Saturday 26 June 2021

உயிரின் யாத்திரை - வாசிப்பனுபவம்

உயிரின் யாத்திரை  

(குறுநாவல்)

ஆசிரியர் - எம். வி. வெங்கட்ராம் 

காலச்சுவடு பதிப்பகம் 

விலை  ₹ 90

பக்கங்கள் 79




உயிரின் யாத்திரை என்ற  இந்த குறுநாவல் முதலில் தொடர்கதையாக 1958 ல் எம்.வி. வெங்கட்ராம் அவர்களால்   ஒரு மாறுபட்ட  கதை தளத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழில்  வெளிவந்தது. பின்னர் இந்த தொடர் கதை  குறுநாவலாக வெளியிடப்பட்டது. மறுபதிப்பு காலச்சுவடு பதிப்பகத்தாரால்  வெளியிடப் பட்டுள்ளது. 

திருமூலரின் கதையினை   மேற்கோள் காட்டி இந்த கதை புனையப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாசகங்களுக்கும் பதிலாகக் கதையின் போக்கு இருக்கிறது.


கதை, கதையின் நாயகி "ராணி" தன் இறுதிநாளில் தன்னை தழுவப்போகும் மரணத்தின் மடியில் படுத்துக்கொண்டு மீதம் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் எண்ணிக் கொண்டிருக்கிறாள். அவளின் கணவனும் கதையின் நாயகனும் ஆன "ராஜா", எப்படியாவது தன் உயிருக்கு உயிரான மனைவியை உயிர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணி வேண்டாத தெய்வம் இல்லை. வைத்தியம் பார்த்த டாக்டர் இன்று இரவு மூன்று மணிவரை தான் கெடு என கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பிப் போய்  இருக்கும் ராஜா ஒரு புறம், மரணத்தின் வாயிலில் ராணி ஒருபுறம், மற்ற உறவினர்கள் எல்லோரும் கூடி கவலை தோய்ந்த முகங்களுடன் அந்த வீடே ஒரு கலை இழந்து காணப்பட்டது.    

    

இப்படியாக இருக்கும் தருணத்தில், ராஜாவின் நண்பன் வேகமாக வந்து, புதிதாக எங்கள் தெருவில் என் வீட்டுக்கு அடுத்த மூன்றாவது வீட்டுக்கு வந்திருக்கும் ஒருவர், உன் மனைவியின் நிலைமையினை சொல்லி அதற்கு மருந்து தருகிறேன் என்றும் உடனே உன்னை அவரிடம் அழைத்து வரச்சொன்னார் என்றதும் ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்கும் ராஜா என்னசெய்வது என்ற நிலையில் இருந்து இறுதியில் ஒரு முடிவெடுத்து அவரிடம் போய் மருந்து வாங்கி வரவேண்டி போகிறான்.

அங்குப் புதிதாக வந்தவர் "சதாசிவம்", அவரே ராணிக்கு மருந்து கொடுக்கிறார் அந்த மருந்தில் அவள் குணமுமடைகிறாள். ஆனால் யார் இந்த சதாசிவம்  என்று கேள்வி புதிராகவே இருக்கிறது.

முன்ஜென்மமும், அந்த ஜென்மத்தில் நடந்த பழைய கதைகளுடன் வருகிற கனவு அந்த கனவுக்கு விடைதேடி ராஜா சதாசிவத்திடம் செல்கிறான். அங்கு வந்த ராஜாவுக்கு மீண்டும் ஆச்சரியம் தான், ஏனெனில் தான்  வந்த காரியத்தினை அவர் தானாகவே சொல்வதால் ஆச்சர்யமுற்ற ராஜா எப்படி இவருக்கு எல்லாம் தெரிகிறது, இதற்கும் பதில் தக்க நேரத்தில் வருமென்று அவரே சொல்லுகிறார்.

இந்த கதையின் நாயகன் ராஜாவுக்கு வரும் அனைத்து சந்தேகங்களும் நமக்கு வரத்தான் செய்கிறது. முன்ஜென்மம் எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் இறைநம்பிக்கை கொண்டதால் ஒரு வேளை இந்த செயல்கள் நடந்ததா? என்றும் மேலும் மேலும் பல்வேறுவிதமான சந்தேகங்கள் எழத் தான் செய்கிறது.

கோவில்களின் நகரம் கும்பகோணம், அங்கு இருக்கும் தெய்வங்களையும் ஆலயங்களையும் தரிசிக்கத் திருவாரூரிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொல்லும் சதாசிவம் குடும்பம் எப்படி ராஜாவின் மொத்த குடும்ப நிகழ்வுகளை தெரிந்து கொண்டுவந்தார் என்ற கேள்விகளுக்கு விடையினை சொல்லும் விதமாக ஆசிரியர் இந்த கதையினை கொண்டுசெல்கிறார்.    

சோகத்தில் ஆரம்பித்து அங்கிருந்து முன் ஜென்மம் தேடல் வரை சென்று வாழ்க்கையின் எதார்த்தமான இரண்டு செயல்களாக இருக்கும் இன்பம் (நன்மை),  துன்பம் (தீமை) களை பற்றிப் பேசி இறுதியில் எதார்த்த   உலகிற்குத் திரும்பி நம்மை அழைத்துச் செல்கிறது கதை.




அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

26 ஜூன் 2021

 

   

No comments:

Post a Comment