மாயமான்
கி. ரா. வின் சிறுகதை தொகுப்பு
காலச்சுவடு பதிப்பகம்
அச்சு பதிப்பு விலை ரூபாய் 250
கிண்டில் பதிப்பு ரூபாய் 199.5
பக்கங்கள் 329
கி .ராஜநாராயணன், அவர்கள் கதை சொல்வதில் சிறப்பான உணர்ச்சிகளையும் விசித்திரமான மக்களின் அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை தனது சிறப்பான சொல்திறமையும் கொண்டவர். இவர் கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்ததான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒரு வித்தியாசமான மனிதர்களைக்கொண்டே மிக அழகாகவும், ஆழமான கிராமத்து சொல்லாடுலுடன் பிரமிக்க வைக்கும் ஆற்றல் தான் இவரின் காலை வன்மை.
அய்யா கி.ரா. அவர்களின் ஒவ்வொரு கதையினும் வாசிக்கும் பொழுது நம்மை ஒரு கிராமத்தின் உள்ளே அழைத்து செல்வார். கிராமத்தில் நடக்கும் எதார்த்தமான வாழ்வியலை அவரின் கதைகளின் களமாக கொண்டிருக்கும்.
பல்வேறு மனநிலையினையும், வெவ்வேறான சம்பவங்களையும். நம்பிக்கைகளையும் ஒருசேர கொண்டுவரும் கிராமத்து பின்னணியுடன் கொண்ட கொண்ட 17 கதைகளின் தொகுப்பு தான் இந்த "மாயமான்" என்ற சிறுகதை தொகுப்பு.
1. கதவு.
கிராமத்தில் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்துக் குழந்தைகளின் நிலையினையும் அவர்களின் தாயின் நிலைமையும் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார் கி. ரா. அந்த குடும்பத்தின் பழைய காலத்து காரை வீடு அதுபோன்ற பெரிய வீடுகளுக்கு ஒரே பெரிய தான் இருக்கும். கிராமத்தில் காரை வீடு இருந்தால் அவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள் ஆனால் இந்த குடும்பம் இப்போது நொடித்துப்போய்விட்டது என்பதை அந்த வீட்டு குழந்தைகள் விளையாடும் போக்கிலே சொல்லியிருப்பார் கி.ரா.
வாழ்ந்து நொடித்துப்போன குடும்பத்தில், பெரும்பாலும் வெளியூர்ப்போய்தான் எதாவது சம்பாதிப்பார்கள். இங்கேயும் அப்படித்தான், வீட்டின் தலைவன் வேற ஊருக்கு போயிருக்கிறான் , குழந்தைகள் அவையெல்லாம் அறியாமல் அவர்கள் தங்கள் குழந்தை பருவத்தை அழகாக அனுபவிக்கிறார்கள். அதுதான் இந்த குழந்தைகளின் "கதவாட்டம்" - கதவில் ஒவ்வொருவரும் ஏறிக்கொண்டு ஒவ்வொரு ஊராய் டிக்கெட் எடுத்துக்கொண்டு கதவில் பயணிப்பது.
நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் இந்த விளையாட்டினை அனுபவித்து விளையாடியிருக்கிறோம். இங்கே கி.ரா. சொல்கிறார் இது அதாவது இந்த விளையாட்டானது தலைமுறை தலைமுறையாக விளையாடிவருகிறது அதற்க்கு சான்றாக கதவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு லட்சுமியின் படம் அது புகைபடிந்து இருப்பதையும் கூறுகிறார்.
கட்ட வேண்டிய வரியினை கட்ட முடியாததால், அபராதமாக வீட்டின் கதவை எடுத்து செல்கின்றனர். கதவில்லாத வீட்டில் வசிக்கும் ஒரு தாயம் சிறுகுழந்தைகளும் படும் போராட்டத்தை இங்கே பதியவைத்திருப்பார். குளிர் தாங்கமுடியாமல் சின்ன குழந்தை இறந்துபோவதும் அதற்க்கு சான்று.
2. மாயமான்.
இந்த கதை அப்பாவு செட்டியார் பத்திரிகையுடன் வருவதுடன் கதை தொடங்குகிறது. மேலும் இந்த கதையில் கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியாத சின்ன சின்ன விவசாயிகள் படு துன்பத்தை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் கி. ரா.
அபபாவு செட்டியார் கொண்டுவரும் தினப் பத்திரிகையில் வரும் ஒரு செய்தியினை மையமாக வைத்து இந்த கதை நகர்கிறது.
அதுதான் இந்த செய்தி, இனி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். புஞ்சைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் கிணறு வெட்ட நானூறு ரூபாய் இனாமாகக் கொடுக்கிறார்கள். புஞ்சை நிலங்களை வளமான விவசாய நிலங்களாக மாற்றி விவசாயிகள் அதிக லாபம் அடைய வேண்டிக்கொள்கிறோம். அப்பாவு செட்டியார் இந்த செய்தியை நம்பி அவருக்கு சொந்தமாக நாலரை ஏக்கர் வயலில் ஒரு கிணறு வெட்ட திட்டமிட்டார்.
செட்டியாருக்கு ஒரு கடை இருக்கிறது, இருந்தாலும் செட்டியார் அரசின் இனாமான ரூபாய் 400 வாங்கி மேலும் தேவைக்கு அய்யவார் நாயக்கரிடம் கூடக் கடனும் வாங்கி எப்படியாவது கிணறை வெட்ட வேண்டும் என்று ஆசையில் இறங்குகிறார் அப்பாவு செட்டியார். இந்த ஒரு முடிவு அவரின் வாழ்வாதாரத்தையே சிதைத்துவிடுகிறது.
கிணறு ஆழமாச்சு சுவையான தண்ணீரும் ஊற்றெடுத்து வந்தது கூடவே கடன் பெருத்துக்கொண்டே போனது. கிணற்றில் நல்ல தண்ணீர் வர¸ செட்டியார் பணப்பயிர் போடத் திட்டமிடுகிறார். உழவுக்கு காளைகள் வாங்குவது முதல் விவசாயத்திற்கு தேவையான அனைத்தும் வாங்க தேவைப்படும் பணம் மீண்டும் அய்யவார் நாயக்கரிடம் வாங்குகிறார். நாயக்கர், உள்நோக்கத்துடன் அப்பாவு செட்டியாரின் வீட்டை அடமானம் வைத்து கொண்டு பணம் கொடுக்கிறார்.
செட்டியாரின் கெட்ட நேரம் அரசாங்கம் பணபயிரெல்லாம் செய்யக்கூடாது என்றதும், கேப்பைப் பயிரிடத் திட்டமிட்டு அதையும் செய்கிறார் ஆனால் பயிர் விளையும் சமயத்தில் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போகிறது. மழையும் இல்லை கிராமத்தின் அணைத்து விவசாயமும் கருகி போய்விட்டது. கிணறு வறண்டு போய்¸ கடை வியாபாரம் கவனிக்கப் படாமல் நலிந்து போய்¸ பெற்ற கடனுக்கு வட்டி கட்டவே வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் விற்று வட்டிக்கட்டி கடைசியில் வீடு, கடை, வாழ்க்கை எல்லாம் போய், ஊரை விட்டு செட்டியார் குடும்பத்துடன் பொழப்புக்காக வெளியேறுகிறார்.
மாயமான் போல வந்த அந்த ஒருசெய்தியினை கொண்டு தனது வாழக்கை முழுவதும் இழந்த செட்டியார் போல எத்தனையோ குடும்பங்களின் வாழ்வே இந்த கதை.
3. கோமதி
சுமார் 30 வயது கொண்ட "கோமதி செட்டியார்" ஏழு பெண்குழந்தைகளுக்கு பிறகு எட்டாவதாக பிறந்த ஆன் குழந்தை. கோமதிக்கு சிறு வயதிலிருந்தே சடைபோட்டு பூ வைத்துக்கொள்வதிலும், வளையல்கள் அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. அசலில் ஆணாக இருந்தாலும், அவன் இயல்பு ஒரு பெண்ணாகவே வளர்ந்து வந்தான். பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான். ஆண்களோடு விளையாடவேண்டியது ஏற்பட்டுவிட்டால் வீடுகட்டி, கல்யாணம் பண்ணி விளையாடும் விளையாட்டில்தான் பிரியம் அதிகம். அதிலும் மணப் பெண்ணாக தன்னை வைப்பதென்றால்தான், விளையாட வரச் சம்மதிப்பான்.”
கோமதி பெண்களுக்கே உரிய அணைத்து பண்புகளும் தெரிந்துகொண்டிருந்தான், சமையல் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான். ஊரில் இருக்கும் எல்லாவீட்டுக்கும் சமையல் என்றால் "கோமதி" தான் நினைவுக்கு வருவான். அபப்டியாக ஊருக்கு வந்த சுலோவின் கூடவே அவர்கள் வீட்டிக்கு சமையல் செய்ய போனான்.
சுலோவின் அண்ணன் ஊருக்கு வந்திருந்தான், முதலில் அவனுக்கு கோமதியை பார்த்தாலே ஒரு விதமான வெறுப்பு இருந்தது, ஆனால் கோமதிக்கு அவன் மீது ஒருவிதமான ஈர்ப்பு. இறுதியில், கோமதியின் ரூமில் ஒரு பெண் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். கைகள் நிறைய கருவளைகள் போட்டுக் கொண்டிருந்தாள். தலையில் பூச்சூடி, அவள் எதிரே ரகுவின் போட்டோ படம் இருந்தது. அந்தப் பெண் கண்கள் கலங்கி கொண்டேயிடிருந்தது. சுலோவால் அந்த பெண்ணை பார்க்க முடிந்தது, அடையாளம் கண்டுக்கொண்டாள். சேலையுடுத்திக்கொண்டிருந்த அந்த பெண் வேறு யாருமில்லை அவள் அதே கோமதிதான். அவன் தான் தன்னை ஒரு முழு பெண்ணாகவே கருதி உருகும் கோமதியின் உணர்வுகளை அழகா சொல்லியிருப்பார் கி.ரா அவர்கள்.
4. கன்னிமை
இந்த கதை ஒரு கணவனின் நினைவாகவே, "தான் சின்ன வயசிலிருந்து பார்த்த ஒரு முறை பெண், தான் கல்யாணம் ஆன பிறகு இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை" என்று தொடங்குகிறது.
நாயகி நாச்சியாரம்மாள் எப்படி மாறினாள் என்ற கதையை அய்யா சொல்லும் விதமே, நம் வீட்டு ஓர் தங்கை நம் கண் முன்னே வளர்ந்து மாமனுக்கு கட்டி கொடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
ஒரு பெண் தனது திருமணத்திற்கு பிறகு எப்படி முழுவதும் தான் புகுந்த வீட்டின் ஒரு அங்கமாக மாறுகிறாள் என்பதையும் அவள் குணத்தில் இத்தனை மாற்றம் கொள்வாளா என்று குடும்பத்தின் அனைவரும் வியப்படைகிறார்கள். கணவன் அவளை சின்ன வயசிலிருந்தே நன்கு தெரிந்தவன் ஆனாலும் அவனும் திகைக்கிறான் நாச்சியாரம்மாவின் மாற்றத்தை என்றால் நாம் எல்லாம் நம்பாமல் இருக்க முடியாது. நாச்சியாரம்மாவின் இளம்வயதில் கொண்டிருந்த இரக்க குணத்தையும் மற்றும் அவளின் வீரமும் பிரமிக்கதான் வைக்கின்றது.
5. வந்தது.
இந்த கதையின், நாயகன் ஒரு கோரமான கனவு கண்டு கண்விழிக்கிறான் அந்த கனவில், தனது ஊருக்கு செல்கிறான், அங்கு யாருமேயில்லை, அவன் வீடே காணவில்லை, அந்த நாளின் அணலினால் குட்டைகளில் இருந்த தண்ணீர் மீதிருந்த வந்த காற்று சொல்கிறது அந்த வறண்ட காலத்தின் சூழலை. அங்கு மனிதர்கள் வெகுநாட்களாக இல்லை என்பதை "காய்ந்து இற்று போன பனம்பூவின் துணுக்குகளை போல உலர்ந்து கிடைக்கும் மனித மலங்கள்" என்ன அருமையான உவமை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்த்தவனுக்கு தெரியும் அய்யாவின் சொல்லாடல்.
அவன் தூக்கத்தில் இருந்து நனவிற்கு வரும்போது அவனது மனைவியும் குழந்தையும் நலமாய் இருக்கிறார்கள். ஆனால் அவனுக்குள் இருக்கும் ஏதோ ஒரு விதமான வேதனையின் பிரதிபலிப்பாக தான் இந்த கனவை நாம் பார்க்க முடிகிறது.
6. பேதை
பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டத்தின், ஒரு அவல பெண்ணின் கதையினை சொல்லும் கதை தான் இந்த பேதை.
பேச்சி என்ற அந்த அவலப்பெண்ணின் நிலையே. பேச்சி தான் கன்னி பெண்ண்ணாக இருக்கும்போதே கருவுருகிறாள் ஆனால் அதற்க்கான காரணம் யாரென்றே தெரியாமல் இருக்கிறது. அவள் மனநிலை சரியில்லாமல் போகிறாள். அவளின் செயல்கள் கொஞ்சம் ஆபாசமாக இருந்தாலும் கதை ஆபாசத்தைச் சொல்லவில்லை. தன்னிலை மறந்த பேச்சியிடம் குழந்தையை பிரிக்கிறார்கள் ஆனால் அவள் போராடி வெறிகொண்டு தான் தன குழந்தையுடன் வாழும் வாழக்கை அவலமாகவே இருக்கிறது. தன் குழந்தை இறந்துப்போனதே தெரியாமல் இருக்க எப்படி குரங்கு இறந்து போன தன் குட்டியை வைத்திருக்குமோ அதுபோலவே பேச்சியும் அலைகிறாள்.
அவளின் கொடூரமான வாழ்நிலையிலும் அந்த கோரம் வழியும் பேச்சி என்றாலும் அவளிடமும் வாழ்க்கையை சிதைத்து செல்லும் கொடுரத்தைச் சொல்கிறது கதை என்பதே சரியானது ஆம் அந்த நினைவற்ற பேச்சியை மீண்டும் நிறைவயிறாக செய்யத் துணிந்த ஒரு அரக்கனின் கதையை சொல்லாமல் சொல்கிறது.
7. புறப்பாடு .
இந்த கதை ஒரு முதியவரின் மரணம் எப்போது என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒட்டுமொத்த கிராமத்தின் நிலையை சொல்லுகிறது.
மரணம் எப்போதும் தனக்கு வந்து விடக் கூடாத என்று என்னும் இளைஞர்கள் அதே சாவு முதியவர்களுக்கு வரட்டுமென்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அவலத்தையும் அதன் பின்னே இருக்கும் குடும்பத்தின் சில அவசியச் சங்கடங்களையும் நகைப்பும் வருத்தமும் சேர்த்து சொல்கிறார் கி.ரா. ஒரு வாழ்ந்து முதிர்ந்த முதியவரின் இறுதி நாளை எண்ணி எண்ணி தவிக்கும் ஊரின் மனநிலையினை அருமையான உணர்வுகளுடன் சொல்லியிருப்பார் அய்யா கி. ரா.
8. ஜீவன்
இந்த கதையில் வாழ்ந்து போகும் அங்குசாமி என்ற ஊமைப் பாத்திரம் மிக ஆணித்தனமாக சொல்லிச்செல்கிறது. ஒரு ஊமையின் வாழ்க்கையில் ஏற்படும் வெவேறு விதமான பரிதாபங்களினை பெரிய பட்டியலாக சொல்லிச்செல்கிறார்.
நான் பழகிய ஒரு ஊமைபையனின் கனவுகள் நிறைவேறாமலே போனது மட்டுமல்லாம் இந்த உலகை விட்டு போனதுதான் நினைவுக்கு வருகிறது இந்த அங்குசாமியின் கதை. அளப்பெரிய அன்பும் சாதுரியமான திறமையும் கொண்ட ஆண்மகன் ஆனால் அவனின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாகவே போனது மட்டுமல்லாமல் அதனால் அவன் தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும் முடிவு சற்றும் எதிர்பாராதது மனதை பதறவைக்கிறது.
9. சந்தோஷம்.
ஒரு கணவன் மனைவி, இருவருக்குமே தெரியும் இருவரும் பேசுவது பொய் என்று இருந்தாலும் அவர்கள் அதில் கிடைக்கிற சந்தோசத்தை வாழ்வாகவே வாழ்கிறார்கள் என்பது அவன் கோழியினை திருடிவிட்டு இது எனக்கு ஒருத்தன் வளர்க்க சொல்லிக்கொடுத்தான் என்று சொல்லுவதை சொல்லிச்செல்கிறார்.
10. கறிவேப்பிலைகள்
இந்த கதையில் வரும் பப்பு தாத்தா தம்பதியர் போல ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தம்பதிகள் இல்லாமல் இருப்பதில்லை. பொழப்புக்காக வெளியூரில் இருந்து வந்து ஊரின் ஓரமாக ஒரு குடிசை போட்டு வாழ்ந்த குடும்பங்கள் எத்தனையோ இருந்திருக்கிறது. அவர்கள் கறிவேப்பிலைகள் போல பயன்படுத்திவிட்டு எடுத்து தூர வீசிவிடுவார்கள். அப்படிதான் இந்த பப்பு தாத்தா தம்பதிகள் நிலையும் என்பதை ஒரு கிராமத்து வாசனையுடன் சொல்லியிருக்கிறார்.
11. விளைவு.
இந்த கதையும் பஞ்சம் பொழைக்க வந்த ஒரு குடும்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும். அப்படியாக வந்த ஒரு குடும்பம் போகும்போது இவனை விட்டுவிட்டு சென்றது. அவன்தான் "பாவய்யா", இவனின் சிறுவயது வாழ்க்கை நான் கண்டு பழகிய நிறைய பாவய்யா வினை நினைவுகொண்டுவருகிறது.
மாடுமேய்க்கும் பொது அவன் இருக்கும் அம்மணமான தோற்ற்றம் ஊருக்குள் வந்தால் உடுத்தும் கோமணம் என அவனின் வாழ்க்கை வேறொரு உலகம் தான்.
அவனுக்குள் இருக்கும் அந்த பிடிவாத குணத்தை மிக அழகாவும் நகைச்சுவையாகவும் இரண்டு இடங்களில் சொல்லியிருப்பார் அதுவும் இறுதியில் அவன் அம்மணமாகவே நிற்பதும் அதற்காக காரணமானவள் வந்து ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இறுதி நொடியில் இருவருக்குள் மலரும் அந்த காதல் ... அருமையாக இருக்கும் அந்த தருணம்.
12. வேட்டி
ஒரு வேட்டியினை கொண்டு தெளிவாக மனிதர்களை பற்றி பேசி போகும் கதை தான் இந்த வேட்டி கதை. கிழிந்த ஒரு வேட்டியினை வைத்து கொண்டு எவ்வாறு ஒரு ஏழை விவசாயி வாழ்கிறான், அந்த வேட்டியில் பட்ட கிழிசலினை மறைக்க அவன் படும் போராட்டம் அருமையாக இருக்கும் அதுவும் அந்த விவசாயி ஆகஸ்ட் போராட்டத்திற்கு போய் வந்தவன் என்று அரசியலும் சொல்லியிருப்பார்.
13. கனிவு
புதிதாக திருமண மான ஒரு தம்பதிக்குள் ஏற்படும் ஸ்பரிசங்களை அழகான உணர்வுகளோடு சொல்லியிருப்பார். அந்த காலத்தில் அந்த ஊரின் கல்யாணம் நடந்தால் புதுமண தம்பதிகள் கூடுவது ஒரு சடங்காக இருப்பதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சேர்வது வழக்கம். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த தம்பதிகள் இடையே வரும் விருப்பு வெறுப்புகளையும், நீயா நானா என்ற வறட்டு கௌரவம் என அவர்கள் இடையே நடக்கும் ஊடல்கள் எல்லாம் நவரசத்துடன் சொல்லியிருக்கிறார். இருவரின் மனம் கனிந்து வரும் நேரம் விதியும் ஆடியும் சேர்ந்து பிரித்து விடுகிறது. கடைசியில் இவர்களின் வாழ்வில் வரும் அந்த அழகிய தருணம் மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார்.
14. குருபூஜை.
குருபூஜை, எல்லோரும் கொடுப்பது போல நாமும் கொடுக்கமுடியும் என்று மனதில் நினைத்துக்கொண்ட சிவாமி ஆச்சி எப்படியாவது இந்த குருபூஜைக்கு ஐந்து பண்டாரங்களுக்கு உணவுப்படைக்க வேண்டும் என்று அதற்கும் தாயாருகிறாள் சிவாமி ஆச்சி.
பல இடையூறுகளுக்கு அப்பால் விருந்து சமைத்து தன் தலையில் சுமந்து மலையேறி செல்கிறாள். மலைக்கு சென்று பிறகு அதை சாப்பிட பண்டாரங்கள் தலைக்கு இந்து ரூபாய் கேட்பதும், அப்போது அங்கு வரும் உறவினர் எல்லோருக்கும் காசு கொடுத்ததும் பண்டாரங்கள் அவர்களின் விருந்தை சாப்பிடுவதும் கடைசிவரை ஆச்சியின் சாப்பாட்டை யாரும் சாப்பிடாததும் எல்லாம் வேடிக்கை பார்த்த சிவாமி ஆச்சி கண்ணீருடன் திரும்பிவருவதும் என பணம் மற்றும் செல்வாக்கு தான் பெருசு என்ற அரசியல் சொல்கிறார் அய்யா கி.ரா.
மயில் மேடையினை விவரிக்கும் போது அந்த அழகும், மரங்களும் அழித்து போனதால் உயிரனங்கள் இல்லாமல் போனதும் விவரமா சொல்லியிருக்கிறார்.
15. நிலை நிறுத்தல்.
இந்த கதையிலும் பஞ்சம் பிழைக்க வந்தவன் தான் நாயகன். மாசாணம் ஊருக்கு வந்தது சிரியவசில், அப்போது பெரியமுதலாளி பார்த்து வீட்டு வேலைக்கு வைத்துக்கொண்டார். அவர் செய்யும் கொடுமைகள் ஏராளம் ஆனால் அதையெல்லாம் கடந்து மாசாணம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான்.
பண்ணையார்கள், கூலிகளின் உழைப்பை சுரண்டுவது மட்டுமல்லாமல் அவர்களின் மீது அத்துமீறும் ஆணவத்தையும் அழகாக சித்தரித்து இருக்கிறார்.
காலங்கள் ஓடின, கல்யாணமும் பண்ணிக்கொண்டு திரும்ப அதே ஊருக்கு வந்தார்கள் அதிர்ஷ்டவசமாக மனைவியின் பெயரும் மாசாணம் தான் அதனால் அவர்கள் கைகளால் சுளுக்கு வழித்து விட்டால் குணமாகும் என்று ஒரு ஐதீகம் அதன் படி அவர்கள் எல்லோருக்கும் செய்தார்கள். மாசாணம் இப்படி இருப்பதால் மனைவி அவனை மதிக்காமல் ஏளனம் செய்தால். ஊரே பஞ்சத்தால் வாசிபோவிட்டது, மழையும் பொய்த்து போய்விட்டது.
கஞ்சிக்கு வழியில்லை, காலம் போய்க்கொண்டே இருக்கிறது, மழைக்கான எல்லா அறிகுறிகளும் தென்படவே இல்லை. மாசாணம் வீட்டில் பட்டினி ஆரமித்தது, ஒரு முடிவு எடுத்தான் அம்மன் கோவில் வாசலில் போன் உண்ணாவிரதம் எடுத்தான். ஊரே பார்த்து பிரமித்து போனது, கிடை வைத்திருந்த கோனார் ஆட்டு பாலை கறந்து கொண்டுவந்து கொடுத்தார் குடிக்க மறுத்து விட்டான் மாசாணம்.
இறுதியில் மழை மூச்சு விடாமல் பெய்கிறது, ஊரே அவனை கொண்டாடுகிறது, பெரியமுதலாளி அவர் கையாலே பால் கொடுக்கிறார் குடிக்க சொல்லி, இன்னும் கொஞ்சம் என்ற எல்லோரின் வார்த்தைகள் அவன் காதில் விழுகிறது.
மாசாணத்திக்கு இப்போது தான், தன் கணவன் மீது ஒரு மரியாதை வருகிறது. ஒன்னும் இல்லை என்றல் யாரும் மதிக்க மாட்டர்கள் என்று ஒரு செய்த்தியினை அழகா சொல்லியிருக்கிறார்.
16. கண்ணீர்.
கிராமத்து தெய்வத்தின் பின்பலமாக வருகிற கதையில், அந்த அம்மனுக்கு பூசை செய்வது மாடத்தி என்ற பெண். அவளின் குடுமபம் அவள் பிள்ளைகள் படும் கஷ்டம் என சொல்கிறது.
கிராமத்தில் நடக்கும் புருஷன் பொண்டாட்டி சண்டையும் அதனால் அந்த பெண் எந்தளவு கொடுமைக்குள்ளாகிறாள். கருத்த நாயக்கர் தனது மனைவி செவத்தம்மாளை சுடுமணலில் குழிவெட்டி அதில் அவளை நிற்க வைத்தது அதனால் கொஞ்சம் நாளில் அவள் இறந்து போனது அதன் பிறகு கருத்த நாயக்கர் வீட்டில் பிறக்கும் குழந்தை அனைத்தும் சப்பாணியாகவே பிறந்தது என்று சொல்கிறார்கள் ஊர்மக்கள். என்னவோ பரிகாரங்கள் செய்தும் பலனில்லை.
அம்மனின் கண்களில் கண்ணீர் இடைவிடாமல் வருகிறது என்பது அந்த செய்தியும் ஊரெல்லாம் பரவிவிட்டது. ஊர்ப்பெண்கள் எல்லோரும் கண்ணீருடன் கோவிலின் முன்னர் வந்து குவிந்து விட்டனர்.
17. கரிசல் காட்டில் ஒரு சம்சாரி.
துரைசாமி நாயக்கர் என்ற ஓர் சம்சாரியின் வாழ்க்கையினை மிக அழகாக கிராமத்து பின்புலத்தில் சொல்லிச்செல்கிறது இந்த கதை.
ஆரம்பத்தில் இருந்த வெறும் நாலு ஏக்கர் கட்டாந்தரைக் காட்டை கம்பு கொழிக்கும் பூமியாக மாற்றிய துரைசாமி நாயக்கர் மேலும் அந்தநிலங்களை எவ்வாறு சீராக்கினார் எப்படி பாதுகாத்தார் என்பதையும் அவர் ஊர் சொல்லும் எந்த செயலுக்கும் செவிசாய்க்காமல் தான் தான் போன போக்கில் வளர்ந்து இன்று மொத்த கிராமம் முழுதுமே வளைத்துப் போட்டு¸ சேர்ந்து விட்ட ‘மூலதன பயத்தில் '(கி.ரா.வின் சொல்லாடல்) உடமையைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தும் நாடகங்கள் வாசகனுக்கு அந்தப் பாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது உண்மைதான்.
துரைசாமி நாயக்கர், பிரிட்டிஸ்காரர்களின் ஆட்சி நல்லேதென்று நினைத்தவர் அதுமட்டுமல்லாமல் அவரது வாழ்க்கை சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான பல வருடங்களின் கிராமத்து வாழ்க்கையின் போக்கை கி.ரா அவர்கள் கிராமிய பின்னணியில் ஒரு திறைமையான சம்சாரியின் கதையாகச் சொல்கிற பாங்கு அவருக்கே இருக்கும் ஒரு தனித்தன்மை.
அய்யா கிர.ரா வின், 17 சிறுகதைகளை வாசித்து அவற்றின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
08 ஜூன் 2021
No comments:
Post a Comment