Friday 18 June 2021

இருளர்கள் : ஓர் அறிமுகம் - வாசிப்பு அனுபவம்

இருளர்கள் : ஓர் அறிமுகம்

ஆசிரியர் : க. குணசேகரன்  

கிழக்கு பதிப்பகம் - விலை ரூபாய் 102

கிண்டில் பதிப்பு - விலை ரூபாய் 84
பக்கங்கள் 128


"இருளர்கள் ஓர் அறிமுகம்" என்ற இந்த புத்தகத்தினை நான் ஒரு வருடத்திற்கு முன்பே அமேசானில் வாங்கிவைத்திருந்தேன். ஒவ்வொருமுறையும் வாசிக்கலாம் என ஆரம்பிக்கும் போதெல்லாம் வேறேதாவது ஒரு புத்தகம் முந்திக்கொண்டு வாசிக்க தூண்டிவிடும்.  இன்று ஒரு மாறுதலுக்கு இருளர்களை பற்றி வாசிக்கலாம் என எடுத்து இரண்டே நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். இந்த நூல் இருளர்களை பற்றிய ஒரு அறிமுகம் என்று தான் தலைப்பு இடப்பட்டிருக்கிறது ஆனால் முழுமையாக இருளர்களின் தோற்றம் முதல் நிகழ்கால வாழ்க்கை  வரை அவர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் அவர்களின் வரலாறுகள் என மிக அழகாகவும் தெளிவாகவும் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

ஆசிரியர் "க. குணசேகரன்", 30 ஆண்டுகளுக்கு மேலாக  வானொலி, தொலைக்காட்சி, மற்றும் பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார் மற்றும் இவரது எழுத்துக்கள் பெரும்பாலன முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளது. தொடர்ந்து சமுகம், கல்வி மற்றும் வரலாறு போன்ற துறைகளில் ஆராய்ச்சியும்  செய்துகொண்டிருக்கிறார்.     

இருளர்கள் இனத்தின் உறவுகள் உலகெங்கும் பரவியிருக்கிறது, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் , கொங்கணப்பகுதிகளில் பரவி வாழும் பல்வேறு இனக்குழுக்கள் மட்டுமல்லாமல் இந்தோனேசியா, பிலிபைன்ஸ் தீவுகள், ஆஸ்திரேலிய, பாப்புவா நியு கினியா, தாய்லாந்து, மலேசியா என இவர்கள் உலகெங்கிலும் பரவி பல்வேறு இனமாக வாழ்கின்றனர் என்று கூறுகிறார் ஆசிரியர்.
          
இருளர்கள்மட்டுமல்ல பதினெட்டு விதமான குடிமக்கள் வாழ்ந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுவதாகவும் அதன்படி சேரர், சோழர், பாண்டியர், ஒளியர், நாகர், பல்லவர், கொங்கர், துறவர், கார்காத்தார், தொண்டை நாட்டார், குறவர், ஆயர், வேடர், பரதவர், மருதநில மள்ளர், கள்ளர், மறவர் மற்றும் அகப்படியார் என இருந்ததாகவும் அவற்றில் இருளர் இனமும் ஒரு வகையான மக்கள் அவர்கள்  நீலகிரி மலைத்தொடரிலும், கூடலூர், கோவை மலைப்பகுதிகள் மற்றும் திருச்சி என பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர் என பல்வேறு ஆதாரங்கள் கூறுகிறது என்று சொல்கிறார்.

இந்திய பழங்குடியினரில் இருளர்கள் தனித்துவம் பெற்றவர்கள். இருளர்கள், காலத்தின் சூழ்நிலைகளாலும்  ஏனைய மக்களின் சுயநலம் பெருகி போனதாலும் நாகரிக மோகத்தினாலும்  மக்கள் இருளர்களை இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

தனியாக பந்திப்பூர் காட்டுப்பகுதியில் பிரவேசிக்கும் கோபால் ராவ், எதிர்பாராமல் ஒரு தருணத்தில்  சந்திக்கும் இருளர்கள், கொஞ்சம் கீழே போயிருந்தால் கருநாகத்தின் விஷம் உன்மீது ஏறியிருக்கும் என்றபோது படபடத்து போகும் கோபால் ராவ், தொடர்ந்து  அவர்கள் வேட்டையாடும் முறைகள் அந்த அடர்ந்த வனத்தில் கருநாகம் ஒன்றை பிடித்து கொண்டுவந்ததும், முள்ளம்பன்றியை வேட்டையாடியதையும் பிறகு தரையின் மீதுள்ள பாம்பின் தடத்தை வைத்துக்கொண்டு அது என்ன வகை பாம்பு என்பதை சொல்லும் திறமையும்   மற்றும் அவர்கள் வாழும் இருப்பிடம் சென்று அங்கே ஒரு நாள் இரவு தங்கி அவர்களின் உணவுமுறை மற்றும் பழக்கங்கள் விருதோம்பல் மற்றும் அவர்களின் அறிய மருத்துவகுணங்கள் என மிக தெளிவாகவும் ஒரு பயணத்தின் வழியே சொல்லியிருக்கிறார். இருளர்கள் இன்றளவும் வாழும் முறைகளை எடுத்து சொல்லுவது ஒரு வியப்பாகவும் சுவாரஷ்யம் கலந்ததாகவும் இருக்கிறது.

இருளர்களுக்கு தொடக்க காலத்தில் இருளர்கள் என்ற பெயர் இருந்திருக்கவில்லை ஆனால் காலப்போக்கில் அவர்கள் இருந்த அடர்ந்த வனங்கள் மற்றும் காடுகளை சார்ந்த இடங்களில் வாழ ஆரம்பித்ததால் இருளர்கள் என அழைக்கப்பட்டார்கள் என்கிறார்.

பாம்புகளின் வகைகள் மற்றும் அவற்றின் விச தன்மை என இவர்கள் அறிந்துவைத்திருக்கும் நுட்ப்பமான அறிவு உண்மையில் வியக்க வைக்கின்றது. பெரும்பாலும் ஆராய்ச்சியாளராகள் முதலில் நாடுவது இருளர்களையே ஏனெனில் இருளர்களிடம் இருந்து பாம்புகளை பற்றிய விவரங்களை பெற்றுக்கொண்டு வெளியுலகில் ஆராச்சியாளர்கள் நாங்கள் தான் இவற்றை எல்லாம் கண்டுபிடித்து அறிந்து கொண்டோம் என்று எல்லா பெருமையையும் இவர்களே  பெயர்வாங்கி கொள்கிறார்கள் முக்கிய காரணமாக இருக்கும் இருளர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள் அவர்களின் அறிவு சுரண்டப்படுகிறது.

இருளர்கள் தாய் வழி சமுத்தினை பெரும்பாலும் பின்பற்றுகிண்டனர். கன்னி தெய்வம் தான் இவர்களின் பிரதான தெய்வம், இவர்களின் கன்னி தெய்வம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. குறிப்பாக சொல்லலாம் என்றால், எல்லையம்மன், வாட்படையாள், வனதேவதை மற்றும் பகவதி மேலும் பல பெயர்களை கொண்டு வழிபடுகின்றனர்.

இருளகர் இசையினை மிகவும் விரும்புவதும் அவர்களின் எல்லா விதமான கொண்டாட்டங்கள், வழிபாடு, விழாக்கள் என எங்கும் இசை நிறைந்தியிருக்கும் அதுவும் பாணர்களின் பாடல்களையே மிகவும் விரும்பி இசைத்து கொண்டிருக்கின்றனர். பாணர்களை பற்றிய அதிகமான அறிய தகவல்களை  ஆசிரியர் இந்த நூலின் வழியே கொடுத்திருக்கிறார். 

இருளர்கள் பெண்களுக்கு அதிக முக்கியயத்துவம் கொடுத்தார்கள் என்றும் வீட்டின் பெண்ணை முதன்மை படுத்தி தெய்வத்திற்கு இணையாக நடத்தினார்கள் என்றும் அவர்களின் சமூகத்தில் நடக்கும் எல்லா விதமான சடங்குளையும் பெண்களே முன்னின்று நடத்துகிறார்கள் என்றும் முக்கிய தகவல்களை சொல்லாமல் இல்லை.

இருளர்கள் பெண்களுக்கு, தங்கள் வாழ்க்கை  துணையினை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இவர்களின் திருமண முறையில் தாய் மாமனுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதேபோல பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமையும்  இருந்தது அதன் படி பெண் விதவையாகிப்போனால் அவளுக்கு மறுமணம் செய்துவைக்கின்றனர்.

இருளர்கள் பெண்களை பயிர் செய்யும் நிலத்திற்கு சமமாக மதிக்கின்றனர். பெண்கள் நிலம் போல தங்களது சங்கதியினை பெருக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதுதான் இதன் பின் உள்ள உண்மை.  பெண்கள் நிலத்தை விட ஒருபடி மேலாகவும்  பெரிதாகவும்   அவர்களை தாவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். தாவரங்கள் போல பூ பூத்து, காய் காய்த்து, கனிந்து வருவதைப்போல ஒரு பெண்ணும் சங்கதிகளை ஈன்று எடுக்கின்றாள்  எடுத்து சங்கதியினரை வளர்கிறாள்  அதனால் இவர்கள் பெண்களை புனிதமாக பார்க்கின்றனர்.   

இருளர்கள் அதிக பக்தி கொண்டவர்கள், ஆனால் இவர்களின் வாழ்வியல் முறை எப்போது ஒரே இடத்தில நிரந்தரமாக வாழ முடியாது காலநிலை, உணவு கிடைக்கும் முறை என வாழ்வாதாரம்  தேடி அலைந்து கிடைக்கும் இடத்தில கொஞ்சம் காலம் வாழ்வார்கள் அதற்காக அவர்கள் தங்களின் தேவைக்காகவும் இறைவனை வழிபட ஏழு செங்கல்கள் வைத்து கன்னியம்மன் கோவிலினை உண்டுபண்ணுவார்கள், இந்த வழிமுறைகள் இன்றளவும் பெரும்பாலான கிராமங்களில் நடக்கிறது.  வேப்பமரத்தின் அடியில் கன்னி அம்மன் இருப்பதாக இருளர்கள் நம்புகின்றார்கள்.

பொதுவாக இவர்களின் வாழ்க்கை முறை பெரும்பாலும் காடுகள் இருக்கும் இடத்தை சுற்றியே இருக்கிறது. இவர்கள் சிறுவயதுமுதிலே சின்ன சின்ன வேட்டைகள் செய்து உணவுகளை சேகரிக்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புவதில்லை அதில் அத்தனை ஆர்வமில்லை என்றே சொல்லாலம்.  

இருளர்களின் வாழ்வில் ஒரு விடியல் வராதா? என்ற கேள்விகளுக்கு இன்னும் உலக அளவில் விடை கிடைக்காமலே இருக்கிறது.    

இருளர்களும் நம்மை போன்ற சக மனிதர்கள் தானே! ஆனால் நமக்கும் நமது சங்கதிகளுக்கும் கிடைக்கும் கல்வி இன்னும் ஏன் அவர்களுக்கு போய் சேரவில்லை?. அப்படி கிடைத்தாலும் அவர்கள் தொடர்ந்து மேற்படிப்புக்கு முன்னேற "சாதி "  சான்றிதழ் தேவைப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அவ்வாறான சான்றிதழ் வாங்குவது எவ்வளவு கடினமான வேலை , எத்தனை முறைகள் இழுக்கடிப்பவார்கள் இதெல்லாம் நாமும் தெரிந்த உண்மையே.

இதனாலே அவர்கள் தங்கள் சமுதாயத்தில் மேல்படிப்பு போவது ஒரு குதிரை கொம்பாவே இருக்கிறது எனறால் அதில் தவறேதுமில்லை என்றே சொல்லலாம்.

இந்த நூலின் வழியே ஒரு சமூகத்தின் வாழ்வியல் முறைகளும் அவர்களின் தோற்றமும் இன்றைய நிலையையும் மிக பயனுள்ளதாக அறிந்து கொள்ளமுடிந்தது.

ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் வாசித்து பாருங்களேன் எண்ணற்ற தவகல்களை உள்ளடக்கி இருக்கிறது இந்த "இருளர்கள் - ஓர் அறிமுகம்.  

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 
18 ஜூன் 2021        
        
      

No comments:

Post a Comment