Friday, 11 June 2021

வசூல் ராஜாக்களின் வாழ்க்கை - வாசிப்பு அனுபவம்

 வசூல் ராஜாக்களின் வாழ்க்கை 

வாசிப்பு அனுபவம் 

ஆசிரியர் நா.கோபாலகிருஷ்ணன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 99

பக்கங்கள் 56

இது வெறும் சாதாரண  கற்பனையில் எழுதிய  கதையில்லை நிஜத்தில் நடந்த அனுபவங்களின் கதையே. அனுபவப்பூர்வமான அனுபவங்களின் தொகுப்பு அந்த தொகுப்பில் அனுபவத்தில் சந்தித்த விதவிதமான மனிதர்கள், அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் என ஒரு 12 வருட பணியின் பயணத்தில் கிடைத்த எண்ணிலடங்கா நிகழ்வுகளினை கொண்டதே இந்த வசூல் ராஜாக்களின் வாழ்க்கை. 

நண்பர் நா.கோபாலகிருஷணன், அவர்களின் அனுபவங்களையே இந்த கட்டுரை தொகுப்பின் வழியே நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் நமக்கு நிறைய வழிமுறைகளையும்  செய்திகளையும்  இந்த தொகுப்பின் மூலம் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

பெரும்பாலும் நாம் பிறர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில் கொஞ்சம் தயக்கம் தான் என்று சொல்வது சரியானதாகவே இருக்கும். அதனால் தான் பெரும்பாலோனோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றனர்.

வாருங்கள் நூலுக்குள் செல்லுவோம்.

இந்த தொகுப்பில் பதிமூன்று விதமான மனிதர்களின் விசித்திரமான அனுபவங்களைப் பார்க்கலாம்.

1. மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்.

பெரும்பாலும் பெண் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் அதிக கனிவாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். ஆனால் இங்கே, வயது முதிர்ந்த பெற்றோர்கள், தன் மகளின் மருத்துவப்படிப்பிற்காக வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றுப் படிக்க வைக்கின்றனர், மீண்டும் மேல்படிப்பிற்கும் மேலதிக கடன் வாங்குகின்றனர். கடைசியில் வீடு ஏலத்திற்குப் போய்விட்டது கடனால் பயன்பெற்ற மகள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. - மனதை கரையவைத்த நிகழ்வு - காலி செய்யப்பட்ட வீட்டின் படுக்கை அறையில் தனது மகளின் பேப்பரில் வந்த போட்டோ ஒட்டியிருப்பது. உண்மையிலே மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் தான் ...

2. ஓடாதே நில்..                    

சிலநேரங்களில் நமக்கு வாங்கிய கடனை அடைக்கும் சக்தியிருந்தும் சிலதவறுகளால் அந்த கடனை எதிர்கொள்ளும் சக்தியை இழந்துவிட்டு மறைந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படியாக ஓடி மறைந்த ஒரு ஆளைச் சந்திக்க அதிகாலையில் கொட்டும் பணியில் கதியிருக்கின்றனர். இறுதியில் அவருக்கு ஒரு தீர்வு கொடுத்து அவரை எல்லா கடன்களிலிருந்து மீட்டெடுத்தது அருமை.

3. பலமுருகா நீ எங்கேப்பா ?   

சில நேரங்களில்  தவறான முகவரி கொடுத்து கடனை வாங்கிவிட்டு, திருப்பி கட்டாமல் கட்டை நீட்டும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அப்படி மாற்று முகவரி கொடுத்து கடனை வாங்கிய ஒரு நபரைத் தேடி அலைந்து வெற்றியும் பெறுவது ஒரு மாபெரும் சாதனையே..

4. டக்கடாமங்கலம்.

அலுவலகத்தில் கடனாளிகள் விவரத்தை உள்ளிடும் நபர் ஒரு புள்ளிவைக்க மறந்ததால் ஏற்பட்ட ஒரு பெரிய விபரீதம். பாவம் வசூலுக்கு போறவர்களும் சக  மனிதன்தான் என்று யாரும் சிந்திக்க மறுக்கும் சில செயல். இறுதியில் அந்த ஊரைக் கண்டுபிடித்து வசூலும் செய்கிறார்கள்.

5. குடும்பமே சேர்ந்து திட்டிய கதை. 

ராங் கால் வரும் அது சாதாரணம் இங்கே ஒரு பெண் தன் காதலனை மறைக்கக் குருட்டாம்போக்கில் ஒரு எண்ணைக் கொடுக்க அந்த மொத்த குடும்பத்திடம் சிக்கி நூடுல்ஸாக போன கதை ஒரு விபரீதமான கதைதான்.

6. திட்டமிடாமல் கடனை எதிர்கொள்ளாதே...

வீட்டுக் கடன் சேர்த்து மொத்தம் அதிக கடன் வாங்கிவிட்டு கணவர் சண்டை போட்டுக்கொண்டு வீட்டைவிட்டே வெளியில் போக அந்த மனைவி மட்டும் தன் வருமானத்திலிருந்து வட்டி கட்டியே முடியவில்லை. அவர்களும் தகுந்த தீர்வினை கொடுத்து கடனளில் இருந்து மீட்டது அருமை.

7. நேர்மையின் பாதை .

வெகுநேரங்களில் மனிதன் நமக்குக் கடினமான சூழ்நிலை வரும்போது கிடக்கிற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வான். ஆனால் இங்கே ஒரு காவல் அதிகாரி தனக்கு ஏற்பட்ட சோதனைக்காலத்தில் கூட ஊதியம் தவிர வேற எந்த வகையிலும் பணம் சம்பாதிக்காமல் எதிர்பாராமல் வந்த மருத்துவச் செலவினால் கடனை கட்ட முடியவில்லை ஆனால் இறுதியில் அடைந்துவிட்டார்.

8. ஒரு நல்லவரும், நாணயம் கெட்டவரும்               

வீட்டுக் கடன் பொதுவாக நீண்ட வருடங்களுக்கு வாங்குவது வழக்கம். ஆனால் வருடம் செல்ல செல்ல நிலைமை மாறி வரும்போது மனிதனை மாற்றுகிறது.   அப்படிதான் இங்கே ஒருவர் தனது மனைவிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவினால் கடனை கட்டமுடியவில்லை இறுதியில் வீட்டை விற்றுக் கட்டிவிட்டார் உண்மையில் அவர் நல்லவர்தானே?..  இன்னொரு அற்புதமான மனிதர், ஆசிரியர் பணியிலிருந்துகொண்டு செய்வதெல்லாம் பித்தலாட்டம் கடைசி வரை ஆட்டம் காட்டுகிறார் என்றால் அவர் என்னவென்று சொல்லுவது.

9. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.   

நாம் செய்வதைத் தான் திரும்பிக் கிடைக்கும் என்பது மறந்துதான் மனிதர்கள் பெரும்பாலும் தவறுகளைச் செய்கிறார்கள். அப்படியாக இங்கே முதலில் போட்டுக்கட்டும் ஒரு முக்கிய நபரின். பியின் மேலாளர் அத்தனையும் கடந்து பொறுமை காத்து நமக்கு நேரம் வருமென்று இருந்து அப்படியே வந்த நேரத்தில் சரியான பாடம் புகட்டியது அருமை

10. மறக்க இயலாத கில்லாடி    

உண்மைதான் இப்படி ஒரு கில்லாடி பெரிய திறமைசாலிதான். இரண்டு குடும்பம் ஒரே ஊரில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வாழ்வது உண்மையிலே பெரிய காரியம்தான் அது ஒரு கில்லாடியால் தான் முடியும்.

11. எத்தனை மனிதர்கள். 

கடன் வசூல் பண்ணும் பொது ஏற்படும் கசப்பான அனுபவங்களில் இதுபோன்ற சில உள்ளது. கடன் வாங்கியது ஒருவர் கடனை அடைப்பது வேறொருவர் அதுவும் அடைப்பவர் ஏன் காட்டுகிறார் என்ற செய்திக்குள் போகாமல் வரவேண்டும் என்பது கொஞ்சம் கடினம்.

12. மயிரிழையில் தப்பிய கதை      

இதுவும் ஒரு விசித்திரமான அனுபவமே. கடனை வசூலிக்கப் போனால் தன்னை பலவந்தப் படுத்தினான் என்று பொய் வழக்குப் போடுவது அதிகம்தான் அப்படிப் பொய் மாட்டிக்கொண்டு கடைசி நிமிடத்தில் தப்பித்து வருவது அதிர்ஷ்டவசமானது தான். 


நண்பரின் மேற்கண்ட அனுபவங்களிலிருந்து நமக்குத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. அதுபோலவே தான் வசூலுக்கு வரும் எல்லோருக்கும் இரண்டு பக்கம் உண்டு.

கடனை வாங்கிவிட்டுக் கட்டாமல் இருப்பதை விட வசூல் செய்ய வருபவர்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்றே தான் சொல்லவேண்டும்.

வசூல் செய்யும் மனிதர்களின் கடினத்தையும், வேலைப்பளுவையும் அவர்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் ஆதாரத்துடன் அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.   


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

12 ஜூன் 2021 

     

No comments:

Post a Comment