Saturday, 12 June 2021

கோபல்ல கிராமம் - வாசிப்பு அனுபவம்


 கோபல்ல கிராமம்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

காலச்சுவடு பதிப்பு
விலை ரூபாய் 225

பக்கங்கள் 199




ஏன் கோபல்ல கிராமம் உருவானது என்றும் அதன் ஆக்கத்திற்கும் கட்டமைப்புக்கு பின்னால் வாழ்ந்த மக்களின் கதையையும் அந்த கிராமத்தின் மீது ஆட்சி செலுத்த வந்த ஆங்கிலேயர்கள் வரை கதை அழகாக பயணிக்கிறது. பல தலைமுறைகளை கடந்து செல்கிறது இந்த கோபல்லகிராமத்தின் வரலாறு.

ஆரம்பமே மிக அழகாக கவித்துமாக ஆரம்பிக்கிறது. அந்த கிராமம் துயிலில் இருந்து எழுவதை அவ்வளவு அழகாக வர்ணித்திருப்பது மிக அருமை. ஒரு கிராமத்தில் எத்தனை நிகழ்வுகள் அதிகாலையிலே நடக்கும் என்பதையும் அதுவும் "ஒட்டியிருந்த உடம்பை பிரித்துக்கொள்ளும்போது ஏற்படும் முனகலில்" என ஒரு கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் ஒரு சிறுமுனகளில் ஆரம்பித்து அதிகாலை அரங்கேறும் அத்தனையும் அறிமுகத்தில் அச்சு பிசறாமல் கொண்டுவந்திருக்கிறார்.

கோபல்ல கிராமத்தின் பெரிய வீடு "கோட்டையார் வீடு", அங்கே இப்போது வாழும் தலைமுறையிலிருந்து ஆரம்பித்து நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறார். கோவிந்தப்ப நாயக்கர் மற்றும் அவரது சகோதரர்கள் வாழ்ந்த காலத்திற்க்கு செல்கிறது கதை. வாருங்கள் நாமும் பயணிப்போம் அந்த கதையின் காலத்திற்குள்.

கர்ப்பிணி பெண் தன் கணவனுடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற நடக்கிறாள், கிடை அவிழ்த்து விடும் நேரம் ஆகிவிட்டது வெயில் உச்சிக்கு வந்து விட்டது அவள் நடந்துகொண்டே இருக்கிறாள், தாகம் தொண்டையை வரட்டுகிறது தண்ணீர் தேடி போகிறாள் அங்கே இருக்கும் ஊரணிக்கு சென்று தன் தாகம் தீர தண்ணீர் குடிக்கிறாள். அங்கு வரும் கள்வன் இவள் காதில் தொங்கும் பாம்படத்திற்க்காக தண்ணீருக்குள்ளே அழுத்தி கொன்றுவிடுகிறான் தான் சாகும் தருவாயில் தனது வாயால் அவனது கால் கட்டை விரலை கடித்துக்கொள்கிறாள், இந்த நிகழ்வு நமக்கு முதல் மரியாதை படத்தில் ஒரு காட்சியினை நினைவுக்கு கொண்டுவருகிறது.

எதேச்சையாக இங்கே வரும் கிருஷ்ணப்ப நாயக்கரும் பின்னர் தன் மனைவியை தேடிவரும் ஆசாரியாரும், ஒரு பெண்ணை காணும் என தேடுவதையும் கண்டுகொள்ளாமல் நிற்கிறான் அந்த கொலைகாரன் இறுதியில் அவன்தான் கொலைசெய்துவிட்டான் என்று தெரிந்துகொண்டு அவனை பிடித்து கிராமத்திற்கு அழைத்து செல்கிறார்கள். இவனுக்கு கொடுக்கும் தண்டணை ஆரம்பித்ற்குள் நம்மை பழைய தலைமுறைக்கு கூட்டிச்செல்கிறார். வாருங்கள் அங்கே போய்ப்பார்த்துவிட்டு பிறகு வந்து என்ன தண்டனை என்று பார்க்கலாம்.

கோவிந்தப்ப நாயக்கர், கிருஷன்ப்பா நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராமப்ப நாயக்கர், தாசப்ப நாயக்கர், சுந்தரப்ப நாயக்கர் இளையவர் கண்ணப்ப நாயக்கர் என ஏழு சகோதர்கள். பூட்டி மங்கயத்தாரு அம்மாள்.

மங்கயத்தாயாரு அம்மாள் தான் இப்போதைக்கு இருக்கும் வயது முதிர்ந்த பெண்மணி அதுவும் 137 வயதை கடந்து வாழும் ஒரு மனுஷி. இந்தஅம்மாள் தான் இங்குவரும்போது சிறுவயதில் இருந்தவர்.

மங்கயத்தாயாரு அம்மாள் வழியே நாம் இந்த கோபல்ல கிராமம் உருவான வரலாற்றினை அறிந்து கொள்வோம் வாங்க. மங்கயத்தாயாரு அம்மாவிற்கு எத்தனை அறிவுகள் அவள் ஒரு அறிவு களஞ்சியம்தான், அவளிக்குத்தான் எத்தனை அனுபவங்களும் சொல்லாத ரகசியங்களும்..

ஆந்திர தேசத்தில் இருந்து, முஸ்லீம் ராஜாக்களுக்கு பயந்துகொண்டு இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். அபப்டித்தான் மங்கயத்தாயாரு அம்மாவின் ஒன்று விட்ட சகோதரி "சென்னாதேவி" அழகின் மருவுருவமே அவள்தான் அத்தனை அழகு. சென்னாதேவி அம்மனின் மரு உருவமென்றே சொல்லலாம் அப்படிதான் ஒருமுறை பல்லக்கில் திரும்பி வீட்டிற்கு வரும்போது கள்வர்கள் சிறைபிடித்து கொள்ளையடிக்கப்பார்த்தார்கள் ஆனால் நடந்தது வேற, சென்னாதேவி பல்லக்கை விட்டு வெளியே வந்ததும் அந்த தெய்வீக காட்சியினை பார்த்த "மல்லையா" என்ற பெரும் கொள்ளையன் மண்டியிட்டு வணங்கி தனது ஒரு வீரனை துணையாக காடு முடியும்வரை போய் விட்டு வரச்சொன்னான் என்றால் அவளது தெய்வீகமான முகமே காரணம். ஆனால் அந்த அழகே அவளுக்கு ஆபத்தாக வந்தது தான் கொடுமை.

சென்னாதேவி மீது ஆசைப்பட்ட துலுக்க ராஜா அவளை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு அதற்க்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தேறியது, வேறுவழியின்றி அப்பன் ஏழுமலையானை வேண்டிக்கொண்டு சம்மதிதார்கள் கடைசியில் எப்படியாவது தப்பித்துவந்தே ஆகவேண்டும் என்று அந்த அரண்மனையின் பக்கத்திலிருந்த அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த குடில்களில் இருந்து தப்பித்து ஓடினார்கள். அவர்கள் தப்பித்து வரும்வழியில் எத்தனை அனுபவங்களும் அதிசயமானதும் மற்றும் அபூர்வமான சிலபல நிகழ்வுகள் நிகழ்ந்தது.

துலுக்க ராஜாவின் காவலாளிகள் குதிரையில் தொடர்ந்து வருவதை கண்டு முடித்த அளவுக்கு ஓடினார்கள் இறுதியில் கரைபுரண்டோடும் வெள்ளத்துடன் ஓர் நதி, இனிமேல் ஒன்னும் செய்யமுடியாது என்று நினைத்து துலுக்கர்களிடம் மாட்டிக்கொள்வதை விட வெள்ளத்தில் விழுந்து மடித்துபோகலாம் என்று முடிவெடுத்து விடுகிறார்கள் ஆனால் இங்குதான் அதிசயம் அக்கரையில் இருந்த அரசமரம் இக்கரைக்கு வளைந்து வந்து இவர்களை அக்கரைக்கு எடுத்து சென்றது. பின்னர் அவர்கள் போகும் வழியில் ஒருவர் கொட்டும் மழையிலும் வழியில் காத்துக்கொண்டிருக்கிறார், அவர் இவர்களை வரவேற்றுவிட்டு சொல்கிறார் நான் நேற்று ஓர் சொப்பனம் கண்டேன் அதில் நீங்களெல்லாம் தப்பித்து வருகிறீர்கள் அதற்க்கு நான் உதவவேண்டும் என்று அதனால் தான் இங்கு காத்து இருக்கிறேன் என்றார். அவரின் கவனிப்போடு அங்கிருந்து நடக்க தொடங்கினார்கள்.

தொடர்ந்த நடை வழியில் கிடைத்த அமமன் தரிசனமும் அம்மன் கொடுத்த கூடையும் பிறகு அங்குவந்த துலுக்க ராஜாவின் வீரர்களிடமிருந்து காப்பாற்றிய அம்மன். வழியில் சந்திக்கும் அறிந்துகொள்ளும் துளசியின் கதை. 16 அடி தலை முடிகொண்ட அந்த அழகி துளசிக்கும் இதேபோல துலுக்க ராஜாக்களால் ஏற்பட்ட கொடுமையிலிருந்து காப்பாற்ற பூமித்தாய் அவளை விழுங்கி விட்டது என்ற தகவல் கேட்டு நெகிழ்ந்து போவதும் என அவர்ளின் நடை பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அப்படியே நடக்கும் பொழுது அவர்கள் காண்பதெல்லாம் வித்தியாசமாக இருக்கிறது, வீடுகள், கால்நடைகள் மற்றும் பேசும் மொழி என எல்லாமே புதுமையாக இருந்தது ஒருகட்டத்தில் தான் அவர்கள் தெரிந்துகொண்டனர் அது அரவதேசம் (தமிழ்நாடு) என்று.

ஸ்ரீரங்கம் வந்த போது சென்னிதேவி மரணித்துவிட்டாள். அவளது மரணம் எல்லோரையும் துக்கத்தில் உறைய வைத்தது. கடைசியாக இங்குவந்து இந்த கிராமத்தை உருவாக்கினார்கள்.

காடாக இருந்த இடத்தை சீர்படுத்தி விவசாயம் செய்யும் நிலமாக மாற்றி காடுகளை அழித்து ஒரு புதிய நிலத்தினை உருவாக்கினார்கள். அங்கே இருந்த ஊரணியில் ஒரு பசுமாடு நிறைவயிற்றுடன் சகதியில் மாட்டிக்கொண்டது அதை சகதியில் இருந்து மீட்க வேண்டி 40க்கும் மேற்பட்ட இளவட்டத்தினர்கள் சேர்ந்து மீட்டுவந்தனர் அப்படியாக மீட்கும் அந்த காட்சியினை "40க்கும் மேற்பட்ட எறும்புகள் விழுந்து கிடக்கும் ஒரு புழுவினை சுற்றி நிற்பது போல" காட்சி அளித்தது என்று சொல்கிறார். பசு கிடைத்ததால் அந்த கிராமம் கோபல்ல கிராமம் என உருவானது.

அப்படி உருகுவாக்கப்பட்ட அந்த கிராமத்தில் முதலில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் அவரவர் பங்குக்கு ஒவ்வொரு மரம் கம்மாக்கரையினை சுற்றி நடவேண்டும் அப்படி நடப்பட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் நிழலில் தான் இந்த ஊர்கூட்டம் நடக்கிறது.

கொலைசெய்த குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க ஊர்கூடுகிறது. சபையில் இருப்பது கோட்டையார் குடும்பம் அணைத்து சகோதர்கள் மற்றும் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தி அவர்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது அவர்களின் சிறப்பு மற்றும் குணம் என எல்லாவற்றையும் அழகாகவும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு துணை கதை மிக அழகாகவும் அவர்களின் பெயருக்கு காரணத்தையும் மிக அருமையாக சொல்லிச்செல்கிறார்.

சின்னப்ப நாயக்கர்
மன்னுதிண்ணி ரெங்க நாயக்கர்
நல்லமனசு திரவத்தி நாயக்கர்
பெத்தகோந்து கோட்டையார்
பொடிகார கெங்கையா நாயக்கர்
காரைவீட்டு லெட்சுமண நாயக்கர்
கங்கனால் சுப்பன்னா
படுபாவி செங்கன்னா
பச்சைவெண்ணெய் நரசய்யா
பொறை பங்காரு நாயக்கர்
ஜோசியம் எங்கட்டராயலு
வாகடம் புல்லைய்யா
பயிருழவு பங்காரு நாயக்கர்
காயடி கொண்டைய்யா
ரகுபதி நாயக்கர்
ஜலதரங்கன்
கல்தொடு மரகதய்யா: மற்றும்
பஜனை மட பார்த்தசாரதி

என ஊர் பெரியவர்கள் எல்லோரும் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் சபைக்கு வந்துசேர்ந்து விட்டனர்.

கோவிந்தப்ப நாயக்கர் ஆரம்பிக்கிறார், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டுக்கொண்டே குற்றவாளியை பேசச்சொல்கிறார் ஆனால் அவன் பேசாமல் இறுதிவரை இருந்துவிடுகிறான். மனைவியை பறிகொடுத்த ஆசாரியார் பேசமுடியாமல் பேசுகிறார். இறுதியில் தீர்ப்பு இவனை கழுவேத்துவது என்று முடிவாகிறது.

கழுவேத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் மைதானத்தில் அவனை கழுவேத்துகிறார்கள் அதற்குமுன் அவனால் கொலையுண்ட அந்த பெண்ணின் உடலை அங்கேயே புதைக்கின்றனர். இந்த இடத்தில சுமைதாங்கியும் வைக்கின்றனர் பிற்காலத்தில் இது "கழுவன் மைதானம்" என்று பெயர் மாறிப்போய்விட்டது.

கழுவில் ஏறி இருக்கும், அவன் தான் உயிர்போகும் சமயத்தில் தண்ணீர் வேண்டுமென்று கேட்டதால் அதை கொடுக்க சொல்லுவது அந்த மக்களின் இரக்கத்தை காட்டுகிறது. மேலும் அவனுக்கு வேற எதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்கின்றனர் அதற்க்கு அவன் அங்கே அருகில் வேப்பமுத்து எடுத்துக்கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளை அழைத்து வந்து என்னை சுற்றி கும்மி பாட்டு பாட கேட்டுக்கொள்கிறான் அதன் படி அந்த குழந்தை களும் பாட அதை கேட்டுக்கொண்டே அவன் அவனின் தாய்க்கு செய்த குற்றங்களை நினைத்து அவன் எவ்வாறு ஊதாரியாக சுற்றி திரிந்ததும் ஆனால் இந்த கோபாலபுரம் மக்கள் எவ்வாறு இந்த காட்டை அழித்து விவசாயம் செய்கின்றனர் இவர்களின் உழைப்பே பெருமைக்குரியது என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டே உயிர்விடுகிறான்.

பிறகு அங்கே வரும் ஆங்கிலேயர்கள் முதலில் நல்லவர்கள் போல வந்து பின்னாளில் அவர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை அதனால் மக்கள் வெகுண்டுஎழுகிறார்கள்.

சமீபத்தில் நாம் சில இடங்களில் எதிர்கொண்ட விட்டில் பூச்சியின் தாக்குதல் போல அப்பவே கோபல்ல கிராமம் எதிர்கொண்டியிருந்தது. அப்போது அங்கு திடீரென வந்த விட்டில் பூச்சிகள் "ஒரு தேன் கூட்டில் மொய்க்கும் தேனீக்கள் போல் இருந்தது என்றும்" இங்கே தேன்கூடாக கோபல்ல கிராமத்தை உவமை சொல்லியிருப்பது மிக அருமை. கோவிந்தப்ப நாயக்கர் தங்கள் வீட்டில் சேர்த்து வைத்திருந்த தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான கூளங்கள் எல்லாம் கிராம மக்களுக்கு பிரித்து கொடுத்து ஒரு தலைவனுக்கே உரித்தான ஒரு தனித்துவத்துடன் நிற்கிறார்.

கடைசியில், கோபல்ல கிராம மக்களின் சுதந்திர வேட்கை தணல் விட்டு எரியும் தீ போல சுடர் கொண்டு இருக்கிறதையும் அவர்கள் அதை ஒரு அமைதியாக இருந்து போராடுகிறார்கள்.

இப்போது கோபல்ல கிராமத்தில் நிலவும் அமைதி "ஒரு புயலுக்கு முன்னாள் இருக்கும் அமைதியே, இது கோபல்ல கிராம மக்களின் சுதந்திர தாகம் இன்னும் தீரவில்லை அது ஒருபுறம் சுடர்விட்டு கொண்டேயிருக்கிறது.....

என்று முடித்திருப்பது - அருமை

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
12 ஜூன் 2021

No comments:

Post a Comment