஒவ்வொரு ஊராய் டிக்கெட் எடுத்துக்கொண்டு கதவில் பயணிப்பது. 
நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் இந்த விளையாட்டினை அனுபவித்து விளையாடியிருக்கிறோம். இங்கே கி.ரா. சொல்கிறார் இது அதாவது இந்த விளையாட்டானது தலைமுறை தலைமுறையாக விளையாடிவருகிறது அதற்க்கு சான்றாக கதவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு லட்சுமியின் படம் அது புகைபடிந்து இருப்பதையும் கூறுகிறார். 
கட்ட வேண்டிய வரியினை கட்ட முடியாததால், அபராதமாக வீட்டின் கதவை  எடுத்து செல்கின்றனர். கதவில்லாத வீட்டில் வசிக்கும் ஒரு தாயம் சிறுகுழந்தைகளும் படும் போராட்டத்தை இங்கே பதியவைத்திருப்பார்.  குளிர் தாங்கமுடியாமல் சின்ன குழந்தை இறந்துபோவதும் அதற்க்கு சான்று. 
       
2. மாயமான். 
இந்த கதை அப்பாவு செட்டியார் பத்திரிகையுடன் வருவதுடன் கதை தொடங்குகிறது. மேலும் இந்த கதையில் கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியாத சின்ன சின்ன விவசாயிகள் படு துன்பத்தை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் கி. ரா.
அபபாவு செட்டியார் கொண்டுவரும் தினப் பத்திரிகையில் வரும் ஒரு செய்தியினை மையமாக வைத்து இந்த கதை நகர்கிறது. 
அதுதான் இந்த செய்தி, இனி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். புஞ்சைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் கிணறு வெட்ட  நானூறு ரூபாய் இனாமாகக் கொடுக்கிறார்கள். புஞ்சை நிலங்களை வளமான  விவசாய நிலங்களாக மாற்றி  விவசாயிகள் அதிக லாபம் அடைய வேண்டிக்கொள்கிறோம். அப்பாவு செட்டியார் இந்த செய்தியை நம்பி அவருக்கு  சொந்தமாக நாலரை ஏக்கர் வயலில் ஒரு கிணறு வெட்ட திட்டமிட்டார். 
செட்டியாருக்கு ஒரு கடை இருக்கிறது, இருந்தாலும் செட்டியார் அரசின் இனாமான  ரூபாய் 400  வாங்கி மேலும் தேவைக்கு அய்யவார் நாயக்கரிடம் கூடக் கடனும் வாங்கி எப்படியாவது கிணறை வெட்ட வேண்டும் என்று ஆசையில் இறங்குகிறார் அப்பாவு செட்டியார். இந்த ஒரு முடிவு அவரின் வாழ்வாதாரத்தையே சிதைத்துவிடுகிறது.

கிணறு ஆழமாச்சு சுவையான தண்ணீரும் ஊற்றெடுத்து வந்தது கூடவே கடன் பெருத்துக்கொண்டே போனதுகிணற்றில் நல்ல தண்ணீர் வர¸ செட்டியார் பணப்பயிர் போடத் திட்டமிடுகிறார். உழவுக்கு காளைகள் வாங்குவது முதல் விவசாயத்திற்கு தேவையான அனைத்தும் வாங்க தேவைப்படும் பணம் மீண்டும் அய்யவார் நாயக்கரிடம் வாங்குகிறார். நாயக்கர், உள்நோக்கத்துடன் அப்பாவு செட்டியாரின்   வீட்டை அடமானம் வைத்து கொண்டு பணம் கொடுக்கிறார்.
செட்டியாரின் கெட்ட நேரம் அரசாங்கம் பணபயிரெல்லாம் செய்யக்கூடாது என்றதும், கேப்பைப் பயிரிடத் திட்டமிட்டு அதையும் செய்கிறார் ஆனால்  பயிர் விளையும் சமயத்தில் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போகிறது. மழையும் இல்லை கிராமத்தின் அணைத்து விவசாயமும் கருகி போய்விட்டது. கிணறு வறண்டு போய்¸ கடை வியாபாரம் கவனிக்கப் படாமல் நலிந்து போய்¸ பெற்ற கடனுக்கு வட்டி கட்டவே வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் விற்று வட்டிக்கட்டி கடைசியில் வீடு, கடை, வாழ்க்கை எல்லாம்  போய், ஊரை விட்டு செட்டியார் குடும்பத்துடன் பொழப்புக்காக வெளியேறுகிறார்.
மாயமான் போல வந்த அந்த ஒருசெய்தியினை கொண்டு தனது வாழக்கை முழுவதும் இழந்த செட்டியார் போல எத்தனையோ குடும்பங்களின் வாழ்வே இந்த கதை. 

3. கோமதி 

சுமார் 30 வயது கொண்ட "கோமதி செட்டியார்" ஏழு பெண்குழந்தைகளுக்கு பிறகு எட்டாவதாக பிறந்த ஆன் குழந்தை.   கோமதிக்கு சிறு வயதிலிருந்தே சடைபோட்டு பூ வைத்துக்கொள்வதிலும், வளையல்கள்  அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. அசலில் ஆணாக இருந்தாலும், அவன் இயல்பு ஒரு  பெண்ணாகவே வளர்ந்து வந்தான். பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான். ஆண்களோடு விளையாடவேண்டியது ஏற்பட்டுவிட்டால் வீடுகட்டி, கல்யாணம் பண்ணி விளையாடும் விளையாட்டில்தான் பிரியம் அதிகம். அதிலும் மணப் பெண்ணாக தன்னை வைப்பதென்றால்தான், விளையாட வரச் சம்மதிப்பான்.”

கோமதி பெண்களுக்கே உரிய அணைத்து பண்புகளும் தெரிந்துகொண்டிருந்தான், சமையல் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான். ஊரில் இருக்கும் எல்லாவீட்டுக்கும் சமையல் என்றால் "கோமதி" தான் நினைவுக்கு வருவான். அபப்டியாக ஊருக்கு வந்த சுலோவின் கூடவே அவர்கள் வீட்டிக்கு சமையல் செய்ய போனான்.
சுலோவின் அண்ணன் ஊருக்கு வந்திருந்தான், முதலில் அவனுக்கு கோமதியை பார்த்தாலே ஒரு விதமான வெறுப்பு இருந்தது, ஆனால் கோமதிக்கு அவன் மீது ஒருவிதமான ஈர்ப்பு. இறுதியில், கோமதியின் ரூமில் ஒரு பெண் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். கைகள் நிறைய கருவளைகள் போட்டுக் கொண்டிருந்தாள். தலையில் பூச்சூடி, அவள் எதிரே ரகுவின் போட்டோ படம் இருந்தது.  அந்தப் பெண் கண்கள் கலங்கி கொண்டேயிடிருந்தது. சுலோவால் அந்த பெண்ணை பார்க்க முடிந்தது, அடையாளம் கண்டுக்கொண்டாள். சேலையுடுத்திக்கொண்டிருந்த அந்த பெண் வேறு யாருமில்லை அவள் அதே  கோமதிதான். அவன் தான் தன்னை ஒரு முழு பெண்ணாகவே கருதி உருகும் கோமதியின்  உணர்வுகளை அழகா சொல்லியிருப்பார் கி.ரா அவர்கள்.

4. கன்னிமை 
இந்த கதை ஒரு கணவனின் நினைவாகவே, "தான் சின்ன வயசிலிருந்து பார்த்த ஒரு முறை பெண், தான் கல்யாணம் ஆன பிறகு  இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை" என்று தொடங்குகிறது.
நாயகி நாச்சியாரம்மாள் எப்படி மாறினாள் என்ற கதையை அய்யா சொல்லும் விதமே, நம் வீட்டு ஓர் தங்கை நம் கண் முன்னே வளர்ந்து மாமனுக்கு கட்டி கொடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
ஒரு பெண் தனது திருமணத்திற்கு பிறகு எப்படி முழுவதும் தான் புகுந்த வீட்டின் ஒரு அங்கமாக மாறுகிறாள் என்பதையும் அவள் குணத்தில் இத்தனை மாற்றம் கொள்வாளா என்று குடும்பத்தின் அனைவரும் வியப்படைகிறார்கள். கணவன் அவளை சின்ன வயசிலிருந்தே நன்கு தெரிந்தவன் ஆனாலும்  அவனும் திகைக்கிறான் நாச்சியாரம்மாவின் மாற்றத்தை என்றால் நாம் எல்லாம் நம்பாமல் இருக்க முடியாது. நாச்சியாரம்மாவின் இளம்வயதில் கொண்டிருந்த  இரக்க குணத்தையும் மற்றும் அவளின் வீரமும் பிரமிக்கதான் வைக்கின்றது.

5. வந்தது. 
இந்த கதையின், நாயகன் ஒரு கோரமான கனவு கண்டு கண்விழிக்கிறான் அந்த கனவில், தனது ஊருக்கு செல்கிறான், அங்கு யாருமேயில்லை, அவன் வீடே காணவில்லை, அந்த நாளின் அணலினால் குட்டைகளில் இருந்த தண்ணீர் மீதிருந்த வந்த காற்று சொல்கிறது அந்த வறண்ட காலத்தின் சூழலை.  அங்கு மனிதர்கள் வெகுநாட்களாக இல்லை என்பதை "காய்ந்து இற்று போன பனம்பூவின் துணுக்குகளை போல உலர்ந்து கிடைக்கும் மனித மலங்கள்" என்ன அருமையான உவமை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்த்தவனுக்கு தெரியும் அய்யாவின் சொல்லாடல்.         
அவன் தூக்கத்தில் இருந்து நனவிற்கு வரும்போது அவனது மனைவியும் குழந்தையும் நலமாய் இருக்கிறார்கள். ஆனால் அவனுக்குள் இருக்கும் ஏதோ ஒரு விதமான வேதனையின் பிரதிபலிப்பாக தான் இந்த கனவை நாம் பார்க்க முடிகிறது.

6. பேதை 
பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டத்தின், ஒரு அவல பெண்ணின் கதையினை சொல்லும் கதை தான் இந்த பேதை. 
பேச்சி என்ற அந்த அவலப்பெண்ணின் நிலையே. பேச்சி தான் கன்னி பெண்ண்ணாக இருக்கும்போதே  கருவுருகிறாள் ஆனால் அதற்க்கான காரணம் யாரென்றே தெரியாமல் இருக்கிறது. அவள் மனநிலை சரியில்லாமல் போகிறாள். அவளின் செயல்கள் கொஞ்சம் ஆபாசமாக இருந்தாலும் கதை ஆபாசத்தைச் சொல்லவில்லை. தன்னிலை மறந்த பேச்சியிடம் குழந்தையை பிரிக்கிறார்கள் ஆனால் அவள் போராடி வெறிகொண்டு தான் தன குழந்தையுடன் வாழும் வாழக்கை அவலமாகவே இருக்கிறது. தன் குழந்தை இறந்துப்போனதே தெரியாமல் இருக்க எப்படி குரங்கு இறந்து போன தன் குட்டியை வைத்திருக்குமோ அதுபோலவே பேச்சியும் அலைகிறாள். 
அவளின் கொடூரமான வாழ்நிலையிலும் அந்த கோரம் வழியும் பேச்சி என்றாலும் அவளிடமும் வாழ்க்கையை சிதைத்து செல்லும்  கொடுரத்தைச் சொல்கிறது கதை என்பதே சரியானது ஆம் அந்த நினைவற்ற பேச்சியை மீண்டும் நிறைவயிறாக செய்யத் துணிந்த ஒரு அரக்கனின் கதையை சொல்லாமல் சொல்கிறது. 

7. புறப்பாடு .
இந்த கதை ஒரு முதியவரின் மரணம் எப்போது என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒட்டுமொத்த கிராமத்தின் நிலையை சொல்லுகிறது.
மரணம் எப்போதும் தனக்கு வந்து விடக் கூடாத என்று என்னும் இளைஞர்கள் அதே  சாவு முதியவர்களுக்கு வரட்டுமென்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அவலத்தையும் அதன் பின்னே இருக்கும் குடும்பத்தின் சில  அவசியச் சங்கடங்களையும் நகைப்பும் வருத்தமும் சேர்த்து  சொல்கிறார் கி.ரா.  ஒரு வாழ்ந்து முதிர்ந்த முதியவரின் இறுதி நாளை எண்ணி எண்ணி தவிக்கும் ஊரின் மனநிலையினை அருமையான உணர்வுகளுடன் சொல்லியிருப்பார் அய்யா கி. ரா.

8. ஜீவன் 
இந்த கதையில் வாழ்ந்து போகும் அங்குசாமி என்ற ஊமைப் பாத்திரம் மிக ஆணித்தனமாக சொல்லிச்செல்கிறது. ஒரு ஊமையின் வாழ்க்கையில் ஏற்படும் வெவேறு விதமான பரிதாபங்களினை பெரிய பட்டியலாக சொல்லிச்செல்கிறார்.
நான் பழகிய ஒரு ஊமைபையனின் கனவுகள் நிறைவேறாமலே போனது மட்டுமல்லாம் இந்த உலகை விட்டு போனதுதான் நினைவுக்கு வருகிறது இந்த அங்குசாமியின் கதை. அளப்பெரிய அன்பும் சாதுரியமான திறமையும் கொண்ட ஆண்மகன் ஆனால் அவனின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாகவே போனது மட்டுமல்லாமல் அதனால் அவன் தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும் முடிவு சற்றும் எதிர்பாராதது மனதை பதறவைக்கிறது.

9. சந்தோஷம்.
ஒரு கணவன் மனைவி, இருவருக்குமே தெரியும் இருவரும் பேசுவது பொய் என்று இருந்தாலும் அவர்கள் அதில் கிடைக்கிற சந்தோசத்தை வாழ்வாகவே வாழ்கிறார்கள் என்பது அவன் கோழியினை திருடிவிட்டு இது எனக்கு ஒருத்தன் வளர்க்க சொல்லிக்கொடுத்தான் என்று சொல்லுவதை சொல்லிச்செல்கிறார்.

10.  கறிவேப்பிலைகள்
இந்த கதையில் வரும்  பப்பு தாத்தா தம்பதியர் போல ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தம்பதிகள் இல்லாமல் இருப்பதில்லை. பொழப்புக்காக வெளியூரில் இருந்து வந்து ஊரின் ஓரமாக ஒரு குடிசை போட்டு வாழ்ந்த குடும்பங்கள் எத்தனையோ இருந்திருக்கிறது.  அவர்கள் கறிவேப்பிலைகள் போல பயன்படுத்திவிட்டு எடுத்து தூர வீசிவிடுவார்கள்.  அப்படிதான் இந்த பப்பு தாத்தா தம்பதிகள் நிலையும் என்பதை ஒரு கிராமத்து வாசனையுடன் சொல்லியிருக்கிறார்.

11. விளைவு.
இந்த கதையும்   பஞ்சம் பொழைக்க வந்த ஒரு குடும்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும். அப்படியாக வந்த ஒரு குடும்பம் போகும்போது இவனை விட்டுவிட்டு சென்றது. அவன்தான் "பாவய்யா", இவனின் சிறுவயது வாழ்க்கை நான் கண்டு பழகிய நிறைய பாவய்யா வினை நினைவுகொண்டுவருகிறது.
மாடுமேய்க்கும் பொது அவன் இருக்கும் அம்மணமான தோற்ற்றம் ஊருக்குள் வந்தால் உடுத்தும் கோமணம் என அவனின் வாழ்க்கை வேறொரு உலகம் தான்.
அவனுக்குள் இருக்கும் அந்த பிடிவாத குணத்தை மிக அழகாவும் நகைச்சுவையாகவும் இரண்டு இடங்களில் சொல்லியிருப்பார் அதுவும் இறுதியில் அவன் அம்மணமாகவே நிற்பதும் அதற்காக காரணமானவள் வந்து ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இறுதி நொடியில் இருவருக்குள் மலரும் அந்த காதல் ... அருமையாக இருக்கும் அந்த தருணம்.

12. வேட்டி      
ஒரு வேட்டியினை கொண்டு தெளிவாக மனிதர்களை பற்றி பேசி போகும் கதை தான் இந்த வேட்டி கதை. கிழிந்த ஒரு வேட்டியினை வைத்து கொண்டு எவ்வாறு ஒரு ஏழை விவசாயி  வாழ்கிறான், அந்த வேட்டியில் பட்ட கிழிசலினை மறைக்க அவன் படும் போராட்டம் அருமையாக இருக்கும் அதுவும் அந்த விவசாயி ஆகஸ்ட் போராட்டத்திற்கு போய் வந்தவன் என்று அரசியலும் சொல்லியிருப்பார்.

13. கனிவு
புதிதாக திருமண மான ஒரு தம்பதிக்குள் ஏற்படும் ஸ்பரிசங்களை அழகான உணர்வுகளோடு சொல்லியிருப்பார். அந்த காலத்தில் அந்த ஊரின் கல்யாணம் நடந்தால் புதுமண தம்பதிகள் கூடுவது ஒரு சடங்காக இருப்பதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சேர்வது வழக்கம். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த தம்பதிகள் இடையே வரும் விருப்பு வெறுப்புகளையும், நீயா நானா என்ற வறட்டு கௌரவம் என அவர்கள் இடையே நடக்கும் ஊடல்கள் எல்லாம் நவரசத்துடன் சொல்லியிருக்கிறார்.  இருவரின் மனம் கனிந்து வரும் நேரம் விதியும் ஆடியும் சேர்ந்து பிரித்து விடுகிறது. கடைசியில் இவர்களின் வாழ்வில் வரும் அந்த அழகிய தருணம் மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார்.

14. குருபூஜை.             
குருபூஜை, எல்லோரும் கொடுப்பது போல நாமும் கொடுக்கமுடியும் என்று மனதில் நினைத்துக்கொண்ட சிவாமி ஆச்சி எப்படியாவது இந்த குருபூஜைக்கு ஐந்து பண்டாரங்களுக்கு உணவுப்படைக்க வேண்டும் என்று அதற்கும் தாயாருகிறாள் சிவாமி ஆச்சி. 
பல இடையூறுகளுக்கு அப்பால் விருந்து சமைத்து தன் தலையில் சுமந்து மலையேறி செல்கிறாள். மலைக்கு சென்று பிறகு அதை சாப்பிட பண்டாரங்கள் தலைக்கு இந்து ரூபாய் கேட்பதும், அப்போது அங்கு வரும் உறவினர் எல்லோருக்கும் காசு கொடுத்ததும் பண்டாரங்கள் அவர்களின் விருந்தை சாப்பிடுவதும் கடைசிவரை ஆச்சியின் சாப்பாட்டை யாரும் சாப்பிடாததும் எல்லாம் வேடிக்கை பார்த்த சிவாமி ஆச்சி கண்ணீருடன் திரும்பிவருவதும் என பணம் மற்றும் செல்வாக்கு தான் பெருசு என்ற அரசியல் சொல்கிறார் அய்யா கி.ரா.
மயில் மேடையினை விவரிக்கும் போது அந்த அழகும், மரங்களும் அழித்து போனதால் உயிரனங்கள் இல்லாமல் போனதும் விவரமா சொல்லியிருக்கிறார்.

15. நிலை நிறுத்தல்.
இந்த கதையிலும் பஞ்சம் பிழைக்க வந்தவன் தான் நாயகன். மாசாணம் ஊருக்கு வந்தது சிரியவசில், அப்போது பெரியமுதலாளி பார்த்து வீட்டு வேலைக்கு வைத்துக்கொண்டார். அவர் செய்யும் கொடுமைகள் ஏராளம் ஆனால் அதையெல்லாம் கடந்து மாசாணம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான்.
பண்ணையார்கள், கூலிகளின் உழைப்பை சுரண்டுவது மட்டுமல்லாமல் அவர்களின் மீது அத்துமீறும் ஆணவத்தையும் அழகாக சித்தரித்து இருக்கிறார். 
காலங்கள் ஓடின, கல்யாணமும் பண்ணிக்கொண்டு திரும்ப அதே ஊருக்கு வந்தார்கள் அதிர்ஷ்டவசமாக மனைவியின் பெயரும் மாசாணம் தான் அதனால் அவர்கள் கைகளால் சுளுக்கு வழித்து விட்டால் குணமாகும் என்று ஒரு ஐதீகம் அதன் படி அவர்கள் எல்லோருக்கும் செய்தார்கள். மாசாணம் இப்படி இருப்பதால் மனைவி அவனை மதிக்காமல் ஏளனம் செய்தால். ஊரே பஞ்சத்தால் வாசிபோவிட்டது, மழையும் பொய்த்து போய்விட்டது.
கஞ்சிக்கு வழியில்லை, காலம் போய்க்கொண்டே இருக்கிறது, மழைக்கான எல்லா அறிகுறிகளும் தென்படவே இல்லை. மாசாணம் வீட்டில் பட்டினி ஆரமித்தது, ஒரு முடிவு எடுத்தான் அம்மன் கோவில் வாசலில் போன் உண்ணாவிரதம் எடுத்தான். ஊரே பார்த்து பிரமித்து போனது, கிடை வைத்திருந்த கோனார் ஆட்டு பாலை கறந்து கொண்டுவந்து கொடுத்தார் குடிக்க மறுத்து விட்டான் மாசாணம்.  
இறுதியில் மழை மூச்சு விடாமல் பெய்கிறது, ஊரே அவனை கொண்டாடுகிறது, பெரியமுதலாளி அவர் கையாலே பால் கொடுக்கிறார் குடிக்க சொல்லி, இன்னும் கொஞ்சம் என்ற எல்லோரின் வார்த்தைகள் அவன் காதில் விழுகிறது.
மாசாணத்திக்கு இப்போது தான்,  தன் கணவன் மீது ஒரு மரியாதை வருகிறது.  ஒன்னும் இல்லை என்றல் யாரும் மதிக்க மாட்டர்கள் என்று ஒரு செய்த்தியினை அழகா சொல்லியிருக்கிறார்.          

16. கண்ணீர்.      
கிராமத்து தெய்வத்தின் பின்பலமாக வருகிற கதையில், அந்த அம்மனுக்கு பூசை செய்வது மாடத்தி என்ற பெண். அவளின் குடுமபம் அவள் பிள்ளைகள் படும் கஷ்டம் என சொல்கிறது.
கிராமத்தில் நடக்கும் புருஷன் பொண்டாட்டி சண்டையும் அதனால் அந்த பெண் எந்தளவு கொடுமைக்குள்ளாகிறாள். கருத்த நாயக்கர் தனது மனைவி செவத்தம்மாளை சுடுமணலில் குழிவெட்டி அதில் அவளை நிற்க வைத்தது அதனால் கொஞ்சம் நாளில் அவள் இறந்து போனது அதன் பிறகு கருத்த நாயக்கர் வீட்டில் பிறக்கும் குழந்தை அனைத்தும் சப்பாணியாகவே பிறந்தது என்று சொல்கிறார்கள் ஊர்மக்கள். என்னவோ பரிகாரங்கள் செய்தும் பலனில்லை.
அம்மனின் கண்களில் கண்ணீர் இடைவிடாமல் வருகிறது என்பது அந்த செய்தியும் ஊரெல்லாம் பரவிவிட்டது.  ஊர்ப்பெண்கள் எல்லோரும் கண்ணீருடன் கோவிலின் முன்னர் வந்து குவிந்து விட்டனர்.

17. கரிசல் காட்டில் ஒரு சம்சாரி.
துரைசாமி நாயக்கர் என்ற ஓர் சம்சாரியின் வாழ்க்கையினை மிக அழகாக கிராமத்து பின்புலத்தில் சொல்லிச்செல்கிறது இந்த கதை.
ஆரம்பத்தில் இருந்த வெறும் நாலு ஏக்கர் கட்டாந்தரைக் காட்டை கம்பு கொழிக்கும் பூமியாக மாற்றிய துரைசாமி நாயக்கர் மேலும் அந்தநிலங்களை எவ்வாறு சீராக்கினார் எப்படி பாதுகாத்தார் என்பதையும் அவர் ஊர் சொல்லும் எந்த செயலுக்கும் செவிசாய்க்காமல் தான் தான் போன போக்கில் வளர்ந்து இன்று மொத்த கிராமம் முழுதுமே வளைத்துப் போட்டு¸ சேர்ந்து விட்ட ‘மூலதன பயத்தில் '(கி.ரா.வின் சொல்லாடல்) உடமையைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தும் நாடகங்கள் வாசகனுக்கு அந்தப் பாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது உண்மைதான்.  
துரைசாமி நாயக்கர், பிரிட்டிஸ்காரர்களின் ஆட்சி நல்லேதென்று நினைத்தவர் அதுமட்டுமல்லாமல் அவரது வாழ்க்கை சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான பல வருடங்களின் கிராமத்து வாழ்க்கையின் போக்கை  கி.ரா அவர்கள் கிராமிய பின்னணியில் ஒரு திறைமையான சம்சாரியின் கதையாகச் சொல்கிற பாங்கு அவருக்கே இருக்கும் ஒரு தனித்தன்மை.

அய்யா கிர.ரா வின், 17 சிறுகதைகளை வாசித்து அவற்றின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

அன்புடன் 
தேவேந்திரன் ராமையன் 
08 ஜூன் 2021

Thursday, 3 June 2021

தோட்டியின் மகன் - வாசிப்பனுபவம்

தோட்டியின் மகன் - வாசிப்பனுபவம் 

காலச்சுவடு வெளியீடு 

ஆசிரியர் - தகழி சிவசங்கர பிள்ளை (மலையாளம்)

தமிழில் - சுந்தர ராமசாமி 

இந்தியன் கிளாசிக் நாவல் 

விலை ரூபாய்  195

பக்கங்கள் 173





'தோட்டியின் மகன்' எனும் நாவல் தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்களால் மலையாளத்தில் 1947 - ல் எழுதப்பட்ட 'தோட்டியின் மக' எனும் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.  தமிழ் மூத்த எழுத்தாளர்  சுந்தர ராமசாமி  அவர்கள் தனது ஆரம்பகாலத்தில், எழுத்து உலகுக்கு தெரியாத காலமான அவரின் இருபது வயதில் தமிழில் இந்த நூலினை மொழிபெயர்த்துள்ளார்.  இவரின் மொழிபெயர்ப்பு முதலில் அவர்களின் தோழர்கள்   இந்த தலைப்புக்கு  அத்தனை வரவேற்பு கிடைக்க வில்லை என்றும் பிறகு மூத்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி ஒருவழியாக, 1957 மார்ச் முதல் 1958 ஜூன் வரை சிறுகதையாக அப்போது வெளிவந்த தமிழ் மாத இதழனான  சரஸ்வதியில்  மொழிபெயர்ப்பு தொடர்கதையாக வெளியிடப்பட்டது.  

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்த பொக்கிஷம் 2000ம் ஆண்டில்களில்தான் முதன் முதலில் அச்சாக நாவலுரு பெற்றது. முதல் பாதிப்பு 6 மார்ச் 2000 இல் வெளிவந்தது. 


கேரளத்தின்  ஆலப்புழை என்ற நகரின் நகரசபையில் "மலமள்ளும் தொழிலினை" செய்துவருகின்ற தோட்டிகளின் வாழ்க்கை முறையினை, அவர்களின் உணர்வுகள், அவர்களின் வெளிப்பாடுகள், உடைகள், கலாச்சாரம், உணவுமுறை, மற்றும் காதல்  போன்றவற்றினை அடித்தளமாக  கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.

நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ இந்த நாவல்  இலக்கியத்தில் மட்டுமல்ல, சமூகப் பார்வையிலும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

இந்த நாவலில், எழுத்துலகில்  அதுநாள் வரை  யாரும்  இலக்கியத்தில் எழுதாத, பின்பற்றாத,  பார்க்காத ஒரு புதிய "களம் - சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்டதும் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டதும் மான வேறொரு  மாறுபட்ட வாழ்வியல் முறையினை உலகதின்  பொதுக் கவனத்துக்கு எடுத்து வந்தது இந்த "தோட்டியின் மகன்"  என்ற இந்திய கிளாசிக் நாவல்.


இந்த நாவல், ஒரு வயதான தோட்டி இசக்கி முத்து, நோய்வாய்ப்பட்டு தள்ளாடும் தருவாயில் தனது இறுதிநாளில், தன்னால் முடியாத போது தன்  மகன் "சுடலைமுத்துவை"  எப்படியாவது தன்னோட வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தன மகனை, ஓவர்சிசியரை போய் பார்க்க சொல்கிறார். அப்படியாக போகும் போது ஓவர்சிசியர் சொல்கிறார் இசக்கிமுத்து வரவில்லையென்றால் நான் வேற ஆளை வைத்துக்கொள்கிறேன் என்றது அதை வந்து சுடலை முத்து அப்பனிடம் சொன்னது, தனது தள்ளாத நிலையிலும் எப்படியாவது அந்த வேலையினை தன் மகனுக்கு பெற்று கொடுக்கவேண்டும் என்று  ஆரம்பிக்கும் இந்த வாழக்கையில் தனது மகன் அந்த தோட்டி வேலையின் பெற்றுக்கொள்கிறான்.

முதல் நாள் வேளையில் சுடலைமுத்துவிற்கு  அனைத்தும் புதியதாக இருக்கிறது, ஒரு உணவகத்தின் பின் வாசல் வழியே சென்று சுத்தம் செய்யவேண்டும், செய்துமுடித்த பிறகு உணவு கொடுப்பார்கள் ஆனால் இவன் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறான் அது போலவே அன்று முழுவதும் வேலை செய்துவிட்டு யாரிடமும் எதுவும் வாங்காமல் வீட்டுக்கு வந்து சேர்கிறான், வீட்டில் தகப்பன் ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினிகிடக்கிறான், தன மகன் வீட்டிற்கு வரும் சத்தம் கேட்டு மொவனே ஏதாவது கஞ்சி வாங்கிவந்தியா என்றுதும், அவனால் பெற்ற அப்பனுக்கு பதில் ஏதும் சொல்லமுடியவில்லை. உடனே தான் வேலைசெய்த  உணவகத்திற்கு சென்று எதாவது கஞ்சி கேட்கிறான், அனால் அவர்கள் ஒன்றும் கொடுக்காமல் எச்சிலையினை பார் என்றதும் வேறு வழியில் காலையில் சுத்தம் செய்த ஜட்ஜ் அய்யாவை பார்க்க போகிறான் அனால் அவன் நேரம் அங்கேயும் அவர் பூஜையில் இருக்கிறார் பார்க்க முடியாது என்று காவலாளி சொல்கிறான். விரக்தியில் வீடு வந்து சேருகிறான் வீட்டில் தந்தை இறந்து கிடக்கிறான்.

இறந்த அப்பனை எங்கே கொண்டு போய் புதைப்பது என்று தெரியவில்லை, ஒருவன் சொல்கிறான் சர்ச்சுக்கு போய்விடலாம் அங்கே எல்லாம் இலவசம் என்கிறான் மற்றொருவன் சொல்கிறான் சுடுகாட்டுக்கு போகலாம் ஆனால் அங்கே செலவாகும் என்கிறான் ஆனால் கையில் காசு ஏதும் இல்லாமல் எப்படி செயவது என்று  யோசனையின் பின்னனர் மலக்கிடங்கு அருகே ஒரு மாமரத்தின்  அடியில் புதைகின்றனர். ஆனால் மறுநாள் அவன் நேரம் நாய்கள் நோண்டிவிடுகிறது மேலாளர் வந்து நடந்தை தெரிந்துகொள்கிறான். 


தகப்பனை இழந்த சுடலைமுத்துவிற்கு பிச்சாண்டி பக்க பலமாக இருக்கிறான். மறுநாள் மீண்டும் அவன் வேலைக்கு போகிறான், அவன் மனதில் இருக்கும் லட்சியம் வேறு, எப்படியாவது ஒரு நிலம் வாங்க வேண்டும், வீடு கட்டவேண்டும், சமூகத்தில் ஒரு அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்பதே அவன் முதல் லட்சியம். ஆனால் தான் பிறந்ததோ ஒரு தோட்டிக்கு, என்னால்  பிறகு எப்படி இதெல்லாம் சாத்தியமாகும் என்ற எண்ணம் அவனுக்கு வந்து போகாமலில்லை.

இவர்கள் வாழும் இடம் எவ்வளவு கொடுமையாக இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கிரியிருப்பர். தோட்டிகளின் வேலை எப்படி ஆனால் அவர்களின் வாழ்விடம் அவ்வளவு கொடுமையாக இருக்கும். தோட்டிகளிடையே வரும் சண்டை சச்சரவு, இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது என அவர்களின் அந்த வாழ்வியலினை மிக நுட்பமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.  

சுடலை முத்து, தான் செய்யும் வேலைக்கும் மற்ற சகாக்களும் சேர்ந்து எப்படியாவது ஒரு சங்கம் ஆரம்பிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான் அதற்க்கு எல்லோரிடமும் சொல்லி சம்மதமும் வாங்கிவிடுகிறான் ஆனால் இறுதியில் அவன் அந்த சங்கத்தில் சேராமல் மற்ற எல்லோரையும் சேர்த்து விட்டுவிட்டு நழுவிக்கொள்கிறான். காரணம் பேசவந்த அந்த ஆள் சரியானவன் அல்ல என்பதே அவனின் முடிவு ஆனால் அவன் தான் அவனை அழைத்துவந்தான்.   

பின்னர் சுடலைமுத்துவை,  முனிசிபல் சேர்மன் மற்றும் மேற்பார்வையாளரும்  சேர்ந்து திட்டுகின்றனர், பிறகு அவன் நான் அந்த சங்கத்தில் இல்லை என்றதும் நீ தான் அந்த சங்கத்தை உடைக்க வேண்டும் மீண்டும் தங்களுக்கு உகந்த ஒரு சங்கத்தினை ஆரம்பிக்க வேண்டும் ஆனால்  அது தோட்டிகளுக்கானது என்றே இருக்க வேண்டும் ஆனால் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்  இருக்க வேண்டும், அதை நன்றாகவே செய்து முடித்தான் சுடலைமுத்து.

சுடலை முத்து, வள்ளியினை காதல் செய்து திருமணம் செய்துகொள்கிறான். அவளை அவன் யாரிடமும் பேச அனுமதிக்கலாமல் அவளை தனிமை படுத்தி வைக்கிறான். அவள் மற்ற தோட்டிச்சிகளிடம் பழகினால் கெட்டுபோய்விடுவாள் என்று அவன் நம்பினான்.

தான் சம்பாதித்த பணத்தை மற்ற தோட்டிகளுக்கு வட்டிக்கு விட்டு காசு சேர்க்க ஆரம்பித்தான் அவனது கனவு எல்லாம் அவன் ஒரு அந்தஸ்த்துக்கு வரவேண்டும் என்பது தான் அதற்காக அவன் எப்போதும் தனித்தே இருந்தான்.

நம்ம உலகத்தில் இப்போது நம்மையெல்லாம் நடுங்க வைக்கும் கொரோன போல அப்போது வந்த அந்த ஒரு தோற்று நோய் "வைசூரி" என்ற காய்ச்சல் அது வந்தால் ஒருவழியாக எல்லோரையும் துடைத்து கொண்டு போய்விடும் அப்படி வரும்போது முதலில் பாதிக்கப்படுவர்கள் தோட்டிகள் தான். அப்படி வந்த போது ஆங்காங்கே பல உயிர்கள் இறந்தன. அப்போது சக தோட்டி சுந்தரத்தின் மனைவிக்கு வைசூரி வந்த போது சுடலைமுத்து அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கட்டாயமப்படுத்துகிறான் அந்த வேளையில் அந்த அம்மாவின் கதறல் கண்முன்னே இருந்து மறையவே மறுக்கிறது. 

வைசூரியில் நிறைய தோட்டிகள் இறந்துபோனதும் மீண்டும் திருநெல்வேலிக்கு போய் புதிய தொட்டிகளை கொண்டுவருகின்றனர். இங்கே பழைய ஒருசில தோட்டிகள் மீதம் இருக்கின்றனர் அதில் பிச்சாண்டியும் இருக்கிறான். மீண்டும் தோட்டிகளுக்கு எல்லாம் ஒரு சங்கம் வேண்டும் அதற்க்கு பிச்சாண்டி தான் பொறுப்பு என்று முடிவானவுடன் எல்லா வேலைகளும் நடக்கிறது இப்போது சுடலை தனது நண்பன் மட்டுமல்லாமல் ஆபத்தில் உதவியவன் என்றும் பாராமல் அவன் மீது ஒரு திருட்டு பழி சுமத்தி அவன் பெயருக்கு களங்கம் விளைவிக்குறான்.

எந்த பாவமும் அறியாத பிச்சாண்டியின் குடும்பம் சிதைந்து போகிறது. சுடலை வைசூரி சமயத்தில் அந்த சேரியை விட்டே வெளியில் போய் குடும்பம் நடத்தினான்.

சுடலைக்கு வள்ளிக்கும் ஒரு ஆன் குழந்தை பிறக்கிறது ஆனால் அவன் மனம் ஏனோ இத்தனை நாட்கள் இருந்த அந்த ஆவல் இப்போது இல்லாமல் போகிறது. சமூகத்தில் தோட்டிகள் இப்படி தான் பெயர் வைக்கவேண்டும் என்று ஒரு நிர்பந்தம் இருந்தது. ஆனால் இவன் தன் மகனுக்கு மோகன் என்றும் பேபி என்றும் பெயர் வைத்தான்.

தான் ஒரு தோட்டி என்பது ஒருகாலமும் தனது பிள்ளைக்கு தெரியக்கூடாது என்று அவன் காப்பாற்றிக்கொண்டே வந்தான் ஆனால் காலம் அவனுக்கு கைகொடுக்கவில்லை அவனின் மகன் அதை தெரிந்து கொள்கிறான்.

ஒட்டு தோட்டியின் மகன் படிக்க கூடாது என்று இயற்ற படாத  சட்டம் இருந்தது, ஆனால் சுடலைமுத்து கைகூலிகொடுத்து தனது மகனை பள்ளிக்கூடம் அனுப்பிபான். வள்ளியும் அவனை நன்றாக கவனித்து வந்தாள்.

தன் மீதியிருக்கும் மலநாற்றம் தன் மகன் மீது படக்கூடாதென்று அவன் தன் மகனை ஒருநாள் கூட தொட்டதே இல்லை. அவன் லட்சியம் எல்லாம் மோகனை எப்படியாவது ஒரு பெரிய ஆளாக ஆக்ககவேண்டும் என்பதுதான். இந்த கருத்துக்கு வள்ளிக்கும் சுடலைக்கு வரும் வார்த்தை பரிமாற்றங்கள் உணர்வுகளில்லை அது இந்த உலகத்தின் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் ஆழமான அழுகுரல் என்று சொன்னால் அது தவறில்லை தான்.    

தன்னை பற்றி தன் மகன் தெரிந்துகொள்ளகூடாது என்று நினைத்த சுடலை, அன்று தன் மகனுக்கு  பள்ளிக்கூடத்தில் கிடைத்த அவமானத்தால் அவன் தன் தகப்பன் ஒரு தோட்டி என்று தெரிந்து கொள்கிறான் அதனால் அவன் தன் அம்மாவிடம் சொல்கிறான் இனிமேல் அப்பாவை தோட்டி வேலைக்கு போகவேண்டாம் என்று சொல்லு என்கிறான். இதை கேட்ட சுடலை பேச்சற்று நிற்கிறான்.

சரி எப்படியாவது வேற ஊருக்கு போய்விடலாம் என்றால் அவன் இதுவரை சேர்த்து கொடுத்திருந்த காசு ஓவர்சியர் கொடுக்க மறுக்கிறார். 

மீண்டு ஒரு காய்ச்சல் காலரா வருகிறது அது அந்த சுடுகாட்டை எப்போதும் தீயாகவே வைத்திருக்கிறது அத்தனை மரணம் எல்லாம் கொடூரமான கலராவால். அப்போது சுடுகாட்டுக்கு ஒரு காவலாளி வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட சுடலை அந்த வேலையினை பெற்றுக்கொள்கிறான் இனிமேல் நான் தோட்டியில்லை காவலாளி என்று மனதுக்கு ஒரு நிம்மதியுடன் இருக்கிறான்.

சுடலைமுத்துவும் வள்ளியும் காலராவுக்கு துணையாக காலன் எடுத்துக்கொள்கிறேன் மோகன் அனாதையாக விடப்படுகிறான்.  

சுடலைமுத்துவால் பாதிக்கப்பட்ட பிச்சாண்டியின் மகன் பொறுக்கிதான் இப்போது மோகனின் நண்பன். மற்றொரு நண்பன் சுந்தரத்தின் மகன். இதுபோல வஞ்சிக்கபட்டவர்களின் வாரிசுகள் தான் இப்போது அவன் பொத்தி பொத்தி வளர்த்த மோகனின் அனைத்தும்.    

விதி, தனது மகன் மீது தன் கைபட்டால் கூட அவனுக்கு அந்த தோட்டியின் நாற்றம் வந்துவிடும் என்று பொத்தி பொத்தி வைத்த அந்த மோகன் இப்போது அதே ஆலப்புழா நகரின் தோட்டிகளில் ஒருவன் என்றே கதை முடிகிறது.

தன் அப்பனின் காசை கொடுக்காமல் ஏமாற்றிய கேசவனின் பங்களாவை தீ வைத்து சிதைத்து விடுகிறான் சுடலைமுத்துவின் வாரிசு..   

சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.


ஒரு மனித இனம் மற்ற சக மனிதர்களால் எவ்வாறெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் என்றால் அது இன்றளவும் நடக்கின்றது தான் இல்லையென்று சொல்லவே முடியாது. அதிகாரமும் ஆணவமும் இருக்கும் வரை அடிமைகள் இனம் அழிவதே இல்லை....

  



கதையின் தாக்கத்தில் இருந்து மீண்டுவர நாளாகும்.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
03 ஜூன் 2021