கானகத்தின் குரல்
(ஒரு நாயின் வாழ்க்கை கதை )
ஆசிரியர் - ஜாக் லண்டன்
தமிழி்ல் - பெ. தூரன்
பக்கங்கள் 187
அமெரிக்காவின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான "ஜாக் லண்டன்". அவருடைய படைப்பான ‘கானகத்தின் குரல்’ அவரின் புகழைப் பலமடங்காக பெருக்கி அவரின் நிலையை உறுதிப்படுத்தியது. ஆமாம் இது வசதியாக வாழ்ந்து ஒரு துரோகியினால் வஞ்சிக்கப்பட்டு பல இன்னல்களை எதிர்கொண்ட "பக்" என்ற ஒரு நாய் அதன் வாழ்வினை மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவல் தான் இந்த கானகத்தின் குரல். ஆனால் படித்து முடித்ததும் மிருகங்களை போல நடத்தும் மனித வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய கேள்விகளே மேலோங்கியிருக்கிறது.
"கானகத்தின் குரல்" - தன்னலம் பெருகிப் போன மனித குலத்தின் வன்மம் எப்படி ஒரு நாயின் வாழ்க்கையினை புரட்டிப் போடுகிறது என்பதை உற்சாகத்துடன் அடுத்து அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் நோக்கத்துடன் உருவாக்கியிருக்கிறார் ஜாக் லண்டன்.
தமிழில் இந்த நாவலைக் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் பெ. தூரன். ஆங்கிலத்தில் இருக்கும் அதே விறுவிறுப்புடனும் எதிர்பார்ப்புடனும் கதையின் போக்கினை மாற்றாமல் செய்த மொழிபெயர்ப்பைப் படிக்க ஆர்வம் தூண்டுகிறது.
ஒரு நீதிபதியின் வீட்டில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் "பக்" என்ற செல்ல நாய், எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. அப்படிப்பட்ட அந்த நாய், ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத பொழுது அவர்களின் வீட்டின் வேலைக்காரன் திருடி காசுக்காக வேறொருவரிடம் விற்றுவிடுவதால் அதன் வாழ்க்கையே மாறிவிடுகிறது.
திடீரென யாரோ முகம்தெரியாத ஒருவன் தன்னை கடத்திகொண்டுபோவது தெரிந்தும் ஏதும் செய்யமுடியாமல், அந்த நேரத்தில் திக்கு தெரியாமல் தொலை தூரம் பயணிக்க வேண்டிய சூழல் அந்த "பக்" கிற்கு உண்டானது இவ்வளவும் ஒரு மனிதன் தன சுயநலத்திற்க்காக செய்த துரோகமே காரணம்.
அந்த கடுமையான பயணத்தின் போது "பக்" பட்ட இன்னல்களை வாசிக்கும் போதே கண் கலங்குகிறது. பாவம் அந்த வாயில்லா ஜீவன் என்ன பாவம் செய்தது. அதுவும் ஒரு சக உயிர்தானே ஏன் மனிதன் இதனை இத்தனை கொடுமை செய்கிறான்?. அதை விலை கொடுத்து வாங்குவரெல்லாம் அடித்து துவம்சம் செய்வது அதை அடிமையாக வைத்துக்கொள்ள முனைவதும் கொடுமையிலும் கொடுமை தான்.
மாறி மாறி இடைவிடாமல் ஏற்பட்ட தொலைதூரப் பயணத்தின் இறுதியாக ஒரு சிகப்பு சட்டைக் காரனிடம் வந்து சேர்கிறது. தனக்கு ஏற்பட்ட எல்லா கொடுமைகளுக்கும் திரும்பி கொடுக்க வேண்டிய அந்த தருணத்திற்க்காக காத்துக்கொண்டிருந்தது பக். அதற்க்கான சந்தர்ப்பம் இறுதியில் இந்த சிகப்பு சட்டைக்காரனால் கிடைத்தது, அது தனது எல்லையில்லா கோபத்தினை வெளிக்கொணர நினைக்கும் போது எதிராளியின் நீண்ட தடியினால் கொடுத்த அடி அதை நிலைதடுமாற வைத்தது. தான் உயிர் வாழ வேண்டுமெனில் இவனிடம் அடங்கிப் போக வேண்டும் என்பதை உணர்ந்த பக் சமத்தாக நடக்கிறது.
அமெரிக்காவின் பனிப் பிரதேசத்தில் தபால் கொண்டு செல்ல பயன்படுத்தும் வண்டிகளை இழுத்துச் செல்வதற்கு நாய்கள் பயன்படுத்துவார்கள், அங்கே தான் நமது பக்கும் கடைசியாகச் சேருகிறது. இங்கு ஏற்படும் இனச்சண்டை, உணவுக்கு ஏற்படும் சண்டை என ஏராளமான போட்டிகளை எதிர்கொண்டு வாழப் பழகிகொண்டது பக். இருந்தாலும் நான் தான் முதலிடம் வரவேண்டும் என்ற எண்ணம் பக்கின் மனசில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது அதற்காக அதை அடைய வேண்டிய எல்லா முயற்சிகளும் அது எடுத்தது அதை அடைந்தும் காட்டியது.
இயற்கையும் காலமும் செய்த சூழ்சியினினால், "பக்" வேறொருவருடம் கை மாற வேண்டிவந்தது, இந்த முறை ஒரு முட்டாள் கூட்டத்தில் சேருகிறது, அவர்களிடம் பக் பெரும் துயரம் மிகவும் அதிகம். அப்படிப்பட்ட முட்டாள்கள் கூட பயணிக்கும் போது ஏற்படவிருக்கும் விபத்தினை முன்கூட்டியே அறிந்திருந்த பக் அந்த வழியில் பயணிக்க மறுத்து நின்றது அதற்கு அந்த மனிதன் கொடுமைப் படுத்தினான் அந்த நேரம் ஒருவன் வந்து பக் ஏற்பட்ட கொடுமையிலிருந்து காப்பாற்றினான். அது நாள் முதல் அவன் தான் அதன் எஜமானன்.
பக், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அதற்கு உணவு கொடுத்து ஆதரவு கொடுத்துக் காப்பாற்றியதற்காக அவனுக்கு விசுவாசமாக இருந்தது. அவனை இருமுறை ஆபத்திலிருந்து காப்பாற்றியது. அவன்கூடவே வெகு தூரம் பயணப்படுகிறது. இடையே வெகுவான சன்மானம் வென்று கொடுத்தது. தங்க வேட்டைக்குப் போன எஜமானன் கூடவே அது பயணித்தது.
மனிதர்களிடமே வாழ்ந்து பழகிப்போன "பக்" தான் தற்போது இருக்கும் அந்த கானகத்தில் புதுமையாக ஒரு ஓநாயின் ஊளை கேட்டு அதை தொடர்ந்து பயணப்படுகிறது. நீண்ட பயணத்திற்கு பிறகு மீண்டும் தன் எஜமானை தேடி திரும்பி வந்துவிட்டது. மீன்டும் கானகத்திற்க்கு சென்றது ஆனால் இந்த முறை 15 நாட்கள் கடந்தும் வரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பியது ஆனால் இறுதியில் பக்குக்கு ஏற்பட்டது வெறுமையே, தனது எஜமானன் இறந்துவிட்டான்.
கானகத்தின் திரும்பவும் அந்த குரல் கேட்ட பக் மீண்டும் கானகத்தின் உள்ளே பிரவேசித்தது. இந்த முறை அதன் வாழ்க்கை வாழுவதற்கு இந்த கானகம் தான் என்று முடிவெடுத்து நடக்க தொடங்குகிறது. அதைரியாமலே அதற்கு அதன் மூதாதையரின் மூர்க்க குணம் வந்துவிடுகிறது.
வேறுவழியில்லாமல் தனித்து விடப்பட்ட அந்த "பக்" தனது மூதாதையரின் மூர்க்க குணத்தோடு அந்த கானகத்தில் கம்பீரமாக வாழ தொடங்குகிறது.
இந்த கதை ஒரு நாயினை மையமாக வைத்து எழுதியது தான் என்றாலும் நமக்கு சொல்லிச்செல்லும் கதை "ஒரு வகையில் அடிமையாக இருக்கும் மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் அடிமையாகவே இருந்து தனது எஜமானருக்கு விசுவாசமாக அடிபணிந்தே வாழ்ந்து மடிகிறான்". இந்த கதையின் பக் போலவே..
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
15 ஜூன் 2021
No comments:
Post a Comment