Wednesday 23 June 2021

நாளை மற்றுமொறு நாளே... - வாசிப்பு அனுபவம்

 நாளை மற்றுமொறு  நாளே... 

எழுத்தாளர் - ஜி. நாகராஜன்  

முதல் பதிப்பு - பித்தன் பட்டறை 

மறு பதிப்பு - காலச்சுவடு 

விலை ரூபாய் - 175

பக்கங்கள் -143




நாளை மற்றுமொரு நாளே, கடந்த வருடம் காலச்சுவடு அறிவித்த கழிவு விலையில் வாங்கி இருந்தேன். இப்பொழுது வாசிக்கலாம் என்று எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன், இதற்கிடையில் எழுத்தாளர் சி. மோகன் அவர்கள் இலவசமாக கொடுத்த ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும் நூலினை வாசிக்க நேர்ந்தது. இந்த நூலினை வாசித்த பிறகு எனக்கு "நாளை மற்றுமொரு நாளே.." நூலினை வாசிக்கும் ஆர்வம் தூண்டிகொண்டே இருந்தது. ஒரு வழியாக தற்போது இரண்டு நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன்.

நூலாசிரியர் ஜி. நாகராஜன் அவர்களை பற்றி எழுத்தாளர் சி.மோகன் அவர்களின் நூலிலிருந்து முழு விவரமும் தெரிந்துகொண்டேன், மிக எளிமையாகவும் தெளிவாக விவரித்துள்ளார். ஜி.நாகராஜன் நூல்கள் அவரின் காலத்தில் அத்தனை வரவேற்பகவில்லை இருந்தாலும் அவர் மறைந்த பிறகு அவரின் நூல்கள் பல்வேறு தளங்களில் சிறப்பாக பேசப்படுகிறது. ஏன் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் இவ்வுலகில் நீண்டு நிலைபெற்றுள்ளது தான்.

இவரின் கதைக்களம் ஒரு வித்தியாசமானதாகவே இருக்கிறது. எல்லோரும் எழுத்துக்களில் கொண்டுவர நினைக்காத ஒரு தளத்தில் இவர் கதையினை கொண்டு செல்கிறார்.

குறிப்பாக ஆசிரியர் கீழ்வரும் ஒரு நிலையினை சொல்லித்தான் இந்த கதையினை நம்மிடம் சொல்கிறார்..... 

"இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. 

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், 

நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், 

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், 

பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், 

இவையே அவன் வாழ்க்கை. 

அவனது அடுத்த நாளைப்பற்றி 

நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; 

ஏனெனில் அவனுக்கும் - நம்மில் பலருக்குப்போலவே - 

நாளை மற்றுமொரு நாளே"


இவர் தனது கதையின் மாந்தர்களை அறிமுகப்படுத்தும் பொழுது அவர்களுக்கே என ஒரு சிறு கதையினை சொல்லியே அங்கு வரவழைக்கிறார், இந்த நடை மிகவும் ரசிக்கவும் ஆர்வமுடன் வாசிக்கவும் தூண்டுகிறது.

கதையின் பிரதான நாயகன் கந்தன், நாயகி மீனா என இவர்கள் இருவரையும் மிக அழகாக கட்சி படுத்தியிருக்கிறார். கதை ஆரம்பிக்கும் முதல் சில வரிகளிலேயே கந்தனின் முழு நிலவரத்தை அழகாக அறிமுக படுத்தியிருக்கிறார். அதுபோலவே மீனா கதைக்குள் வரும் நிகழ்வு அவளை கந்தன் சந்திக்கும் தருணம் ,மேலும் அவன் அவளை மணந்து கொள்ள நினைக்கும் விரதம் அதற்காக அவன் கொடுக்கும் விலை என இந்த கதையின் போக்கு ஒரு எதார்த்தவாதியின் குரலாகவே செல்கிறது.

கந்தன் மீனாவை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதும் ஆனால் மீனாவோ ஒரு விலைப்பெண் என்பதால் அவன் தரகர் சோலையிடம் போய் பேசுகிறான் அப்போது அறிமுகமாகும் சோலைக்கு ஒரு சிறுகதை சொல்லும் ஆசிரியர் அற்புதமாக அந்த பாத்திரத்தை அறிமுகப்படுகிறார்.   

மீனா வீட்டில் இல்லாத பொழுது வலியனே வந்து கந்தனிடம் வம்புயிழுக்கும் ராக்காயின் கதையாகட்டும் அதிலும் ராக்காயி கந்தனிடம் உரையாடும் வார்த்தை ஜாலங்கள் அவளும் ஒரு விலைமகள் தான் என்றாலும் கந்தன் காட்டும் கனிவும் அவன் தன் நண்பனின் ஆள் நீ என்று சொல்வதும் மட்டுமல்லாமல் குடிப்பதற்க்காக மீனாவின் பெட்டியை அலசிப்பார்க்கும் கந்தனிடம் வம்புயிழுத்துவிட்டு இறுதியில் அவளே போய் அவனுக்கு சரக்கு வாங்கி கொண்டு கொடுப்பதும் நிகழ்வுகள் அபரிமாதானது.

ஒருமுறை இட்லிக்கடை யில் வேலை செய்துக்கொண்டிருக்கும் மீனாவை கூட்டிட்டு வர சொல்ல கந்தன் தனது பக்கத்துவீட்டு "ஜீவா" என்ற குட்டி பெண்ணை அழைக்கிறான். அவள் வந்து போகும் அந்த தருணத்தில் ஜீவாவின் கடந்த கால வாழ்க்கை கதையினை சொல்லும் விதம் அருமையாக இருந்தது. அவளுக்கு ஏற்பட்ட ஒரு வினோதமான நோய் அதனிலிருந்து குணமடைய தெரிந்தவர்கள் வழியாக கந்தன் செய்யாத உதவி அதற்க்கு பிறகு அவள் இப்போது நல்லாயிருக்கிறாள் எனபது வரை அழகாக செல்கிறது ஜீவா என்ற குட்டிதேவதையின் கதை.

ஒரு நிகழ்வில் அறிமுகமாகும் சலூன் கடையும் அந்த கடையினை விவரிக்கும்போது ஓவ்வொரு வார்த்தையும் அழகாக கொடுத்திருக்கிறார். ஒரு இளைஞன் சலூன் கடைக்காரரிடம் அங்கு இருக்கும் ஓவியத்தை பற்றி கேட்பதும் அதற்க்கு அவர் சொல்லும் பதில் யதார்த்தத்தின் அழகு.

அன்று காலையில் வீட்டிலிருந்து எழுந்து  வெளியில் செல்லும் கந்தனின் இந்த நாள் அவன் சந்திக்கும் முழு நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருகிறது. இந்த நாள் போனாலும் அவன் அனுபவித்த அத்தனையும் நம்மில் பலர் வெவ்வேறான சமயத்தில் சந்திருக்கும் பிரச்சினைகளே என நம்பி தான் ஆகவேண்டும்.

கந்தன் சந்திக்கும், விறகுக்கடை சிறுவன், அங்கிருந்து புறப்பட்டு போகும் வழியில் காத்திருக்கும் தினக்கூலி மக்கள் கூட்டம் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவருக்கும் மற்றொரு  சிறுமிக்கும் வேலையில்லை என்று சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்து செல்லும் தலைவர் அங்கே அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்ட கந்தன் அவளிடம் ஏன் பாதுகாப்பாக இருந்துருக்கலாமே என்று சொல்லி ஒரு மருத்துவரின் விலாசமும் கொடுப்பது என அவனின் சமுதாய அக்கறை காட்டுகிறது. 

நண்பனின் காதலை சேர்த்து வைக்க வரும் கந்தன் அவனையும்  அவன் ஒருதலையாக காதலித்த விதவை பெண்ணையும் சேர்த்து வைத்துவிட்டு அருகில் இருக்கும் விடுதிக்கு செல்கிறான். அந்த தேவி லாட்ஜ், அதன் வரலாறு என கதை மிகவும் தெளிவாக நாட்டு நடப்பில் எப்படி கோவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது அதை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்றும் புனிதமான கோவில் இடத்தில இருக்கும் லாட்ஜ் எவ்வாறெல்லாம் இருக்கிறது என்பதை சொல்லுவதாகட்டும் அதற்காக கந்தன் வந்து பஞ்சாயத்து செய்துவைத்து என அது ஒரு நீண்ட கதை. 

தேவி லாட்ஜ்ல் நடக்கும் ஒரு உரையாடலில் பேசப்படும் அரசியலும், சோஷலிசமும் ஜி நாகராஜனின் சிந்தனையினை மிக தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.ஒரு கிலோ சீனி தயாரிக்கும் செலவுக்கும் அது வந்து நுகர்வோரை சேரும்போது இருக்கும் விலைக்கும் இருக்கும் லாபம் உற்பத்தியாளருக்கு போகிறது இது கொள்ளை அடிப்பது போல் இல்லையா? என தனது கேள்வியினை சொல்லிச்செல்கிறார்.  

திருவாளத்தான் கந்தன் என்ற ஒரு பாத்திரம் அவனுடைய அறிமுகம் வழக்கம் போல ஒரு துணை கதையினுடே வருகிற்து. 

ஜி. நாகராஜனின் சமுதாய அக்கறை கதையில் சிதறிக்கிடக்கிறது. இந்த கதையின் தளமும் பாத்திரங்களும் பெரும்பாலும் விலைமாதர்களை பின்பலமாக வைத்தே நகர்கிறது ஆனாலும் ஆசிரியர் அவர்கள் ஒரு இடத்தில கூட விபசாரம் என்ற வார்த்தையினை உபயோகப்படுத்தாமல் மிக அழகாக அவர்களையும் கதை மாந்தர்களாக சித்ரரித்து இருப்பது பெருமையான விஷயமே.

சாராயக்கடை, அதில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை மையமாக வைத்து நடந்த ஒரு நிகழ்வு அதற்க்கு பிறகு இப்போது இருக்கும் பதாகை மாறியிருக்கும் தோற்றம் என கதையின் நாயகன் கந்தன் செல்லும் இடமெல்லாம் அவன் பதித்த தடங்கள் இல்லாமல் இல்லை என்று தான் சொல்லவேண்டும். சாராய கடையின் கூடவே இருக்கும் சால்னா கடை என விவரிக்கும் விதம் அருமை. 

வண்டியில் செல்லும் போது பேசப்படும் கதை சாதாரணமாக தோன்றினாலும் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு குழந்தைக்கு விஷம் கொடுப்பது என மக்களின் கொடூரமான சில அவதாரங்கள் இருப்பதையும் சொல்லியிருக்கிறார்.

நாவலாசிரியர் சி. மோகன் அவர்கள் சொல்லியிருப்பார் ஜி நாகராஜன் அவர்களின் உணவுப்பழக்கங்கள் பற்றி , அது போலவே தான் இந்த கதையிலும் வருகிற ஷேக் ராவுத்தர் கடை பரோட்டா பற்றி பேசும்போது அவருடைய உணவின் மீதிருந்த எண்ணங்களை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

சுப்பய்யா செட்டியார் என்ற ஒரு கதா பாத்திரம் அவருக்கு என்று ஒரு கதை,  அவருக்கு இங்கிலீஸ் காய்கறிகள் மீதுகொண்ட ஆர்வம் மட்டுமல்லாம் அவரின் சில ஆசைகள் அதனால் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் பிறகு அங்கு பஞ்சாயத்திற்கு வருவது நமது நாயகன் கந்தன் தான்.     

கந்தன், தான் ஆசைப்பட்டு கட்டிக்கொண்ட மீனாவிற்கு எதாவது ஒரு நல்ல இடத்தில தோது பன்னிவிடலாம் என்று தரகரை அணுகும் கந்தன்.... என்னவென்று சொல்லுவது. தரகர் சொல்லாமல் சொல்லும் விதமே கந்தனுக்கு தெரிந்து கொண்டு மீண்டும் நடக்கிறான். இந்த நடையின் பொது நிகழும் ஒரு கொலை அதுவும் இவனே நீண்ட நாளாக செய்ய துடித்த அதே மனிதன் கொலையாகி கிடக்கிறான்.

இப்படியாக பயணிக்கும் இந்த கதையும் நாயகனும் இறுதியில் இருப்பது சிறையில் ...

எதார்த்தமான மனிதனின் வாழ்வியலை, எல்லோரும் ஆசையாக நினைக்கும், மறைமுகமாக செய்யும், அல்லது செய்ய ஆசைப்படும் விஷயங்களாகட்டும் என எல்லாவற்றையும் ஒளிவு மறைவு என்று  மறைமுகமாக சொல்லாமலே மிக தெளிவான ஓடையில் ஓடும் தெளிந்த தண்ணீரை போல கதையினை சொல்லிச்செல்கிறார் ஆசிரியர்.

வாழ்வின் விளிம்பில் இருக்கும் மனிதர்களை பற்றிய அழகான மற்றும் ஆழமான உயிருள்ள ஒரு கதை இந்த "நாளை மற்றொமொரு நாளே!...


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 ஜூன் 2021    

               


No comments:

Post a Comment