Wednesday, 9 June 2021

கிடை - குறுநாவல் வாசிப்பு அனுபவம்

கிடை - குறுநாவல்  

ஆசிரியர் கி.ராஜநாராயணன் 

கிண்டில் பதிப்பு 

காலச்சுவடு பதிப்பகம் 

விலை ரூபாய் 63

பக்கங்கள் 56



இந்த கதையினை நான் கடந்த வருடம் வாசித்து பதிவிட்டிருந்தேன். நான் கடந்த முறை ஓரிரு வரியில் தான் பதிவிட்டேன்  ஆனால் இப்போது மீண்டும் வாசிக்கும் பொழுது கிடைத்த தெளிவான கதையின் கருத்து எனக்கு  அப்போது கிடைக்கவில்லை.  ஆனால் ஒன்று மட்டும் இன்றளவும் மனதிலிருந்து நீக்க மறுப்பது "செவனிக்கு" இழைக்கப்பட்ட அநீதி மட்டும்தான். ஆம் இந்த கதை கிடை ஆடுகளையும், கீதாரிகளையும், அவர்களின் உடல் மொழி, பாவனை, உணவுமுறை என கீதாரிகளின்  வாழ்வியலையும் பற்றிப் பேசினாலும் இந்தக் கதை நமக்குச் சொல்லுவது "பெண்களுக்கு" ஏற்படும் அநீதி தான்.

மீண்டும் ஒரு முறை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்த மறு வாசிப்பின் போது இந்த குறு நாவலின் முழு சாராம்சத்தையும் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. 

கி.ரா. அவர்கள் கதை சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரே ஆவார். 

"கிடை" இந்த கதையில் கீதாரிகளின் வாழ்வும் அவர்களின் அன்றாட நிகழ்வுகளையும் ஒறிரு  நாட்கள் நிகழும் நிகழ்வாகக் கிராமத்து வாசனையுடன் நம் மனதில் பதியவைத்திருக்கிறார்.

கி.ரா. அவர்கள்  ஒரு கதாபாத்திரத்தையும், ஊரையும் அறிமுகப்படுத்தும் போது நாமே அந்த கதையின் களத்திற்கும், காலத்திற்கும் சென்று விட்டது போல ஒரு உணர்வினை கொண்டுவருவார். அப்படிதான் அவர் அறிமுகம் செய்யும்     ரெட்டை கதவு நாயக்கர் வீடு அவரின் வாழ்க்கை வரலாறும் சிறப்பாகக் காட்டியிருப்பார்.

ஒரு கிடை என்றால் என்ன அவற்றில் கிடை ஆடுகள், அந்த ஆடுகள்  எத்தனை விதம், அந்த ஆடுகளுக்குக் கீதாரிகள் வைத்து அழைக்கும் பெயரும், ஆடுகளின் வண்ணத்திற்கு ஏற்ப அழைக்கும் பெயரும். மேலும் அந்த ஆடுகளைக் கீதாரிகள் எப்படி அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதைச் சொல்லும் விதம் கண்டு ஒரு ஆட்டுக் கிடையை எவ்வளவு அழகாக வர்ணிக்கமுடியும் என்றால் அது கி.ரா. அவர்களால் மட்டுமே முடியும்.

நான், எனது  சிறுவயதில் எங்கள் வீட்டில் 30 ஆடுகள் வைத்திருந்தோம், ஒவ்வொரு ஆட்டிற்கும் ஒரு பெயர் வைத்து அழைப்போம் அந்த பசுமையான நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்தது இந்த கிடை.

ஆவாரம்பூவின், அருமை, பெருமைகளை மற்றும் அதன் பயன்பாட்டையும் அதில் இருக்கும் மருத்துவ பயன்பாட்டையும், மேலும் என்தந்த விதத்திற்கு இந்த ஆவாரம்பூ, மற்றும் ஆவாரம்பூவின் செடிகள் என வித விதமான செய்திகளை அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். 

ஆட்டுப் பால்,  பொதுவாகக் கிராமங்களில் யாருக்காவது கண்களில் ஏதேனும் பிரச்சினை என்றால் ஆட்டின் மடியிலிருந்து கறந்த உடன் பாலினை ஒரு சொட்டு விடுவது ஒரு மருத்துவ பண்பு. அதுபோல ஆட்டுப் பாலின் எண்ணற்ற பயன்களையும் இந்த கதையில் பதிவிடாமல் இல்லை.

"செவனி" ஒரு விடலை பருவப்பெண்  மற்றும் "எல்லப்பன்" ஒரு வாலிபன் இவர்களைச் சார்ந்து தான் இந்த கதை செல்கிறது அப்படிப்பட்ட இந்த  கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் பொழுது அவர்களின் இளமை மற்றும் உருவத்தோற்றம் எனக் கிராமத்துச் சொலவடையில் சித்தரித்து இருப்பது அவரின் தனித்தன்மை தான்.

இந்த கதையினை சொல்ல ஆரம்பிக்கும் போது, ஒருவர் காலையில் "ரெட்டை கதவு நாயக்கரை" பார்க்க வருகிறார், இன்னொருபுறம் வயற்காட்டில்  பட்டியிலிருந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கின்றனர், அப்படிப்போகும்போது அந்த ஊரின் விதவை பெண் "ராக்கம்மாள்"  ஆவேசமாக வந்து அந்த கிடைகளை  மறித்து நிற்கிறாள்.  கீதாரிகள் எவ்வளவோ சொல்லியும் அவள் கிடைகளை விடவில்லை, கிடை மறுப்பது என்பது ஒரு முக்கியமான நிகழ்வு அந்த கிராமத்துக் கீதாரிகளின் வாழ்க்கையில்.

ஏன் ராக்கம்மாள் வந்து கிடையினை  மறித்தால் அது தான் இந்த கதையின் மொத்தமும் சுற்றாயுள்ள கதை. 

கீதாரிகள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் பட்டிக்கே திருப்பி விட்டு எல்லோரும் ஊர்க்கூட்டத்திற்கு வருகிறார்கள். ஊர்க்கூட்டத்தில் ராக்கம்மாளின் பருத்திக்காடு முழுவதும் அலங்கோலமாக  ஆடுகள் மேய்ந்து சேதமாகிப்போனது அதற்கான ஈடுகொடுக்கவேண்டும் என்று சொல்கிறாள். ஊர்க்கூட்டம் அதை ஊர்ஜிதப்படுத்தவும் மற்றும் சேதாரம் எவ்வளவு என்று கணக்கிடவும் மூன்று பேர்களை அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த குழுவில் இருக்கும் "திம்மய நாயக்கர்", இவர் தடயங்கள் கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர். அதன்படி அவர் செல்கிறார், அவர்கள் போகும் அந்த வழியினை கி.ரா.அவர்கள் விவரிக்கும் விதம், கிராமத்தில் மக்கள் வாழும் முறையும் சொல்லும் விதம் சிறப்பு. திம்மய நாயக்கரிடம் முக்கிய தடயங்கள் கிடைக்கிறது, அவரால் யாரால் இந்த வயலுக்குச் சேதம் வந்தது என்றும் தீர்மானிக்க முடிந்தது. அவர் குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடித்து விடுகிறார் ஆனால் அவர் மௌனமாகவே இருக்கிறார். 

"ராமு கோனார்", அவரின் நடத்தையும் அவர் ஆடுமேய்க்கும் விதத்தையும் சொல்லும்போது, சம்சாரிகள் மழை எப்போது வரும் என்று ராமு கோனாரிடம் தான் கேட்பார்கள் அதற்கு அவர் தனது ஆடுகளின் நடத்தையினை கொண்டு துல்லியமாகப் பதில் சொல்வர் இன்று மழை வரும் என்று அல்லது வராது என்றும். அவரின் பக்தியும் அவர் செய்யும் செயலையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் கி.ரா.. முதல் முறையாக  வெளியூர் செல்கிறார் ராமு கோனார், அந்த பயணத்தில் அவர் முதல் முறையாக ரயிலில் பயணித்தது, திருச்செந்தூர் முருகனைத் தரிசித்தது அங்கு அவர் "கடலை" பார்த்து இந்த ஊரில் எவ்வளவு மழை பெய்திருக்கிறது அதனால் தான் இவ்வளவு தண்ணீ என்று சொல்வது  என அவரின் கதை சிறப்பானது.

மற்றொரு முக்கிய கதாபாத்திரியம் "பொன்னுசாமி நாயக்கர்" இவர் திருடுவதில் கைதேர்ந்தவர், ஊரில் எல்லா காடுகளிலும் இரவில் திருடுவதே  இவரது வழக்கம், இவரின் பெண்சாதியும் அப்படியே. இவர் திருடுவதற்கு வசதியாக ஊரில் பேய் பிசாசு நடமாட்டம் இருக்கு என்று பொய் சொல்லிப் பயமுறுத்தி வைத்திருக்கிறார். பலவேறு விதமான நூதனமான திருட்டு தனங்களை பொன்னுசாமி  நாயக்கர் செய்திருக்கிறார்.

ஏமாந்துபோகும் மனிதர்களுக்கு உவமையாகச் சொல்லும் புள்ளிமான்களின்  கதை, தண்ணீருக்காக, எதிரே தோன்றும்   கானல் நீரைப் பார்த்து மீண்டும் உடலில் சக்தியிருக்கும் வரை ஓடி ஓடி உயிரை விட்ட புள்ளிமான்கள் எனச்சொல்லியிருப்பது இன்றளவும் நம்மில் பலர் செய்யும் ஒரு தவறுதான் எனத் தோன்றுகிறது.

ஊர்க்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது, குறிசொல்லுபவரிடம் போய் குறிபோட்டு பார்த்தால் தெரியும் யாரு காரணம் என்று, அதன்படி சென்று குறிபார்த்து விட்டு வந்து "பொன்னுசாமி நாயக்கர்" தான் இந்த திருட்டுக்குக் காரணம் என்று சொல்கின்றனர். அவர் மறுத்துப் பார்த்தும் இயலவில்லை இறுதியில் அபராதத்தைக் கட்டிவிட்டு நினைத்துக் கொண்டார், இத்தனை  நாள் திருடியும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துவிட்டு இன்று திருடாமலே மாட்டிக்கொண்டோம் என்று.

எல்லப்பனுக்கும்செவனிக்கும் இருக்கும் ரகசியமான  காதல்  உறவை கண்டுகொண்ட "திம்மய நாயக்கர்" இந்த செய்தியை ரகசியமாக வைத்துக்கொண்டு "ரெட்டை கதவு நாயக்கரிடம்" சொல்லிவிட்டார் அதனால் ரகசியமாக எல்லப்பனுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்கிறது, இந்த நிகழ்வு செவனிக்கு தெரியாது.      

மறுநாள் காலையில் "செவனி" ஆடுகளை பற்றி கொண்டு மேய்ச்சலுக்காக வயற்காட்டுக்குப் போனவள், எல்லப்பனை காண ஆவலாகத் தேடிப்பார்த்தாள் ஆனால் அவன் வீட்டு ஆடுகளை  ஒரு புதுப்  பெண் தொரத்திவந்திருந்தாள், அவளிடம் எல்லப்பன் எங்கே கேட்டதுக்கு பதிலேதும் சொல்லமால் அவளை முறைத்து பார்த்துவிட்டு செல்கிறாள் அதை பார்த்த செவனிக்கு ஒன்னும் புரியவில்லை. இதனால்     கவலை கொண்ட செவனி களைப்பில்  அங்கேயே மயங்கிக்கி விழுந்துவிட்டாள், அவளுக்குக் காத்து கருப்பு பிடித்துவிட்டது என்று அவள் பெற்றோர்கள் பேயோட்டுகிறார்கள். 

ஒருபுறம் தன்னை ஏமாற்றிய எல்லப்பன் கல்யாண ஊர்வலம் அதுவும் அக்கா தங்கை என இருவரையும் மணந்து கொண்டு நடக்கும் ஊர்வலம் செவனியின் செவியில் ஆணி தைப்பதுபோல இருக்கிறது, அவன் தன்னை  ஏமாற்றி விட்டதை எண்ணி அவள் பேசும் பேச்சையெல்லாம் எதோ பேய் அவள் பிடித்துக் கொண்டது என்று கொடுமைப் படுத்துகிறார்கள். ஆனால் செல்வமும், செல்வாக்கும் இருக்கும் பெரியமனிதர்கள் ஒரு அவல பெண்ணிற்கு என்ன அநீதி வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் ரெட்டை கதவு நாயக்கரும், எல்லப்பனும் சேர்ந்து செவனிக்கு செய்த துரோகம்.   

"செவனி"க்கு நேர்ந்த இந்த கொடுமையிலிருந்தது அவளும்  மீளவில்லை அவளின் கதையை வாசிக்கும் நாமும் இந்த நிகழ்விலிருந்து மீள முடியவில்லை.       

அன்புடன், 

தேவேந்திரன் ராமையன் 
09 ஜூன் 2021

No comments:

Post a Comment