வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்
(சிறுகதை தொகுப்பு)
ஆசிரியர் - சோலை சுந்தரபெருமாள்
பதிப்பு - பாரதி புத்தகாலயம்
விலை - ரூபாய் 70
பக்கங்கள் - 128
வெள்ளாடுகளுக்கு சில கொடியாடுகளும் என்ற சிறுகதை தொகுப்பில் மொத்தம் பதினான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் தலைப்பின் பெயரை கொண்டுள்ள சிறுகதை மொத்த கதையின் சாரத்தை சொல்லிச்செல்கிறது.
இந்த கதைகள் பெரும்பாலும் 1980 களில் எழுதியவை அதனால் தான் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தேறிய எண்ணற்ற மனதை பாதித்த சம்பவங்களை கோர்த்து கொடுத்திருக்கிறார்.
இந்த புத்தகத்தின் "ஆசிரியர் சோலை. சுந்தரபெருமாள்" அவர்கள் தஞ்சை மாவட்டத்தின் மண்ணில் பிறந்து தன் தாய் மண்ணின் பெருமைகளை தனது எழுத்துக்களால் ஆவணப்படுத்தி இருக்கிறார். பெரும்பாலான கதைகள் கிராமத்தில் இருக்கும் கதை மாந்தர்களை பற்றியதாகவும், அவர்கள் படும் துன்பங்களை சொல்லும் விதமாகவும் மேலும் விவசாய மக்களின் நிலைமையினை சொல்லும் கதைகளாகவே தான் இருக்கிறது. அவர் அரசாங்க பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிந்தவர். இவர் தனது பணிக்காலத்தில் ஏற்பட்ட வெகுவான சம்பவங்களை கொண்டே இந்த கதைகளை சொல்லியிருக்கிறார். ஆம் கதைகள் என்பது வெறும் கற்பனைகளில் வருவதல்ல அது எதோ ஒருவிதத்தில் நாம் கண்டதும், அனுபவித்தும், சில நேரங்களில் நடக்கும் அவலங்களை நம்மால் பார்க்கத்தான் முடியுமே தவிற வேறெதுவும் செய்ய இயலாத நிலை அதுபோல் மனதில் படிந்த சில சம்பவங்களை கொண்டே கதைகள் பிறக்கின்ற.. அப்படித்தான் இந்த தொகுப்பில் இருக்கும் கதைகள் உருவாக்க பட்டிருக்கின்றன.
அவர் ஆசிரியர் என்பதால், கல்விக்கூடத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளையும், எல்லோரும் சமம் என்ற உரிமை படிப்பதற்கு இல்லையென்பதையும் தான் சந்தித்த சில நிகழ்வுகளையும் மையமாக கொண்டே இந்த கதைகள் வந்திருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஒரு ஆழமான செய்தியினை சொல்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
ஏழைகள் எவ்வாறெல்லாம் படிப்பில் புறக்கணிக்க படுகின்றனர் எனப்தையும் குறிப்பாக கிராம புறத்தில் இருக்கும் பெரும்பாலோனோர் கல்வி என்பது ஒரு மாயை போலவே இருந்தது என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமையும் தலை கீழாக மாறியிருப்பதையும் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கூடத்தில் தான் படிக்க வைக்கவேண்டும் என்று கடன் வாங்கியாச்சும் செய்கின்றனர் வறட்டு கௌரம் பிடித்த இந்த மூடர் கூட்டம் என்று சொல்லாமல் சொல்லி செல்கிறார் ஒரு கத்தியின் ஊடே..
வாங்க கதைக்குள்ளே போவோம்..
1. தலைமுறைகள்.
எப்படியாவது தனது இளைய பெண்ணுக்கு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடவேண்டும் என்ற கவலையுடன் தோட்டாண்டி, கங்காணியிடன் கடன் வாங்கித்தரச்சொல்லி கேட்கிறான். ஏன் மொவள அரசாங்க பள்ளிக்கூடத்தில் சேர்க்க "தலைமை ஆசிரியர் கேட்ட தொன்னுத்தியொரு ரூபா" பணத்திற்க்காக முன்பணமாக கேட்டு வாங்கிப்போகிறார். பேருந்தில் போனால் காசு போய்விடுமே என்று அதற்க்கு ஒரு டீ குடித்துவிட்டு நடந்து போகலாம் என்று நடக்கும் தோட்டாண்டி போல எத்தனையோ அப்பாக்களின் தியாகம் தெரிகிறது இந்த தலைமுறைகள் வழியே. ஒவ்வொரு அப்பாவும் எப்படியாவது அடுத்த தலைமுறை படித்து முன்னேறி நாம் படும் இந்த அவதியை படவேண்டாம் என்று எண்ணம் இல்லாமல் இருப்பதில்லை தான்.
2. கண்கள்.
ஆசியர்கள் அட்டூழியத்தாலும் அகங்காரத்தாலும் ஒரு மாணவன் தனக்கு இந்த கல்வியே வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நிலை வருகிறதென்றால் அது நமக்கு இருக்கும் கல்விமுறை தான் தவறு என்று சொல்லவேண்டும். ஒரு மாணவன் தனது புத்தகத்தை விட வெளியில் இருக்கும் அறிவை வளர்த்து கொண்டால் அதை எப்படி தாங்கிக்கொள்ளமுடியும் இந்த அறிவீன ஆசிரியர்களால் அப்படி பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் கதை தான் இந்த கண்கள். அப்பா நாட்டுக்காக ராணுவத்தில் பணிபுரிகிறார் ஆனால் அவரோட மகன் இங்கு அடிமையாக படுகிறான்.
3. கணப்பு.
ஆசாரியார், தன் மகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இருந்து ஆறு டிக்கெட் கொடுத்து முன்னூறு ரூபாய் வாங்கிவரசொல்லியிருக்காங்க அதை எப்படி புரட்டுவதென்று அவர் படும் தவிப்பினை அடையாளப்படுத்தியிக்கிறார். "கெவுருமெண்டு கோழி முட்ட அம்மியை கூட ஒடச்சிப்புடும்" இந்த நிலை இன்னும் மாறவில்லையே என்ற அவலம் நமக்கு தோன்றாமல் இல்லைதான், என்ன செய்வது நமக்கு கிடைச்ச வாழ்க்கை இதுதான்.
4. புது யுகம்.
இந்த கதை "பெண்களுக்கு கல்வி எதற்கு" என்று சொல்லும் ஒரு பெற்றோரை மையமாக கொண்டு சொல்லப்படுகிற கதை. தங்கள் ஆண் பிள்ளைக்கு கொடுக்கும் படிப்பின் உரிமையை ஏன் அதே வயிற்றில் பிறந்த மகளுக்கு கொடுக்க மறுகின்றனர் என்பதை சொல்லுவிதம் மிக ஆழமான கருத்தை சொல்கிறது. இதுபோன்ற பெற்றோர்களுக்கு பாடம் சொல்லும் விதமாய் இருக்கும் அந்த மகன் தன் தங்கைக்கும் மேற்கல்வி கொடுத்தால் தான் நானும் கல்லூரிக்கு போவேன் என்று சொல்லும் விதம் இந்த தலை முறை மாறியிருக்கிறது. தன் சகோதரிக்கும் சமமான கல்வியினை பெற்று கொடுத்த சகோதரன் ஒரு படி மேலே தான் நிற்கிறான்.
5. தூண்.
இந்த கதை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு நல்ல ஆசிரியராக இருந்த ஒரு ஆசிரியர் தனது மகளை ஒரு ஆசிரியருக்கு கொடுத்து மருமகனாக்கி கொண்டார். தான் மருமகன் ஆசிரியர் விலையைவிட மற்ற எல்லாவேலையையும் செய்வதை கண்டு படும் அவதியினை சொல்லும் கதை. பெரும்பாலும் "ஆசிரியர்கள் கிராமத்தில் பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டு விவசாயம் செய்வதை" நாம் பார்த்திருக்கக்கூடும்.
6. பொலி.
காசிக்கோனாரும், தனது பொலி காளையும் அருமையாக இருக்கிறது இந்த கதை. பாவம் காளையை நல்லா வளர்த்த கோனாரால் தன் பிள்ளையை நல்லா வளர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டிக்கொண்டே தான் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய பேரப்பிள்ளைகளை வளர்க்க அரும்பாடு படுகிறார். பேத்தி படிக்கிற ஸ்கூலில சீட்டு கொடுத்து அனுப்பியிருங்கங்க முன்னூறு ரூபாய் கொடுக்கணும் அதற்கு எப்படி ஏற்பாடு செய்வதென்று தவித்துக்கொண்டிருக்கும் போது மகன் வீட்டில் இருக்கும் ஆட்டுக்கிடாய்களை கசாப்பு கடைக்காரனிடம் ஐநூறு ரூபாய்க்கு விற்று விட்டு இருநூறு மட்டும் கொடுத்துவிட்டு குதிரில் இருந்த நெல்லையும் எடுத்துக்கொண்டு போவதை பார்த்து மனம் தளர்ந்து போனார் காசிக்கோனார்.
7. வேலி.
ஊருக்குள் சிலர் அடுத்தவர்களின் சொத்தை அபகரிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள் அதற்க்கான அணைத்து குறுக்கு வழியினையும் கண்டுபிடித்து தேவையான வேலைகளை செய்வார்கள். அப்படித்தான் இந்த ஊருக்காக உழைத்த ஒரு ஆசிரியரின் நிலத்தை அபகரிக்கிறான் அடுத்து மனையின் சொந்தக்காரனான சாமிநாதன். பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்த ஆசிரியரின் நிலத்தை அபகரிக்க அவர் மீதே பிராது கொடுத்து அவர் சொத்தினை எடுத்துக்கொண்ட அவனின் அநீதியை என்னவென்று சொல்லுவது. இதுபோல மனிதர்களின் மதிப்பு தெரியாமல் சுற்றி திரியும் மிருக கூட்டத்தின் கூடவேதான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
8.நாளைய...
இது சொல்லும் கதை நம்மில் பலர் இன்று தனியார் கல்விக்கூடங்களை நாடுவதை சாடி சொல்லும் ஒரு சிறு கதைதான். தனது மகனை தனக்கு தெரியாமல் தனது பெற்றோர்களிடம் விட்டு கான்வெண்டில் படிக்க வைக்கும் மனைவியிடம் கோபம் கொண்டு மகனை மாமனார் வீட்டில் இருந்து அழைத்து வரும் ஒரு தகப்பன். ஊரில் பெரும்பான்மையான குழந்தைகள் கான்வென்ட்டிற்கு போவதும் அதை கண்டு மனம் வருந்தும் கதிரேசன், தனது தம்பியின் மகனும் அங்கே போய் படிப்பது திரும்பி வரும்போது அந்த பச்சிளம் குழந்தை படும் பாடு வேதனைக்குரியது தான். அப்பப்ப வந்து போகும் கஸ்தூரி மெட்ரிகுலேசன் வேன் கதைக்கு உயிரூட்டுகிறது.
9. வேலை.
ஒரு கிராமத்தில் இருந்து படித்து நகரத்திற்கு வேலை தேடி போகும் ஒரு வாலிபனின் கதைதான் இது. சேகர் என்ற வாலிபன் எம். ஏ. படித்தாலும் அவன் கிராமத்தான் என்பதால் வேலை கிடைக்கவில்லை. விரக்தியுடன் வீடு திரும்பும் அவனை வரவேற்றது அவன் வீட்டு நாய்மட்டும்தான்.வேலை இல்லையென்றதும் இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைச்சேன் இப்ப என்ன செய்வது என்று புலம்பும் பெற்றோர்கள். இறுதியாக வயல்வெளி வேலைக்கு போனால் அங்கும் நிலக்கிழார்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள மறுக்கின்றனர். நேற்று வரை வெள்ளையும் சொள்ளையுமாய் திரிந்தவன் இந்த வேலைக்கு சரிவரமாட்டான் என புறக்கணிக்க திக்கு தெரியாமல் செல்லும் சேகர் சிவகாசியில் லாரி ஷெட்டில் லோடு மேன் வேலை செய்து மாதந்தோறும் இருநூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்புகிறான்.
10. வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்.
இது இந்த புத்தகத்தின் தலைப்பினை தாங்கி நிற்கும் கதை. இந்த கதையும் அதற்க்கான பலத்தினை கொண்டுள்ளது என்பதில் ஐயமேதுமில்லை. ஒரு ஆசிரியர், தனது பிள்ளைகளை மட்டுமல்லாமல் அந்த ஊரையே நம்பி இருக்கும் அத்துணை குழந்தைகளையும் படிக்க வைத்ததில் பெரிய பங்கு நாச்சிமுத்து வாத்தியார். இவரின் குடும்பத்தில் பிறந்த மூன்று மகன்களை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலையும் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்தவர் தான் இந்த நாச்சியப்ப வாத்தியார். ஆனால் அந்த மூன்று மகன்களும் வேலைக்கு போனவுடன் அப்பாவுக்கு தெரியாமலே திருமணம் செய்துகொண்டு வெளியில் சென்றது நொடிந்து போன நாச்சியப்ப வாத்தியார் தான் சேர்த்துவைத்த சொத்துக்களை எல்லாம் தன் கடைக்குட்டி மகனை தான் கட்டிக்கொள்வேன் என்று காத்திருந்த மச்சானின் மகள் ஜெயாவிற்கு எழுதி அவளை தத்தெடுக்கொள்வதும் அவரின் நிலைமை சொல்கிறது.
11. கோணங்கி.
இந்த கதையினை எழுதிய காலங்களில் அரசு பள்ளிகளில் நடந்த அத்துமீறல்களை அடுக்கி செல்லும் கதைதான் இது. ஒரு ஏழை மாணவன் தன் மாமா சவால்விட்டதும் எப்படியும் அந்த சவாலினை நடத்தி கட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்கிறான். மழைக்காலம் அவனது யூனிபார்ம் நனைத்து போய் காயாமல் இருப்பதால் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்தான். அந்த பள்ளியின் தமிழாசிரியர் வழக்கம் போல தமிழய்யாவாக இல்லாமல் தமிழ் வாத்தியராகவே இருந்தார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட இடையூறுகள் மற்ற ஆசிரியர்களிடம் இருந்து தொடந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. மாணவனின் அப்பாவை பார்த்த அவர் ஏன் உங்க மகன் பள்ளிக்கூடம் வரவில்லை என்றதும் நிலைமையினை தெரிந்து கொண்ட ஆசிரியர் கலர் ஆடையுடன் வரச்சொன்னார் அதற்க்கு அதானல் கலர் ஆடையுடன் பள்ளிக்கூடம் சென்ற மாணவனை இறுதியில் வெளியில் அனுப்பும் தலைமை ஆசிரியர் மேலும் தமிழாசிரியரையும் கடிந்து கொள்வது தான் அவர்களின் அத்துமீறல்.
12. உதய வாசல்.
தங்கமுத்து நாடக வாத்தியார் தன் பேத்திக்காக பள்ளிக்கூடத்தில் சேர்க்க தலைமை ஆசிரியர் கேட்டும் "பேன்" வாங்கி கொடுக்க படும் அவஸ்தையும் அதுவும் ஒரே நாளில் வந்தால்தான் சேர்க்கப்படும் என்பதும் அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் கல்வியினை இவர்கள் தங்கள் தேவைக்காக பயன்படுத்திவருவது என நிலைமையினை ஆதங்கமாக சொல்லியிருக்கிறார். சமத்துவம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடத்தின் "ஆசிரியர்கள் ஆளுக்கொரு டீ கப்" வைத்திருப்பதை கண்டு வெகுண்டு எழும் தங்கமுத்து நாடக வாத்தியார் தன் பேத்தியினை இங்கு படிக்க வைக்க வேண்டாம் என்று முடிவெடுப்பதும் இறுதியாக ஏன் என்று அங்கே சேர்த்து விட்டு வருவதும் என கதை முடிகிறது.
13. திணிப்பு.
அமுதா என்ற ஒரு பள்ளி மாணவி, தன் ஒருநாளய தன் பள்ளி மற்றும் எடுத்துக்கொள்ளும் மற்ற வகுப்புகள் என எல்லாவற்றியிலும் அவள் படும் அல்லல்களை அட்டவணைப்படுத்திக்கிறது . அவள் உடல் உபாதையால் ரெட்டை சடை போடாமல் போனது ஒரு குற்றம் என அவளை தண்டிக்கும் ஆசிரியை என்ன சொல்லுவது.
14. தாவணி.
தாவணி போட்டுவந்தால் தான் பள்ளிக்கூடத்திற்கு அனுமதி என்று சொன்னதும், ஆர்வத்துடன் படிக்கும் ஒரு ஏழை மாணவி ஒரு தாவணி வாங்குவதற்க்காக பருத்தி எடுக்க வயலுக்கு செல்கிறாள் அங்கேயும் தாவணிப்போடாத பிள்ளைகளை வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை என்றதும் கிழிந்து போன அம்மாவின் சேலையின் பாதியை கிழித்து தாவணியாய் அணிந்து கொண்டு செல்வதை பதிலேதும் சொல்லமால் தன் இயலாமையில் தவிக்கும் அவளின் அம்மா.. இங்கே ஒரு "வரலாறு டீச்சர் சொல்லும் பழையகதையினை" கேள்விகேட்காமல் ஏற்று கொள்ளவேண்டும் என்று புகுத்துவது எந்த விதத்தில் உகந்தது என்ற கேள்வியினை கேட்காமல் இல்லை ...
நல்லொதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகூடத்தில் ஒரு மகிழ்ச்சி.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
25 ஜூன் 2021
No comments:
Post a Comment